கோவையில் மதமாற்றத்தின் பெயரில் அதிகரிக்கும் சர்ச்சைகள் - பின்னணி என்ன?

- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கோவை மாவட்டம் அன்னூர் - கருமத்தம்பட்டி சாலையில் உள்ள காடுவெட்டிபாளையம் என்ற ஊரில் பொதுமக்கள் பெயரில் ஒட்டப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய எச்சரிக்கை பதாகை ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
மதமாற்றம் தொடர்பாக ஒட்டப்பட்டுள்ள அந்த பதாகையில், 'எச்சரிக்கை!! இங்கு இந்துக்கள் மட்டும் வாழும் பகுதி. இங்கு மத பிரச்சாரம் செய்யவும் மதக் கூட்டங்கள் நடத்தவும் அனுமதி இல்லை. மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்கிற வாசகம் இடம்பெற்றுள்ளது. பதாகையில் குறிப்பிட்ட யார் பெயரும் இல்லாமல் ஊர் பொதுமக்கள் என்கிற பெயர் மட்டும் இடம் பெற்றுள்ளது.
இந்த பதாகை சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு சர்ச்சைக்குள்ளானது. கோவை மாவட்டத்தில் சமீப நாட்களில் மதமாற்றம் நடப்பதாக சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.
கோவை மாவட்டம் போத்தனூர் அருகே நஞ்சுண்டாபுரத்தில் மதமாற்றத்தில் ஈடுபடுவதாக மூன்று கிறித்தவர்கள் தாக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
இதில் பாதிக்கப்பட்ட ஸ்பெண்டிலேபர்சன் என்பவர் அளித்த புகாரின் பேரில் இந்து முன்னணியைச் சேர்ந்த உத்தமன் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி போத்தனூர் காவல்துறையால் உத்தமன் கைது செய்யப்பட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதே போல் கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி சூலூருக்கு உட்பட்ட அப்பநாயக்கன்பட்டியில் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த 40க்கும் மேற்பட்ட கிறித்தவர்கள் மதமாற்றம் செய்ய வந்ததாக பாஜக மற்றும் இந்து முன்னணியினர் சிறை பிடித்ததாக சர்ச்சை எழுந்தது. அதன் பின்னணியில் காடுவெட்டிபாளையம் சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் மாதையன் பிபிசி தமிழிடம் பேசுகையில், `கோவையில் வெவ்வேறு பகுதியைச் சேர்ந்த கிறித்தவர்கள் இறை சேவை செய்வதாகக் கூறி வந்திருக்கிறார்கள். அதற்கு உள்ளூர் மக்களிடம் எதிர்ப்பு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஊர் மக்கள் அளித்த புகாரைப் பெற்றுக் கொண்டு இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தோம். அதன் பிறகு இது தொடர்பாக எந்த பிரச்சனையும் வரவில்லை` என்றார்.

காடுவெட்டிபாளையம் சம்பவம் தொடர்பாக விவரித்த பெயர் குறிப்பிட விரும்பாத கோவை மாவட்ட காவல்துறை அதிகாரி, `சம்பவம் நிகழ்ந்த இடம் ஆதி திராவிடர் சமூக மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக இங்கே கிறித்தவ மத போதகர்கள் மதப் பிரச்சாரம் செய்ய வந்துள்ளனர். இந்த விவகாரம் ஊர் மக்களிடையே சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் இரு தரப்பிலும் பேசி அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் சில வாரங்களுக்கு இது தொடர்பான பிரச்சனை எதுவும் இல்லை.
இந்த நிலையில் கடந்த வாரம் கிறித்தவ மத போதகர்கள் மீண்டும் இந்த பகுதிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்துதான் ஊர் மக்கள் இந்த பதாகையை வைத்துள்ளனர். இதில் வேறு எந்தக் கட்சியோ அமைப்போ சம்மந்தப்படவில்லை` என்றார்.
கருமத்தம்பட்டி காவல்நிலைய ஆய்வாளர் ராஜதுரை பிபிசி தமிழிடம் பேசுகையில், 'காடுவெட்டிபாளையம் ஊர் மக்கள் சார்பில் ஊர் தலைவர்தான் சர்ச்சைக்குரிய இந்த பதாகையை வைத்துள்ளதாக தெரியவந்தது. எங்களுக்கு தகவல் கிடைத்ததுமே விசாரித்து சர்ச்சைக்குள்ளான பதாகையை அகற்றிவிட்டோம். இந்த விவகாரத்தில் யாரும் புகார் அளிக்கவில்லை என்பதால் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை' என்றார்.

மதமாற்ற சர்ச்சைகள் தொடர்பாக வழக்கறிஞர் ஞானபாரதி பிபிசி தமிழிடம் பேசுகையில், `இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி தான் நம்புகிற மதத்தை பின்பற்றவும், பிரசாரம் செய்யவும் அனைவருக்கும் உரிமை உள்ளது. மதமாற்றம் கூடாது என யாரும் தடை செய்ய முடியாது. அதற்கான சட்டமும் தமிழ்நாட்டில் இல்லை.
சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால்தான் காவல்துறை தலையிட முடியும். மதம் மாற வற்புறுத்துவதாக புகார் வந்தால் காவல்துறை விசாரிக்க வேண்டும். அதே வேளையில் ஒருவரின் மதத்தை பரப்புவதற்கான உரிமையை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கு உள்ளது` என்றார்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பிபிசி தமிழிடம் பேசுகையில், "மதத்தைப் பின்பற்ற அனைவருக்கும் உரிமை உள்ளது. மதமாற்றம் என்பது கட்டாயம், வற்புறுத்தல் என்கிற பெயரில் நடப்பதாக புகார் எழுந்தால்தான் சர்ச்சையாகிறது. இத்தகைய விவகாரங்களை இரு மதத் தலைவர்கள் அடங்கிய அமைதிக் குழு மூலமாக தான் தீர்க்க முடியும். இதற்காக வருவாய் துறையும், காவல்துறையும் இணைந்து செயல்படுகின்றன," என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
















