குஜராத்தில் தந்தை, மகன் கொலை: டிரக்கின் பின்புற பெயர்களால் பிடிபட்ட சந்தேக நபர்

குஜராத் கொலை வழக்கு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பார்கவ் பாரீக்
    • பதவி, பிபிசி குஜராத்திக்காக

குஜராத் மாநிலம் மெஹ்சானாவில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. யோகேஷ் படேல் என்ற வாலிபர், இரண்டரை ஆண்டுகளுக்கு இடையில் தனது சித்தப்பாவையும், தனது ஒன்றுவிட்ட சகோதரனையும் ஒரே முறையை பின்பற்றி கொலை செய்ததாக போலீஸிடம் ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சித்தப்பா கொலை வழக்கு இரண்டரை ஆண்டுகளாக கண்டுபிடிக்கப்படாத நிலையில், தனது ஒன்றுவிட்ட சகோதரனையும் அவர் கொன்றார். ஆனால் கொலை செய்ய பயன்படுத்திய மினி லாரி வாயிலாக அவரை போலீசார் கைது செய்தனர்.

"எங்களிடம் கிஃப்ட் பொருட்களின் கடை இருந்தது. நான் இரவும் பகலும் அதில் வேலை செய்தேன். ஆனால் நான் திருடியதாக என் சித்தப்பா என் மீது குற்றம் சாட்டினார். எனக்கு பங்கு கொடுக்காமல் இருக்க என்னை சமூகத்தில் இருந்து ஒதுக்கிவைக்கும்படி செய்தார்," என்று போலீசாரின் விசாரணையின் போது குற்றம்சாட்டப்பட்ட யோகேஷ் படேல் தெரிவித்தார்.

"இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு பழிவாங்குவதற்காக நான் என் சித்தப்பாவை கொன்றேன், அதற்கு விபத்தின் உருவத்தை கொடுத்தேன். நான் பிடிபடாததால் என் சித்தப்பாவின் மகனையும் அதே வழியில் கொல்ல வைத்தேன்."

ஒரு த்ரில்லர் படத்தின் கதை போன்ற இந்த சம்பவம் அனைவரையும் திடுக்கிட வைக்கலாம். இந்த வாக்குமூலத்தை அளிக்கும் போது, குற்றம்சாட்டப்பட்ட யோகேஷ் முகத்தில் வேதனையோ, வருத்தமோ இல்லை. மெஹ்சானாவில் உள்ள நானி கடி சாலையில் பங்களா போன்ற வீட்டில் வசிக்கும் யோகேஷ், தான் செய்தது சரிதான் என்றார்.

இந்த கொடூரமான சம்பவத்தின் பின்னணியில் உள்ள காரணங்களை அறிய இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களிடம் பிபிசி பேசியது.

கொலைக்கான காரணம்

குஜராத் கொலை

பட மூலாதாரம், SANKET SIDANA

படக்குறிப்பு, இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு ஜாதவ்ஜி படேல் கொல்லப்பட்டார்

போலீஸ் காவலில் இருந்த யோகேஷ் படேல் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் பேசி இந்த சம்பவத்தையும் அதன் காரணங்களையும் புரிந்து கொள்ள பிபிசி குஜராத்தி முயன்றது.

"எங்களுக்கு பொதுவான ஒரு சொத்து இருந்தது. சித்தப்பா ஜாதவ்ஜி பட்டேலுடன் சேர்ந்து, நாங்கள் கொஞ்சம் நிலத்தை விற்று, கடியில் ஒரு கிஃப்ட் கடையை ஆரம்பித்தோம். கடை நன்றாக நடந்து கொண்டிருந்தது. 2017இல் என் சித்தப்பா ஓய்வு பெற்றார். சித்தப்பாவின் மகன் விஜய் கடையில் சேர்ந்தார். நாங்கள் சந்த்ராம் காம்ப்ளெக்ஸில் கடை வைத்திருந்தோம். கடையில் திருடியதாக விஜய் என் மீது குற்றம்சாட்டினார். அதை தொடர்ந்து என் சித்தப்பா என்னை வேலையிலிருந்து நீக்கினார்," என்று போலீஸ் காவலில் இருந்த யோகேஷ் படேல் தெரிவித்தார்.

தன் சித்தப்பா மற்றும் அவர் மகனுடன் நிலவிய கசப்பான உறவு பற்றி விவரித்த யோகேஷ் படேல், "நான் என் பங்கைக் கேட்டேன். ஆனால் அவர்கள் கடையின் விலை மற்றும் அவர்களின் அந்தஸ்துக்கு ஏற்ப பணம் கொடுக்கவில்லை. அவர்களிடம் பணம் அதிகமாக இருந்ததால் என்னை சமூக ரீதியாக ஒதுக்கிவைத்தனர். எனக்கு கோபம் வந்தது," என்றார்.

தன் சித்தப்பாவுடன் சேர்ந்து கடையை தொடங்கியதாக யோகேஷ் படேல் கூறுகிறார். அதன் சந்தை மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாயாக அதிகரித்தது. அதில் யோகேஷின் பங்கான 60 லட்சத்திற்கு பதிலாக 5 லட்சம் ரூபாய் மட்டுமே தருவதாக பேசினார்கள். பின்னர் யோகேஷின் குடும்பத்தையும் சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைத்தனர்.

இந்த கோபம் காரணமாக சித்தப்பாவை கொலை செய்தாக ஒப்புக்கொண்ட யோகேஷ், "என் சித்தப்பா ஜாதவ்ஜி தினமும் மாலை கால்வாய்க்கு அருகில் வாக்கிங் செல்வார். இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு 2020ல் மினி ட்ரக்கால் விபத்தை ஏற்படுத்தி அவரை கொன்றேன். சம்பவத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை. அறியப்படாத டிரைவர் மீது விபத்து காரணமான மரணம் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு பின்னர் மூடப்பட்டது," என்று கூறினார்.

போலீஸார் துப்பு துலக்கியது எப்படி?

குஜராத் கொலை

பட மூலாதாரம், SANKET SIDANA

படக்குறிப்பு, குற்றம்சாட்டப்பட்ட யோகேஷ் படேலின் ஒன்றுவிட்ட சகோதரர் விஜய் படேல்.

சித்தப்பாவின் கொலைக்குப் பிறகும் பிடிபடாததால் தைரியமாக உணர்ந்தார் யோகேஷ்.

"அப்போது என் ஒன்றுவிட்ட சகோதரர் விஜய் எனக்கு எதிராக ஆதாரங்களை சேகரிக்க கடுமையாக முயற்சித்தார். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. விஜய்யும் என் பங்கை கொடுக்கவில்லை. எனவே ஜனவரி 24 ஆம் தேதி என் சித்தப்பாவை கொலை செய்தது போலவே அவரையும் மினி லாரியால் மோதி கொலை செய்ய திட்டம் தீட்டினேன். ஆனால் இந்த முறை பிடிபட்டேன்," என்கிறார் யோகேஷ்.

இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவரை காவல்துறை எப்படி கண்டுபிடித்தது மற்றும் இந்த விஷயம் அவர்களின் கவனத்திற்கு எப்படி வந்தது என்ற கேள்விக்கு மெஹ்சானா துணை எஸ்பி ஆர்.ஐ. தேசாய் பதிலளித்தார்.

"சில நாட்களுக்கு முன் கடியில் உள்ள கிஃப்ட் பொருட்கள் கடையை மூடிவிட்டு மோடார் சைக்கிளில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த இளைஞரை, இரவு நயிகடிக்கு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் விஜய் படேல் உயிரிழந்தார்," என்று தெரிவித்தார்.

''ஆரம்பத்தில் விபத்து காரணமான மரணம் என வழக்கு பதிவு செய்தோம். ஆனால், குறுகிய காலத்தில் இதே போன்ற விபத்தில் குடும்பத்தின் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் கூறினார்கள். இது விபத்து இல்லை, கொலை என்றும் அவர்கள் தெரிவித்தனர்," என்று அவர் குறிப்பிட்டார்.

"நாங்கள் தொழில்நுட்ப கண்காணிப்பைத் தொடங்கினோம். விசாரணைக்குப் பிறகு, பனஸ்கந்தாவின் சிறிய கிராமங்களைச் சேர்ந்த மூன்று பேரையும், உயிரிழந்த விஜய்யின் ஒன்றுவிட்ட சகோதரர் யோகேஷையும் கைது செய்தோம். யோகேஷ் 5 லட்சம் ரூபாய் கொடுத்து கொலை செய்ய ஏற்பாடு செய்திருந்தார்," என்று தேசாய் தெரிவித்தார்.

காவல்துறையின் உத்தி என்ன?

गुजरात

பட மூலாதாரம், SANKET SIDANA

படக்குறிப்பு, மெஹ்சானா துணை எஸ்பி ஆர்.ஐ. தேசாய்

"கொலை சந்தேகத்தை குடும்பத்தினர் எழுப்பியபோது, நாங்கள் அந்த திசையில் விசாரணையை முடுக்கி விட்டோம். சம்பவ இடத்தில் மோட்டார் சைக்கிள் கிடந்த விதத்தை பார்க்கும்போது இது சாதாரண விபத்து அல்ல என்பதை நாங்களும் உணர்ந்தோம்," என்று இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை மேற்கொண்ட கடினா போலீஸ் இன்ஸ்பெக்டர் என்.கே. ஆர். படேல் தெரிவித்தார்.

"உடனடியாக தடயவியல் குழுவின் உதவியை நாங்கள் நாடினோம். மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றவர் கீழே விழுந்தால் தலையில் பலத்த காயம் ஏற்படும் வகையில் வாகனம் மோதப்பட்டிருப்பதை கண்டறிந்தோம். நாங்கள் உடனடியாக அப்பகுதியில் உள்ள சிசிடிவிகளை ஆராய்ந்தோம். அதில் நாங்கள் ஒரு மினி ட்ரக்கை கண்டோம். நம்பர் பிளேட் இல்லாமல் அது இருந்தது. அந்த மினி லாரி மீது எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது."

"நம்பர் பிளேட் இல்லாத மினி டிரக்கை கண்டுபிடிப்பது வைக்கோல்போரில் ஊசியைத் தேடுவது போல் இருந்தது. ஏனென்றால் கடினா மார்க்கெட் வழியாக தினமும் ஏராளமான மினி லாரிகள் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து செல்கின்றன. நாங்கள் டிரக்கின் நிறத்தை கவனமாகப் பார்த்தோம். அதன் பின்புறத்தில் அன்ஷ், ஜெயேஷ் என்ற இரண்டு பெயர்களைக் கொண்ட படங்களையும் பார்த்தோம், அதில் இருந்து டிரக்கின் உரிமையாளர் குஜராத்தைச் சேர்ந்தவர் என்று முடிவு செய்தோம்."

"ஜெயேஷ் என்ற பெயர் குஜராத்தில் மிகவும் பொதுவானது. லாரிகளில் பூக்கள் மற்றும் கிளைகளின் வடிவங்கள் வரையப்பட்டிருப்பதையும், ஆங்கிலத்தில் 'ஸ்பீட்' மற்றும் 'கிலோமீட்டர்' என்று எழுதும் முறை முக்கியமாக பனஸ்கந்தாவிலிருந்து வரும் லாரிகளில் அதிகமாக இருப்பதையும் நாங்கள் கவனித்தோம். சத்லாசன்னின் தேல்கர் பகுதியில் இருந்து வரும் மினி டிரக்குகளில் இந்த வகை எழுத்துகளுக்கு அதிக வாய்ப்பு இருந்தது. எனவே தேல்கர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும், வாகனங்களுக்கு வண்ணம் தீட்டும் ஓவியர்களை கண்டுபிடிக்க ஆள் அனுப்பினோம்."

"கிராமம் சிறியது என்பதால் இந்த மினி டிரக்கில் ஓவியம் வரைந்த பெயின்டரை நாங்கள் விரைவாகக் கண்டுபிடித்தோம். அவர் மூலம் லாரியின் உரிமையாளரைக் கண்டுபிடித்தோம். விபத்து நடந்த நாளன்று கடியைச் சேர்ந்த யோகேஷ் படேலுக்கு நாள் ஒன்றுக்கு 1500 ரூபாய் வாடகையில் ட்ரக்கை கொடுத்தாக லாரி உரிமையாளர் கூறினார்," என்று ஆய்வாளர் படேல் தெரிவித்தார்.

சிசிடிவி இல்லாததால் ஏற்பட்ட தாமதம்

இதற்குப் பிறகு, யோகேஷின் தொலைபேசியின் லொகேஷன் மாரி கிராமம் என்று கண்டறியப்பட்டது, அந்த நாட்களில் அவர் மாரி கிராமம் மற்றும் அருகிலுள்ள தத்னா கிராமத்தைச் சேர்ந்த ராஜ்தீப் சிங் மற்றும் ராஜுபா ஜாலா ஆகியோருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பது கண்டறியப்பட்டது. ஒருபுறம், யோகேஷ் படேலைக் கண்காணித்தோம். மறுபுறம், நாங்கள் ராஜ்தீப் சிங்கையும், ராஜூபாவையும் பிடித்தபோது, அன்றிரவு சிவப்பு நிற மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை கொல்ல ஐந்து லட்சம் ரூபாய் பணம் பெற்றதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

ஆதாரங்களின் அடிப்படையில் யோகேஷ் படேலை போலீசார் எப்படி அடைந்தனர் என்று விவரித்த இன்ஸ்பெக்டர் படேல், "இந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாங்கள் யோகேஷை கைது செய்தோம். அவர்கள் அனைவரையும் நேருக்கு நேர் விசாரித்தோம். சம்பந்தப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்," என்று கூறினார்.

"லாரியின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டிய யோகேஷ் தனது சித்தப்பாவை கால்வாய் அருகே கொலை செய்துள்ளார், ஆனால் கால்வாய் அருகே சிசிடிவி இல்லாததால் இரண்டரை ஆண்டுகளாக அவர் பிடிபடவில்லை. அதே தந்திரத்தை பயன்படுத்தி தனது ஒன்றுவிட்ட சகோதரை கொலை செய்தார். ஆனால் இம்முறை அவரால் போலீசாரை ஏமாற்ற முடியவில்லை," அவர் தெரிவித்தார்.

குஜராத் கொலை

பட மூலாதாரம், SANKET SIDANA

படக்குறிப்பு, கடினா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆர்.என்.படேல்

"என் கணவர் விஜய் நன்றாக வாகனம் ஓட்டுவார். அதனால் விபத்து ஏற்பட வாய்ப்பில்லை. என் மாமனாரின் கொலை தொடர்பான ஆதாரங்களைக் கண்டுபிடிக்க என் கணவர் கடுமையாக முயன்றார். ஆனால் அந்த லாரியின் நம்பர் பிளேட்டை யாராலும் பார்க்கமுடியவில்லை. அதனால் வழக்கு நிரூபிக்கப்படவில்லை. ஆனால் என் கணவர் விபத்தில் இறந்த விதத்தை பார்த்தபோது, அவரை யாரோ கொன்று விட்டார்கள் என்று நானும் என் சகோதரனும் சந்தேகப்பட்டோம். ஆனால் கொலையாளி எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருப்பார் என்று யாருமே நினைக்கவில்லை,"என்று விஜய்யின் மனைவி பூமி படேல் பிபிசி குஜராத்தியிடம் தொலைபேசியில் தெரிவித்தார்.

கொலைக்கு சதித் திட்டம் தீட்டிய வழக்கில் யோகேஷ் படேல் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். யோகேஷ் படேலின் தந்தையும், அவரது மனைவியும் இந்த விஷயம் தொடர்பாக எதுவும் பேச மறுத்து விட்டனர்.

பிபிசி விளையாட்டு வீராங்கனை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: