ஓய்வூதியம்: பணி ஓய்வுக்குப் பிறகு பணம் கிடைக்க எதில் முதலீடு செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஐ.வி.பி கார்த்திகேயா
- பதவி, பிபிசி தெலுங்கு சேவைக்காக
நமது தலைமுறைக்கும் நமக்கு முந்தைய தலைமுறைக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு 'பணி ஓய்வுக்கு பிறகு கிடைக்கும் ஓய்வூதியம்' என்று சொன்னால் அது மிகையாகாது. ஓய்வூதிய பாதுகாப்பு இல்லாத முதல் தலைமுறையாக நமது தலைமுறை இருக்கிறது. ஆகவே, நமது ஓய்வுக்குப் பிந்தைய காலம் எப்படி இருக்கும் என்பது ஊகங்கள் மற்றும் சில வழிமுறைகளை பொருத்தே அமைகிறது. ஆனால், பலருக்கும் அது குறித்த புரிதல் தெளிவாக இல்லை.
அத்தகைய சூழ்நிலையில், ஓய்வுக்குப் பிந்தைய வாழ்க்கை நமக்கு கடினமான சூழ்நிலையை உருவாக்கலாம். மற்ற நிதி இலக்குகளுக்கும் ஓய்வூதிய இலக்குகளுக்கும் இடையே சில வேறுபாடுகள் உள்ளன.
நாம் ஓய்வு பெற்ற பிறகும் மாத சம்பளத்திற்கு நிகரான வருமானம் நமக்குத் தேவை. நாம் சில உடல் நல நெருக்கடிகளையும் வேறு சில கஷ்டங்களையும் எதிர்கொள்ளலாம். இத்தகைய சூழ்நிலையை நாம் எதிர்கொள்ள அதிக தொகை தேவைப்படலாம். நாம் பணி செய்யும் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு வங்கிக் கடன் பெறுவது மிகவும் கடினம்.
நிதி திட்டங்களைப் போலவே, ஓய்வூதியத் திட்டமிடலும் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒருவரது தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப, ஓய்வூதிய திட்டங்களை உருவாக்க வேண்டும்.
இதேபோல், ஒருவர் பணிபுரியும் துறையைப் பொறுத்து, ஓய்வூதியத் திட்டங்களில் மாற்றங்கள் தேவை. பெரும்பாலான மத்திய அரசு ஊழியர்களுக்கு, சுகாதார காப்பீடு ஓரளவுக்கு இருக்கும். ஆனால் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு அந்த வசதி இருக்காது.
நம் ஓய்வூதிய திட்டமானது, இவை அனைத்தையும் கொண்டதாக இருக்கும் வகையில் திட்டமிட வேண்டும். அது நமது தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு இருக்க வேண்டும். நமது நிதி சேமிப்பைப் போல, ஓய்வுக்கு பிறகான சேமிப்பு குறித்தும் நாம் திட்டமிடுவது இல்லை. இதை சரியான வழியில் நாம் யோசிப்பது இல்லை. நாம் நிதி சேமிப்பை திட்டமிடுவது போலவே, ஓய்வுக்கு பிறகு எப்படி நமது தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்கிறோம் என்பதையும் திட்டமிட வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
அதற்கு என்ன செய்ய வேண்டும்?
அடுத்த ஐந்து அல்லது பத்து ஆண்டுகளில் ஓய்வு பெறும் ஒருவருக்கு, திட்டமிடுவதற்கு சில வரம்புகள் உள்ளன. ஏனென்றால், நிதி திட்டமிடல் என்பது நீண்ட கால திட்டமிடலாகும். நிதி தொடர்பாக நாம் வைக்கும் ஒவ்வொரு இலக்கும், திட்டமிடுவதற்கு முன் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஒருவர் ஒய்வு பெறும்போது, அவர்களுக்கு தேர்வு செய்வதற்கு அதிக வசதிகள் இருக்காது. அப்படிப்பட்டவர்களுக்கு எத்தகைய திட்டங்கள் உதவியாக இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 1
- அவர்களுக்கு சுகாதார காப்பீடு உள்ளதா என்பதை மதிப்பாய்வு செய்ய வேண்டும். அது இல்லை என்றால், அவர்கள் புதிய காப்பீட்டை எடுக்க வேண்டும். புதிய பாலிசியில் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நோய்களுக்கான மருத்துவம் செலவுகளும் அடங்குமா என்பதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில், ஒரு 'டாப் அப்' அல்லது அந்த நோய்களையும் உள்ளடக்கிய புதிய பாலிசி எடுக்க வேண்டும். சில அரசுத் துறை ஊழியர்களுக்கு இதுபோன்ற சுகாதார காப்பீடு வசதிகள் உண்டு. ஆனால் மற்றவர்களுக்கு? அத்தகைய வசதி உள்ளவர்களுக்கு, அதில் கிடைக்கும் போதுமானதாக இருக்காது. ஆகவே தனிப்பட்ட சுகாதார கொள்கையை தவறாமல் எடுக்க வேண்டும்.


- ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், முதலில் உதவியாக இருப்பது ஆயுள் காப்பீடு ஆகும். ஆயுள் காப்பீட்டுத் திட்டம் இல்லை என்றால், அதைப் பெறுவதற்கான முயற்சியை முன்னெடுக்க வேண்டும்.
- பல காப்பீட்டு நிறுவனங்கள் ஐம்பது வயதைத் தாண்டியவர்களுக்கு ஆயுள் காப்பீடு திட்டம் வழங்க தயக்கம் காட்டுகின்றன. அவர்களிடம் பல கேள்விகளைக் கேட்டு இறுதியில், அவர்களின் விண்ணப்பத்தை நிராகரிக்கின்றன. ஆனால் நமது சூழ்நிலைக்கு ஏற்ப ஒரு காப்பீடு திட்டத்திற்காக கவனமாக முயற்சிக்க வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
- இரண்டு காப்பீட்டு திட்டங்களும் ஓய்வூதிய திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்பதை நீங்கள் உணர வேண்டும். ஏனெனில் ஓய்வூதிய வயதை நெருங்கும்போது, காப்பீட்டு ப்ரீமியமும் அதிகரிக்கிறது. ஆகவே, கூடிய விரைவில் காப்பீடு எடுக்க வேண்டும்.
- இதுவரை செய்த முதலீடுகள் மற்றும் பெறப்பட்ட பாலிசிகளின் விவரங்கள் குறித்து குடும்ப உறுப்பினர்களும் வாழ்க்கைத் துணைவரும் நன்கு அறிந்திருக்க வேண்டும். நம் நாட்டின் வங்கிகளில் உரிமை கோரப்படாத ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் உள்ளன. குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிப்பதன் மூலம், அசம்பாவிதம் நடக்கும்போது குறைந்தப்பட்சம் அவர்கள் பிரச்னைகளில் இருந்து காப்பாற்றப்படுவார்கள்.
- நாம் எடுக்கும் கொள்கைகளின் நியமனதாரர்களுக்கு அதைப் பற்றி தெளிவாகச் சொல்ல வேண்டும். 18 வயது நிரம்பாத ஒருவர் அதில் பரிந்துரைக்கப்பட்டால், அவரது பாதுகாவலருக்கு இது குறித்து தெரிவிக்க வேண்டும். அவர்களுக்குக் கொடுப்பதற்காக நம் பணத்தை முதலீடு செய்திருந்தால், அது அவர்களுக்குத் தெரியாமல் போனால் அது வீணாகி விடும். இதை நினைவில் கொள்ளுங்கள்!
- உங்களின் நிதி ஆலோசகரின் தொலைபேசி எண், உங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கிடைக்க வேண்டும்.
- ஏதேனும் ஒரு செயலி மூலமாகவும் நாம் நிதிப் பரிவர்த்தனைகளைச் செய்கிறோம் என்றால், அதன் கடவுச்சொல் விவரங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.
- இப்போது, தேர்ந்தெடுக்கப்படும் முதலீட்டுத் திட்டங்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.
- ஓய்வு பெறும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதால், அவர்கள் ரிஸ்க் எடுக்க வாய்ப்பில்லை. ஆகவே, அவர்கள் பங்கு தொடர்பான முதலீடுகளில் முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது அத்தகைய முதலீடுகள் ஏற்கனவே செய்யப்பட்டிருந்தால், அவற்றை அப்படியே வைத்திருக்க வேண்டும். அவற்றில் மேலும் முதலீடு செய்யக்கூடாது.
- ஏற்கெனவே மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து வருபவர்கள், அதிலிருந்து உடனடியாக வெளியே வர வேண்டும். அந்தத் தொகையை டெபிட் ஃபண்டுகள் போன்ற பிற ஃபண்டுகளில் முதலீடு செய்து அதன் மூலம் இழப்பீடு எதுவும் வராமல் குறைக்கலாம். நிதி திட்டமிடல் கொள்கைகளின்படி, நமது நிதி இலக்கை விட மூன்று ஆண்டுகளுக்கு முன்பே நாம் பங்குச் சந்தையில் இருந்து முழுமையாக வெளியேற வேண்டும். கோவிட்-19 நெருக்கடியின் போது ஏறக்குறைய ஒரு வருடமாக ஈக்விட்டி (Equity) சந்தை மந்தமாக இருந்தது. அந்த நேரத்தில் நம்மிடம் நிதி இலக்கு இருந்திருந்தால், நாம் நிதி இழப்பு அச்சுறுத்தலை அதிகம் சந்தித்திருப்போம்.
- ரியல் எஸ்டேட் போன்ற ஏற்ற இறக்கங்கள் அதிகமாக இருக்கும் வாய்ப்புகள் கொண்ட முதலீட்டுத் தேர்வுகளில் இருந்து விலகி இருங்கள் இந்தத் துறைகளில் லாபம் ஈட்டுபவர்களைப் பற்றி மக்கள் பேசுகிறார்கள். ஆனால் நஷ்டம் அடைந்தவர்களை மறந்துவிடுகிறார்கள். பணி ஓய்வுக்கு பிறகான நிதி திட்டமிடுதல் இருக்கும் போது, அத்தகைய துறைகள் பொருத்தமானவை அல்ல.

பட மூலாதாரம், Getty Images
ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்வதற்கான வழிகள்
- ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை நாம் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். இது சில முதலீட்டுத் திட்டங்களில் ஒன்றாகும். இதில் வரும் லாபத்திற்கு வரி விதிக்கப்படாது. ஆகவே, முடிந்தவரை அதில் முதலீடு செய்ய வேண்டும்.
- தேசிய ஓய்வூதியத் திட்டம் போன்ற அரசு ஆதரவு திட்டங்களில் முதலீடு செய்வது பயனுள்ளது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், வரிச் சலுகையையும் பெறலாம்.
- நீங்கள் ஆண்டுத்தொகை (annuity) பெறும் வகையிலும், காப்பீட்டு திட்டத்தை பெற வேண்டும். ஆனால், இந்த ஆண்டுத்தொகை, ஊதியமாக கருதப்பட்டு, அதற்கு வருமான வரி கட்ட வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துகொள்ளுங்கள். ஆகவே, இந்தத் திட்டங்களில் முதலீடு செய்த பிறகு, வரி செலுத்திய பிறகு நிகர வருமானத்தை சரிபார்க்க வேண்டும்.
- ஆண்டுத்தொகை (annuity) மூலம் வரும் காப்பீட்டு திட்டங்களையும் நாம் ஆராய வேண்டும்.
- ஆண்டுத்தொகை திட்டங்களை மூலம் பயன் பெற விரும்பினால், நமக்கு பணம் உடனடியாக தேவைப்படும்போது, நாம் எவ்வளவு திரும்ப பெறமுடியும் என்பதையும் சிந்திக்க வேண்டும் இதில் முன்பே கூறியதுபோல், பணியில் இருந்து ஓய்வுப் பெற்ற பிறகு, அவசர சூழ்நிலைகளை நாம் எவ்வளவு நன்றாக கையாளுவோம் என்பதுதான் இதில் உள்ள முக்கிய விஷயம்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 2
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












