பசுவின் சிறுநீர் கிருமிநாசினியா? இந்தியாவில் சோதனை

பசுவின் சிறுநீரை கிருமிநாசினியாகப் பயன்படுத்த முடியுமா என்பது குறித்து, இந்தியாவிலுள்ள அரசு மருத்துவமனை ஒன்று இரண்டுவாரகால பரிசோதனையில் ஈடுபட்டுள்ளது.

இந்தியாவின் பாரம்பரிய மருந்துகளில் பசுவின் சிறுநீர் பயன்படுத்தப்படுகிறது

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இந்தியாவின் பாரம்பரிய மருந்துகளில் பசுவின் சிறுநீர் பயன்படுத்தப்படுகிறது

ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்பூரிலுள்ள அரசு மருத்துவமனையில் "கௌ க்ளீன்" எனும் பெயரில், பசுவின் சிறுநீரிலிருந்து தயாரிக்கப்பட்ட கிருமிநாசினியை, தீவிர சிகிச்சைப் பிரிவு, மருத்துவ உபகரணங்கள் மற்றும் தரைகளில் பயன்படுத்துமாறு அரசு கேட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அறக்கட்டளை ஒன்றால் பசுவின் சிறுநீரை வடிகட்டி அதிலிருந்து தயாரிக்கப்படும் அந்தக் கிருமிநாசினி, இராசயனங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் கிருமிநாசினிகளைவிட மேம்பட்ட செயலாக்கம் கொண்டதா என்பது குறித்து அந்த மருத்துவமனை தனது அறிக்கையை அரசுக்கு அளிக்குமாறு கூறப்பட்டுள்ளது.

அந்த மாநிலத்தில் பலர் பசுக்களை வைத்துள்ளதால் அதன் மூலம் அவர்கள் வருவாயை ஈட்டுவது முக்கியமானது என ராஜஸ்தான் அமைச்சர் ஒருவர் கூறுகிறார்.

இந்தியாவில் பசுவின் சிறுநீர் சில பாரம்பரிய மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் பசுக்களை புனிதமாகக் கருதும் இந்துக்கள், அதன் சிறுநீரை அருந்துவது நோய்களை தீர்க்கும் என நம்புகின்றனர்.