உத்தர பிரதேசம்: கூட்டு பாலியல் வல்லுறவு தொடர்பில் ஐவர் கைது

பட மூலாதாரம், AP
இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலத்தில் பதின்ம வயது பெண்பிள்ளைகள் இருவரை பலபேர் சேர்ந்து பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை தேடும் நடவடிக்கைகள் பூர்த்தியடைந்துள்ளதாக காவல்துறை கூறுகின்றது.
ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் கடமையைச் செய்யத் தவறிய போலீஸ்காரர்கள் இருவரும் அடங்குகின்றனர்.
குறித்த பெண்பிள்ளைகள் காணாமல்போயிருந்தபோது, அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு போலீசார் பல மணிநேரம் தாமதமானதாக உறவினர்கள் கூறுகின்றனர்.
பின்னர், அந்த இரண்டு பெண்பிள்ளைகளின் சடலங்களும் மரமொன்றில் தூக்குப்போட்டுத் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டன.
இதேவேளை, இந்த சம்பவம் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை அதிகாரிகள் கையாள்கின்ற விதம் தொடர்பில் மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளதாக தில்லியில் உள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறினார்.








