பத்மநாபசாமி கோவில் பி அறையை திறக்க தடை

பட மூலாதாரம், bbc
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலில், மலைத்துப் போகும் அளவுக்கு பொக்கிஷங்கள் வைக்கப்பட்டிருப்பதாகக் கருதப்படும் அறையை உடனடியாகத் திறக்கக் கூடாது என்று இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கெனவே, உச்சநீதிமன்ற உத்தரவின்படி திறக்கப்பட்ட பாதாள அறைகளில் இருக்கும் கோடிக்கணக்கான மதி்ப்புள்ள தங்கம், வைரம் உள்பட பல்வேறு ஆபரணங்களை மதிப்பீடு செய்து, அவற்றை முழுமையாக பத்திரப்படுத்திய பிறகே பி அறையைத் திறப்பது குறித்து முடிவெடுக்க முடியும் என நீதிபதிகள் உத்தரவிட்டார்கள்.
மற்ற அறைகளைவிட, பி அறையில் பலமடங்கு பொக்கிஷங்கள் இருக்கும் என்று நம்பப்படும் நிலையில், அதுதொடர்பாக, தேசிய அளவில் மட்டுமன்றி, சர்வதேச அளவிலும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
அந்தக் கோயிலின் பாதுகாப்பை, மத்திய துணை ராணுவப் படையிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நிபுணர் குழுவின் அறிக்கையை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. மாநில அரசே அதற்கு முழுமையான பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
பொக்கிஷங்களைப் பாதுகாக்கும் பணியில், தனியாரை ஈடுபடுத்தக் கூடாது என்றும், கெல்ட்ரான் எனப்படும் கேரள அரசின் மின்னனு மேம்பாட்டுக் கழகம்தான் அந்தப்பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பட மூலாதாரம், BBC World Service
இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, அனைத்துவிதமான பாதுகாப்புக்களுடனும் கூடிய அறையை ஏற்படுத்தி, அதில், மதிப்பீடு செய்யப்பட்ட ஆவணங்களைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினார்கள்.
கோயிலைச் சுற்றிலும், சக்தி வாய்ந்த விளக்குகள் பொருத்தப்பட வேண்டும், 24 மணி நேரமும் செயல்படக்கூடிய, ரகசியக் கண்காணிப்புக் காமராக்கள் பொருத்தப்பட வேண்டும், அரசியல் கட்சி அலுவலகங்கள், கடைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட வேண்டும், கோயிலைச் சுற்றி பல்வேறு நுழைவாயில்கள் இருப்பது பாதுகாப்புக்கு ஏற்றதல்ல என்பதால், ஒன்றிரண்டைத் தவிர மற்ற வாயில்களை மூடி வைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
பொக்கிஷங்களைப் பாதுகாக்கவும், பாதுகாப்புக்கும் ஆகும் செலவினங்களைப் பொருத்தவரை, கோயில் நிர்வாகம் ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாய் வீதம் வழங்க வேண்டும் என்றும், மீதித் தொகையை கேரள அரசு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மூன்று மாதங்களுக்குப் பிறகு இந்த வழக்கு இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும், அதற்கு முன்னதாக, தேசிய அருங்காட்சியக இயக்குநர் தலைமையிலான சிறப்பு நிபுணர் குழு அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டார்கள்.












