கருப்பை மாற்று அறுவை சிகிச்சை: 'நான் பிறந்த அதே கருப்பையில் இருந்து என் குழந்தையும் பிறக்கும்' - மருத்துவ அறிவியல் அதிசயம்

பட மூலாதாரம், Umesh Negi
- எழுதியவர், சுசீலா சிங் மற்றும் பார்கவா பரீக்
- பதவி, பிபிசி செய்தியாளர்கள்

- சர்வதேச பெண் குழந்தைகள் நாளான இன்று (அக்டோபர் 11) தாயின் கருப்பையை தானமாகப் பெற்ற மகளின் கதையை உங்களுக்கு பிபிசி தமிழ் வழங்குகிறது.
- குஜராத்தின் அகமதாபாதில் இரண்டு பெண்கள் தங்கள் மகள்களுக்கு கருப்பை தானம் செய்துள்ளனர்.
- அந்த இரண்டு மகள்களுக்கும் கருப்பையில் பிரச்னைகள் இருந்தன.
- செப்டம்பர் 27ஆம் தேதி தாய்மார்களின் கருப்பை அகற்றப்பட்டு அவர்களின் மகள்களுக்கு பொருத்தப்பட்டது.
- உலகின் முதல் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை ஸ்வீடனில் செய்யப்பட்டது.

அகமதாபாத்தில் உள்ள சிறுநீரக நோய்கள் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஒரே நாளில் இரண்டு கருப்பை மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. இந்த அறுவை சிகிச்சை செய்ய 12 முதல்14 மணி நேரம் ஆகும்.
"என் அம்மா எனக்கு கருப்பையை கொடுத்துள்ளார். நான் பிறந்த அதே கருப்பையில் இருந்து என் குழந்தையும் பிறக்கும்" என்று ஜூனாகட்டைச் சேர்ந்த ரீனா வாகாசியா தனது கருப்பை மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிபிசியிடம், கூறினார்.
"நான் பிறந்த உடனேயே என் கருப்பை இரண்டாகப் பிரிந்துவிட்டது. திருமணத்திற்குப் பிறகு அது எனக்குத் தெரிய வந்தது. எனக்கு குழந்தை பிறக்கவில்லை. நான் சிகிச்சை எடுக்கச் சென்றபோது, வாழ்நாள் முழுவதும் என்னால் தாயாக முடியாது என்று தெரிந்துகொண்டேன்," என்று அவர் மேலும் கூறினார்.
இந்த மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு ரீனாவின் கணவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
"கருப்பை மாற்று அறுவை சிகிச்சை புனேயில் செய்யப்படுகிறது என்று எங்களுக்கு தெரிய வந்தது. ஆனால் அதற்கு லட்சக் கணக்கான ரூபாய் செலவாகும். என் தந்தை ஒரு விவசாயி. நான் சின்னச் சின்ன வேலைகள் செய்கிறேன். ஆனால் அகமதாபாத்தில் உள்ள இந்த அரசு மருத்துவமனையில் இந்த வசதியைப் பெற்றோம். என் மாமியார் அவரது கர்ப்பப்பையை என் மனைவிக்கு கொடுத்துள்ளார்," என்று அவர் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Bhargav Parikh
மாபெரும் வெற்றி
"முதன்முறையாக இரண்டு பெண்களின் கருப்பை மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்துள்ளோம். முன்பு எங்களுக்கு இதைச் செய்ய அனுமதி இல்லை. ஆனால் இப்போது இதுபோன்ற பிரச்னைகள் உள்ள எல்லா பெண்களுக்கும் உதவி கிடைக்கும்," என்று சிறுநீரக நோய்கள் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் டாக்டர் வினீத் மிஷ்ரா கூறுகிறார்.
டாக்டர் ஷைலேஷ் புண்தாம்பேகர் ஒரு புற்றுநோய் நிபுணர்; இந்தியாவில் செய்யப்பட்ட முதல் கருப்பை மாற்று அறுவை சிகிச்சைக்காக பெயர் பெற்றவர்.
ஸ்வீடன் மற்றும் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்த மூன்றாவது நாடு இந்தியா. கூடவே லேப்ரோஸ்கோப்பி மூலம் இதுபோன்ற மாற்று அறுவை சிகிச்சை செய்த முதல் நாடு இந்தியா என்றும் அவர் குறிப்பிட்டார். அதாவது கருப்பை தானம் செய்தவரின் வயிற்றில் பெரிய கீறல் இல்லாமல் இந்த மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்றார் அவர்.


மாற்று அறுவை சிகிச்சை எவ்வாறு செய்யப்படுகிறது?
பிறப்பிலேயே உடலில் கருப்பை இல்லாதவர்கள் அல்லது கருப்பையில் பிரச்னை உள்ள பெண்களுக்கு கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். மேலும் சிலருக்கு ஏதோ காரணங்களால் கருப்பை நீக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இவர்களுக்கு ஓவரீஸ் அதாவது முட்டைப் பை, சரியாக இருக்கும்.
கருப்பை மாற்று அறுவை சிகிச்சை தாய்க்கும், மகளுக்கும் இடையே மட்டும்தான் செய்யமுடியும் என்று டாக்டர் ஷைலேஷ் புண்தாம்பேகர் பிபிசியிடம் கூறினார். ஏனெனில் அவர்களின் மரபணுக்கள் ஒரே மாதிரியாக இருக்கும். இதில் தாய் தானம் செய்பவராகவும், , மகள் பெறுபவராகவும் உள்ளனர்.

பட மூலாதாரம், DEV IMAGES
எந்தத்தாய் தானம் செய்ய முடியும்?
- தாயின் வயது 49-50 இருக்க வேண்டும்.
- அவர்களுக்கு மாதவிடாய் சுழற்சி நின்றிருக்கக் கூடாது.
- மாதவிடாய் வரவில்லை என்றால், மருந்து கொடுத்து அது ஆரம்பிக்கப்படும்.
யாரால் இதைப் பெறமுடியும்?
- பெண் திருமணமானவராக இருக்க வேண்டும்.
- பெண்ணின் வயது 18-35க்குள் இருக்க வேண்டும்.
- குரோமோசோம் 46 XX ஆக இருக்க வேண்டும். அதாவது மரபணு ரீதியாகப் பெண்ணாக இருக்க வேண்டும்.

கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செயல்முறை என்ன?
கருப்பை மாற்று அறுவை சிகிச்சைக்கு இந்த எல்லா நிபந்தனைகளும் பூர்த்தியாகி இருக்க வேண்டும் என்று டாக்டர் ஷைலேஷ் புண்தாம்பேகர் கூறுகிறார். செயல்முறையை மேலும் விளக்கிய அவர், "தாயின் அடிவயிற்றின் கீழ் பகுதியில் லேபராஸ்கோப் மூலம் இரண்டு அங்குல வெட்டு போடப்படும். ரீட்ராக்ஷன் மூலம் கருப்பை அகற்றப்படுகிறது. கூடவே இரத்த நாளங்கள் (சப்ளை மற்றும் வெளிச்செல்லும்) இரண்டும் வெளியே எடுக்கப்படுகிறது," என்றார்.
"இது சிறுநீரகம் அல்லது இதய மாற்று அறுவை சிகிச்சை போன்றது. அதன் பிறகு, கருப்பை சுத்தம் செய்யப்படுகிறது. பின்னர் மகளின் வயிற்றில் ஒரு கீறல் மூலம் கருப்பை செருகப்பட்டு, ரத்த நாளங்கள் பிறப்புறுப்புடன் இணைக்கப்படுகின்றன," என்று அவர் மேலும் விளக்கினார்.
கருப்பை மாற்று அறுவை சிகிச்சைக்கு 30 முதல் 35 நாட்களுக்குப் பிறகு, அதை பெற்றவருக்கு மாதவிடாய் தொடங்குகிறது. மாதவிடாயை அவர்கள் முன்பு அனுபவித்திருக்கவே மாட்டார்கள் என்று அவர் மேலும் கூறினார்.
மாதவிடாய் அறிகுறிகள் சாதாரணமாகவே இருக்கும். ஆயினும் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்களுக்கு, மாதவிடாய் காலத்தில் வலி இருக்காது. ஆனால் அதே நேரம் அவர்கள் 'கருத்தரிக்க' முடியும். அதாவது தாயாக முடியும்.

பட மூலாதாரம், SHYLENDRAHOODE
"இதயம் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு நாங்கள் புதிய வாழ்க்கையை வழங்குகிறோம். அதே நேரம் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் ஒரு புதிய உயிரை உலகத்திற்கு கொண்டுவருகிறோம்," என்று டாக்டர் சைலேஷ் குறிப்பிட்டார்.
கருத்தரிப்பதற்கு முன் கரு உருவாக்கப்படுகிறது. பெண்ணின் கருமுட்டை மற்றும் ஆணின் விந்தணு சேர்க்கையின் மூலம் இது உருவாக்கப்பட்டு, பின்னர் கருப்பையில் பொருத்தப்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தாய் மட்டுமே கருப்பை தானம் செய்பவராக ஏன் இருக்க வேண்டும்?
இந்த கேள்விக்கு பதிலளித்த டாக்டர் மான்சி செளத்ரி, "தாய் மற்றும் மகளின் மரபணுக்கள் ஒரே மாதிரியாக உள்ளன. இதில் செல்கள் ஒரே மாதிரியாக இருக்கும்," என்றார்.
"உடல் அதை ஒரு வெளிப்பொருள் அல்லது வெளி உறுப்பு என்று கருதுவதில்லை. அத்தகைய சூழ்நிலையில், மகளின் உடலில் செருகப்பட்ட தாயின் கருப்பையை அவரது உடல் மரபணு ரீதியாக நிராகரிக்காது," என்று அவர் மேலும் கூறினார்.
அறிவியல் நிறைய முன்னேற்றம் அடைந்துள்ளது. கர்ப்பிணிப் பெண்ணை நவீன இயந்திரங்கள் மூலம் பரிசோதிக்க முடியும். இதன் மூலம் கருப்பையில் மரபணு அசாதாரணம் ஏதேனும் இருந்தால் அதைக் கண்டறிய முடியும்.

பட மூலாதாரம், SEBASTIAN KAULITZKI
ஆனால் அத்தகைய சோதனைகளின் போது, ஒரு பெண் குழந்தைக்கு கருப்பை இல்லாததைக் கண்டறிய முடியாதா என்ற கேள்வி எழுகிறது.
குழந்தைக்கு கருப்பை இருக்கிறதா இல்லையா என்று பார்ப்பது, பாலின பரிசோதனையாக கருதப்படுகிறது. இந்தப் பரிசோதனை சட்டத்திற்கு புறம்பானது என்பதால் இது செய்யப்படுவதிலை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில் 1994ஆம் ஆண்டு PCPNDT சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசையில் கருவின் பாலினத்தைக் கண்டறிந்து கருக்கலைப்பு செய்யும் நடைமுறையைத் இது தடுக்கிறது. இந்தச் சட்டம் 2003ல் திருத்தப்பட்டது.
"ஒவ்வோர் ஆண்டும் 5,000 குழந்தைகளில் ஒரு பெண் குழந்தை கருப்பை இல்லாமல் பிறக்கிறது. ஒரு பெண்ணுக்கு கருப்பை இல்லாதது மரபணு அசாதாரணமாக கருதப்படுகிறது," என்று டாக்டர் ஷைலேஷ் புண்தாம்பேகர் குறிப்பிட்டார்.
"ஆனால் சில நேரங்களில் நீர்க் கட்டி காரணமாக அல்லது கருப்பை மோசமாக இருப்பதால் அது அகற்றப்படுகிறது. புற்றுநோய் காரணமாக கருப்பை அகற்றப்பட்ட நிகழ்வுகளும் உள்ளன," என்று டாக்டர் ஷைலேஷ் புண்தாம்பேகர் கூறினார்.

கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை கருத்தரிப்பதற்காக மட்டுமே செய்யப்படுகிறது. அத்தகைய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்கள் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு கருப்பையை அகற்றிவிடவேண்டும் என்று டாக்டர் ஷைலேஷ் புண்தாம்பேகர் அறிவுறுத்துகிறார்.
அதற்கான காரணத்தை விளக்கிய அவர், "கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மருந்துகள் வழங்கப்படுகின்றன. பெறுபவரின் உடல் கருப்பையை நிராகரிக்கக்கூடாது என்பதற்காக இந்த மருந்துகள் கொடுக்கப்படுகிறது," என்றார்.
"சிறுநீரகம் அல்லது இதய மாற்று அறுவை சிகிச்சையின் போது நோயெதிர்ப்பு சக்தியை அடக்கும் மருந்துகள் முக்கியம். ஏனென்றால் அவரின் வாழ்க்கை அதைச் சார்ந்துள்ளது. ஆனால் குழந்தை பிறந்த பிறகு, மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்ட கருப்பை தேவையில்லை. இந்த மருந்துகளை உட்கொள்ளாவிட்டால் கருப்பையும் பாதிக்கப்படும்," என்று அவர் மேலும் கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













