மாயாவதி, யானை, சிலைகள் மீது திரைபோடும் நடவடிக்கை

பட மூலாதாரம், BBC World Service
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் மாயாவதியின் சிலைகள் மற்றும் அவரது கட்சி சின்னமான யானையின் சிலைகளுமாக சுமார் எண்பது சிலைகளை மாநில அரசு அதிகாரிகள் திரையிட்டு மூட ஆரம்பித்துள்ளனர்.
வரும் மார்ச் மாதம் அம்மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், இச்சிலைகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவதாய் உள்ளன என்று கூறி தேர்தல் ஆணையம் இச்சிலைகளை மூடுவதற்கு உத்தரவிட்டிருந்தது.
வாக்காளர்களின் மனதில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஆதரவு தோன்ற இச்சிலைகள் காரணமாக அமையலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
மாயாவதி மற்றும் யானை சிலைகள் அனைத்தும் மூன்று நாட்களுக்குள் திரையிட்டு மூடப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் முடிவு ஒருதலைப்பட்சமானது என பகுஜன் சமாஜ் கட்சி விமர்சித்துள்ளது.
பெரும் பொருட் செலவில் மாயாவதி அரசு சிலைகளையும் நினைவு மண்டபங்களையும் அமைத்தபோது, தற்புகழ்ச்சியில் மூழ்கிப்போய் பொதுப் பணத்தை விரயம் செய்கிறார் என அவர் மீது விமர்சனங்கள் எழுந்திருந்தன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.








