தமிழ்நாட்டில் கட்டணமில்லா பேருந்துகளில் பெண்கள் விரும்பினால் பயணச் சீட்டை பெற முடியுமா?

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பெண்களை கட்டணமின்றி பயணம் செய்ய அனுமதிக்கும் பேருந்துகளில், பெண்கள் விரும்பினால் பயணச் சீட்டு பெறலாம் என செய்திகள் பரவுகின்றன. அது உண்மையா?
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் இயக்கும் சாதாரண கட்டணப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கென இந்தப் பேருந்துகளில் தனியாக பயணச் சீட்டுகளும் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக அமைச்சர் பொன்முடி, ஒரு கூட்டத்தில் பேசும்போது பெண்கள் ஓசியில் பயணம் செய்வதாகப் பேசியது சர்ச்சையானது. இதற்குப் பிறகு, சில ஊர்களில் பெண்கள், தங்களிடம் கட்டணம் வாங்கிக் கொண்டு பயணம் செய்ய அனுமதிக்க வேண்டுமென நடத்துநர்களிடம் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின. ஆனால், இது அ.தி.மு.க. ஆதரவாளர்களின் வேலை என தி.மு.கவினர் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில், கட்டணமில்லா பேருந்துகளில் பெண்கள் விரும்பினால் பயணச் சீட்டைப் பெற்று பயணம் செய்யலாம் என தமிழ்நாடு போக்குவரத்துத் துறை கூறியதாக செய்திகள் வெளியாயின.
இது குறித்து மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரிடம் கேட்டபோது, "அப்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. ஒரு சில அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள், வேண்டுமென்றே பேருந்துகளில் கட்டணம் செலுத்துவோம் என்று கூறி தகராறு செய்து, அதை வீடியோவாக எடுத்துப் பரப்பினர். அவ்வளவுதான். இதுபோல எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. முன்பிருந்த நிலையே தொடரும்" என்று தெரிவித்தார்.
2021ஆம் ஆண்டு மே மாதம் தி.மு.க. அரசு பதவியேற்றவுடன் முதலாவதாக அமல்படுத்திய மூன்று திட்டங்கள் பெண்கள் அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்ய அனுமதிக்கும் திட்டமும் ஒன்று. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ஆண்டு தோறும் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு தமிழ்நாடு அரசு 1,200 கோடி ரூபாயை வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின்படி பெண்கள், மாற்றுத் திறனாளிகள், அவர்களது உதவியாளர்கள், திருநங்கையர் ஆகியோர் சாதாரணக் கட்டணம் கொண்ட அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றிப் பயணிக்கலாம். தமிழ்நாடு முழுவதும் 7,291 பேருந்துகள் இந்தச் சலுகையுடன் இயக்கப்படுகின்றன. சென்னையில் மட்டும் 1,550 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு ஜூலை 12ஆம் தேதி முதல், கட்டணமில்லா பயணச் சீட்டு பெண்களுக்கு வழங்கப்பட்டும் வருகிறது.
இந்த சர்ச்சையின் பின்னணி என்ன?

தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் க.பொன்முடி சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்த திட்டம் தொடர்பாக பேசுகையில், `பெண்கள் பேருந்துகளில் ஓசியாக பயணிக்க முடிகிறது` என்று கூறிய கருத்து சர்ச்சைக்குள்ளானது. இதற்கு திமுகவின் கூட்டணி கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்திருந்தன.
இதனைத் தொடர்ந்து கோவை மாவட்டம் மதுக்கரையில் துளசியம்மாள் என்கிற மூதாட்டி பேருந்தில் பயணித்தபோது நடத்துனரிடம் ஓசியில் பயணிக்க முடியாது எனக்கூறி பயணச்சீட்டிற்கு பணம் செலுத்தும் காணொளி இணையத்தில் வைரலானது. அமைச்சர் பொன்முடியின் கருத்துக்கு எதிர்வினையாக இந்த நிகழ்வு பார்க்கப்பட்டது.
இந்த காணொளியை ட்விட்டரில் பகிர்ந்திருந்த பாஜக தலைவர் அண்ணாமலை, `இதுதான் "தமிழ் மாடல்"! சுயமரியாதை சுயமரியாதை என்று நொடிக்கு நூறு முறை கூச்சலிடும் "திராவிட மாடல்" அரசுக்கு சுயமரியாதை என்றால் என்ன என்று பாடம் புகட்டும் மூதாட்டி.` என்று பதிவிட்டிருந்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
ஆனால் மூதாட்டி பேசியதாக பரவும் காணொளி அதிமுகவினர் ஏற்பாடு செய்து எடுத்தது என திமுகவினர் குற்றம்சாட்டத் தொடங்கினர். திமுகவின் செய்தித் தொடர்பாளர் ராஜிவ் காந்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "கோவை அதிமுக ஐ.டி. விங்கை சேர்ந்த பிரித்திவிராஜ் என்பவர் தன் பக்கத்து வீட்டு துளசியம்மாள் என்கிற அதிமுகவை சேர்ந்த மூதாட்டியை அழைத்து கொண்டு போய் TN 38 N 2841 எண் பேருந்தில் நடத்துனருடன் நான் ஓசியில் போக மாட்டேன் என பிரச்சனை செய்ய வைத்து அதை வீடியோவாக பதிவு செய்து பரப்பி இருக்கிறார்!" என்று பதிவிட்டிருந்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
இதற்கு எதிர்வினையாற்றிய அதிமுகவின் பிரித்திவிராஜ், "ஆமாம் நான் தான். எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல் அவியலா செய்யும்.???" என்று பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் பேருந்தில் வீடியோ பதிவு செய்த மூதாட்டி மற்றும் அதிமுக பிரமுகர்கள் மீது கோவை காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது.
ஆனால் காவல்துறையினர் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். மதுக்கரை காவல்நிலைய ஆய்வாளர் வைரம் பிபிசி தமிழிடம் பேசுகையில், "இந்த செய்தி தவறானது. இந்த விவகாரம் தொடர்பாக புகார் மட்டும் தான் கொடுத்துள்ளனர். ஆனால் யார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை" என்று தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












