தருமபுர ஆதீன விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு - பி.கே.சேகர்பாபு

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு

பட மூலாதாரம், PK SEKAR BABU FACEBOOK

'தருமபுர ஆதீன விவகாரத்தில் ஆதீனங்களுடன் பேசி விரைவில் நல்ல முடிவை முதலமைச்சர் அறிவிப்பார்' என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தின் அ.தி.மு.க கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்குப் பதில் அளித்தபோது இவ்வாறு தெரிவித்தார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள தருமபுர ஆதீனமானது, மிகப் பழைமை வாய்ந்தது. இங்கு ஒவ்வொரு வருடமும் பட்டினப் பிரவேசம் என்ற நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். அப்போது ஆதீனத்தின் 27-ஆவது குருமகாசன்னிதாசத்தை பல்லக்கில் அமர்த்தி வீதியுலா கொண்டு செல்வது பக்தர்களின் வழக்கம். இந்தமுறை பல்லக்கில் தூக்கும் நிகழ்வுக்கு மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி தடைவிதித்து உத்தரவு பிறப்பித்திருந்தார்.

அண்மையில், தருமபுர ஆதீனத்தில் புஷ்கர விழாவையொட்டி நடைபெற்ற ஞானரத யாத்திரையை தொடங்கிவைக்க ஆளுநர் வருகை தந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்குத் தடை விதித்துள்ளதாக இதர ஆதீனங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தின.

குறிப்பாக, மதுரை ஆதீனம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 'உயிரைக் கொடுத்தாவது பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை நடத்தியே தீருவோம். ஆங்கிலேயர்களே ஆதரவு தெரிவித்த இந்த நிகழ்வுக்கு அரசியல் காரணமாக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்' எனக் கூறியிருந்தார்.

அரசின் இந்த முடிவுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆதரவு தெரிவித்திருந்தார். 'மனிதனை மனிதனே சுமக்கும் இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும்' எனவும் குறிப்பிட்டிருந்தார். அரசின் இந்த நடவடிக்கைக்கு பா.ஜ.க தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.

'பல நூற்றாண்டுகளாக கடைபிடித்து வரும் உன்னதமான ஆன்மிக விவகாரங்களில் அரசு தலையிடுவது முறையல்ல. மதசார்பற்ற அரசின் கடமை. மத நம்பிக்கைகளில் தலையிடாமல் இருக்க வேண்டியதே தமிழக அரசு உடனடியாக தடையை நீக்கி உத்தரவிட வேண்டும்' என பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

தருமபுர ஆதீனத்துக்கு பல்லக்குத் தூக்க தடை

தொடர்ந்து பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவில், 'தருமபுர ஆதீனத்தின் பல நூற்றாண்டுகள் பழமையான 'பட்டின பிரவேசம்' மீதான தடை தமிழக நாகரிகம் மற்றும் கலாச்சாரத்திற்கு எதிரானது. ஆதினத்தைத் தோளில் சுமக்க நான் நேரில் வருவேன் என்பதைத் தமிழக அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (மே 4) நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, அ.தி.மு.க தரப்பில் தருமபுர ஆதீன விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதுதொடர்பாக பேசிய அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, 'பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சியில் மரியாதைக்கு குறைவாக எதையும் பார்க்க முடியாது. தருமபுர ஆதீனத்தின் பட்டினப் பிரவேச நிகழ்வு நடைபெற வேண்டும் என்பதுதான் பக்தர்களின் விருப்பம்' என்றார். இந்தத் தடைக்கு எதிராக பா.ஜ.க சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரனும் பேசினார்.

பின்னர், இதுதொடர்பாக விளக்கம் அளித்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ' இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் வைத்து மூன்று மணிநேரம் ஆதீனங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. முதலமைச்சரை கடந்த வாரம் சந்தித்துப் பேசிய தருமபுர ஆதீனமும், இது ஆன்மிக அரசு எனப் பாராட்டிப் பேசியிருந்தார். வரும் 22 ஆம் தேதி பல்லக்கு தூக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது. அதற்குள் ஆதீனங்களுடன் பேசி சுமூக தீர்வு காணப்படும். அதற்குள் சிலர் ஆதீனத்தை வைத்து அரசியல் செய்யப் பார்க்கிறார்கள். இதுதொடர்பாக நல்ல முடிவை முதலமைச்சர் அறிவிப்பார்' என்றார்.

காணொளிக் குறிப்பு, மயில் நடனம் ஆடும் மனிதர் - யார் இவர்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :