பீகார்: நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராகும் வாய்ப்பு

நிதிஷ் குமார்

பட மூலாதாரம், PTI

படக்குறிப்பு, நிதிஷ் குமார்

இந்தியாவில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராக நிதிஷ் குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இன்று சனிக்கிழமை வெளியாகியுள்ள இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, மீண்டும் பீகார் மாநிலத்தின் முதல்வராக நிதிஷ் குமார் விரைவில் பொறுப்பேற்கவுள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த அவர், கட்சிக்கு எதிரான சதிவேலைகள் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஜித்தன்ராம் மான்ஜி, சிறிது காலத்திற்கு முன்னர் தான் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதற்கு முன்னர் வரை முதல்வராக பொறுப்பு வகித்து வந்த நிதிஷ் குமாருக்கும் இவருக்கும் இடையே சமீப காலங்களில் பெருமளவில் சச்சரவுகள் நீடித்து வந்தன.

இந்நிலையில் இன்று அரசாங்கத்தை கலைக்கும் பரிந்துரையை ஜித்தன்ராம் மான்ஜி முன்வைத்தார். இதற்கு 21 அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், 7 அமைச்சர்கள் ஆதரவு அளித்தனர்.

இதையடுத்தே கட்சியின் உயர்மட்டக்குழு கூட்டத்தில் ஜித்தன்ராம் மான்ஜியை நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து நிதிஷ் குமார் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

விரைவில் பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த விவகாரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதன் காரணாமாக அரசியல் சூழலில் முக்கிய மாற்றங்கள் ஏற்படலாம் என்று நம்பப்படுகிறது.