அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் விவகாரம்: அரசின் விதி செல்லும் - உயர் நீதிமன்றம்

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்
படக்குறிப்பு, கோப்புப்படம்

அனைத்து ஜாதியைச் சேர்ந்தவர்களும் கோவில்களில் அர்ச்சகராகும் விவகாரத்தில், தமிழ்நாடு அரசு வகுத்த விதிகள் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆகம விதிப்படி இயங்கும் கோவில்களைக் கண்டறிய ஐந்து பேர் கொண்ட குழுவை நியமிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கோவில்களில் அனைத்து ஜாதியைச் சேர்ந்த 28 பேரை பல்வேறு கோவில்களில் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி அர்ச்சகர்களாக தமிழ்நாடு அரசு நியமனம் செய்தது. இவர்களில் 4 பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். மேலும், 2020ஆம் ஆண்டில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனத்திற்கென புதிய விதிகள் கொண்டு வரப்பட்டன. அந்த புதிய விதிகளின்படி, அர்ச்சகராக சேருவோர் 18 வயதிலிருந்து 35 வயதுக்கு உள்பட்டவராக இருக்க வேண்டும் என்றும் ஆகம பள்ளிகளில் பயிற்சி பெறுவோராக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அனைத்து ஜாதி அர்ச்சகர்கள் நியமனத்தை எதிர்த்தும் இந்த புதிய விதிகளை எதிர்த்தும் அகில இந்திய ஆதி சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் உள்பட பத்துக்கும் மேற்பட்ட தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினர்.

இந்த வழக்கு கடந்த ஓராண்டாக நடந்துவந்த நிலையில், வழக்கை விசாரித்து வந்த தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் மாலா அடங்கிய அமர்வு இன்று (ஆக. 22) தீர்ப்பளித்தது. அதில் அர்ச்சகர் நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசு விதித்த விதிகள் செல்லும் என்றும் ஆகம விதிப்படி இயங்கும் கோவில்களில் அந்த ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்

தமிழ்நாட்டில் எந்தெந்தக் கோவில்கள் ஆகம விதிகளைப் பின்பற்றுகின்றன, எந்தெந்த கோவில்கள் ஆகம விதிகளைப் பின்பற்றவில்லை என்பது குறித்துக் கண்டறிய ஐந்து பேர் குழுவை அமைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த ஐந்து பேர் கொண்ட குழுவில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஒருவரும் அரசு நியமிக்கக்கூடிய இரண்டு பேரும் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணொளிக் குறிப்பு, சுடுகாட்டில் இறுதிச்சடங்குகள் செய்யும் பணியை 30 ஆண்டுகளாக செய்துவரும் ஜெய்ப்பூர் பெண்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: