சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மீதான வன்கொடுமை வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தியதாகப் புகார் - நடந்தது என்ன?

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஒரு பெண்ணை சாதி பெயரைக் கூறி திட்டியதாகக் கூறப்படும் விவகாரத்தில் வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து விசாரணை அதிகாரி மாற்றப்பட்டுள்ளார். நடந்தது என்ன?
தொடர்புடைய பெண் கொடுத்த புகாரில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தவறான புகார் என்று கூறி பெண்ணின் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. பின்னர் இந்த வழக்கில் கடலூர் காவல் கண்காணிப்பாளர் நேரடியாக தலையிட்டு விசாரணை அதிகாரியை மாற்றியுள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை எனக் கூறப்படும் சிற்றம்பல மேடையில் ஏறி சாமி தரிசனம் செய்வது தொடர்பாக இரு தரப்பு தீட்சிதர்கள் இடையே பிரச்சனை இருந்து வந்தது. இந்த சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் தர்ஷன் என்ற தீட்சிதர், ஜெயஷீலா என்ற பெண்ணை சாமி கும்பிட சிற்றம்பல மேடைக்கு அழைத்துச் சென்றபோது மற்ற தீட்சிதர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது தம்மை சாதி பெயரை சொல்லி திட்டியதாக சிதம்பரத்தைச் சேர்ந்த ஜெயஷீலா சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
20 தீட்சிதர்கள் மீது வன்கொடுமை தடுப்பு வழக்கு
புகாரின் பேரில் சிதம்பரம் நகரப் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கூட்டமாக சேர்ந்து தடுத்தல், தாக்குதல் தொடர்பான சட்டப் பிரிவுகள் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவுகள் ஆகியவற்றின் கீழ் சிதம்பரம் காவல் நிலையத்தில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஜெயஷீலா அப்போது கொடுத்த புகாரில், "இந்த கோயிலுக்கு பல ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கிறேன். ஆனால் பல்வேறு காரணங்களை காட்டி என்னை கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கின்றனர். இது சாதி தீண்டாமை. மேலும் இங்கு இருக்கு வேறொரு தீட்சதர் உதவியுடன் கனக சபை மீது ஏற முற்பட்டபோது, என்னை மேலே செல்ல விடவில்லை. அப்போது கையை பிடித்து இழுத்தனர். சாதி பெயரை குறிப்பிட்டு திட்டினர். தவறாக பேசினர்" என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்தப் புகாரில் சுமார் 20 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருவதாக பிபிசியிடம் சிதம்பரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ரமேஷ்ராஜ் தெரிவித்திருந்தார். மேலும் கோயில் விவகாரம் தொடர்பாக சில பிரச்னைகள் நீடித்து கொண்டு இருப்பதால் அதனையொட்டி இந்த விசாரணை செய்யப்படும் என்று கூறியிருந்தார்.
"7 மாதங்களுக்கு மேலாகியும் நடவடிக்கை எடுக்காத காவல் துறை"
இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டறிய பிபிசி தமிழ் ஜெய ஷீலாவிடம் பேசியது, "கடந்த பிப்ரவரி மாதம் 13ஆம் தேதியன்று சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்யச் சென்றபோது, சாமி தரிசனம் செய்ய சென்ற இடத்தில் கதவுகள் பூட்டப்பட்டிருந்தன. அதனை அங்கிருந்த தீட்சிதர்களிடம் ஏன் எங்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிப்பதில்லை என்று கேள்வி எழுப்பினேன். அப்போது எனது சாதி பெயரை கொண்டு அழைத்து, தவறாகப் பேசினர். இதுதொடர்பாக புகார் கொடுக்கப்பட்டு, அதன் விசாரணையும் கடந்த 7 மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை." என்றார்.

"குற்றச்சாட்டை வாபஸ் பெற வலியுறுத்தல்"
விண்ணப்பத்தைக் கொடுத்து வழக்கைத் திரும்பப்பெறும்படி வலியுறுத்தியதாகவும் ஜெயஷீலா தெரிவிக்கிறார்.
"சிதம்பரம் நகர காவல் துறையினர் கடந்த வியாழக்கிழமை இரவு 10 மணிக்கு எனது வீட்டுக்கு வந்தனர். அப்போது நான் இந்த வழக்கில் பொய் உரைத்துள்ளதாகவும், தவறாக புகார் கொடுத்துள்ளதாகவும் கூறினர். மேலும் இது 'Mistake of facts(MF)' (புகாரில் கொடுக்கப்பட்ட உண்மைகளில் தவறு இருப்பது) என்றனர். அதற்கு என்ன கையெழுத்திடக் காவல் துறையினர் வலியுறுத்தினர். ஆனால் நான் கையெழுத்திட மறுத்துவிட்டேன். இந்த சம்பவம் நடைபெற்றது அனைத்தும் உண்மை, இது தொடர்பாக அனைத்து வீடியோ மற்றும் பொது மக்கள் ஆதாரங்கள் உள்ளன. இந்த விவகாரத்தில் ஒரு மாதங்களுக்கு மேலாக நான் தொடர்ந்து போராடினேன். அதற்கு மக்களும் ஆதரவளித்தனர்," என்றார் அவர்.
'வழக்கை வாபஸ் பெற தொடர்ந்து அழுத்தம்'
வழக்கை வாபஸ் பெற காவல்துறையினர் தொடர்ந்து வலியுறுத்தியதாகவும் ஜெயஷீலா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
" மீண்டும் வெள்ளிக்கிழமை வந்த காவல் துறையினர், மீண்டும் கையெழுத்துப் போட வலியுறுத்தினர். ஆனால் நான் கையெழுத்திடவில்லை. இதையடுத்து சிதம்பரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் மூலமாக வீட்டில் நோட்டீஸ் ஒட்டினர். அதாவது அதில் நான் கூறிய குற்றச்சாட்டுத் தவறானது என்பதைக் குறிக்கும் வகையில் அந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்ததது. பிறகு சிறிது நேரத்திற்குப் பின்னர் என் வீட்டில் ஒட்டப்பட்டிருந்த நோட்டீஸ் நீக்கப்பட்டு இருந்தது. யார் அதை நீக்கினர் என்று தெரியவில்லை."

"கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற இந்த விவகாரத்திற்குப் பின்னர் பல்வேறு போராட்டங்களைத் தொடர்ந்து மக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கின்றனர். இவை அனைத்தும் நான் பட்ட கஷ்டங்களுக்குக் கிடைத்த பலன்," என்கிறார் ஜெய ஷீலா.
விசாரணை அதிகாரியாக இருந்த ரமேஷ்ராஜ் கூறுவது என்ன?
இந்த வழக்கைத் தலைமை ஏற்று விசாரணை செய்த சிதம்பரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ரமேஷ்ராஜிடம் பிபிசி தமிழ் பேசியது.
"இந்த வழக்கில் அவர் தவறான குற்றச்சாட்டு வைத்ததாகக் கூறுகின்றனர். ஆனால் அதை திரும்பப் பெற்று விட்டோம். மேலும் இந்த வழக்கை மீண்டும் விசாரணை செய்து உண்மை தன்மையை கண்டறிய உத்தரவிடப்பட்டுள்ளது," என்று அவர் தெரிவித்தார்
விசாரணை அதிகாரி தவறு செய்துள்ளார் - எஸ்.பி.
காவல் துறை தரப்பில் அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பதை அறிய கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசனிடம் பிபிசி பேசியது.

"கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதியன்று இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை இரண்டு மாதத்தில் முடிக்கும்படி சிதம்பரம் காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு உயர் நீதிமன்றம் ஜூலை 29ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. ஆனால் அவர் தற்போது உடல் நலப் பிரச்சனை காரணமாக மருத்துவ விடுப்பில் இருப்பதால் இந்த வழக்கில் முறையான நடைமுறைகள் சிலவற்றைப் பின்பற்றாமல் அவசர அவசரமாக இந்த வழக்கை முடிக்க வேண்டும் என்பதற்காக தவறாக கையாண்டுள்ளார். இந்த விஷயத்தில் அவர் செய்தது தவறு, ஆனால் அவருக்கு ஏற்பட்ட சில அழுத்தங்களின் காரணமாக இவ்வாறு செய்ததாக கூறுகிறார். அவருக்கு துறை ரீதியான எச்சரிக்கை விடுக்கப்பட்டது," என்றார் அவர்.
விசாரணை அதிகாரி மாற்றம்
இந்த விவகாரம் வெளியானதைத் தொடர்ந்து விசாரணை அதிகாரியாக இருந்த ரமேஷ்ராஜ் மாற்றப்பட்டுள்ளதாக எஸ்.பி. சக்தி கணேசன் கூறினார்.
"இந்த தகவல் தெரிந்ததை அடுத்து, இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டு, அவர் தன்னிச்சையாக தகவல் கொடுக்காமல் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தையும் திரும்பப் பெற நடவடிக்கை எடுத்தேன். மேலும் புதிதாக விசாரணை அதிகாரியை நியமித்து உரிய விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளேன்," என்று சக்தி கணேசன் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













