விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவோர் கவனிக்க வேண்டிய 6 அம்சங்கள்

பட மூலாதாரம், Getty Images
நாடு முழுக்க இந்த மாத (ஆகஸ்ட்) இறுதியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், சிலைகள் செய்வது உள்ளிட்ட ஆயத்தப்பணிகள் தொடங்கி விட்டன. இந்த நிலையில், விநாயகர் சிலைகளைச் செய்வது, பந்தல்களை அமைப்பது, நீர்நிலைகளில் கரைப்பது ஆகிய சடங்குகளின்போது பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளை அரசு அறிவித்துள்ளது.
விநாயகர் சிலை வைக்கப் போகிறீர்கள் அல்லது செய்யப்போகிறீர்கள் என்றால், நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய கட்டுப்பாட்டு அம்சங்களை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அவை என்னென்ன?
கட்டுப்பாடுகள்
"சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்றுதொட்டு சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வழிகாட்டுதல்களின்படி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்து, 6 வழிகாட்டு நெறிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் ரக பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரிண்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மட்டுமே நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.
2. சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள்,வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக. மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.

பட மூலாதாரம், Getty Images
3. ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதி இல்லை. நீர் நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள்/பந்தல்கள்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.
4, சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மட்காத இரசாயனவண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல், செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த / மக்கக் கூடிய / நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
5. சிலைகளை அழகுபடுத்த, வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு இரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கைசாயங்களால் செய்யப்பட்ட அலங்கார பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
6. விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.
விநாயக சதுர்த்தி விழாவினை சூற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாடும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகலாம் என்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிமுறைகள் தெரிவிக்கின்றன.
எப்போது தொடங்கின ஊர்வலங்கள்
தமிழ்நாட்டில் பிள்ளையார் வழிபாடு நெடுங்காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. மராட்டியத்தில், ஆகஸ்ட் மாதத்தில் விரும்பியபடி விநாயகர் அவதார நாள் வழிபாட்டை முடித்துவிட்டு, விரும்பிய நேரத்தில் தனியாகவோ (அ) நண்பர்களுடனோ கொண்டுபோய் நீர்நிலைகளில் கரைக்கும் பழக்கமே இருந்தது.
ஆனால், பெரும் ஊர்வலமாக சிலையை எடுத்துச் சென்று கரைப்பது என்ற முறை இந்தியாவில் 1893ஆம் ஆண்டிலிருந்து தொடங்கியது. சுதந்திரப்போராட்டங்களுடன் விநாயகர் சதுர்த்தியையும் இணைத்து ஊர்வல முறையைத் தொடங்கினார் திலகர். வெள்ளையர்களுக்கெதிரான போராட்டத்தில் நிலவிய பிராமணர் - பிராமணல்லாதாருக்கிடையிலான இடைவெளியை குறைக்கும்பொருட்டு விநாயகர் வழிபாட்டை அவர் பயன்படுத்திக் கொண்டார்.
அதுமட்டுமன்றி, அந்த சமயத்தில் பெரும் ஊர்வல நிகழ்வாக நடைபெற்று வந்த மொகரம் ஊர்வலத்தில் இந்துக்கள் பங்குபெறுவதையும் இதன் முலம் தடுக்க முடியும் என்று நம்பி, காங்கிரஸ் கட்சியின் தொடக்க காலத் தலைவர்களின் ஒருவரான பால கங்காதர திலகர்தான் விநாயகர்சதுர்த்தியை ஊர்வலமாக சென்று கரைக்கும் முறையை உருவாக்கினார் என்று தன் பிள்ளையார் அரசியல் நூலில் குறிப்பிடுகிறார் பண்பாட்டு ஆய்வாளார் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்














