விக்டோரியா கௌரி அரசியல் பின்னணி என்ன? அவர் நீதிபதியானதற்கு எதிர்ப்பு எழ அதுதான் காரணமா?

பட மூலாதாரம், ANI
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கௌரி நியமிக்கப்பட்ட விவகாரம் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. அரசியல் சார்பு இருப்பதால் மட்டுமே விக்டோரியா கௌரி எதிர்க்கப்படுகிறாரா?
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக வழக்கறிஞர் விக்டோரியா கௌரி நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுக்களை இன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கின்றது. "எங்களால் கூடுதல் நீதிபதியாக அவர் நியமிக்கப்படுவதன் பொருத்தப்பாட்டை கேள்விக்குள்ளாக்க முடியாது, கொலீஜியத்தின் செயல்முறை மீது சந்தேகம் எழுப்ப முடியாது," என்று நீதிபதிகள் தெரிவித்துவிட்டனர்.
உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்துகொண்டிருந்த நேரத்திலேயே லக்ஷ்மண சந்திர விக்டோரியா கௌரி சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகவும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
"விக்டோரியா கௌரியின் நியமனம் சர்ச்சைக்குள்ளானதற்கு பலரும் கருதுவதைப்போல, அவர் பா.ஜ.க. மகளிர் அணியின் தேசியச் செயலராக இருந்தது மட்டும் காரணம் அல்ல. ஏனென்றால், இதற்கு முன்பாகவும் வெளிப்படையாக அரசியல் சார்பு கொண்ட பலர் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இருந்திருக்கிறார்கள்" என்கிறார் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான ஹரி பரந்தாமன். கௌடூர் சதானந்த ஹெக்டே, வி.ஆர். கிருஷ்ணய்யர், ரத்னவேல் பாண்டியன் என பல எடுத்துக்காட்டுகளை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
கௌடூர் சதானந்த ஹெக்டே 1952லிருந்து 1957வரை காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோதே, அவர் மைசூர் உயர்நீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டார். அதற்குப் பிறகே, அவர் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார். தில்லி, இமாச்சலப் பிரதேசம் ஆகிய உயர்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாக இருந்துவிட்டு, உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். இதற்கு சில காலத்திற்குப் பிறகு உச்ச நீதிமன்ற நீதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் அரசியலில் இறங்கி, மக்களவைக்கு ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பிறகு, மக்களவை சபாநாயகராகவும் இருந்தார். பிறகு பா.ஜ.கவின் துணைத் தலைவராகவும் இருந்தார்.
அதேபோல, புகழ்பெற்ற நீதிபதியான வி.ஆர். கிருஷ்ணய்யரும் கட்சிப் பதவிகளை வகித்தவர்தான். தலசேரியிலிருந்து இரண்டு முறை சட்டமன்ற உறுப்பனராகத் தேர்வுசெய்யப்பட்ட வி.ஆர். கிருஷ்ணய்யர், 1957ல் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் கேரளாவின் முதலமைச்சராக இருந்தபோது உள்துறை, சட்டம், மின்சாரத் துறையின் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். 1959ல் நம்பூதிரிபாட் அரசு கலைக்கப்பட்டவுடன் மீண்டும் வழக்கறிஞர் பணியை மேற்கொண்டார். இதற்குப் பிறகு, 1968 ஜூலையில் கேரள உயர் நீதிமன்ற நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டார். 1973 ஜூலையில் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் அவர் நியமிக்கப்பட்டார். சமூக, அரசியல், சிவில் உரிமை வழக்குகளில் அவரது பங்களிப்பு இப்போதும் நினைவுகூரப்படுகிறது.
உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த ரத்னவேல் பாண்டியன் 1960களில் தி.மு.கவின் திருநெல்வேலி மாவட்ட செயலாளராக இருந்தவர். 1967ல் நெல்லை மாவட்ட அரசு வழக்கறிஞராக இருந்தவர், 1974ல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பிறகு 1988ல் இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்த்தப்பட்டு 1994ல் ஓய்வுபெற்றார். இவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது வழங்கிய பல தீர்ப்புகளும் குறிப்புகளும் நீதித்துறையில் குறிப்பிடத்தக்கவையாக இருக்கின்றன.

பட மூலாதாரம், FACEBOOK/CHANDRASEKAR
"ஆகவே, அரசியல் சார்புடையவர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்படுவது பிரச்சனையாக பார்க்கப்படுவதில்லை. ஆனால், கௌரியின் விவகாரத்தில் அவருடைய பிற மதத்தினர் மீதான வெறுப்புப் பேச்சுதான் பிரச்சனை. ஒருவரை நீதிபதியாக நியமிக்கும்போது, அவருக்கு சட்டம் சார்ந்த அனுபவம், தகுதி இருக்கிறதா என்பது மட்டும் பார்க்கப்படுவதில்லை. வழக்காடிகள் அவர் மீது நம்பிக்கை வைப்பார்களா என்பதும் பார்க்கப்படும். இஸ்லாமியர்கள் குறித்தும் கிறிஸ்தவர்கள் குறித்தும் அவர் பேசிய பேச்சிற்குப் பிறகு, இந்த மதத்தைச் சேர்ந்த வழக்காடிகள் அவர் மீது நம்பிக்கை வைப்பார்களா?" எனக் கேள்வியெழுப்புகிறார் ஹரி பரந்தாமன்.
விக்டோரியா கௌரியின் நியமனம் தொடர்பாக கேள்வி எழுப்பப்படுவதைப் போல, இதற்கு முன்பாக வேறு நீதிபதிகளின் நியமனங்கள் தொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றனவா? முன்னுதாரணங்கள் இருக்கின்றன. ஹரி பரந்தாமனே ஒரு நீதிபதியின் நியமனத்தை எதிர்த்து வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
"சென்னை உயர்நீதிமன்றத்தில் என். கண்ணதாசன் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டபோது, அதனை எதிர்த்து ஹரி பரந்தாமன் ஒரு வழக்கைத் தொடர்ந்தார். அதேபோல இன்னொரு வழக்கும் தொடரப்பட்டது. ஆனால் அந்த வழக்குகள் விசாரிக்கப்படுவதற்கு முன்பாகவே அவர் பதவியேற்றுக்கொண்டுவிட்டதால், அவை காலாவதியாகின. ஆனால், அவர் கூடுதல் நீதிபதியாக இருந்த காலத்தில் புகார்கள் எழுந்ததால், அவர் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்படவில்லை" என நினைவுகூர்கிறார் ஹரி பரந்தாமன்.
அதேபோல, ராஜஸ்தானில் மாவட்ட நீதிபதியாக இருந்த ஆர்.ஆர். ஜெயின் என்பவர் உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஆனால், அவர் மீதும் புகார் எழுந்ததால், அவர் நிரந்தர நீதிபதியாக நியமனம் பெறவில்லை. மீண்டும் மாவட்ட நீதிபதியாகவே சென்றுவிட்டார்.
விக்டோரியா கெளரி விஷயத்தில் இம்மாதிரியாக நடைபெற வாய்ப்புள்ளதா?
"ஆனால், இம்மாதிரி நடப்பது மிக அரிது. பொதுவாக கூடுதல் நீதிபதியாக இருக்கும்போது மிக கவனமாக இருப்பார்கள். தங்கள் மீது புகார்கள் வராமல் பார்த்துக்கொள்வார்கள். ஆகவே, புகார்களின் காரணமாக, கூடுதல் நீதிபதியாக இருப்பவர்கள், நிரந்தரமாக்கப்படாமல் போவது என்பது மிக அரிதாகவே நடக்கும்" என்கிறார் ஹரி பரந்தாமன்.
தவிர, நீதிபதிகளை கண்காணிப்பதற்கென உச்சநீதி அமைப்பில் தொடர்ச்சியான கண்காணிப்புப் பொறிமுறை ஏதும் இல்லாததையும் ஹரி பரந்தாமன் சுட்டிக்காட்டுகிறார். "ஒருவர் இரண்டு ஆண்டுகள் கூடுதல் நீதிபதியாக இருக்கும்போது அமைதியாக செயல்பட்டுவிட்டு, பிறது தனது சித்தாந்தம் சார்ந்து தீர்ப்பளிப்பது, வெளிப்படையாக வெறுப்புப் பேச்சுப் பேசுவது என செயல்பட்டால் பிறகு ஒன்றும் செய்ய முடியாது" என்கிறார் அவர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













