புல்டோசர் அரசியல் மூலம் தூண்டப்படுகிறதா இந்து-முஸ்லிம் வெறுப்புணர்வு? மத்திய பிரதேச கள நிலவரம்

பட மூலாதாரம், Salman Ravi/BBC
- எழுதியவர், சல்மான் ராவி
- பதவி, பிபிசி நிருபர், கர்கோனிலிருந்து
காலை எட்டு மணி. மத்திய பிரதேசத்தின் கர்கோன் வீதிகளில் மக்கள் ஒவ்வொருவராக வெளியே வரத் தொடங்கியுள்ளனர். ராம நவமி ஊர்வலத்திற்குப் பிறகு வெடித்த வன்முறை மற்றும் வகுப்புவாதப் பதட்ட நிலையைக் கட்டுப்படுத்த நகரின் பல பகுதிகளில் இம்மாதம் 10 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நிலைமை சீரடைவதைக் கண்டு நிர்வாகம் தற்போது ஊரடங்கு உத்தரவை 9 மணி நேரம் தளர்த்தியுள்ளது. இருப்பினும், அனைத்து கல்வி நிறுவனங்களும் இன்னும் மூடப்பட்டுள்ளன.
தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் நகர எல்லைக்கு வெளியே உள்ள கிராமப்புறங்களில் தீர்மானக் கூட்டங்கள் மற்றும் புறக்கணிப்புக்கான அறைகூவல்கள், இயல்புநிலைக்கு மத்தியில் மீண்டும் பதற்றத்தை உருவாக்கத் தொடங்கியுள்ளன.
சமூக ஊடகங்களிலும் இது போன்ற அறைகூவல்கள் தொடர்கின்றன. என்னதான் நடக்கிறது புல்டோசர் இயங்கிய கர்கோனில்?
நிர்வாகத்தின் எச்சரிக்கை
சமூக ஊடகங்கள் மூலமாகவோ அல்லது ஏதேனும் விளம்பர வாகனம் மூலமாகவோ இதுபோன்ற வன்முறைக்கான அறைகூவல் விடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது.
செவ்வாயன்று, மாவட்டத்தின் கராஹி காவல் நிலையத்திற்குட்பட்ட கதர்கான் பகுதியில் மைக் மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டதையடுத்து, காவல் துறை எஃப்ஐஆர் ஒன்றும் பதிவு செய்துள்ளது.
செவ்வாய்க்கிழமை மாலையில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரோஹித் கஸ்வானி, "இங்கே ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில் மைக் மூலம் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் மீது வெறுப்பு பரப்பப்படுவது தெரிகிறது. நாங்கள் இந்த விவாரத்தை தானாக முன்வந்து, வழக்காகப் பதிவு செய்துள்ளோம்" என்றார்.
வெறுப்புணர்வை பரப்பும் எந்தவொரு செயலுக்கும் எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டத்தின் அனைத்து நிலையப் பொறுப்பாளர்களுக்கும் துணை ஆட்சியர் முஜல்தா உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு முன்பும், மாவட்டத்தின் இச்சாப்பூர், உபதி மற்றும் பிப்ரி போன்ற பகுதிகளில் சங்கல்ப் சபைகள் ஏற்பாடு செய்யப்பட்டதாக செய்திகள் வந்தன. அங்கு மக்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களுடன் வர்த்தகம் அல்லது ஷாப்பிங் செய்யக்கூடாது என்று உறுதிமொழி ஏற்றனர். இதையடுத்து, இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
ஆனால், உள்ளூர் எம்பி கஜேந்திர சிங் படேல் இதில் பங்கேற்றதுதான் தற்போது மிகவும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. கஸ்ரவத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கூட்டத்தில் இவர் பங்கேற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.கே.மிஸ்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில், "வகுப்பு வன்முறையை ஊக்குவிக்கும் வகையில் கர்கோன் எம்.பி.யே செயல்பட்டு, அரசியல் சாசனத்துக்குப் புறம்பாக அராஜகத்தை பரப்பும் போது, வேறு என்ன சொல்ல முடியும்?" என்ற கேள்வி எழுப்புகிறார்.
ஒருதலைபட்சமான விசாரணையா?
இதற்கிடையில், மத்தியப் பிரதேச அரசால் அமைக்கப்பட்ட 'கிலெய்ம் ட்ரிப்யூனல்' உறுப்பினர்கள் இருவரும் கர்கோன் சென்று கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசினர். இந்த தீர்ப்பாயத்தில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ஷிவ்குமார் மிஸ்ரா, மாநில அரசின் முன்னாள் செயலாளர் பிரபாத் பராஷர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தத் தீர்ப்பாயம் மாநில அரசு சட்டம் - பொது மற்றும் தனியார் சொத்து மீட்பு சட்டம், 2021-ன் விதிகளின் கீழ் உருவாக்கப்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழ் கலவரத்தில் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதத்தின் அளவையும் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து வசூலிக்கலாம் என்ற விதிமுறை உள்ளது.
ராம நவமி ஊர்வலத்திற்குப் பிறகு ஏற்பட்ட வன்முறை தொடர்பாக காவல்துறையால் இதுவரை மொத்தம் 64 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 175 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பலர் தலைமறைவாக உள்ளதாகவும் காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Salman Ravi/BBC
இந்த வன்முறையால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்துக்கள் இஸ்லாமியர்கள் என இரு தரப்பிலும் அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் பலரின் வீடுகள் அல்லது வணிக நிறுவனங்கள் இடிக்கப்பட்டதை அடுத்து, நிர்வாக ஊழியர்களும் நடவடிக்கையில் இறங்கினர்.
ஆக்கிரமிப்பு செய்தவர்களின் சொத்துகள் மட்டுமே இடிக்கப்பட்டதாக நிர்வாகம் வாதிடுகிறது. ஆனால் இது நிர்வாகத்தின் 'ஒருதலைப்பட்ச நடவடிக்கை' என்றும், இதில் ஒரு சமூகம் மட்டுமே குறிவைக்கப்பட்டுள்ளதாகவும் முஸ்லிம் சமூகம் குற்றம் சாட்டுகிறது.
மத்தியப் பிரதேச அரசின் அமைச்சர் விஸ்வாஸ் கைலாஷ் சாரங் பிபிசியிடம் பேசுகையில், "கலவரக்காரர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அது முற்றிலும் அரசியலமைப்புச் சட்டத்தின் வரம்புக்குள் உள்ளது" என்றார்.
மேலும், "மாநில அரசு இரண்டு சட்டங்களை உருவாக்கியுள்ளது, அதன் கீழ் கலவரக்காரர்களிடமிருந்து சேதத்தின் தொகையை வசூலிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நகராட்சி சட்டம் 1956ன் கீழ் ஆக்கிரமிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றும் தெரிவித்தார்.
அமைதிக் குழுவின் உறுப்பினருக்கும் பாதிப்பு
அம்ஜத் கான் பேக்கரி தொழில் நடத்தி வருகிறார். அவர் அமைதிக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.
ராம நவமி தினத்தன்று, நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், மக்களுக்கு அறிவுரை கூறவும் நகரத்தில் உள்ள தாலாப் சவுக்கில் மூத்த போலீஸ் அதிகாரிகள் தங்களை நிறுத்தியதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பட மூலாதாரம், SALMAN RAVI/BBC
"இது மிகவும் பதட்டமான பகுதி என்றும், ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், என் முகம் சிசிடிவியில் தெரியும் என்றும் கூறினேன். அது தான் நடந்தது. ஏனெனில் கல் வீச்சு தொடங்கியதும், விஷயம் கை மீறிப் போய் விட்டது. நான் ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்போது சிசிடிவியில் உங்கள் முகம் தெரிகிறது எனவே நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறுகின்றனர். திடீரென நகராட்சி அதிகாரிகள் வந்து நோட்டீஸ் கொடுக்காமல் எனது பேக்கரி முழுவதையும் புல்டோசர் கொண்டு உடைத்தனர். நான் இதுவரை எந்தக் குற்ற வழக்கிலும் சம்பந்தப்படவில்லை." என்கிறார் அம்ஜத் கான்.
கலவரத்தில் ஈடுபடாத அப்பாவிகள் மற்றும் சொத்து சேதத்தால் பாதிக்கப்பட்டவர்களையும் நிர்வாகம் குற்றம் சாட்டியதாகக் கூறப்படுகிறது.
அப்படிப்பட்டவர்களில் ஒருவர் அக்பர் கான். அவரது வீடு மற்றும் கால்நடை தீவன கிடங்கு தீ வைத்து எரிக்கப்பட்டது. தற்போது அவர் மீதும் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கலவரங்களில் அதிகம் பாதிக்கப்பட்டவராக காஜிபுராவைச் சேர்ந்த அக்தர் கானும் இருக்கிறார். இதில் அவரது வீடு மற்றும் கிடங்கு முற்றிலும் எரிந்து நாசமானது. இப்போது கலவரத்தில் ஈடுபட்டதற்காக அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Salman Ravi/BBC
பிபிசியிடம் பேசிய அவர், தனது மகளின் திருமணத்திற்காகச் சேமித்ததெல்லாம் சாம்பலாகிவிட்டதாகவும், தற்போது வீடற்ற நிலையில் இருப்பதாகவும் கூறுகிறார். "எங்கள் பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டன, நாங்களும் குற்றவாளிகளாக்கப்பட்டோம், எங்கள் தரப்பை யாரும் கேட்கவில்லை" என்கிறார்.
நிர்வாகத்தின் நடவடிக்கை குறித்து இரு சமூகத்தினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனந்த் நகர் மற்றும் ரஹிம்புராவில் வசிக்கும் இந்துக் குடும்பங்களும் அரசு அலுவலகங்களை சுற்றி வருகின்றனர். வன்முறையின் போது இபரேஸ் கான் கொல்லப்பட்டதாக இங்கு வசிக்கும் ஐந்து இளைஞர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட திலீப் காங்கலேவின் தந்தை ரமேஷ் மற்றும் தாய் சுனிலா இருவரும் அழுது அழுது உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். காவல் துறையினரால் திலீப் பல தடவைகள் தாக்கப்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதேபோல் சச்சின் வர்மாவின் மனைவி உஷாவும் சச்சினை போலீஸ் கண்முன்னேயே கடுமையாகத் தாக்கி சிறைக்கு அனுப்பியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
"காவல்துறையினர் அவர்களை ரிமாண்டில் அழைத்துச் சென்று சித்ரவதை செய்ததால் அவர்கள் செய்த குற்றத்தை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர்கள்தான் என் வீட்டின் ஒரே வருவாய் ஈட்டும் நபர். எங்கள் வீடு எரிந்து நாசமானது. இப்போது மூன்று குழந்தைகளையும் வைத்துக் கொண்டு என்ன செய்வோம்." என்று வேதனைபடுகிறார்.
புல்டோசர் சர்ச்சை

பட மூலாதாரம், Salman Ravi/BBC
புல்டோசர் நடவடிக்கை ஒருதலைபட்சமாக இருந்ததாகவும், இதில் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே குறிவைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆனால், மத்தியப் பிரதேச அரசின் அமைச்சர் விஸ்வாஸ் கைலாஷ் சாரங் இதை மறுத்ததோடு, ராம நவமிக்கு முன்னதாகவே இந்த நடவடிக்கை நடந்து வருவதாக பிபிசியிடம் தெரிவித்தார்.
கர்கோனின் காஸ்கஸ்வாடியில் வீடு இடிக்கப்படுவதாகக் கூறப்படும் ஹசீனா ஃபக்ருவிற்கு ஏப்ரல் 4 ஆம் தேதியே நோட்டீஸ் வழங்கப்பட்டது. கலவரம் நடந்தது ஏப்ரல் 10 ஆம் தேதி.
புல்டோசர்கள் மசூதிக்கு முன்னால் உள்ள 'ஆக்கிரமிப்பு கடைகளையும்' தாக்கின, கலவரத்திற்கு முன்பே நோட்டீஸ் வழங்கப்பட்டதாக நிர்வாகம் கூறுகிறது.
கர்கோனின் புல்டோசர் இயக்கம் முஸ்லிம்களையும் இந்துக்களையும் கோபப்படுத்தியுள்ளது, ஏனெனில் பேருந்து நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ள ஸ்ரீ ராம் தர்மசாலாவைக் கூட அது விட்டுவைக்கவில்லை.
மனோஜ் ரகுவன்ஷி ராம நவமி ஊர்வலத்தின் பொறுப்பாளராகவும், ஸ்ரீ ராம் தர்மசாலாவின் அறங்காவலராகவும் உள்ளார். பிபிசியிடம் பேசிய அவர், நிர்வாகம் முதிர்ச்சியின்றிச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
"தர்மசாலா நிலத்தை மாநகராட்சி, அறக்கட்டளைக்கு 99 ஆண்டு குத்தகைக்கு வழங்கியது. ஆனால், எந்த அறிவிப்பும் இன்றி, வெளிப்புறப் பகுதி மற்றும் பெரிய பிரதான வாயில் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டது. நோட்டீஸ் இல்லை, விசாரணை இல்லை. சட்டப்படியில்லாமல், தன்னிச்சையாக அதிகாரிகள் செயல்படுகிறார்கள். இவர்கள் மீது உயர் அதிகாரிகள் மற்றும் அரசாங்கத்தின் கட்டுப்பாடு இல்லை.
கர்கோனில் வசிக்கும் இரு சமூகத்தினரும் சமூக விரோதிகளையும் கலவரங்களைப் பரப்புபவர்களையும் அடக்கி தண்டிக்க, சமுதாயமே முன்வர வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் ரகுவன்ஷி. மேலும், ஆவேசப் பேச்சுகள் மற்றும் பிரச்சாரங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் அமைதிக்கு வழி ஏற்படும்'' என்றார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












