இந்து தேசத்தை உருவாக்குவதில் பின்னணியில் செயல்படும் இந்து அமைப்புக்களின் பங்கு

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், வினீத் கரே
- பதவி, பிபிசி செய்தியாளர், டெல்லி
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மதச்சார்பற்ற இந்தியாவை இந்துதேசத்தின் திசையில் கொண்டு செல்வது பற்றி ஒருவர் பேசினால், அரசியலமைப்பின் அடிப்படையில் இதுபோன்ற விஷயங்கள் கற்பனையாக மட்டுமே தெரிந்திருக்கும்.
இன்று இந்தியா சுதந்திரம் அடைந்து 75-ஆவது ஆண்டில் இந்து தேசம் என்ற கருத்து மறைமுகப் பேச்சாக மட்டும் இல்லை, ஊடகங்களில் இது பற்றி வெளிப்படையாகப் பேசப்படுகிறது. உரைகள் நிகழ்த்தப்படுகின்றன, காணொளிகளும் வெளியிடப்படுகின்றன.
சமீபத்தில் ஹரியானாவை சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் இந்தியாவை இந்து நாடாக மாற்ற உறுதிமொழி எடுத்தார்.
பிகார் பாஜக தரப்பிலும் இந்து தேசத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்தியா ஓர் இந்து தேசம், அது பற்றிய விவாதத்திற்கே இடமில்லை என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.
வரும் 2025ஆம் ஆண்டுக்குள் இந்து ராஷ்டிரா அமைக்கப்படும் என்று கோவாவில் நடைபெற்ற அகில இந்திய இந்து ராஷ்டிர மாநாட்டின் ஏற்பாட்டாளரான இந்து ஜன் ஜாக்ருதி சமிதி கூறியுள்ளது.
இந்து ராஷ்டிரத்தை உருவாக்குவதற்கான சட்ட, சமூக நுணுக்கங்கள் ஒருபுறம் இருந்தாலும், இந்தக் கோரிக்கையை முன்னெடுப்பதில் இந்துத்துவ அமைப்புகளும் தலைவர்களும் முக்கியப் பங்காற்றியுள்ளனர். இந்த அமைப்புகளின் எண்ணிக்கை கடந்த பல ஆண்டுகளாக அதிகரித்து வருகின்றன. ஆயினும் இதன் எண்ணிக்கை பற்றிய தரவு கிடைக்கவில்லை.
இந்தக் குழுக்கள் தங்களது வழக்கமான செயல்பாடுகள், சர்ச்சைக்குரிய மற்றும் வகுப்புவாதப் பேச்சுகள் மூலம் இந்துக்களிடையே தங்களைப் பொருத்தமாக வைத்திருக்க முயல்கின்றன. முடிந்தவரை பலரைச் சென்றடைய சமூக ஊடக சேனல்களை எப்படிப் பயன்படுத்துவது, பிரைம் டைமில் மீடியாவை எப்படி தங்கள் பிடியில் வைப்பது என்பதும் அவற்றுக்குத் தெரியும்.
அவர்களை விளிம்புப் பிரிவுகள் மற்றும் நிழல் ராணுவம் என்று பல வட்டாரங்கள் அழைக்கின்றன. இதன் விளைவு குறைவாகவே உள்ளது. ஆனால் தற்சமயம் உள்ள மற்றொரு சிந்தனை என்னவென்றால், இந்தப் பிரிவு விளிம்பில் இல்லை, சமூகத்தில் பிரதான நீரோட்டத்தில் உள்ளது என்பதாகும். அவை சமூகத்தில் மதத்தின் பெயரால் அடிப்படைவாதத்தை முன்னெடுத்துச் செல்கின்றன, இந்துக்களின் சிந்தனை மீது பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று சொல்லப்படுகிறது. சமூகத்தின் ஒவ்வொரு மதத்திலும் இத்தகைய வெறித்தனமான குழுக்களின் பங்கும் பணியும் ஒரே மாதிரியாகவே உள்ளன.
எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த கோஷ்டிகளின் வளர்ச்சியால் யாருக்கு அரசியல் ஆதாயம் கிடைக்கிறது? பொதுவான வாழ்க்கையில் இந்த "விளிம்பு" அமைப்புகளின் ஏற்றுக்கொள்ளல் எவ்வாறு வளர்ந்தது?
இந்துத்துவ சித்தாந்தத்தின் வளர்ந்து வரும் பிடி தொடர்பாக பத்திரிகையாளரும் எழுத்தாளருமான திரேந்திர ஜா நீண்ட காலமாகப் பணியாற்றி வருகிறார். "ஷோ டோ ஆர்மீஸ் ஃப்ரிஞ் ஆர்கனைசேஷன்ஸ் அண்ட் ஃபூட் சோல்ஜர்ஸ் ஆஃப் ஹிந்துத்வா' என்ற புத்தகத்தில், கடந்த மூப்பது ஆண்டுகளில், இந்தியாவில் இந்துத்துவ அரசியல் வியக்கத்தக்க வகையில் வலுப்பெற்றுள்ளது என்று எழுதியுள்ளார். இந்துத்துவ முத்திரை அரசியலில் பல அடுக்குகளில் உள்ளன. பாரதிய ஜனதா கட்சி மட்டுமல்ல, அதன் நிழலில் வேலை செய்பவர்களும் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
"ஒரு குறிப்பிட்ட சமூகம் அதாவது இந்துக்களுக்கு, சிறப்பு உரிமைகள் இருக்க வேண்டும், அவர்களின் தேசிய அடையாளத்தை வரையறுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் அவர்கள் அனைவரும் செயல்படுகிறார்கள்," என்று அவர் எழுதுகிறார்.
ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் போன்ற ஓர் அமைப்பு இந்த வகையான அரசியலை வழிநடத்துகிறது என்று அவர்கள் நம்புகிறார்கள்.
இந்து நலன்களைப் பற்றிப் பேசும் இந்துத்துவ குழுக்கள் ஆர்எஸ்எஸ் உடன் நேரடித் தொடர்பைக் கொண்டிருக்காமல் இருக்கலாம். ஆனால் அவர்களின் சிந்தனை, நிகழ்ச்சி நிரல் ஆகியவை மீது ஆர்எஸ்எஸ் தாக்கம் உள்ளதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந்தக் குற்றச்சாட்டுகளை ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகேஷ் சின்ஹா மறுக்கிறார்.
"130 கோடி மக்கள்தொகை கொண்ட நாட்டில், பன்முகத்தன்மை காரணமாக முரண்பாடுகள் உள்ளன. அதனால் ஆங்காங்கே சிறு பிரச்னைகள் வருகின்றன. ஆங்காங்கே சில அறிக்கைகள் வெளியாகின்றன. இதுபோன்ற அமைப்புகளின் சைன்போர்டுகள் தவிர, சில உறுப்பினர்களைத் தவிர, இவர்களில் யாரை யாருக்கு அடையாளம் தெரியும்? அவர்களுக்கு ஆதரவாக நிற்பது யார்? மின்னணு ஊடகங்கள் இல்லை என்றால் அந்த அமைப்புகள் உலகின் கண்களை எட்டியிருக்க வாய்ப்பே இல்லை. இது மீடியா உருவாக்கியுள்ள ஒரு நிலை. இதற்கு ஆர்எஸ்எஸ் எப்படிப் பொறுப்பாகும்," என்று பிபிசி உடனான உரையாடலில் வினவினார்.
இந்துத்துவ கொடியை ஏந்தியவர்
சில விளிம்பு நிலை இந்து அமைப்புகளையும் அவர்களுடன் தொடர்புடைய சிலரையும் பார்ப்போம். அவர்கள் தங்கள் சித்தாந்தத்தை எப்படிப் புரிந்துகொள்கிறார்கள், அதைச் செயல்படுத்த எந்த அளவுக்குச் செல்லத் தயாராக இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வது சுவாரஸ்யமாக இருக்கும். அவர்கள் அரசியலின் வரைபடத்தில் மட்டுப்படுத்தப்பட்டவர்களாகத் தோன்றினாலும், தங்கள் சித்தாந்தத்தை அடிமட்டம் வரையில் கொண்டு வர எந்த வழியையும் பயன்படுத்த, எந்த விலையைக் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.
இவர்களின் நீண்ட பட்டியலில் பஜ்ரங் முனியும் உள்ளார். சீதாபூரில் அமர்ந்திருந்த பஜ்ரங் முனியுடன் ஜூம் மூலம் உரையாடல் நடந்தது.
பஜ்ரங் முனி, கைராபாத்தில் அமைந்துள்ள மகரிஷி ஸ்ரீ லக்ஷ்மண் தாஸ் உதாசி ஆசிரமத்தின் தலைமை பூசாரி.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
சில மாதங்களுக்கு முன்பு பஜ்ரங் முனியின் வீடியோ வைரலானது. அதில் அவர் முஸ்லிம் பெண்கள் மீதான பலாத்கார மிரட்டலை வெளியிட்டார். இந்த வீடியோ தொடர்பாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பிறகு பஜ்ரங் முனி மன்னிப்பு கேட்டார். இந்த வழக்கில் அவருக்கு ஏப்ரல் மாதம் ஜாமீன் கிடைத்தது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
பிபிசி உடனான உரையாடலில் இதற்கு பதிலளித்த பஜ்ரங் முனி,"எங்கள் இந்து பெண்கள் மீது இதைச் செய்தால் அது நடக்கும் என்று நான் சொன்னேன். அந்த நான்கு வார்த்தைகள் என் வாயிலிருந்து தவறுதலாக வந்தன என்று நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அதையும் நான் நிபந்தனையுடன் சொன்னேன்," என்றார்.
முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும், மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுச் சட்டம் இயற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்னர் எழுப்பியுள்ள பஜ்ரங் முனி, "நாம் மதத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டோம். நாம் ஏற்கனவே இந்து தேசம். அவர்களை விரட்ட வேண்டும்," என்கிறார்.
2021 பிப்ரவரியில் யாரோ ஒருவர் தனது முதுகுத்தண்டை கத்தியால் குத்தியதாகவும் அதன் காரணமாக தன்னால் நடக்க முடியவில்லை என்றும் தான் வலியால் அவதிப்படுவதாகவும் அவர் கூறினார்.
"நான் ஒன்பது முறை தாக்கப்பட்டேன். நான் கத்தியால் குத்தப்பட்டேன். எந்த ஊடகமும் அதைக் காட்டவில்லை."என்று அவர் மேலும் கூறினார்.
பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள அவ்வார் கிராமத்தில் வசிக்கும் பஜ்ரங் முனியின் தந்தை, மத்திய பிரதேச காவல்துறையில் பணியாற்றி வந்தார். பஜ்ரங் முனி, இந்தூரில் பிபிஏ படித்துவிட்டு, 2007ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் ஜெட் ஏர்வேஸில் கேம்பஸ் தேர்வில் வெற்றி பெற்றார். அங்கு அவர் சில புனிதர்களைச் சந்தித்தார், அதன் பிறகு அவர் படிப்படியாக இந்துத்துவா பக்கம் ஈர்க்கப்பட்டார்.
தொடக்கத்தில் பசு பாதுகாப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர், "மாடுகளைக் கடத்தும் எல்லா வாகனங்களையும்" பிடிக்க முயன்றார்.
ஆஸ்திரேலிய நாட்டவரான கிரஹாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தாரா சிங்கை "தேவ தூதன்" என்று பஜ்ரங் முனி கருதுகிறார். ஏனெனில் அவர் "தன்னலமின்றி செயல்பட்டார்" என்கிறார் பஜ்ரங் முனி.
ஆஸ்திரேலிய கிறிஸ்தவ மிஷனரி கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் மற்றும் அவரது இரண்டு மகன்களும், 1999 இல் ஒடிஷாவில் உள்ள ஒரு கிராமத்தில் எரித்துக் கொல்லப்பட்டனர். தொழுநோயாளிகளின் நலனுக்காக ஸ்டெயின்ஸ் அங்கு வேலை செய்து வந்தார்.
ஏழை இந்துக்களின் கட்டாய மத மாற்றத்தை அவர் செய்ததாக அடிப்படைவாத இந்து அமைப்புகள் குற்றம் சாட்டின.
"மதச்சார்பற்றவர்கள் தாரா சிங் தவறு செய்தார் என்று சொல்வார்கள். 19 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் அவருக்கு எந்தவொரு இந்துவும் உணவு கூட கொடுக்கவில்லை. அவர் சித்ரவதைகளை எதிர்கொள்கிறார். அவருடைய இடத்தில் வேறொருவர் இருந்திருந்தால் வேறுவிதமாகப் பேசியிருப்பார். ஆனால் அவரோ ' நான் சிறையிலிருந்து வெளியே வந்தால், என் மதத்தைப் பாதுகாப்பேன்' என்று சொல்கிறார்,"என்று பஜ்ரங் முனி குறிப்பிட்டார்.
உத்தரபிரதேச மாநிலத்தின் மற்றொரு நகரமான ஆக்ராவைச் சேர்ந்த கோவிந்த் பராஷர், ராஷ்ட்ரிய இந்து பரிஷத் அமைப்பின் அகில இந்திய தலைவர்.
38 வயதான பராஷர், உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால் ஒரு காலத்தில் தேஜோ மஹால் கோயிலாக இருந்தது என்றும் அது இடிக்கப்பட்டதாகவும் கூறுகிறார். அவரது கூற்றை ஆதரிக்க எந்தத் தொல்லியல் ஆதாரமும் இல்லை.
சில ஆண்டுகளுக்கு முன்பு அவரும் மற்ற இந்துத்துவ அமைப்புகளும் தாஜ்மஹாலில் ஆரத்தி நடத்தப்படவேண்டும் என்று கோரியபோது அவர் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றார்.
"இது கல்லறை அல்ல. இது தேஜோ மஹாலின் பிண்டி(கல் அமைப்பு). அதில் தண்ணீர் சொட்டுகிறது," என்று தாஜ்மஹாலின் உள்ளே இருக்கும் கல்லறைகளைப் பற்றி அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
கோவிந்த் பராஷர் முன்பு பஜ்ரங் தளத்துடன் தொடர்பு கொண்டிருந்தார். அங்கு அவரது வேலை பசுக்களைக் காப்பாற்றுவது, 'லவ் ஜிஹாத்திற்காக போராடுவது' போன்றவை.
பின்னர் தாஜ்மஹாலில் ஆரத்தி எடுக்கப்படவேண்டும் என்ற அறிவிப்பின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்ட நேரம் வந்தது.
தனது சிறை வாழ்க்கையின் போது பஜ்ரங் தளத்திடம் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றும் அதன் காரணமாக அந்த அமைப்பை விட்டு வெளியேறி சொந்த அமைப்பை உருவாக்கியதாகவும் கோவிந்த் பராஷர் கூறுகிறார்.
ராஷ்டிரிய ஹிந்து பரிஷத்திற்கு நாடு முழுவதும் சுமார் இரண்டு லட்சம் உறுப்பினர்கள் இருப்பதாகவும் இந்துக்களை மேம்படுத்துதல், தங்கள் சகோதர சகோதரிகளுக்கு எப்படி உதவுவது என்று இந்துக்களுக்கு விளக்குவது, கோமாதாவுக்கு எந்த வகையில் உதவுவது' போன்றவை அவர்களது பணிகளில் அடங்கும்," என்றும் பராஷர் கூறுகிறார்.
ஆக்ராவிலிருந்து போபாலுக்கு சென்றால் அங்கு இந்து அமைப்பான 'சன்ஸ்கிருதி பச்சாவ் மஞ்ச்' இருக்கிறது. அதன் முழக்கம், 'நமது கலாசாரம், நமது பாரம்பரியம்'.
காதலர் தினம், மழை நடன விருந்து போன்றவை இந்திய கலாசாரத்தைக் கெடுக்கும் சதி என்று கூறுகிறார் இந்த அமைப்பின் சந்திரசேகர் திவாரி.
இந்து-முஸ்லிம்களுக்கு இடையிலான திருமணங்களைத் தடுக்கும் முயற்சி, இந்து குழந்தைகளுக்கு விளக்குதல், பாரம்பரியம் பற்றிய பயிற்சி முகாம்களை நடத்துதல், கோவில்களுக்குச் செல்ல மக்களைத் தூண்டுதல், ராமாயணம், ஹனுமான் கதைகளை வீடுகளில் ஓதுதல்" போன்றவை அமைப்பின் பணிகளில் அடங்கும்.
கடந்த சில ஆண்டுகளில் உருவான சில அமைப்புகளின் பெயர்கள் இவை.
பல ஆண்டுகளாக சனாதன் சன்ஸ்தா, இந்து யுவ வாஹினி, பஜ்ரங் தள், ஸ்ரீ ராம் சேனை, இந்து ஏக்ய வேதி போன்ற அமைப்புகள் மற்றும் அவற்றின் தொண்டர்கள் செயலில் உள்ளனர்.
இப்போது ராம்சேனா, இந்து சேனா, சனாதன் தர்ம பிரசார் சேவா சமிதி, கர்னி சேனா, விஷ்வ ஹிந்து மகாகால் சேனா எனப் பல இந்துத்துவா பிரிவுகள் களத்தில் உள்ளன.
இந்த அமைப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன?
கடந்த சில ஆண்டுகளில் எத்தனை புதிய இந்துத்துவ அமைப்புகள், குழுக்கள் பிறந்துள்ளன என்பதைக் கண்டுபிடிக்க முடியாது. ஏனெனில் பல பிரிவுகள் குறுகிய காலத்திற்கு மட்டுமே செயல்படுகின்றன. அவை ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக, சர்ச்சைக்காக உருவாக்கப்படுகின்றன. நோக்கம் நிறைவேறிய பிறகு அவை மறைந்துவிடும் என்று பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான தீரேந்திர ஜா கூறுகிறார்.
"கடந்த சில வருடங்களில் வெளிவரும் புதிய பெயர்கள் ஏதோவொரு நோக்கத்திற்காக அமைக்கப்படுபவை. இதன் தொண்டர்கள் எதோ ஒன்றால் ஈர்க்கப்படுகிறார்கள். ஆனால் இதன் தலைவர்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் நிறுவப்பட்ட ஏதோவொரு இந்துத்துவ அமைப்போடு நீண்டகாலத் தொடர்பு கொண்டவர்கள் எனத் தெரிய வருகிறது," என்று அவர் மேலும் கூறினார்.
பெயர் குறிப்பிட விரும்பாத ஆக்ராவை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஒருவர், கடந்த மூன்று-நான்கு ஆண்டுகளில் மேற்கு உத்தர பிரதேசத்தில் சுமார் 60 சிறு குழுக்கள் உருவாகியுள்ளன என்று கூறுகிறார். "இவற்றில் பலவற்றை யாருக்கும் தெரியாது, இவை பதிவு செய்யப்படுவதில்லை. கட்டுப்பாடுகள் எதுவுமில்லாத இவர்கள் தங்கள் சொந்த விதிமுறைகளின் கீழ் அவற்றை இயக்குகிறார்கள்," என்று அவர் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
ஒரு சில உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழுக்கள் பெரிய அமைப்புகளின் பாதுகாப்பில் செயல்படுவதாகவும் பிரச்னை பெரிதாகும்போது பெரிய அமைப்புகள் தங்களை விலக்கிக் கொள்வதாகும் இந்த செய்தியாளர் கூறுகிறார்.
பல குழுக்கள் ஒரு சிறிய கோவிலில் இருந்து தங்கள் செயல்பாடுகளை நடத்துகின்றன.பொது மக்கள் அல்லது வணிகர்களிடமிருந்து நன்கொடைகளைச் சேகரித்து தங்கள் நடவடிக்கைகளுக்கு நிதி பெறுகின்றன என்று அவர் கூறுகிறார்.
"யோகி அரசு வந்ததிலிருந்து, பாஜக அரசு வந்ததிலிருந்து, இந்து அமைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்" என்கிறார் அகில இந்திய இந்து மகாசபா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ஜாட்.
"இந்துத்துவத்தின் ஒளி பிறந்துள்ளது. ராமர் மீதும், காவிக்கொடி மீதும் அன்பு அதிகரித்துள்ளது. முகலாயர்களால் ஒடுக்கப்பட்டவர்கள், கடந்த பல தசாப்தங்களாக ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்தவர்கள் மூலமாக, பாஜக அரசு வந்ததும் புதிய அமைப்புகள் உருவாகின," என்று அவர் கூறினார்.
கடந்த சில ஆண்டுகளாக இந்துத்துவ அமைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது ஏன்?
"பாஜக ஆட்சியில் சிலர் தங்கள் உயிரைக் காப்பாற்ற காவி நிறத்திற்கு மாறியுள்ளனர். சில குற்றவாளிகளும் அமைப்பில் சேர்ந்துள்ளனர். அவர்கள் 100 ரூபாய் வஸ்திரம் அணிந்து காவி ஆகிவிட்டனர். சிலர் அமைப்பில் நுழைந்தனர், சிலர் சங் பரிவாரத்திற்குள் நுழைந்தனர்," என்று கோவிந்த் பராஷர் கூறுகிறார்.
"இந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் காவல்துறையின் பிடியில் வரும்போது, அவர்கள் தங்களை இந்து அமைப்புகளாகக் காட்டிக்கொள்கிறார்கள். காவல்துறை மென்மையாக நடந்துகொள்ளும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஓர் இந்துத்துவ கட்சி ஆட்சியில் உள்ளது என்பதால் காவல்துறையும் கொஞ்சம் மென்மையாக மாறுகிறது. (இவர்கள்) குழப்பத்தை உருவாக்குவார்கள்" என்றார் அவர்.
"கடந்த ஏழு-எட்டு ஆண்டுகளில் இந்தக் குழுக்கள் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன என்று கூறுவது நியாயமாக இருக்கும். காரணம், நிர்வாகத்தின் ஆதரவை அவர்கள் பெறுகிறார்கள். பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களில் அவர்கள் அதிக சுறுசுறுப்பாக உள்ளனர். பாஜகவின் அரசியல் அடிப்படை 'ஒருமுனைப்படுத்தல்'. பாஜக, அரசியல் சாசனத்திற்குக் கட்டுப்பட்ட ஓர் அரசியல் கட்சி. எனவே ஒருமுனைப்படுத்தல் போன்ற வேலையை அக்கட்சியால் நேரடியாகச் செய்ய முடிவதில்லை. அந்த வேலைகளை இந்த அமைப்புகள் செய்கின்றன," என்று பத்திரிகையாளரும் எழுத்தாளருமான தீரேந்திர ஜா கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
ஆனால், பாஜக தலைவர்கள் துருவ அரசியலை நிராகரிக்கின்றனர். சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ் (அனைவருடனும் சேர்ந்து, அனைவருக்கும் மேம்பாடு, அனைவருக்கும் நம்பிக்கை) என்ற முழக்கத்தைப் பற்றி பேசுகின்றனர்.
"இதுபோன்ற சர்ச்சைக்குரிய உரையாடலில் எந்த சமூகத்தின் விவாதத்தையும் சேர்த்துக் கொள்வதில்லை. சமூக சிந்தனையை உருவாக்குவதில்லை. அந்த விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம், நாம் உண்மையில் நமது பாரபட்சத்தைக் காட்டுகிறோம். எந்தவொரு அமைப்பு அல்லது இயக்கத்திலும் ஆர்.எஸ்.எஸ்-இன் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்கு இருக்கிறதோ, அதைத் தாக்குவதற்காக, குற்றம் சாட்டுவதற்காக, விளிம்புநிலை மக்களின் அறிக்கைகள் மற்றும் செயல்களை மேற்கோள்காட்டி, நூறு ஆண்டுகள் பழைமையான இயக்கம் மற்றும் அமைப்பு, அதன் தலைமை, சித்தாந்தம் ஆகியவற்றை விசாரணைக் கூண்டில் நிறுத்துவது விஷமத்தனமான பிரசாரத்தின் ஒரு பகுதியாகும். நாம் அதிலிருந்து வெளியேற வேண்டும்," என்று ஆர்எஸ்எஸ் சிந்தனைகளுடன் தொடர்புடைய பாஜக எம்பி ராகேஷ் சின்ஹா கூறினார்.
சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிக் பல்கலைக் கழகத்தின் மூத்த ஆராய்ச்சியாளரும் சமூக மானுடவியலாளருமான சதேந்தர் குமார், இத்தகைய அமைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கான காரணத்தைச் சுட்டிக் காட்டுகிறார்.
நாட்டில் வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளன. அரசியல் எதிரிகள் உருவாகியுள்ளனர். சமூகத்தின் அடிமட்ட நிலையில் நிற்கும் மக்களிடையே இந்துவாக இருப்பதை அடையாளம் காட்டுவது அதிகரித்துள்ளது. ஆங்கிலத்தை மேன்மையாக மதிக்கும் இந்தியாவின் மேல்தட்டு வர்க்கத்தின் மீது பிறமொழி பேசும் மக்களின் கோபம் உள்ளது. பட்டம் பெற்ற பிறகும் இளைஞர்கள் வேலை இல்லாமல் அலைகின்றனர். அடையாள அரசியலின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. அரசு அமைப்புகள் தங்களுக்கு மனப் பாதுகாப்பைத் தருவதில்லை என்று பொதுமக்கள் நினைக்கிறார்கள் என்று சதேந்தர் குமார் குறிப்பிட்டார்.
"வேலை இல்லாததால் யாரும் உங்களை மதிப்பதில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் அமைப்பின் அட்டை வைத்திருக்கும்போது, உங்களை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்று உணர்கிறீர்கள்," என்கிறார்.
"சமூகத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக இருக்கும் நிலையில் அவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் திசையில் அரசு எதுவும் செய்யவில்லை. மாறாக வேலை வாய்ப்புகள்அழிக்கப்படுகின்றன. இதன் காரணமாக இளைஞர்கள் மிக எளிதாக அந்த வலையில் விழுகின்றனர். அவர்கள் சக்தியை உணர்கிறார்கள்," என்று தீரேந்திர ஜா குறிப்பிடுகிறார்.
உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் போது, பெரும்பாலான மாணவர்கள் இந்து அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்பதைக் கண்டறிந்த நாட்களை சதேந்தர் குமார் நினைவு கூர்ந்தார்.
"வாய்ப்பு இல்லாத இளைஞர்களின் பெரும் பகுதியினர் இருக்கிறார்கள். வாய்ப்புகள் என்ற பெயரில் எட்டு-பத்தாயிரம் ரூபாய் வேலை இருக்கிறது. இந்த இளைஞர்கள் இருபது ஆண்டுகளுக்குப் பிறகும் அதே 8-10 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் வேலையைச் செய்வார்கள். அவர்களிடமும் சேமிப்பு இல்லை. வீடு இல்லை, மருத்துவ வசதி இருக்காது. அவர்கள் பெற்றோர் வீட்டில் தான் வசிக்க நேரிடுகிறது," என்று அவர் சுட்டிக்காட்டினார்.
"அதே நேரத்தில், ஒருவர் உங்களுக்கு எப்படி எதிரியாக உள்ளார், எப்படி உங்கள் வேலையை எடுத்துக் கொண்டு விடுகிறார் என்று ஒரு கலாசார வலை உருவாக்கப்பட்டுள்ளது. புலம் பெயர்ந்தோர், பிற மதத்தினர் இதில் வருகின்றனர். மதம் என்பது ஓர் அடையாளம். இது நெறிமுறைகள் அல்லது ஒழுக்கங்களைப் பற்றியது அல்ல. நாம் இந்துக்கள், நாம் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை என்று காட்டும் அடையாளம் மட்டுமே."
"ஆங்கிலம் அல்லது பஞ்சாபி மீடியத்தில் படித்து வந்தவர்கள் அவமானப்படுத்தப்பட்டனர். மேற்குலகின் கலாசார தாக்கத்திற்கு எதிராகப் போராடுவதாக அவர்கள் நினைக்கிறார்கள். கர்வத்துடன் இந்து என்று சொல்லவேண்டும், ஏனென்றால் இதுவரை இந்துக்களை யாரும் கண்டுகொள்ளவில்லை என்று நினைக்கிறார்கள். இந்தக் காரணிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்துள்ளன."
"விளிம்பு" அமைப்புகள் என்று அழைக்கப்படும் இந்த அமைப்புகள், மொழி மற்றும் கலாசார அவமானம் குறித்து மக்களிடையே உள்ள அமைதியின்மையை அறிந்திருந்தன," என்று சதேந்தர் குமார் கூறுகிறார்.
"2014-ம் ஆண்டு இந்தக் காரணிகள் எல்லாம் ஒன்று சேர்ந்தன. இது நீண்ட காலமாக இருந்து வந்தது. இதில் முந்தைய அரசுகளின் தோல்வியும் உள்ளது. வெளியிலிருந்து வந்தவர்கள் நம்மை ஆட்சி செய்து விட்டுச் சென்றுவிட்டனர் என்ற எண்ணம் - மக்களிடையே இருந்தது. அந்த உணர்வு பயன்படுத்தப்பட்டது."
இந்துத்துவ அமைப்புகளில் 'உயர் சாதி' ஆதிக்கம்?
" ஷாடோ ஆர்மீஸ் ஃப்ரிஞ் ஆர்கனைசேஷன்ஸ் அண்ட் ஃபூட் சோல்ஜர்ஸ் ஆஃப் ஹிந்துத்வா' என்ற நூலில், இந்துத்துவ அமைப்புகளில் பெரும்பாலான அடிமட்டத் தொண்டர்கள் 'தாழ்த்தப்பட்ட சாதி' என்று சமூகத்தில் அறியப்படும் சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்று எழுத்தாளர் தீரேந்திர ஜா எழுதியுள்ளார். எந்த இந்துத்துவத்திற்காகத் தங்களை முழுமையாக அர்பணித்துக் கொண்டுள்ளார்களோ அது பிராமணியத்தைத் தவிர வேறில்லை என்பதை அவர்கள் அடையாளம் காணவில்லை.
"இந்து மதத்தில் வளர்ந்து வரும் மதவெறி மற்றும் 'மற்றவர்கள் மீதான வெறுப்பு' அவர்களின் கண்களை கட்டியுள்ளது. அவர்கள் எந்த இந்துத்துவ சித்தாந்தத்திற்காகப் பாடுபடுகிறார்களோ அது, பிராமணர்கள் மற்றும் உயர் சாதியினரின் வரலாற்று மேலாதிக்கத்தை மீண்டும் நிலைநாட்ட மேற்கொள்ளப்படும் முயற்சி என்பதை அவர்களால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை."

பட மூலாதாரம், Getty Images
பிரமோத் முத்தாலிக்கின் ஸ்ரீராம் சேனையின், பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த தோழர்கள் மீது சங் பரிவாரத்தில், சாதியின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்பட்டதாகக் கூறப்படுவதும் அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"சங்கத்தில் யாரும் சொல்ல மாட்டார்கள், ஆனால் அங்கே எல்லாமே பிராமணர்களுக்கு நன்மை அளிக்கும் விதமாகவே இருக்கும். கீழ் சாதி மக்கள், கீழ் தரமான வேலைகளைச் செய்ய வேண்டும். அதை நீங்கள் தெருவில் சண்டையிடுவது போன்ற மோசமான வேலை என்று சொல்லலாம்," என்று ஒரு சக தொண்டர் கூறுகிறார்.
ஆர்எஸ்எஸ்-இல் பிராமணர்கள் அல்லது உயர் சாதியினரின் செல்வாக்கு தொடர்பாக அந்த அமைப்பு நீண்ட காலமாக விமர்சிக்கப்படுகிறது.
ஆனால், இந்த விமர்சனத்தை சங்கம் ஏற்கவில்லை. இந்து சமுதாயத்தில் தீண்டாமை, சமத்துவமின்மை ஆகியவை பெரிய பிரச்னைகள் என்றும் அவற்றை சமாளிப்பதற்குக் காலம் எடுக்கும் என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார்.
ஒரு தலித் கூட ஆர்எஸ்எஸ் தலைவர் ஆக முடியும் என்று மோகன் பாகவத் மற்றோர் இடத்தில் கூறினார்.
சாதி அடிப்படையிலான பாகுபாடு குறித்துப்பேசிய மோகன் பாகவத், சாதிப் பாகுபாடுகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று கூறினார். நாங்கள் சங்கத்தில் உள்ளவர்களிடம் சாதி பற்றிக் கேட்பதில்லை. இது நமது கலாசாரத்தின் ஒரு பகுதியல்ல என்று அவர் தெரிவித்தார்.
போபாலின் சந்திரசேகர் திவாரி முன்பு பஜ்ரங்தளத்தில் இருந்தார். அவர் 12 வயதில் கோவில் சேவையைத் தொடங்கினார். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக "இந்துத்துவா" வுக்காக உழைத்து வருகிறார்.
அவர் 18 ஆண்டுகளுக்கு முன்பு, காங்கிரஸ் கட்சியின் திக்விஜய் சிங் ஆட்சியின் போது சன்ஸ்கிருதி பச்சாவ் மஞ்ச் என்ற அமைப்பை நிறுவினார். நமது கலாசாரம், நமது பாரம்பரியம் என்பதே அந்த அமைப்பின் முழக்கம்.
இந்துத்துவ அமைப்புகளில் 'உயர் சாதி' ஆதிக்கம் என்று சொல்லப்படுவது, இந்து சமுதாயம் ஒழுங்கமைக்கப்படக்கூடாது என்பதற்காகச் சொல்லப்படும் வெற்றுப் பேச்சு என்கிறார் சந்திரசேகர் திவாரி.
"எனது மாவட்டத் தலைவர் தானுக் சமூகத்தைச் சேர்ந்தவர். நாங்கள் கடந்த எட்டு ஆண்டுகளாக சுனரி யாத்திரை செய்கிறோம். நாங்கள் ஒன்றாக அந்தக் கோவிலில் வழிபாடு, ஆரத்தி செய்கிறோம், அங்கிருந்து எங்கள் பயணம் தொடங்குகிறது," என்று அவர் கூறுகிறார்.
1990ஆம் ஆண்டில் ராமர் கோவிலுக்கான முதல் கரசேவையில் பங்கேற்ற முன்னாள் ஆர்எஸ்எஸ் ஊழியரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவருமான பன்வர் மேக்வன்ஷி இந்தக் கூற்றை ஏற்கவில்லை.
"1991 ஆம் ஆண்டில், இந்து அமைப்புகளுடன் தொடர்புடைய சாதுக்கள் மற்றும் துறவிகள், உங்கள் இடத்தில் உணவு உண்ண மாட்டார்கள். எனவே தலித் ஒருவரின் வீட்டில் உணவு சமைக்கப்பட்டது என்று சொல்லாமல் அந்த உணவை பேக் செய்யுமாறும் அடுத்த கிராமத்தில் அவர்களுக்கு அந்த உணவு அளிக்கப்படும் என்றும் என்னிடம் கூறப்பட்டது. ஆனால் உணவுப் பொட்டலம் தூக்கி வீசப்பட்டது என்பது பின்னர் எனக்குத் தெரிய வந்தது," என்று அவர் குறிப்பிட்டார்.
"ராமர் கோயிலுக்காக நான் இறக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால் என் வீட்டில் உணவு சாப்பிட நீங்கள் தயாராக இல்லையே என்று மனதிற்குள் நான் நினைத்தேன்," என்று பில்வாராவில் உள்ள சிர்டியாஸ் கிராமத்தைச் சேர்ந்தவரான, தற்போது ஜெய்ப்பூரில் வசிக்கும் பன்வர் கூறினார்.
உள்ளூர் அதிகாரிகளிடம் தனது புகாரை அளித்ததாகவும் ஆனால் எந்தப் பதிலும் இல்லாததால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை விட்டு வெளியேறியதாகவும் பன்வர் குறிப்பிட்டார்.
இத்தனை ஆண்டுகளில் இந்து அமைப்புகளில் இணைபவர்களிடையே OBC மற்றும் தலித்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், அதிகாரம் இன்னும் 'மேல்சாதி' மக்களிடமே உள்ளது என்கிறார் அவர்.
எதிர்கால இந்தியா
இந்துத்துவ அமைப்புகள் இந்துதேசத்தை உருவாக்குவது குறித்துத் தொடர்ந்து பேசி வருகின்றன.
"இந்தியா இந்து தேசமாக மாற வேண்டும். இந்துத்துவத்தின் மீது ஈர்க்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நேபாளம் முற்றிலும் இந்து நாடாக இருந்தது. ஆனால் அது முடிவுக்கு வந்துவிட்டது," என்று உத்தர பிரதேசத்தில் இந்து யுவ வாஹினியின் நிறுவனர் அமைச்சர் ராம் லக்ஷ்மண் தெரிவித்தார்.
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 2002ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்து யுவ வாஹினியின் தலைமை புரவலர் ஆவார்.

பட மூலாதாரம், Getty Images
தனது "அரசியல் அல்லாத, கலாசார அமைப்பு", இந்துக்கள் ஒடுக்கப்படும் இடங்களில், இந்துக்கள் காயப்படும் இடங்களில், இந்து மதம் மற்றும் கலாசாரம் அச்சுறுத்தப்படும் இடங்களில் செயல்படுகிறது என்று ராம் லஷ்மண் கூறுகிறார்.
தனது அமைப்பு தொடர்பான காவல்துறை நிர்வாகத்தின் நிலைப்பாடு பற்றிப் பேசியவர், "நாங்கள் தவறு செய்தால் எங்களைச் சிறைக்கு அனுப்ப வேண்டும். இந்துத்துவ வேலை செய்வது தவறு என்றால் நாங்கள் நூறு தவறுகளைச் செய்வோம். நாங்கள் அரசியலமைப்பின் கீழ் செயல்படுகிறோம்" என்று கூறுகிறார்.
ஆனால், எட்டி நரசிம்மானந்தாவாக இருந்தாலும் சரி, இந்துத்துவ அமைப்புகளின் தலைவர்களாக இருந்தாலும் சரி போலீஸ் நிர்வாகம் அவர்களிடம் மென்மையாக நடந்து கொள்வதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இதுபோன்ற குற்றச்சாட்டுகளை போலீசார் மறுத்து வருகின்றனர். ஆனால் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
எட்டி நரசிம்மானந்த் மற்றும் நூபுர் ஷர்மாவுக்கு எதிரான காவல்துறையின் அணுகுமுறை முகமது ஜுபைர் போன்ற விவகாரங்களுடன் ஒப்பிடப்பட்டது. மேலும் இந்துத்துவ குழுக்களுக்கு அரசியல் ரீதியிலான ஆதரவு இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
கும்பல் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு பாஜக தலைவர் ஜெயந்த் சின்ஹா மாலை அணிவித்த சம்பவத்தை பத்திரிகையாளரும் எழுத்தாளருமான தீரேந்திர ஜா நினைவுபடுத்துகிறார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த இந்துத்துவ அமைப்புகள், எதிர்கால தேசியக் கொள்கைகளில், இந்திய அரசியலில், ஜனநாயகத் தேர்தல்களில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுதான் கேள்வி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்














