இந்திய எதிர்ப்பை மீறிய அமெரிக்கா - பாகிஸ்தான் போர் விமானங்களை பராமரிக்க ஒப்புதல்

போர் விமானம்

பட மூலாதாரம், EPA/OLIVIER HOSLET

பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட எஃப்-16 போர் விமானங்களை பராமரிப்பதற்கான சிறப்பு திட்டத்திற்கு அமெரிக்காவின் பைடன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் கீழ் ஏற்கெனவே பாகிஸ்தான் அரசிடம் இருக்கும் எஃப்-16 விமானங்கள் பழுதுபார்க்கப்பட்டு உபகரணங்களும் வழங்கப்படும் என டிஃபன்ஸ் செக்யூரிட்டி ஒத்துழைப்பு கழகம் (டிஎஸ்சிஏ) அறிக்கை வெளியிட்டுள்ளது.

இருப்பினும், விமானத்தில் புதிய திறன்களை சேர்க்கும் திட்டம் எதுவும் இல்லை மற்றும் புதிய ஆயுதங்களும் வழங்கப்படாது.

இது பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இது பிராந்தியத்தின் ராணுவ சமநிலையை பாதிக்காது என்று அமெரிக்கா கூறுகிறது.

இந்தியாவின் எதிர்வினை

அமெரிக்கா பாகிஸ்தான் விமானப்படைக்கு வழங்கும் இந்த ஆதரவை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் விமர்சித்துள்ளார்.

அமெரிக்க-பாகிஸ்தான் கூட்டணியால் கிடைக்கும் பயன்கள் குறித்து கேள்வி எழுப்பிய ஜெய்சங்கர், பாகிஸ்தானோடு அமெரிக்கா கொண்டுள்ள உறவு இருதரப்புக்கும் உதவவில்லை என்று தெரிவித்தார்.

டாக்டர் எஸ். ஜெய்சங்கர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டாக்டர் எஸ். ஜெய்சங்கர்

பாகிஸ்தானின் எஃப்16 போர் விமானங்களின் பாகங்கள் மற்றும் பராமரிப்பு என்று 45 கோடி டாலரை வழங்கும் பைடன் நிர்வாகத்தின் திட்டத்தல், இந்த மிகவும் திறமைமிக்க போர் விமானங்கள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று கூறுவது பகுத்தறிவற்றது. மாயையும் கூட என்று அவர் விமர்சனம் செய்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வாஷிங்டன்னில் இந்திய அமெரிக்க சமூகம் நடத்திய கூட்டத்தில், பாகிஸ்தானுக்கு எஃப்16 ரக போர் விமான தளவாடங்களை விற்பதற்கு அமெரிக்காவின் முடிவு பற்றி ஜெய்சங்கரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இது பாகிஸ்தானுக்கும், அமெரிக்க நலன்களுக்கும் உதவாத உறவு. எனவே, இந்த உறவால் தங்களுக்கு கிடைத்த சாதகங்கள் என்ன? என்பது குறித்து இன்று அமெரிக்கா ஆய்வு செய்ய வேண்டும் என்று ஜெய்சங்கர் தெரிவித்தார்.

எஃப்16 போர் விமானங்கள் குறித்தும் அவை எங்கு, எதற்காக பயன்படுத்தப்படுகின்றன என்றும் அனைவரும் அறிந்ததே. பயங்கரவாத எதிர்ப்புக்காக இதை எல்லாம் செய்கிறோம் என்று சொல்வதன் மூலம் நீங்கள் யாரையும் ஏமாற்றவில்லையா என்று அவர் கேள்வி எழுப்பினார்.

அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு எஃப்16 போர் விமானங்களுக்கு பராமரிப்பு அளிக்கும் திட்டத்திற்கு ஏதிராக இந்தியாவின் கருத்துகளை இந்தியாவின் பாதுகாப்புத்துறை அசைமச்ர் ராஜ்நாத் சிங், அமெரிக்க பாதுகாப்பு செயலர் லாய்ட் அஸ்டினிடம் உடனடியாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த வணிக திட்டம் மூலம் அமெரிக்கா எந்தவித புதிய திறன்களையோ, ஆயுதங்களின் அமைப்பையோ பாகிஸ்தானுக்கு வழங்கவில்லை என்று அமெரிக்க உயரிய ரஜ்ஜீய அதிகாரி டோனால்ட் லு தெரிவித்திருக்கிறார். இப்போது இருக்கின்ற விமானங்களின் பாகங்களை விற்பனை செய்வது மட்டுமே. இதன் மூலம் பாகிஸ்தானுக்கு உதவி அளிக்கப்படவில்ல என்றும் அவர் விளக்கம் அளித்திருக்கிறார்.

அதிகாரி டொனால்ட் லு சில நாட்களுக்கு முன் இந்தியாவிற்கு வந்திருந்தபோது இந்திய வெளியுறவு அமைச்சகம் இதற்கு பலமுறை ஆட்சேபம் தெரிவித்ததாக ஆங்கில செய்தித்தாள் தி இந்து தெரிவித்துள்ளது.

குவாட் அமைப்பின் மூத்த அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டொனால்ட் லு டெல்லி வந்திருந்தார்.

பாகிஸ்தானின் எப்-16 போர்விமானங்களுக்கு தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்படுவது குறித்து இந்திய தரப்பு கவலை தெரிவித்ததாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு இந்த உதவி அவசியம் என்று பாகிஸ்தான் கூறி வரும் நிலையில், தனக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக பாகிஸ்தான் அதை பயன்படுத்தும் என்று இந்திய அரசு கூறுகிறது.

இந்த ஒப்பந்தம் இந்திய அமெரிக்க உறவை பாதிக்காது என்று சொல்லமுடியாது என்று அரசு கூறுவதாக எகனாமிக் டைம்ஸ் நாளிதழில் வெளியான செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியாவின் பாதுகாப்பை பாதிக்கக்கூடிய இந்த கொள்கை முடிவு குறித்து அமெரிக்கா முன்னரே தெரிவிக்காததால் இந்தியா கோபமடைந்துள்ளது என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

பாக்பத்

ஒப்பந்தத்தில் அடக்கியிருப்பவை என்னென்ன?

  • ஏற்கனவே விற்கப்பட்ட எப்-16 விமானங்களின் பராமரிப்புக்கு இந்த ஒப்பந்தம் வகைசெய்கிறது. இதனால் விமானம் செயல்படும் நிலையில் இருக்கும்.
  • இதற்காக பாகிஸ்தான் தன்னிடம் கோரிக்கை விடுத்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
  • விமானத்தின் இன்ஜினில் ஹார்டுவேர் மற்றும் சாஃப்ட்வேர் மாற்றங்கள் செய்யப்படும் என்று இந்த ஒப்பந்தம் தெரிவிக்கிறது.
  • எஞ்சின் பழுதுபார்க்கப்படும். கூடவே தேவைக்கேற்ப புதிய பாகங்கள் மாற்றப்படும்.
  • விமானத்திற்கான ஆதரவு உபகரணங்கள் வழங்கப்படும்.
  • இந்த ஒப்பந்தம் 45 கோடி டாலர்கள் மதிப்பிலானது மற்றும் லாக்ஹீட் மார்ட்டின் என்ற நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை நிறைவு செய்யும்.
  • கடந்த நான்கு ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கான அமெரிக்காவின் மிக முக்கியமான பாதுகாப்பு முடிவு இது என்று கருதப்படுகிறது.
பாக்பத்

பைடனுக்கு முன் அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப், பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட 300 கோடி டாலர் பாதுகாப்பு உதவியை 2018 ஆம் ஆண்டில் ரத்து செய்தார்.

ஆப்கானிஸ்தான் தாலிபன் மற்றும் ஹக்கானி நெட்வொர்க் போன்ற குழுக்களை கட்டுப்படுத்த பாகிஸ்தான் தவறிவிட்டது என்று அவர் கூறினார்.

பாகிஸ்தானைத் தவிர, பஹ்ரைன், பெல்ஜியம், எகிப்து, தைவான், டென்மார்க், நெதர்லாந்து, போலந்து, போர்ச்சுகல், தாய்லாந்து போன்ற நாடுகளுக்கும் அமெரிக்கா எப்-16 விமானங்களை வழங்கியுள்ளது.

அதே சமயம் அமெரிக்கா,அப்பாச்சே ஹெலிகாப்டருக்காக இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. கூடவே இந்தியாவுடன் ஒரு பெரிய பாதுகாப்பு கூட்டாண்மை திட்டத்தையும் அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.

ஆயுத இறக்குமதியைப் பார்த்தால், அமெரிக்காவை காட்டிலும் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிக ஆயுதங்களை வாங்குகிறது. ஆனால் சமீப காலமாக, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் இருந்து இந்தியா ஆயுதங்கள் வாங்குவது அதிகரித்துள்ளது.

இந்திய-அமெரிக்க உறவுகளில் தாக்கம் ஏற்படுமா?

போர் விமானம்

அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் இந்தியாவின் இடம் முக்கியமானது. இரு நாடுகளும் முக்கியமான விஷயங்களில் பங்குதாரர்கள். இரு நாடுகளும் ஜி-20, குவாட்,இந்தோ பசிபிக் பொருளாதார கட்டமைப்பு போன்ற மன்றங்களில் சேர்ந்து செயல்படுகின்றன. ஆனால், தெற்காசியப் பகுதியில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான பதற்றமான உறவுகள் பற்றி அனைவருமே அறிவார்கள்.

அத்தகைய சூழ்நிலையில், இந்தியாவின் நடவடிக்கையை ராஜதந்திர ரீதியில் பார்க்க வேண்டியது அவசியம். ஏனென்றால் பாகிஸ்தானுடன் அமெரிக்கா எந்தவிதமான பாதுகாப்பு ஒப்பந்தத்தையும் செய்து கொள்வதை இந்தியா விரும்பவில்லை. எனவே, இது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவை பாதிக்குமா?

இந்தியா விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அமெரிக்காவின் இந்த முடிவை இந்தியா ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும் என்று வெளியுறவுத்துறை நிபுணர் மனோஜ் ஜோஷி கூறுகிறார்.

"பாகிஸ்தான் தனது மூலோபாய முக்கியத்துவத்தையும், தன்னை யாரும் ஒதுக்க முடியாது என்பதையும் காட்டியுள்ளது. இடையில் சில ஆண்டுகள் அமெரிக்க- பாகிஸ்தான் உறவுகள் சற்று மோசமடைந்தன. ஆனால் சூழல் மேம்பட்டுள்ளது என்பதையும் இரு நாடுகளும் நல்லுறவை முன்னெடுத்துச்செல்ல தயாராக உள்ளன என்பதையும் அமெரிக்காவின் இந்த முடிவு சுட்டிக்காட்டுகிறது," என்று அவர் குறிப்பிட்டார்.

"அமெரிக்கா இந்தியாவின் பக்கம் மட்டுமே நின்று, ஆப்கானிஸ்தான், மத்திய ஆசியா, இரானுடன் எல்லையை பகிர்ந்துகொண்டுள்ள பாகிஸ்தான் போன்ற முக்கியமான நாடுகளை புறக்கணிக்க விரும்பவில்லை. இப்போது ஆப்கானிஸ்தானில் தாலிபன் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. அமெரிக்கா அங்கிருந்து வெளியேற வேண்டிவந்தது. ஆப்கானிஸ்தானைக் கண்காணிக்கவும், இங்குள்ள பிராந்திய புவிசார் அரசியலை கவனிக்கவும் முடியக்கூடிய ஆசியாவின் ஒருபகுதியில் காலூன்ற அமெரிக்கா விரும்புகிறது," என்று மனோஜ் ஜோஷி மேலும் கூறினார்.

war plain

பட மூலாதாரம், Getty Images

"ரஷ்யா - யுக்ரேன் போர் தொடங்கியதில் இருந்தே இந்தியாவின் அணுகுமுறை அமெரிக்காவுக்கு பிடிக்கவில்லை. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துமாறு பலமுறை அமெரிக்க தலைவர்கள் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவின் நலன்களை கருத்தில் கொண்டு அமெரிக்கா கவனமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவின் சில முடிவுகளை அமெரிக்காவும் கண்டும் காணாதது போல இருந்து வருகிறது. ஆனால் இப்போது பாகிஸ்தானுடனான தன் உறவு நிலையானதாக இருக்க முடியும் என்று அந்த நாடு முடிவு செய்துள்ளது,"என்கிறார் அவர்.

எப்-16 எப்போது, எப்படி உருவாக்கப்பட்டது?

1972ல் இலகு ரக போர் விமானத்தின் தேவை உணரப்பட்டபோது, ஜெனரல் டைனமிக்ஸ் என்ற நிறுவனம் எப்-16 விமானத்தை தயாரித்தது. அந்த விமானத்தின் பெயர் Fighting Falcon அதாவது F-16.

இது ஒற்றை இருக்கை, ஒற்றை எஞ்சின் கொண்ட ஜெட் விமானம். ஒலியை விட இரண்டு மடங்கு வேகத்தில் பறக்கக்கூடியது மற்றும் பலவிதமான ஏவுகணைகள் மற்றும் குண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்டவை.

போர் விமானம்

பட மூலாதாரம், EPA/OLIVIER HOSLET

இந்த நிறுவனம் பின்னர் லாக்ஹீட் மார்ட்டின் கார்பரேஷனின் ஒரு பகுதியாக மாறியது. இந்த விமானத்தின் முதல் தொகுப்பு, 1978 இல் அமெரிக்க விமானப்படைக்கு வந்தது.

"இந்த விவகாரத்தில் அமெரிக்கா ராஜதந்திர விளையாட்டை விளையாடுகிறது. இந்தியாவின் நல்ல நண்பன் என்று அமெரிக்கா தன்னைப்பற்றி தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் ரஷ்ய- யுக்ரேன் போர் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டை அது எதிர்க்கிறது. ஏனென்றால் ரஷ்யாவுடனான உறவை இந்தியா தொடர்ந்து பராமரித்துவருகிறது," என்று பாதுகாப்பு நிபுணர் சுஷாந்த் சரீன் கூறுகிறார்.

" நீங்கள் உங்கள் சொந்த வழியில் விளையாடினால், பாகிஸ்தானை எங்கள் விளையாட்டில் நாங்கள் சேர்த்துகொள்வோம் என்று இந்த நடவடிக்கையின் மூலம் அமெரிக்கா சுட்டிக்காட்டுகிறது. ஒரே வித்தியாசம் என்னெவென்றால் இது அவர்களின் குறுகிய பார்வை. ஏனென்றால் பாகிஸ்தான் சீனாவுக்கு அருகில் செல்கிறது. அதே நேரம் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இவ்வாறான சூழ்நிலையில் அமெரிக்கா, சீனாவின் நண்பனிடம் நட்புக்கரம் நீட்டி இந்தியாவை கோபப்படுத்துவது ஏன் என்று எனக்கு விளங்கவில்லை. பரஸ்பர நம்பிக்கை மீது இது விளைவை ஏற்படுத்தக்கூடும்," என்கிறார் அவர்.

"2018 இல் பாகிஸ்தானுடனான ஒப்பந்தத்தை டிரம்ப் ரத்து செய்ததால் இந்தியாவுக்கு இது சிறிது விசித்திரமான சூழலாக இருக்கக்கூடும். ஆனால், பைடன் நிர்வாகத்தின் இந்த முடிவு பாகிஸ்தானின் பக்கம் அமெரிக்கா சாய்வதைக் காட்டுகிறது. 45 கோடி டாலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தம், கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக பாகிஸ்தானுடன் மோசமடைந்து வந்த உறவுகள் இப்போது முன்னேற்றப் பாதையில் செல்வதற்கான அறிகுறியாகும்," என்று பாதுகாப்பு வல்லுநர் ராகுல் பேடி குறிப்பிட்டார்.

"இந்தியாவின் தூதாண்மையை பொறுத்தவரை, அது அமெரிக்காவை நண்பனாக கருதுகிறது. அமெரிக்கா இந்தியாவின் நண்பன்தான். இருப்பினும் பாகிஸ்தானுடன் உறவு வைத்துக்கொள்ள அது விரும்புகிறது. இது இந்தியாவின் தூதாண்மைக்கு ஒரு பேரிடியாக இருக்கும்."

பாகிஸ்தானுக்கு எப்16 விமானம் எப்போது, எப்படி கிடைத்தது?

போர் விமானம்

பட மூலாதாரம், Getty Images

1981-ம் ஆண்டு அமெரிக்காவிடமிருந்து எஃப்-16 விமானத்தை பாகிஸ்தான் முதலில் வாங்கியது. சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானை தாக்கிய காலம் அது.

ஆனால், பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்தது. பாகிஸ்தானின் அணுசக்தித் திட்டம் குறித்து கவலை தெரிவித்த அமெரிக்கா இவற்றில் 28 விமானங்களை அந்த நாடு வாங்குவதற்கு தடை விதித்தது. இந்த விமானங்களை அணுகுண்டு தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயன்படுத்தக்கூடும் என்ற அச்சம் நிலவியது.

ஆனால், இதற்காக பாகிஸ்தான் ஏற்கனவே 65 கோடியே 80 லட்சம் டாலர்களை அமெரிக்காவுக்கு வழங்கியிருந்தது. பின்னர் அதை அமெரிக்கா திருப்பி அளித்தது.

இந்நிலையில், 2001-ல் நிலைமை மாறியது. 9/11 தாக்குதலில் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்களின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதன் பிறகு ஆசியா, குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு மிகவும் முக்கியமானதாக மாறியது. பின்னர் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு ஆதரவு அளிப்பதாக உறுதியளித்தார்.

அதனால், பாகிஸ்தான் மீதான கட்டுப்பாடுகளை நீக்கிய அமெரிக்கா, 18 நவீன எஃப்-16 விமானங்களை அந்த நாட்டிற்கு விற்பனை செய்தது. ஏற்கனவே விற்கப்பட்ட விமானங்களுக்கான ஆதரவையும் தொடர்ந்து அளித்தது.

2011 ஆம் ஆண்டில், எப்-16 உட்பட சி-130, டி-37 மற்றும் டி-33 விமானங்களுக்கான பாகங்களுக்கான 6 கோடியே 20 லட்சம் டாலர்களுக்கான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பின்னர் 2016 ஆம் ஆண்டில், அமெரிக்கா பாகிஸ்தானுடன் சுமார் 70 கோடி டாலர் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, அதன் கீழ் எட்டு எப்-16 பிளாக் (block) 52 விமானங்கள் விற்கப்பட்டன.

இதற்குப் பிறகு 2019 இல் பாகிஸ்தானின் வேண்டுகோளின் பேரில், எப்-16 திட்டத்தில் தொழில்நுட்ப உதவிக்காக, தொழில்நுட்ப பாதுகாப்புக் குழுவிற்கு 12.5 கோடி டாலர் வழங்கும் ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டது.

ரஃபால் விமானம்

பட மூலாதாரம், JOE GIDDENS/PA WIRE

படக்குறிப்பு, ரஃபால் விமானம்

ரஃபாலுடன் ஒப்பிடும்போது எஃப்-16 எவ்வளவு சக்தி வாய்ந்தது?

தற்போது இந்த விமானங்களை செயல்படும் நிலையில் பராமரிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதால், ஒட்டுமொத்த பிராந்தியத்திலும் அதன் தாக்கம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுகிறது.

இந்த ஒப்பந்தம் பாகிஸ்தானின் ராணுவ பலம் மீது தாக்கத்தை ஏற்படுத்துமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பிரான்ஸிடம் இருந்து இந்தியா வாங்கிய நவீன ரஃபால் விமானங்கள் உட்பட ஏராளமான போர் விமானங்கள் இந்தியாவிடம் உள்ளன. ரஃபாலுடன் ஒப்பிடும்போது எஃப்-16 விமானங்கள் எவ்வளவு சக்திவாய்ந்தவை?

காணொளிக் குறிப்பு, பொன்னியின் செல்வன் படத்தை முன்பே எடுக்காமல் போனது நல்லது: இயக்குநர் மணிரத்னம்

"எஃப்-16 என்பது 3.5 தலைமுறை விமானம். ரஃபால் 4.5 தலைமுறை விமானம் மற்றும் ஒப்பீடளவில் மிகவும் சிறந்தது. சுகோய்-30 மற்றும் மிராஜ் 2000 ஆகியவற்றை எஃப்-16 உடன் ஒப்பிடலாம்," என்று ராகுல் பேடி கூறுகிறார்.

"அமெரிக்கா அறிக்கையில் கூறியுள்ளது போலவே இது பிராந்தியத்தின் ராணுவ சமநிலையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தாது. ஏனெனில் இது ஓர் ஆதரவு தொகுப்பு திட்டம். புதிய ஆயுத ஒப்பந்தம் அல்ல. பாகிஸ்தான் கடந்த பல ஆண்டுகளாக எஃப்-16 ஐ இயக்கி வருகிறது," என்று அவர் கூறினார்.

பாகிஸ்தானிடம் எத்தனை எப்-16 விமானங்கள் உள்ளன?

பாகிஸ்தானிடம் மொத்தம் 85 எப்-16 விமானங்கள் உள்ளன என்று வெளியுறவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆரோன் ஸ்டீன் மற்றும் ராபர்ட் ஹாமில்டனின் 2020 ஆம் ஆண்டின் அறிக்கை தெரிவிக்கிறது..

இவற்றில் 66, பழைய ப்ளாக் 15 மற்றும் 19 நவீன ப்ளாக் 52 மாடல்கள் ஆகும்.

போர் விமானம்

பட மூலாதாரம், EPA

இதுவரை பாகிஸ்தான் எப்-16 விமானங்களின் பராமரிப்புக்காக 300 கோடி டாலர்களுக்கு மேல் செலவிட்டுள்ளது.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவு மோசமடைந்து வரும் நிலையில் பாகிஸ்தான், அமெரிக்காவுடனான உறவை மேம்படுத்துவதைத் தொடருமா என்ற கேள்வியும் உள்ளது.

"பாகிஸ்தான் அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் பெறும் என்பது உண்மைதான். சீனாவிடம் இருந்தும் அது ஆயுதங்களை வாங்கும். ஏனென்றால் அமெரிக்கா அதற்கு எல்லா வகையான ஆயுதங்களையும் கொடுக்காது. ஆனால், அமெரிக்காவுக்கு இது ஏற்கனவே தெரியும். ஒரு கட்டத்திற்கு மேல் பாகிஸ்தான் முன்னே செல்லாது, தனக்கு எதிராக எதையும் செய்யாது என்று அமெரிக்கா நம்புகிறது," என்று மனோஜ் ஜோஷி கூருகிறார்.

இந்தியாவை பொறுத்தவரை இந்த விஷயம் இப்போதுவரை அத்தனை தீவிரமானதாக இல்லை என்று அவர் கூறுகிறார்.

"பாகிஸ்தான் விஷயத்தில் அமெரிக்கா மிகவும் கவனமாக நடவடிக்கைகளை எடுக்கும். மேலும் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு புதிய ஆயுதங்களை வழங்கினால் அப்போது அது இந்தியாவுக்கு தீவிரமானதாக இருக்கும்,"என்று அவர் குறிப்பிட்டார்.

''அமெரிக்காவின் இந்த முடிவு பாகிஸ்தான் ராணுவத்தை பலப்படுத்தும் என்று சொல்லமுடியாது. ஆனால் அதன் தன்னம்பிக்கை அதிகரிக்கும்,"என்கிறார் ராகுல் பேடி.

"பாகிஸ்தானை விட்டு அமெரிக்கா விலகிச்சென்றுவிட்டது என்ற எண்ணம், கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தானில் இருந்தது. அமெரிக்காவுடன் தொடர்ந்து நல்லுறவை பராமரிக்கும் பாகிஸ்தானின் முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளன என்பதை அமெரிக்காவின் இந்த நடவடிக்கை நிரூபித்துள்ளது."

"இது ஆரம்பம் என்று நான் நினைக்கிறேன. வரும் காலங்களிலும் அமெரிக்கா பாகிஸ்தானை தொடர்ந்து ஆதரிக்கும். அமெரிக்கா மேலும் எப்-16 ஐ பாகிஸ்தானுக்கு வழங்குமா என்று தெரியவில்லை. ஆனால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேம்படும் என்பது உறுதி," என்று அவர் குறிப்பிட்டார்.

போர் விமானம்

பட மூலாதாரம், Getty Images

எப்-16 பற்றிய விவாதம்

2019 ஆம் ஆண்டு, பிப்ரவரி 27 ஆம் தேதி, இந்திய எல்லைக்கு அருகே பாகிஸ்தான் எப்-16 விமானத்தைப் பயன்படுத்தியது. பின்னர், இந்திய விமானப்படையின் மிக்-21 பைசன், பாகிஸ்தானின் எஃப்-16 விமானத்தை நவ்ஷேரா செக்டரில் சுட்டு வீழ்த்தியதாகக் கூறியது.

இதற்கு ஒரு நாள் முன்பு பிப்ரவரி 26 அன்று, இந்திய விமானப்படை இரவின் இருளில் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து பாலாகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் 'பயிற்சி முகாம்கள்' மீது 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' நடத்தியதாகக் கூறியது.

இதைத் தொடர்ந்து அமெரிக்க பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் பாகிஸ்தானின் எஃப்-16 விமானங்களை கணக்கிட்டதாகவும், அவற்றின் எண்ணிக்கை குறையவில்லை என்றும் செய்திகள் வெளியாயின. இருப்பினும், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகமான பென்டகன் அத்தகைய ஆய்வை மறுத்துள்ளது.

அதே நேரம் எஃப்-16 தவறாகப் பயன்படுத்தப்பட்டது குறித்து மூத்த அமெரிக்க தூதாண்மை அதிகாரி ஒருவர் பாகிஸ்தான் விமானப்படைத் தலைவரிடம் கேள்வி எழுப்பியதாகவும் செய்தி வெளியானது.

காணொளிக் குறிப்பு, இந்து மதத்துக்கு மாறிய முஸ்லிம் குடும்பம் - தற்போதைய நிலை?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: