தலைமை தாங்கச் சென்ற திருமணத்தில் தாலி கட்ட முயன்ற சுப்ரமணியன் சுவாமி

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு திருமணத்தை நடத்திவைக்கச் சென்ற பா.ஜ.கவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, தவறுதலாக அவரே தாலி கட்ட முயன்றதால் திருமண வீட்டில் சலசலப்பு ஏற்பட்டது.

சுப்ரமணியன் சுவாமியின் இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பட மூலாதாரம், BBC World Service

படக்குறிப்பு, சுப்ரமணியன் சுவாமியின் இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுப்பிரமணியன் சுவாமி ஜனதாக் கட்சித் தலைவராக இருந்தபோது, அந்தக் கட்சியின் திருநெல்வேலி மாவட்டச் செயலாளராக இருந்த பாலசுப்ரமணியன் என்பவருக்கு இன்று திருமணம் நடைபெற்றது.

பாளையங்கோட்டையில் உள்ள கோவில் ஒன்றில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில் சுப்பிரமணியன் சுவாமி, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தத் திருமணத்தை நடத்தி வைப்பதற்காக அழைக்கப்பட்டிருந்த சுப்பிரமணியன் சுவாமியிடம், தாலியை எடுத்து மணமகனிடம் கொடுக்கும்படி அங்கிருந்தவர்கள் கூறினர்.

தாலியைப் பெற்றுக்கொண்ட சுப்பிரமணியன் சுவாமி, மந்திரங்களை உச்சரித்துவிட்டு, மணமகளுக்கு அவரே தாலி கட்டுவதுபோல, கையைக் கொண்டுசென்றார்.

அப்போது அங்கிருந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா, இதைத் தடுத்து நிறுத்தி மணமகனிடம் தாலியைக் கொடுக்கும்படி சொன்னார்.

பிறகு சமாளித்துக்கொண்ட சுப்பிரமணியன் சுவாமி தாலியை மணமகனிடம் கொடுத்த பின் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தை நடத்திவைக்க அழைக்கப்பட்டவரே, தாலி கட்ட முயன்றதால் திருமண வீட்டில் சலசலப்பு ஏற்பட்டது.

இந்த வீடியோ காட்சிகள் தமிழ்த் தொலைக்காட்சிகளிலும், சமூக வலைதளங்களிலும் வேகமாகப் பரவிவருகின்றன.