திருவள்ளூரில் தீண்டாமை சுவர் இடிப்பு; இந்த சுவர்கள் கட்டப்பட காரணம் என்ன?

- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
திருவள்ளூர் மாவட்டம் தோக்கமூரில் ஏழு ஆண்டுகளாக இருந்த தீண்டாமை சுவர், கடந்த 2ஆம் தேதி இடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டின் பல இடங்களில் இதுபோல சுவர்கள் நீடிக்கவே செய்கின்றன. காரணம் என்ன?
திருவள்ளூர் தோக்கமூர் கிராமத்தில் கட்டப்பட்டிருந்த தீண்டாமை சுவர் கடந்த அக்டோபர் மூன்றாம் தேதியன்று இடிக்கப்பட்டிருக்கிறது. தோக்கமூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பங்களும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குடும்பங்களும் வாழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டில், இந்த கிராமத்தில் திரௌபதி அம்மன் ஆலயத்தின் அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் மதிற்சுவர் ஒன்று கட்டப்பட்டது. இந்த சுவற்றின் மூலம் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிகளும் சாலையும் பிரிக்கப்பட்டது. இதனால், ஆடு, மாடுகளை மேய்பது உள்ளிட்டவற்றுக்கு சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த சுவரை அகற்ற வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த பட்டியலின மக்களும் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரி வந்தனர்.
இதற்கு நடுவில் கடந்த மார்ச் மாதத்தில் அந்தப் பகுதியில் ஆதீனத்திற்குச் சொந்தமான சுமார் மூன்று ஏக்கர் நிலத்தைச் சுற்றி வேலி அமைப்பதற்காக கற்கள் நடப்பட்டன. இதையடுத்து தீண்டாமைச் சுவர் தொடர்பான பிரச்னை தீவிரமடைந்தது.
இது தொடர்பாக பலமுறை பொன்னேரி, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகங்களில் பல கட்ட அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
முடிவில், அக்டோபர் 3ஆம் தேதியன்று 150க்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்புடன் ஜேசிபி இயந்திரங்களின் மூலம் அந்தச் சுவர் அகற்றப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், ஆதீனத்தின் இடத்தைச் சுற்றி வேலி போடுவதற்காக நட்டுவைத்திருக்கும் கற்களையும் அகற்ற வேண்டும் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

"சுவரை இடிக்கும் தினத்தன்றே எதிர்ப்புகாட்டும் வகையில் ஆதிக்க ஜாதியினர் திரண்டனர். இருந்தபோதும், அதையும் மீறி சுவர் இடிக்கப்பட்டது. இப்போது இந்த சுவர் அகற்றப்பட்டுவிட்டாலும் கூட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களிடம் இன்னும் எதிர்ப்பு மனநிலை இருக்கிறது," என்கிறார் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் சாமுவேல் ஆசிர் ராஜ்.
பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியையும் அதே ஊரைச் சேர்ந்த ஆதிக்க ஜாதியினர் வசிக்கும் பகுதியையும் பிரிக்கும் வகையில் சுவர்களைக் கட்டுவதென்பது தமிழ்நாட்டில் பல கிராமங்களில் வழக்கமாக இருக்கிறது.
1. கோயம்புத்தூரில் நடூர் கிராமத்தில் அருந்ததிய மக்கள் வாழும் பகுதியையும் பிற ஜாதியைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் பகுதியையும் பிரிக்கும் வகையில் 20 அடி உயரத்தில் கட்டப்பட்டிருந்த இது போன்ற சுவர் 2019ஆம் ஆண்டு டிசம்பரில் இடிந்து விழுந்ததில் அருகில் உள்ள கண்ணப்பன் நகர் பகுதியைச் சேர்ந்த 17 பட்டியலின மக்கள் உயிரிழந்தனர்.
2. மதுரை மாவட்டம் பேரையூரில் இருக்கும் சந்தையூர் கிராமத்தில் பட்டியலின மக்களில் இரு ஜாதியைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இதில் ஒரு ஜாதியைச் சேர்ந்தவர்களுக்குச் சொந்தமான கோவிலைச் சுற்றி சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டது அந்தப் பகுதியில் தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தியது. பிறகு அந்தச் சுவற்றின் ஒரு பகுதி மட்டும் இடிக்கப்பட்டது.


3. இதற்கு முன்பாக மதுரை மாவட்டம் உத்தபுரத்தில் 1989ல் பட்டியலின மக்களுக்கும் ஆதிக்க ஜாதி மக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து, இரு பிரிவினரும் வசிக்கும் இடத்திற்கு நடுவில் சுவர் ஒன்று கட்டப்பட்டது. இதனால் அடுத்த பக்கத்திற்குச் செல்ல இரண்டரை கி.மீ. சுற்றிச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், 2008ஆம் ஆண்டு சுவரின் ஒரு பகுதி மட்டும் இடிக்கப்பட்டது. ஆனால், இதைத் தொடர்ந்து நடந்த மோதல்களில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.
4. கோயம்புத்தூர் மாவட்டம் வேடப்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த நாகராஜபுரத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதி உள்ளது. அருகில் தனியார் நிலம் உள்ளது. இந்த இரு பகுதிகளையும் பிரிக்கும் வகையில் 400 அடி நீளத்திற்கு சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. பிறகு, மாவட்ட ஆட்சியரின் தலையீட்டின் பேரில், சுற்றுச்சுவரின் இரண்டு இடங்களில் இடிக்கப்பட்டு, மக்கள் சென்றுவர வழியேற்படுத்தப்பட்டது.
"பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிகளைப் பிரித்துவைக்கும் வகையில் சுவர்களைக் கட்டுவது தமிழ்நாட்டில் பல கிராமங்களில் வழக்கமாக இருக்கிறது. சுமார் 1000 இடங்களில் இப்படி ஏதோ ஒரு வகையில் தடுப்பு ஏற்படுத்தியிருப்பார்கள். இது தீண்டாமையின் மிகக் கொடூரமான வடிவம்" என்கிறார் சாமுவேல் ராஜ்.
இப்படித் தீண்டாமைச் சுவர்கள் கட்டப்படுவதற்கு பல்வேறு காரணங்களை ஆதிக்க ஜாதியினர் கூறுவதாகச் சொல்கிறார் அவர். "தங்கள் பகுதிக்கான பாதுகாப்பை ஒரு காரணமாகச் சொல்வார்கள். அடுத்ததாக, அரசு நிலத்தையோ, பொது நிலத்தையோ பட்டியலின மக்கள் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் இது போன்ற சுவர்கள் கட்டப்பட்டும். இதற்கடுத்தபடியாக ரியல் எஸ்டேட் செய்பவர்கள், தங்கள் நிலத்திற்கு அருகில் பட்டியலின மக்களின் குடியிருப்பு இருந்தால், அந்தப் பகுதியை ஒட்டி மிகப் பெரிய சுவற்றைக் கட்டுவார்கள். இந்த மூன்றும்தான் பிரதான காரணங்கள்" என்கிறார் அவர்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












