ஹிஜாப் வழக்கு: 2 நீதிபதிகள் இரண்டு தீர்ப்பு கூறியதால் முடிவுக்கு வராத வழக்கு- அடுத்து என்ன?

ஹிஜாப் சர்ச்சை

கர்நாடக மாநிலத்தில் கல்வி நிலையங்களில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரலாமா கூடாதா என்ற விவகாரத்தை விசாரித்த இரண்டு நீதிபதிகள் அடங்கிய இந்திய உச்ச நீதிமன்ற பெஞ்ச், வியாழக்கிழமை (அக். 13) இரண்டு விதமான தீர்ப்புகளை வழங்கியுள்ளது.

இந்த பெஞ்சில் இடம் பெற்றிருந்த இரண்டு நீதிபதிகளும் முரண்பட்ட தீர்ப்புகளை வழங்கியதால், இந்த விவகாரத்தை விசாரிப்பதற்கு அதிக நீதிபதிகள் கொண்ட ஒரு பெஞ்சை தலைமை நீதிபதி அமைக்க வேண்டும் என்று தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த மேல் முறையீட்டு வழக்கு முதலில் இருந்து மீண்டும் விசாரிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநில கல்வி நிலையங்களில் மாணவிகள் தலையை மறைக்கும் ஹிஜாப் உடை அணிவதற்கு அரசாங்கம் தடை விதித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இந்த தடையை ஏற்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

இந்த தீர்ப்பை எதிர்த்து பல பேர் இந்திய உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர். தற்போது இந்த வழக்குகளில் உச்ச நீதிமன்றம் பிளவுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ள நிலையில், பெரிய பெஞ்ச் அமைக்கப்பட்டு தீர்ப்பு வரும் வரையில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பே நடைமுறையில் இருக்கும். அதாவது ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை அதுவரை நீடிக்கும். இந்த இரண்டு நீதிபதிகள் பெஞ்சில் இடம் பெற்றிருந்த நீதிபதி ஹேமந்த் குப்தா, "எங்களுக்கு மாறுபட்ட பார்வை உள்ளது. நான் இந்த வழக்கில் 11 கேள்விகளை எழுப்பியுள்ளேன்" என்று குறிப்பிட்டார்.

பல்வேறு மாணவிகள் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்களை நிராகரித்து அவர் தீர்ப்பளித்தார். அத்துடன் தலைமை நீதிபதி அதிக நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் அமைத்து விசாரிக்கவேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

இன்னொரு நீதிபதி கூறியது என்ன?

ஆனால், இந்த பெஞ்சில் இடம் பெற்றிருந்த மற்றொரு நீதிபதியான, சுதான்ஷு துலியா கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்துள்ளார்.

"ஹிஜாப் அணிவது அவரவர் தேர்வு. ஓர் இளம் மாணவியின் கல்வி என்று வரும்போது, இத்தகைய (ஹிஜாப் தடை போன்ற) கட்டுப்பாடுகள் அந்தப் பெண்ணின் வாழ்க்கையை எளிதாக்குகிறதா என்ற கேள்விதான் என் மனதில் மிகுதியாக எழுகிறது," என்று அவர் கூறினார்.

தீர்ப்புக்குப் பிறகு பிபிசியிடம் பேசிய மேல்முறையீட்டு மனுதாரர் ஒருவரின் வழக்குரைஞர் நிஜாமுதீன் பாஷா, "இனி இந்த வழக்கு எப்படிச் செல்லும் என்று பார்க்கவேண்டும். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்கு இனி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அதிக நீதிபதிகள் கொண்ட பெரிய பெஞ்ச் ஒன்றை அமைப்பார். மீண்டும் ஒரு முறை இந்த வழக்கு விசாரிக்கப்படும்," என்றார். புதிதாக அமைக்கப்படுவது மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்சாகவோ, ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்சாகவோ இருக்கலாம் என்றும், இப்படி ஒரு பெரிய பெஞ்சை அமைப்பதற்கு எந்த காலக்கெடுவும் இன்றைய தீர்ப்பில் விதிக்கப்படவில்லை என்றும் பாஷா தெரிவித்தார். நீதிபதி ஹேமந்த் குப்தா தலைமையிலான இந்த இரண்டு நீதிபதிகள் பெஞ்ச் இந்த வழக்கின் 23 மேல்முறையீட்டு மனுதாரர்கள், அவர்களது வழக்குரைஞர்கள், கர்நாடக அரசாங்கம் ஆகியோர் கூறுவதை 10 நாள்களுக்கு விசாரித்தது. பிறகு, தீர்ப்பு வழங்குவதற்காக இந்த வழக்கை கடந்த செப்டம்பர் 26ம் தேதி ஒத்திவைத்தது. இதன் அடிப்படையில் இன்று அக்டோபர் 13-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

இரு தரப்பும் வைத்த வாதங்கள் என்ன?

கர்நாடக ஹிஜாப் சர்ச்சை

பட மூலாதாரம், UMESH MARPALLY

குறிப்பிடப்பட்ட பள்ளிச் சீருடையில் வருவதற்கான ஒழுங்கை கடைப்பிடிக்கும்படி கல்வி நிலையங்களுக்கு உத்தரவிட தங்களுக்கு அதிகாரம் உண்டு என்று கர்நாடக அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டது.

அடிப்படை உரிமைகள், எந்த ஆடையை அணிவது என்பதற்கான உரிமை, ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கையைப் பின்பற்றும் உரிமை ஆகியவை எல்லாம் வகுப்பறைக்குள் வரும்போது குறைந்துவிடாது என்று வாதிட்டார், முஸ்லிம் மாணவிகளுக்காக ஆஜரான மூத்த வழக்குரைஞர் துஷ்யந்த் தவே.

தங்கள் சீருடைக்கு மேலாக, சில மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பறைக்கு வருவதால், பொது ஒழுங்கு, உடல் நலம் அல்லது அறம் ஆகியவை கெட்டுவிட்டதாக தாங்கள் கூறுவதற்கு ஒரு சிறு இம்மியளவு ஆதாரத்தையும் கர்நாடக அரசாங்கம் சமர்ப்பிக்கவில்லை என்று மாணவிகளுக்காக வாதிட்ட தேவதத் காமத், ராஜீவ் தவான், துஷ்யந்த் தவே ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

அத்துடன் இந்த மாணவிகள் ஹிஜாப் அணிவது மற்ற மாணவிகளின் அடிப்படை உரிமையை மீறுகிறது என்ற தங்கள் கூற்றுக்கு ஆதரவாக உறுதியான ஆதாரம் எதையும் கர்நாடக அரசாங்கம் சமர்ப்பிக்கவில்லை என்றும் இந்த வழக்குரைஞர்கள் வாதிட்டனர்.

ர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன சொன்னது?

பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும் என்பது முஸ்லிம் மதத்தில் அத்தியாவசியமான கட்டுப்பாடு அல்ல என்று இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் 15ம் தேதி தீர்ப்பளித்தது.

ஹிஜாப் அணிந்து வந்த சில மாணவிகளை கல்லூரி வளாகத்துக்குள் அனுமதிக்க மறுத்த பி.யு. அரசு கல்லூரியின் செயலை எதிர்த்து சில முஸ்லிம் மாணவிகள் தொடர்ந்த இந்த வழக்கை தலைமை நீதிபதி ரிது ராஜ் அஸ்வதி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.கான்சி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து தீர்ப்பளித்தது.

ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தின் அத்தியாவசியமான வழக்கம் அல்ல என்பதால் இந்த விவகாரம் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 25ன் கீழ் வராது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

பள்ளிச் சீருடைகளை பரிந்துரைப்பது ஏற்கத்தக்க கட்டுப்பாடுதான் என்றும், அரசமைப்புச் சட்டத்தின் வரம்புக்குள் அனுமதிக்கத்தக்கதுதான் என்றும் எனவே இதனை மாணவிகள் எதிர்க்க முடியாது என்றும், இத்தகைய கட்டுப்பாட்டை விதிக்க அரசாங்கத்துக்கு உரிமை உள்ளது என்றும் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இந்த பெஞ்ச் தீர்ப்பளித்திருந்தது.

சிவப்புக் கோடு
காணொளிக் குறிப்பு, திடீரென சூழ்ந்த மாணவர்கள் - தைரியத்துக்காக அல்லாவை அழைத்தேன் - மாணவி முஸ்கான் பேட்டி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: