புல்டோசர்கள்: கட்டடங்கள் கட்டுவதற்குப் பயன்படும் வாகனம் அவற்றை இடிக்கும் ஓர் ஆயுதமாக மாறியது எப்படி?

புல்டோசர்கள்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், கீதா பாண்டே
    • பதவி, பிபிசி செய்தியாளர்

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட புல்டோசர்கள், வீடுகள், அலுவலகங்கள், சாலைகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளை உருவாக்க உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால் சமீப ஆண்டுகளில், புல்டோசர்கள் சிறுபான்மையான முஸ்லிம் சமூகத்தின் வீடுகளையும் வாழ்வாதாரங்களையும் அழிக்க இந்தியாவின் இந்து தேசியவாத பாரதிய ஜனதா கட்சியின் அரசு கைகளில் ஆயுதமாக மாறி விட்டதாக பலர் கூறுகின்றனர்.

இந்த வாகனங்கள் மற்ற மாநிலங்களை விட அரசியல் ரீதியான முக்கியமான மாநிலமான உத்தர பிரதேசத்தில் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அவர்களது அத்தகைய நடவடிக்கை கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. பிரயாக்ராஜ் நகரில் (முன்னதாக அலகாபாத்) அரசியல் ஆர்வலர் ஜாவேத் முகமதுவின் வீட்டை அதிகாரிகள் இடித்தப்போது, அது சட்ட விரோதமாக கட்டப்பட்டது என்று கூறினார்கள். ஆனால், ஜாவேத்தின் குடும்பம் இதை மறுத்துவிட்டது.

இது குறித்து விமர்சகர்கள், அந்த கட்டடம் சட்டவிரோதமாக கட்டப்பட்டதற்கும், அந்த வீடு இடிக்கப்பட்டதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறுகின்றனர். அரசுக்கு எதிராக அவர் குரல் எழுப்பியதால்தான் அவரது வீடு இடிக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர்.

வீடுகள் இடிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்பு, காவல்துறை அவரைக் கைது செய்தது. பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மா முகமது நபியைப் பற்றிக் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு எதிராக முஸ்லிம்கள் அங்கு நடத்திய வன்முறைப் போராட்டங்களின் பின்னணியில் செயல்பட்ட முக்கிய நபராக காவல்துறை குற்றம் சாட்டியது.

முன்னதாக நூபுர் ஷர்மா பாஜக கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனால் போராட்டக்காரர்கள் அவரைக் கைது செய்யக் கோரி போராட்டம் செய்தனர்.

"தாங்கள் சட்டத்திற்கு எதிராக எதுவும் செய்யவில்லை" என்று பாஜக தலைவர்கள் தங்கள் செயலை ஆதரித்துப் பேசினர்.

ஆனால், இந்த வீடுகள் இடிக்கப்படும் சம்பவங்கள் இந்தியாவிலும், உலக அளவிலும் விமர்சிக்கப்பட்டுள்ளன. இது பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேலின் கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தியதுடன் ஒப்பிடப்படுகிறது. இந்த அதிகாரப்பூர்வமான நடவடிக்கைக்குப் பின்னால் மிகவும் மெல்லிய, மேலொட்டமான சட்டமே உள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். சட்டத்தின் வலிமை மீதே புல்டோசரை ஏற்றுகிறார்கள்," என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

புல்டோசர்கள்

பட மூலாதாரம், Getty Images

மிகவும் அரிதான நடவடிக்கையாக, நாட்டின் தலைமை நீதிபதிக்கு முன்னாள் நீதிபதிகளும் செல்வாக்குமிக்க வழக்கறிஞர்களும் இந்த விவகாரம் குறித்துக் கடிதம் எழுதினார்கள். அதில், இந்த புல்டோசர்கள் பயன்பாடு, சட்டத்தின் விதிகளை ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு மட்டுப்படுத்தி இருப்பதாகக் கூறியுள்ளனர். மேலும், முஸ்லிம் குடிமக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையையும் ஒடுக்குமுறையையும் எதிர்த்து நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் ஓர் அழுத்தமான கட்டுரை எழுதினார். அதில் அவர், "புல்டோசருக்கும் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட கட்டடங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் நான் யார் நான் எந்த விஷயத்திற்காகத் துணை நிற்கிறேன் என்பதற்கும் சம்பந்தம் உள்ளது" என்று எழுதியுள்ளார்.

"பொதுவில் நான் என்ன கூறுகிறேன் என்பதற்கும் இதற்கும் சம்பந்தம் உண்டு. என் நம்பிக்கைகள், என் சமூகம், என் இருப்பு, என் மதம் ஆகியவற்றுக்கும் இதற்கும் சம்பந்தம் உண்டு. என் கருத்து வேறுபாட்டுக்கான குரலுக்கும் இது பொருந்தும். ஒரு புல்டோசர் என் வீட்டைத் தரைமட்டமாக்கும் போது, அதை இடிக்க முயல்வது, நான் கட்டிய கட்டடத்தை மட்டுமல்ல, பேசுவதற்கான எனது தைரியத்தையும்தான்."

புல்டோசர்களின் பயன்பாடு குறித்து உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு உச்ச நீதிமன்றம் "அவற்றின் பயன்பாடு சட்டத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். பழிவாங்கும் வகையில் இருக்க முடியாது," என்று கூறியுள்ளது.

புல்டோசர்கள் பற்றிய இந்த சர்ச்சை சமீபத்தில் வந்ததல்ல.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், நான் உத்தர பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் குறித்து செய்தி சேகரிக்கச் சென்றபோது, அங்கு ஒரு முக்கியமான காட்சியைக் கண்டேன். அப்போது உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் மறுதேர்தலுக்கான பணியில் இருந்தார். (அவர் தேர்தலில் வெற்றி பெற்று தற்போது இரண்டாவது முறையாகப் பதவியேற்றுள்ளார்.)

ஒரு பேரணியில், அவருடைய ஆதரவாளர்கள் குழு ஒன்று, சிறிய மஞ்சள் பொம்மை புல்டோசர்களை கொண்டு வந்தனர்.

அந்த பிளாஸ்டிக் புல்டோசர்களைக் காற்றில் அசைத்தவாறு, அவர்கள் தொலைக்காட்சி கேமராக்கள் முன், அந்த புல்டோசரை பாபா (யோகி ஆதித்யநாத்) திரும்பக் கொண்டு வருவார்," என்று ஆடிப்பாடிக்கொண்டிருந்தனர்.

"புல்டோசர் பாபா" என்பது ஆதித்யநாத்துக்கு உள்ளூர் பத்திரிகைகள் வழங்கிய பெயர். ஆனால் அவரது முக்கிய போட்டியாளரான அகிலேஷ் யாதவ் அதை ஒரு பேரணியில் பயன்படுத்தியதால், அந்த பெயர் ஆதித்யநாத்துடன் நிலைத்து போனது.

புல்டோசர்கள்

இதை அகிலேஷ் யாதவ் ஏளனம் செய்யப் பயன்படுத்தினார். ஆனால் பாஜக அதைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டது. ஏனெனில் அது அவரது வலிமையான பிம்பத்துக்கு மேலும் வலு சேர்த்தது," என்று மூத்த பத்திரிக்கையாளர் ஷரத் பிரதான் கூறுகிறார்.

மேலும், பல இடங்களில், ஆதித்யநாத்தின் தேர்தல் பேரணிகளில் புல்டோசர்கள் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் அவர் வெற்றி பெற்ற பிறகு, அந்த இயந்திரங்கள் மாநில சட்டமன்றக் கட்டடத்தின் முன் கொண்டாட்டத்தின் அடையாளமாக அணிவகுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

எட்டு காவல்துறையினரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட பிரபல குற்றவாளி விகாஸ் துபே மற்றும் தாதா-அரசியல்வாதியான முக்தார் அன்சாரி ஆகிய இருவருக்கும் எதிராக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புல்டோசர்களைப் பயன்படுத்த ஆதித்யநாத் முதன்முறையாக உத்தரவிட்டார் என்று மூத்த பத்திரிகையாளர் அலோக் ஜோஷி கூறுகிறார்.

தேசிய தொலைக்காட்சிகளில், அவர்களுடைய சொத்துகள் இடிக்கப்படும் காணொளிகள் மீண்டும் மீண்டும் ஒளிப்பரப்பட்டன. குற்றவாளிகளை எதிர்த்துக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்த காரணத்திற்காக, மக்களிடையே அவருடைய அரசுக்கு வரவேற்பு கிடைத்தது.

"ஆனால், எதிர்க்கட்சியையும் அரசை விமர்சிப்பவர்களையும், குறிப்பாக முஸ்லிம்களை அச்சுறுத்தும் ஓர் உத்தியாக இது பயன்படுத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது," என்று ஜோஷி கூறுகிறார்.

சஹாரன்பூர் மற்றும் பிரயாக்ராஜ் பகுதிகளில் கட்டட இடிப்பு வேலைகள் நடப்பதற்கு முன், குற்றவாளிகளையும் மாஃபியாக்களையும் புல்டோசர்கள் கொண்டு தொடர்ந்து நொறுக்கப்படுவார்கள் என்று அவர் நடத்திய கூட்டத்தில் ஆதித்யநாத் கூறியுள்ளார்.

புல்டோசர்கள்

பட மூலாதாரம், Getty Images

திடமான அரசு நிர்வாகத்தின் அடையாளமாக இருந்த புல்டோசர்கள் என்பதிலிருந்து, முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை உறுதிப்படுத்தவும் நாட்டின் சட்டத்தை மீறி, இந்த அரசு புல்டோசர்களை ஒரு சக்தி வாய்ந்த ஆயுதமாக மாற்றியுள்ளது என்று பிரதான் தெரிவிக்கிறார்.

"இப்படித்தான் உள்ளூர்வாசிகள் கடுமையாக நடந்து கொள்கிறார்கள். இது எப்படி இருக்கிறது எனில், "நீ என் மீது ஒரு கல் எறிந்தால், நான் உன் வீட்டையே இடிப்பேன். உன் குடும்பத்திற்கு நான் பாடம் புகட்டுவேன்," என்பது போல் இருக்கிறது".

"ஆனால், யாருடைய சொத்துக்கள் மீதும் புல்டோசரை பயன்படுத்துவதற்கு இந்த நாட்டின் சட்டத்தில் அனுமதி இல்லை. ஒரு குடும்ப உறுப்பினர் ஒருவரைக் கொலை செய்தால், மொத்த குடும்பத்தையும் தூக்கிலிடுவீர்களா? ஆனால், இந்த அரசு தானே வழக்கறிஞராக, நீதிபதியாக, மரண தண்டனை விதிப்பவராகச் செயல்படுகிறது," என்கிறார்.

இந்த புல்டோசர்கள் பயன்பாடு உலகளவில் கவனம் பெற்றிருக்கலாம். ஆனால், ஆதித்யநாத்திற்கு இது பெரும் அரசியல் ஆதாயத்தைப் பெற்று தந்துள்ளது. இது பிரதமர் நரேந்திர மோதியின் ஒப்புதலையும் பெற்றிருக்கிறது.

கடந்த டிசம்பர் மாதம் அவர் அந்த மாநிலத்திற்கு வருகை தந்தபோது, "மாஃபியாக்கள் மீது புல்டோசர் பயன்படுத்தப்படும்போது, அது சட்டத்திற்குப் புறம்பாகக் கட்டப்பட்ட கட்டடத்தை இடிக்கிறது. ஆனால், அதைக் கட்டியவர்களும் அந்த வலியை உணர்வார்கள்," என்று பிரதமர் நரேந்திர மோதி கூறினார்.

பிரதமரின் கருத்துக்களைத் தொடர்ந்து, இந்த ஆண்டின் தொடக்கத்தில் மத்தியப் பிரதேசம் மற்றும் தலைநகர் டெல்லியில் மத வன்முறைக்குப் பிறகு புல்டோசர்கள் பயன்படுத்தப்பட்டது. முஸ்லிம்களின் வீடுகள், கடைகள் மற்றும் சிறு வணிகங்களை அழிப்பதன் மூலம் அவர்கள் குறிவைக்கப்பட்டனர்.

"ஒருவர் குற்றம் செய்திருந்தாலும், அவர் தண்டனை பெற்ற பிறகும், ஒருவரின் வீட்டை இடிக்க வேண்டும் என்று எந்த நீதிமன்ற உத்தரவும் கூறவில்லை. அதிகாரிகள் புல்டோசரை அனுப்பும்போது, அது ஓர் அரசியல் செய்தியைத்தான் கூறுகிறது - எங்களுக்கு எதிராக யார் போராடினாலும், புல்டோசர் மூலம் தூக்கி எறியப்படுவார்கள் என்பதே அது," என்று ஜோஷி கூறுகிறார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: