ஆதீனங்கள் Vs தமிழ்நாடு அரசு: காக்க வேண்டியது பாரம்பரியமா, மனித உரிமையா? ஆர்வலர்கள் கேள்வி

- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
தி.மு.க அரசுக்கும் தருமபுர ஆதீனத்துக்கும் இடையிலான விவகாரம், அரசியல்ரீதியாக விமர்சனப் பொருளாக மாறியுள்ளது. 'காலத்துக்கு ஏற்ப ஆதீனங்கள் மாறலாம் எனக் கூற வேண்டுமே தவிர, பட்டண பிரவேசம் நடத்தக் கூடாது என இறை மறுப்பாளர்களோ பொதுவுடைமை கட்சியினரோ கூறுவது தவறானது' என்கின்றன ஆதீனங்கள். என்ன நடக்கிறது?
பட்டண பிரவேசத்துக்குத் தடை
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரம் ஆதீனம், மிகப் பழமையான சைவ மடங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு ஒவ்வோர் ஆண்டும் பட்டண பிரவேசம் என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த நிகழ்வின்போது ஆதீனத்தை பல்லக்கில் அமர வைத்து சீடர்கள் வீதியுலா செல்வது வழக்கம். அண்மையில் தருமபுர ஆதீன மடத்துக்கு புஷ்கர விழாவுக்கான ஞானரத யாத்திரையைத் தொடங்கி வைப்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி வந்திருந்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. அதையொட்டி ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டும் முயற்சியின்போது, அவரது வாகன தொடரணியுடன் சென்ற காவல் வாகனம் மீது கருப்புக் கொடி, கட்டைகள் வீசப்பட்டதாக செய்திகள் வெளியாயின.
இந்த நிலையில், வரும் 22 ஆம் தேதி தருமபுர ஆதீனத்தில் நடக்கவிருந்த பட்டண பிரவேச நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி தடை விதித்தார்.
'மனிதனை மனிதனே தூக்கிச் செல்லும் இழிநிலையை ஒழிக்க வேண்டும்' என திராவிடர் கழகத்தினரும் முன்னதாக மனு கொடுத்திருந்தனர். இந்த நடவடிக்கைக்கு மதுரை ஆதீனம் ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் எதிர்ப்பு தெரிவித்தார். 'உயிரே போனாலும் நானே பல்லக்கில் ஆதீனத்தைத் தூக்கிச் செல்வேன்' எனவும் அவர் பேட்டியளித்தார்.
மேலும், 'கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் கூட இவ்வாறு நடந்தது இல்லை. முதல்வர் எடுக்கும் ரகசிய காப்புப் பிரமாணத்தை எடுக்கக் கூடாது எனச் சொல்வது எப்படித் தவறோ, அப்படித்தான் இதுவும்' என மதுரை ஆதினம் கருத்து தெரிவித்தார்.
இ தற்கிடையே, மயிலாடுதுறை கோட்டாட்சியரின் தடை உத்தரவை விலக்கக் கோரி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதாவிடம் ஆன்மிக சமய பேரவை அமைப்பினர் மனு கொடுத்தனர். இந்த விவகாரம் தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது.
மே 4ஆம் தேதி சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ' ஆதீனத்தை பல்லக்கில் சுமந்து செல்வது ஒன்றும் மரியாதைக்குறைவான செயல் அல்ல. இந்திய அரசியலமைப்புச் சட்டம் விதி 25ன்படி மத சுதந்திரத்தின் அடிப்படையில் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதியளிக்க வேண்டும்' என்று கூறிநார்.
எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கைக்கு பா.ஜ.க, பா.ம.க ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
மன்னார்குடி ஜீயர் எச்சரிக்கை

அதேநேரம், எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சுக்குப் பதில் அளித்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு, 'இங்கு 45 சைவ, வைணவ, சக்தி பீடம் என ஆதீனங்கள் உள்ளன. இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து உயர்மட்டக்குழு ஒன்றை அமைத்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தியுள்ளார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தில் ஆதீனங்கள் கையால்தான் ஆணைகள் வழங்கப்பட்டன. இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். துலாக்கோல் போல நடுநிலையோடு முதலமைச்சர் முடிவு எடுப்பார்' எனக் குறிப்பிட்டார். மேலும், கடந்த வாரம் நடந்த கூட்டத்தில்கூட இது ஆன்மிக அரசு என தருமபுர ஆதீனம் குறிப்பிட்டதாகவும் சேகர்பாபு தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் குறிப்பிட்ட மதுரை ஆதீனம், 'இந்த விவகாரம் தொடர்பாக பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் சந்தித்து முறையிடுவேன்' என்றார். மேலும் மன்னார்குடி ஸ்ரீசெண்டலங்கார செண்பக ராமானுஜ ஜீயரும், ' பட்டண பிரவேசத்தை தடுக்கும் தைரியம் எந்த அரசுக்கும் கிடையாது. இந்து விரோதமான செயல்களைக் கடைபிடித்தால் ஆளும்கட்சியின் அமைச்சர்கள் சாலையில் நடமாட முடியாது' எனவும் எச்சரிக்கை விடுத்தார். இந்தத் தகவல் சமூக வலைதளங்களில் வைரலானது.
மோதல் வலுப்பது ஏன்?

''அரசுக்கும் ஆதீனத்துக்கும் இடையில் மோதல் வலுப்பது ஏன்?'' என கோயம்புத்தூரில் உள்ள பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார் பிபிசி தமிழ் சார்பாக பேசினோம். '' ஆதீனம் தொடர்பாக அரசின் கவனத்துக்கு ஏதேனும் சிக்கல்கள் இருப்பதாகத் தகவல் வந்தால், இதுதொடர்பாக ஆதீனங்களுடன் கலந்து பேசலாம். 'காலத்துக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ள வேண்டும்' எனக் கூறலாம். ஆதீனத்தை தோளில் சுமப்பதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் அதுகுறித்து சுமூகமாகப் பேச வேண்டும். அதைவிடுத்து தடை உத்தரவு போட்டால் மக்கள் எதிர்ப்பு காட்டுவார்கள். மேலும், ஒரு சில தவிர்க்க முடியாதனவற்றை விட்டுவிடலாம். எனவே, பட்டண பிரவேச அறிவிப்பை வெளியிட்ட பிறகு தடை உத்தரவு பிறப்பித்தது என்பது தவறான விஷயம்'' என்கிறார்.
தொடர்ந்து பேசிய மருதாச்சல அடிகளார், '' ஆதீனங்களுடன் அரசுத் தரப்பில் பேசும்போது, அவர்களிடமே கருத்து கேட்கலாம். ஆனால், அரசு ஒரு சார்பாக நடந்து கொண்டிருக்கிறது. இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு எதிராக யாரும் கருத்து சொல்வதில்லை. அவர்கள் கடும் வெயிலில் கறுப்புத் துணியை அணிகிறார்கள். அவர்களின் மசூதிக்குள் பெண்களை வழிபாட்டுக்கே அனுமதிப்பதில்லை. அப்படியிருக்கும்போது சைவ சமயத்தின் மீது மட்டும் இலக்கு வைப்பது என்பது தவறானது. எங்கள் கோவில்களின் முன்னால் மட்டும் 'கடவுள் இல்லை' என்பன போன்ற வார்த்தைகளைப் பொறித்துள்ள சிலைகளை வைக்கிறார்கள். மசூதிகளின் முன்னால் இவற்றை ஏன் வைப்பதில்லை?'' எனக் கேள்வியெழுப்புகிறார்.
அரைமணி நேரத்தில் முடிந்த கூட்டம்
''கடந்த வாரம் அறநிலையத்துறை சார்பில் நடந்த கூட்டத்தில், 'ஆதீனங்களுடன் பேசும் வகையில் தொடர் கூட்டங்களை நடத்த வேண்டும்' என்றோம். அங்கு பங்கேற்ற அனைத்து துறவிகளும், நீண்ட நாள்களுக்குப் பிறகு இப்படியொரு ஏற்பாட்டை செய்துள்ளதாகவும் கூறினர். அப்போது அனைவருக்கும் அமைச்சர் நூல்களைக் கொடுத்தார். அமைச்சரும், 'தெய்வீகப் பேரவையில் ஆதீனங்களும் மடாதிபதிகளும் உள்ளனர். அதில் கூடி எங்கள் கருத்துகளைப் பதிவு செய்வோம்' என்றார். இங்குள்ள மடங்கள் எல்லாம் பழைமையானவை. புதிதாக வருகிறவர்கள் எல்லாம் தங்கள் இஷ்டத்துக்குச் செயல்படுகின்றனர். அவர்களுக்கு ஒரு வகையான உரிமை உள்ளதையும் எங்களூக்கு வேறுவிதமாக உள்ளதையும் கவனிக்க வேண்டும் என்றோம். அதேநேரம், தஞ்சை தீ விபத்து சம்பவம் தொடர்பாக அமைச்சர் செல்ல வேண்டியிருந்ததால் கூட்டத்தை அரை மணிநேரத்தில் முடித்துவிட்டனர்'' எனக் குறிப்பிட்டார் மருதாச்சல அடிகளார்,

''கடந்த ஆண்டு திருவாடுதுறை ஆதீனத்தில் பட்டண பிரவேசம் நடத்தியபோது எதிர்ப்பு தெரிவித்தனர். 'ஆதீன வளாகத்துக்குள் வைத்துக் கொள்ளலாம்' என்றுகூட தெரிவிக்கலாம். மேலும், தோளில் சுமக்கச்சொல்வதாக யாராவது புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கலாம். சூழலுக்கு ஏற்ப ஆதீனம் மாற வேண்டும் எனக் கூறலாமே தவிர, பொதுவுடைக்காரர்களோ இறை மறுப்பாளர்களோ கூறுவது தவறானது. அண்மையில், நடராசரின் ஆடலைப் பற்றித் தவறான பிரசாரம் செய்கிறவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவையெல்லாம் சேர்ந்துதான் தற்போது எதிர்ப்பாக மாறியுள்ளது'' என்கிறார் அவர்.
மேலும், '' மதுரை ஆதீனத்துக்கு ஏராளமான மிரட்டல்கள் வருகின்றன. அதற்காக பிரதமரிடம் முறையிடுவேன். மாநிலத்தின் பட்டியலில் வரும் விவகாரம் தொடர்பாக பிரதமரிடம் எப்படி முறையிட முடியும்?'' என அவர் கேள்வி எழுப்பினார்.
பின்னணியில் பா.ஜ.கவா?
''இந்த விவகாரத்தின் பின்னணியில் பா.ஜ.கதான் முன்னின்று கலகத்தைத் தொடங்கியுள்ளது'' என்கிறார், தமிழ் சைவப் பேரவைத் தலைவர் கலையரசி நடராஜன்.
தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், ''இந்த விவகாரத்தில் தமிழக அரசின் பங்கு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழ்நாட்டில் பா.ஜ.க எப்போதுமே அமைதியாக இருக்காது. தமிழர் அல்லாத ஜீயர், 'யாரும் நடமாட முடியாது' என எச்சரிக்கிறார். தமிழ்நாட்டை சுருட்டுவதற்கு வடமாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.கவும் காங்கிரஸ் கட்சியும் எப்போதும் செயல்பட்டு வருகின்றன. ஆதீனத்துக்கு எதிராகக் கருத்து சொல்வதால், கொன்று விடுவோம் என என்னை மிரட்டுகின்றனர். எனக்கு எதாவது நேர்ந்தால் கூட இந்த அரசு கண்டுகொள்ளாது. காவல்துறையில் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. தருமபுர ஆதீனம் பற்றிப் பேசினால் விளைவு பயங்கரமாக இருக்கும் என யார் யாரோ மிரட்டுகிறார்கள். என்னுடைய மொழிக்காக உயிர் போனால் கவலையில்லை,'' என்கிறார்.
மேலும், ''ஆதீனங்களுடன் கலந்து பேசி அரசு முடிவெடுத்திருக்கலாம். மனிதனை மனிதன் சுமப்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. மடத்துக்கு அடிமையானவர்கள் நடத்தும்போது அதைத் தடுக்க முடியாது,'' என்கிறார்.

'பெரியாரிய அமைப்பின் செயல்களுக்கு ஆதீனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனவே?'' என திராவிடர் கழகத்தின் வழக்குரைஞர் சு.குமாரதேவனிடம் பிபிசி தமிழ் சார்பாக பேசினோம்.
''கோவில் கொடி மரம் வரையில் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள்தான் வர வேண்டும் என்ற சம்பிரதாயம் இன்றளவும் நீடித்து வருகிறது. கருவரையிலும் குறிப்பிட்ட சமூகத்தினர்தான் இன்றளவும் உள்ளனர். மடாதிபதிகளும் இணையத்தளம், கார் என அனைத்து வசதிகளையும் பயன்படுத்துகின்றனர். ஆனால், இதனைப் பாரம்பரியம் என்கின்றனர்.
குருவுக்கு தெய்வ சக்தி உள்ளதா?
இதே தருமபுர ஆதீனம் மாசிலாமணி தம்பிரான் சுவாமிகள் பதவியேற்ற பிறகு பட்டண பிரவேச நிகழ்ச்சியை நடத்தினார். அடுத்த முறை எதிர்ப்பு தெரிவித்ததும் நிறுத்திவிட்டார். இதற்கு முன்பிருந்த ஆதீனம், இதனைச் செய்யவே இல்லை. பட்டண பிரவேசத்தை ஆதரிப்பவர்கள் எல்லாம் தி.மு.க எதிர்ப்பாளர்கள்தான். இவர்கள் சுவாமியை தூக்கிக் கொண்டு போவதில் எந்தச் சிரமமும் இல்லை. சாமி என்ற பெயரில் உள்ள ஆசாமியை தூக்கிக் கொண்டு செல்வதைத்தான் எதிர்க்கிறோம். 'குருவை தெய்வ வடிவில் காண்கிறோம்' என்கின்றனர். 'தெய்வத்துக்கான சக்தி குருவுக்கு உள்ளதா?' என்பதை நிரூபிக்கட்டும். எதாவது ஓர் அதிசயத்தை அவர்கள் நிகழ்த்திக் காட்டட்டும். திருவருளும் கிடையாது, குருவருளும் கிடையாது என்பது வேறு விஷயம்,'' என்கிறார்.
''சைவ மடாபதிக்கும் வைணவ மடாதிபதிக்கும் ஆகாது எனும்போது திடீரென கூட்டு சேர்த்துவிட்டுப் பேசுவது ஏன்? அமைச்சர்கள் நடமாட முடியாது என்றால் கலவரத்தைத் தூண்டிவிடுவதற்கு இவர்கள் காரணத்தைத் தேடுகின்றனர். ஓர் அரசு சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும்போது அதனை கட்டுப்படுத்தத்தான் செய்யும். இவ்வளவு பேசுகிறவர்களுக்கு ஒரே ஒரு கேள்வி, கடந்த காலங்களில் பிள்ளையார் ஊர்வலமும் மிலாது நபி ஊர்வலங்கள் நடந்தன. இரண்டிலும் கலவரம் வெடித்தது. இஸ்லாமியர்கள் மிலாது நபி ஊர்வலத்தை நிறுத்தி 30 ஆண்டுகள் ஆகிறது. பிள்ளையார் ஊர்வலம் மட்டும் நடக்கிறது. இது எந்தவகையில் நியாயம்?'' எனக் கேள்வி எழுப்புகிறார் வழக்கறிஞர் குமாரதேவன்.
மேலும், '' மசூதிக்கு முன்னால், 'கடவுள் கிடையாது' என்ற பதாகையை இவர்கள் வைக்கட்டும். தமிழ்நாட்டில் உள்ள ஜீயர்களில் இரண்டு பேரைத் தவிர மற்றவர்கள் எல்லாம் அவரவர் வேலையைப் பார்க்கின்றனர். சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆந்திரா, உ.பி, ம.பி, ராஜஸ்தான் போல செய்ய நினைத்தால் அதற்கான விளைவுகளை அனுபவிப்பார்கள். மக்கள் அவர்கள் பக்கத்தில் இல்லை'' என்கிறார்.
பா.ஜ.க சொல்வது என்ன?

''பா.ஜ.க பின்னணியில இருப்பதாகக் கூறுப்படுகிறதே?'' என தமிழ்நாடு பா.ஜ.க ஊடகப் பிரிவின் தலைவர் சி.டி.நிர்மல்குமாரிடம் கேட்டபோது, ''ஆதீனங்கள் எப்போதுமே தி.மு.க, பா.ஜ.க எனப் பார்க்காமல் நடுநிலையாகத்தான் செயல்பட்டு வந்துள்ளன. அண்மைக்காலமாகத்தான் இவர்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர். முன்பெல்லாம் கருணாநிதி பங்கேற்ற மேடைகளில் எல்லாம் ஆதீனங்கள் கலந்து கொண்டு பேசியுள்ளனர். தமிழை வளர்ப்பதற்காகத்தான் ஆதீனங்கள் தோற்றுவிக்கப்பட்டன. தற்போதுள்ள அரசுக்கு சிலர் தவறான வழிகாட்டுதல்களைக் கொடுக்கின்றனர். குறிப்பாக, தருமபுர ஆதீனத்துக்கு ஆளுநர் சென்ற பிறகுதான் இடையூறு செய்யப்படுகிறது. ஆளுநர் சென்றது என்பது இயல்பான ஒன்றுதான். அதனை வைத்து அரசியல் செய்கின்றனர்,'' என்கிறார்.
மேலும், ''மதுரை ஆதீன மடத்துக்குச் சொந்தமான கடைகள் எல்லாம் தி.மு.கவினர் கைகளில் உள்ளது. இவற்றில் எல்லாம் இனி சிக்கல் ஏற்படும். பட்டண பிரவேச நிகழ்வைத் தடை செய்த பிறகுதான் அதைப் பற்றி பா.ஜ.க பேச வேண்டிய நிலை ஏற்பட்டது. 10 பேர் வைத்து நடக்க வேண்டிய ஒரு நிகழ்வை பெரிதாக்கி, தேசிய அளவில் விவாதமாக மாற்றிவிட்டனர். இதனைத் தடை செய்வது தவறான விஷயம். அவர்கள் யாரையும் மிரட்டி பல்லக்கு தூக்க வைக்கவில்லை. உள்ளூர் தவிர வேறு யாருக்கும் இந்த நிகழ்வு பற்றித் தெரியாது. சிறுபான்மையினர் வாக்குளைப் பெறுவதற்காகத்தான் தி.மு.க தொடர்ந்து இவ்வாறு செய்கிறது. வருடந்தோறும் இந்து நிகழ்வுகளில் தி.கவினர் போராட்டம் நடத்திக் கொண்டுதான் உள்ளனர். பா.ஜ.கவுக்கு நெருக்குதல் கொடுப்பதற்காக சாதாரண விஷயத்தை பெரிதாக்கிவிட்டனர்'' என்கிறார் நிர்மல் குமார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












