பிபிசி ஆவணப்படத்தை தமிழாக்கம் செய்து திரையிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி

பிபிசி ஆவணப்படம் திரையிடல்

பட மூலாதாரம், @thirumaofficial / Twitter

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

2002ஆம் ஆண்டின் குஜராத் கலவரம் குறித்த பிபிசி 2வின் ஆவணப்படத்தை தமிழாக்கம் செய்து சென்னையில் வெளியிட்டது விடுதலை சிறுத்தைகள் கட்சி. இரு பாகங்களையும் நூற்றுக்கணக்கானவர்கள் அமர்ந்தும் நின்றும் பார்த்தனர்.

குஜராத் மாநிலத்தில் 2002ஆம் ஆண்டில் நடந்த இந்து - முஸ்லிம் கலவரம் குறித்தும் அதில் அப்போதைய முதலமைச்சரும் தற்போதைய பிரதமருமான நரேந்திர மோதியின் பங்கு குறித்தும் பிபிசி 2 தயாரித்து, வெளியிட்டுள்ள ஆவணப்படம் சமீபத்தில் வெளியானது. இந்தப் படம் குறித்து பா.ஜ.க. கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது. இந்தப் படத்தை சமூக ஊடகங்களில் பகிர்வது பல்வேறு விதங்களில் தடுக்கப்பட்டும் வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இந்த ஆவணப்படத்தை காங்கிரஸ், இடதுசாரிகள் போன்ற கட்சிகள் பொதுமக்களுக்கு திரையிட்டு வருகின்றன.

தமிழ்நாட்டிலும் இடதுசாரிகளும் வேறு சில சமூக அமைப்புகளும் இந்தப் படத்தை பொது இடங்களில் திரையிட்டு வருகின்றனர்.

பிபிசி ஆவணப்படம் திரையிடல்

பட மூலாதாரம், @thirumaofficial / Twitter

இந்த நிலையில், மொழிப்போர் தியாகிகள் தினத்தன்று செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், இந்த ஆவணப்படத்தை தமிழ்ப்படுத்தி வெளியிடப் போவதாகத் தெரிவித்திருந்தார்.

"பிரதமர் மோதி குறித்து ஆவணப்படம் ஒன்றை பிபிசி வெளியிட்டு உலகம் தழுவிய அளவில் ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதன்மூலம் உண்மை வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

தனது குற்றத்தை உணர்ந்து பிரதமர் பொறுப்பில் இருந்து மோதி விலக வேண்டும். எந்த அளவுக்கு சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான வெறுப்பை அவர் விதைத்திருக்கிறார், வன்முறையைத் தூண்டி இருக்கிறார், ஒரு மிகப்பெரும் இனக் கொலையை செய்வதற்குக் காரணமாக இருந்திருக்கிறார் என்பதை இன்றைக்கு பிபிசி ஆதாரங்களோடு வெளியிட்டுள்ளது.

பிபிசியையும் அச்சுறுத்தி இருக்கிறார்கள். இந்த வீடியோவை இணையதளத்தில் பார்க்க முடியாத சூழல் உள்ளதால் பிபிசியின் ஆவணப்படத்தை தமிழில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட முயற்சிகளை மேற்கொள்வோம்," என்று கூறியிருந்தார்.

இதையடுத்து அந்த ஆவணப்படத்தைக் கடந்த சில நாட்களில் தமிழ்ப்படுத்தும் முயற்சிகளை அந்தக் கட்சி மேற்கொண்டது. தமிழ்ப்படுத்தப்பட்ட ஆவணப்படம், ஞாயிற்றுக்கிழமையன்று அக்கட்சியின் அலுவலகம் அமைந்துள்ள அம்பேத்கர் திடலில் திரையிடப்பட்டது.

இந்த நிகழ்வில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், பொதுச் செயலாளர் து. ரவிக்குமார், திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாமுவேல் ராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வஹிதா நிஜாம், மனித நேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் யாக்கூப், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் கோ. சுந்தர்ராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

பிபிசி ஆவணப்படம் திரையிடல்

பட மூலாதாரம், @thirumaofficial / Twitter

இரவு சுமார் எட்டு மணியளவில் திரையிடப்பட்ட இந்தப் படத்தை 300க்கும் மேற்பட்டவர்கள் நின்றபடியும் அமர்ந்தபடியும் பார்த்தனர். படத்தைத் திரையிடுவதற்கு முன்பாக விழாவில் பங்கேற்ற தலைவர்கள் பேசிய நிலையில், படம் திரையிட்டு முடித்த பிறகு, திருமாவளவன் பேசினார்.

"இவர்கள் பேசுவது மத அடிப்படையிலான தேசியவாதம். அதற்கு பாகிஸ்தானை எதிரியாகக் காட்ட முடியாது. பிரிட்டிஷ்காரனை எதிரியாகக் காட்ட முடியாது. ஆகவே, முஸ்லிம்களை எதிரியாகக் காட்ட வேண்டிய தேவை இருக்கிறது.

இந்து தேசியவாதத்தை எதற்காகக் கட்டமைக்க விரும்புகிறார்கள்? இந்த தேசத்தை இந்து ராஷ்ட்ரா என அறிவிக்க வேண்டும். அதுதான் இவர்களது நோக்கம். இந்த தேசத்தின் அரச மதமாக இந்து மதத்தை அறிவிக்க வேண்டும் அதுதான் அவர்கள் நோக்கம். இந்தச் சிந்தனைக்கு வித்திட்டவர்கள் கோல்வால்கர், ஹெட்கேவார் ஆகிய சித்பவன பிராமணர்கள், சங்கபரிவார ஆசான்கள்.

ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைப்பதில் நாம் எப்படி செயல்படப் போகிறோம் என்பதுதான் நம் முன் இருக்கும் கேள்வி. ஜனநாயகத்தைப் பாதுகாப்பது நம் முன்னால் ஒரு சவாலாகக் கிடக்கிறது. இதை எதிர்கொள்ள நாம் தயாராவோம்," என்று தெரிவித்தார்.

பிபிசி ஆவணப்படம் திரையிடல்

பட மூலாதாரம், @thirumaofficial / Twitter

இந்த ஆவணப் படத்தை பாண்டிச்சேரியிலும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் திரையிடப் போவதாக அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு தெரிவித்தார். மேலும், வேறு சில இயக்கங்கள் இந்த மொழிமாற்றம் செய்யப்பட்ட ஆவணப்படத்தின் பிரதிகளைக் கேட்டிருப்பதாகவும் அவர்களுக்கும் இதை வழங்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: