வெள்ளலூர் பேருந்து நிலைய சர்ச்சை: திமுக-அதிமுக இடையே விவாதப் பொருளானது எப்படி?

வெள்ளலூர் பேருந்து நிலைய திட்டம்
    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கோவை மாவட்டம் வெள்ளலூரில் அமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலையம் மாற்றப்படுவதாக எழுந்த சர்ச்சை திமுக - அதிமுக இடையே மிகப் பெரிய விவாதப் பொருளானது. அப்படி என்ன சர்ச்சை, அதன் பின்னணி என்ன?

வெள்ளலூர் பேருந்து நிலையத்தை வைத்து என்ன சர்ச்சை?

கோவை மாவட்டம் வெள்ளலூரில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ரூ.168 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. மாநகராட்சியும் தமிழக அரசும் 50:50 என்கிற கணக்கில் செலவை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் வெள்ளலூர் பேருந்து நிலையம் வேறு இடத்திற்கு மாற்றப்படுவதாக செய்திகள் வெளியாகின. இதற்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

திமுக என்ன சொல்கிறது?

வெள்ளலூர் என்பது கோவையின் பிரதான பகுதிகளிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. இதனால் வெள்ளலூரில் பேருந்து நிலையம் அமைந்தால் பயண நேரம் அதிகமாகும். மேலும் வெள்ளலூருக்குச் செல்வதற்கு சரியான சாலை வசதிகள் கிடையாது. இதனால் வெள்ளலூரில் பேருந்து நிலையத்தை அமைப்பது சாத்தியப்படாது.

மேலும் பேருந்து நிலையம் அமையவிருக்கும் இடத்திற்கு பின் புறமே வெள்ளலூர் குப்பைக் கிடங்கு செயல்பட்டு வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடுகளும் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. எனவே போக்குவரத்துக்கு ஏதுவான வேறு இடத்திற்கு பேருந்து நிலையத்தை மாற்ற வேண்டும் என திமுக முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் ந.கார்த்திக் தெரிவித்திருந்தார்.

அதிமுக என்ன சொல்கிறது?

இந்த செய்தி வெளியான உடனே அதனைக் கண்டித்து தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

`முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமான தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று கோவையின் பல்வேறு இடங்களில் நிலங்களை வாங்கி வருகிறது. அவர்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பதற்காக மக்கள் வரிப் பணத்தை வீணடித்து வெள்ளலூர் பேருந்து நிலையத்தை மாற்றத் துடிக்கின்றனர். இந்த முடிவை செயல்படுத்தினால் அதிமுக தொடர் உண்ணாவிரதப் போராட்டமும், சட்டப் போராட்டமும் மேற்கொள்ளும்` என்றார்.

வெள்ளலூர் பேருந்து நிலைய திட்டம்

முதல்வர் காத்த மௌனமும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கருத்தும்

கடந்த ஆகஸ்ட் மாதம் மூன்று நாள் அரசு முறை பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை வந்திருந்தார். அப்போது தான் வெள்ளலூர் விவகாரம் சூடுபிடித்திருந்தது. ஆகஸ்ட் 24-ம் தேதி கோவை ஈச்சனாரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் இது தொடர்பாக பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதுவும் பேசவில்லை. மாறாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், `வெள்ளலூர் பேருந்து நிலைய விவகாரம் தொடர்பாக கோவை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் செயல்படுத்தப்படும். அரசு திட்டங்களை தேவையில்லாமல் அரசியலாக்குகிறார்கள்` என்றார்.

மாநகராட்சி கூட்டத்தில் என்ன நடந்தது?

அமைச்சர் செந்தில் பாலாஜியின் கருத்துக்குப் பிறகு கோவை மாநகராட்சி கூட்டம் 29.08.2022 அன்று நடைபெற்றது. அப்போது வெள்ளலூர் பேருந்து நிலையம் தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக அதிமுக மாநகராட்சி உறுப்பினர் பிரபாகரன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த மாநகராட்சி ஆணையர் பிரதாப், `மத்திய அரசின் ரைட்ஸ் (RITES) என்கிற ஆய்வு நிறுவனம் வெள்ளலூர் பேருந்து நிலையம் தொடர்பாக ஆய்வு செய்து வருகின்றனர். அந்த ஆய்வு அறிக்கை கிடைத்தபிறகு தமிழக அரசுக்கு அனுப்பப்படும். அதன் பின்னர் தான் முடிவெடுக்கப்படும்` என்றார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி

தற்போதைய நிலை என்ன?

கொரோனா ஊரடங்கால் தொய்வடைந்த வெள்ளலூர் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. ரூ.168 கோடி மதிப்புள்ள திட்டத்தில் தற்போது 40 சதவிகித பணிகள் முடிவுற்றுள்ளன. கோவை மாநகராட்சி ரூ.40 கோடி வரை செலவிட்டுள்ளது.

`ரைட்ஸ் அமைப்பிடம் மேலும் சில விவரங்கள் தொடர்பாக ஆய்வு செய்யுமாறு கேட்டுள்ளோம். அந்த பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றான, விரிவான அறிக்கை இன்னும் தயாராகவில்லை. ஆய்வு முடிவிற்குப் பிறகு தான் அடுத்தக்கட்ட முடிவுகள் எடுக்கப்படும்` என கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் பிபிசி தமிழிடம் தெரிவித்திருந்தார்.

எஸ்.பி.வேலுமணி மீது ஊழல் குற்றச்சாட்டு

இந்த நிலையில் வெள்ளலூரில் பேருந்து நிலையம் அமைப்பதில் முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக திமுக பிரமுகர் ரேஸ்கோர்ஸ் ரகுநாத் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்துள்ளார். அதில், `முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அவரின் பினாமிகளுக்கு முறைகேடாக ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளது. எனவே இதனை லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

வெள்ளலூர் பேருந்து நிலைய திட்டம்

இந்தக் குற்றச்சாட்டை அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன் மறுத்துள்ளார். பிபிசி தமிழிடம் பேசியவர், `திமுகவின் திசை திருப்பும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று. லஞ்ச ஒழிப்புத் துறை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்து இரண்டு முறை சோதனையும் நடத்தியுள்ளது. அப்போதெல்லாம் கிடைக்காத ஆவணங்களா தற்போது கிடைத்துவிடும்` என்றார்.

தற்போது வெள்ளலூர் பேருந்து நிலையத்தை இடமாற்றுவதற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தப்போவதாக கோவை மாவட்ட பாஜக அறிவித்துள்ளது.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

வெள்ளலூர் சர்ச்சை தொடக்கம் முதல்

  • 2014-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கோவையில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • 2017 - மத்திய அரசு பாரத் மாலா திட்டத்தின் கீழ் மாநில அரசுகளுடன் இணைந்து ஒருங்கிணைந்த பேருந்து முனையம் - பஸ் போர்ட் அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது.
  • 2018 - தமிழ்நாட்டில் சேலம், கோவை ஆகிய இரு மாவட்டங்கள் பஸ் போர்ட் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டது.
  • 2018 - கோவையில் வெள்ளலூரில் பஸ் போர்ட் அமைப்பதற்காக தமிழக அரசு இடம் தேர்வு செய்தது
  • 2018 - வெள்ளலூரில் பேருந்து நிலையம் அமைக்க மத்திய அரசு ஆட்சேபனை தெரிவித்து அது தொடர்பாக ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது.
  • 20.12.2018 - தேசிய நெடுஞ்சாலை மற்றும் கட்டமைப்பு வளர்ச்சி கழகம் வெள்ளலூர் தொடர்பாக கூட்டம் நடத்தியது.
  • 20.02.2019 வெள்ளலூரில் பேருந்து நிலையம் அமைக்க முடியாது என்கிற முடிவு போக்குவரத்து துறை இயக்குனருக்கு தெரிவிக்கப்பட்டது.
  • 20.12.2019 மத்திய அரசின் முடிவு போக்குவரத்து துறை இயக்குனரிடமிருந்து தமிழக அரசு தெரிவிக்கப்பட்டது.
  • ஜூலை 2019 - மத்திய அரசின் நிதியுதவி இல்லாமல் மாநில அரசும் கோவை மாநகராட்சியும் தங்களுடைய சொந்த பணத்தில் பேருந்து நிலையம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டது.
  • ஜனவரி 2020 - வெள்ளலூரில் பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கியது. அதன் பின்னர் கொரோனா ஊரடங்கால் கட்டுமானப் பணிகள் தொய்வடைந்தது.
  • ஆகஸ்ட் 2022 - 40% பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் பேருந்து நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதாக சர்ச்சை உருவானது.
சிவப்புக் கோடு
காணொளிக் குறிப்பு, மனு கொடுக்க வந்த பெண்ணை திட்டி அனுப்பிய பாஜக எம்.எல்.ஏ

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: