புதுச்சேரியில் வயோதிக தம்பதியுடன் வீட்டுக்கு 'சீல்' - நடந்தது என்ன?

- எழுதியவர், நடராஜன் சுந்தர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
புதுச்சேரியில் மகன் வாங்கி கடனை திருப்பிச் செலுத்ததால் அவர் வசித்து வரும் வீட்டுக்கு சீல் வைக்க வந்த நிதி நிறுவனத்தினர், உள்ளே அவரது வயோதிக பெற்றோர் இருப்பது தெரியாமல் சீல் வைத்து விட்ட சம்பவம் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது. என்ன நடந்தது?
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள முத்தியால்பேட்டையைச் சேர்ந்தவர் துரை என்கிற மாணிக்கவாசகம். இவர் கட்டட ஒப்பந்ததாராக பணியாற்றி வருகிறார். திருமணமாகி குழந்தைகளுடன் இருக்கும் இவர், தனது வயதான தாய், தந்தையருடன் அவருக்கு சொந்தமான வீட்டில் வசித்து வருகிறார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளதாக கூறப்படுகிரது.
இந்நிலையில் கடன் தவணையை திருப்பி செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதாகவும், கடன் கொடுத்த நிதி நிறுவனத்தினர் கடன் தொகையை திருப்பிக் கேட்டு மாணிக்கவாசகத்தை வற்புறுத்தி வந்ததாகவும் தெரிகிறது.
இந்த விவகாரத்தில், கடனை திருப்பிச் செலுத்துவது தொடர்பாக நிதி நிறுவனத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில் வங்கிக்குச் செலுத்த வேண்டிய கடனுக்கான மாணிக்கவாசகத்தின் சொத்தை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
அந்த உத்தரவுடன் வங்கி நிர்வாகத்தினர், நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அலுவலருடன் சென்று மாணிக்கவாசகத்தின் வீட்டுக்கு சீல் வைத்து அந்த வீட்டுச் சுவரில் நோட்டீஸ் ஒட்டினர்.
ஆனால் நீண்ட நேரத்துக்குப் பிறகே அந்த வீட்டுக்குள் மாணிக்கவாசகத்தின் பெற்றோர் இருந்தது தெரியவந்தது. ஒரு வீட்டை ஆய்வு செய்யாமல் வங்கி நிர்வாகத்தினர் வீட்டைச் சீல் வைத்த தகவல் அந்த பகுதி முழுவதும் பரவியது. இது பற்றிய தகவலறிந்ததும் காவல்துறையினர் மூலம் வீட்டுக்கு சீல் வைத்த அலுவலர்களுக்கு அது பற்றி தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வீட்டின் பூட்டுக்கு போடப்பட்ட சீலை அகற்றி உள்ளே இருந்த வயோதிக தம்பதியை அலுவலர்கள் மீட்டனர்.
வீட்டில் அடைக்கப்பட்ட வயதான தம்பதியர்

இது குறித்து மாணிக்கவாசகத்தின் தாயார் சுந்தரி கூறுகையில், "எனது மகன் மற்றும் மருமகள் வெளியே துக்க நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தனர். எனது கணவருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவருக்கு ஆக்சிசன் வைத்துக் கொண்டு வீட்டின் உள்ளே இருவரும் இருந்தோம். ஆனால் எங்களுக்குத் தெரியாமலேயே வீட்டிற்குச் சீல் வைத்து விட்டுச் சென்றனர். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் எங்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்த பிறகே நிலைமை புரிந்தது. எங்களால் வாசல் கதவைத் திறக்க முடியவில்லை. சீல் வைக்கும் போது எங்களை அழைத்தார்களா என்றும் தெரியவில்லை. வீட்டிற்குள் இருந்ததால் வெளியே நடப்பது எங்களுக்கு தெரியவில்லை," என்று கூறினார்.
இந்த சம்பவம் குறித்து புதுச்சேரி முத்தியால்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் சிவப்பிரகாசத்தை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு கேட்டபோது, "நீதிமன்றம் நியமித்த வழக்கறிஞர் அலுவலர் மூலமாக நிதி நிறுவனத்தினர் சம்பந்தப்பட்ட நபரின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். காவல் துறை தரப்பில் பாதுகாப்புக்காகச் சென்றோம். குறிப்பாக வழக்கறிஞர் ஆணைய குழுவினர் வீட்டுக்குச் சென்ற போது சம்பந்தப்பட்ட நபர் வீட்டை முழுமையாக தாழிட்டு விட்டு வெளியே சென்றதாக தெரிகிறது. வீட்டிற்குச் சீல் வைக்கச் சென்றவர்கள் வீட்டில் ஆட்கள் இருக்கிறார்களா? என்று முழுமையாக ஆய்வு செய்துள்ளனர். அக்கம் பக்கத்தினரும் அவர்கள் வெளியே சென்றிருப்பதாக கூறவும் வெளியே இருக்கும் இரும்பு கதவை மூடி பூட்டுப்போட்டு சீல் வைத்துள்ளனர்," என்றார்.
"ஆனால், அரைமணி நேரத்திற்குப் பின்னர் வீட்டில் ஆட்கள் இருப்பதாக தகவல் வந்தது. உடனே சீல் வைத்த அலுவலர்களை தொடர்பு கொண்டோம். அவர்களுடம் விரைந்து வந்து சீலை நீக்கிவிட்டு வீட்டிலிருந்த வயோதிக தம்பதியை வெளியே வர நடவடிக்கை மேற்கொண்டனர். பிறகு மீண்டும் சீல் வைத்தனர். சம்பந்தப்பட்ட மாணிக்கவாசம் வந்து தனது பெற்றோரை அழைத்துச் சென்றுவிட்டார்," என்று காவல் உதவி ஆய்வாளர் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் நிதி நிறுவனத்தினர், தனது வீட்டுக்கு சீல் வைக்க வருவார்கள் என்பது மாணிக்கவாசகத்துக்கு முன்கூட்டியே தெரியும். வீட்டுக்கு சீல் வைப்பது தொடர்பான நோட்டீஸ் முறைப்படி அவருக்கு நிதி நிறுவனத்தினர் சார்பில் அனுப்பப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
வழக்கறிஞர் ஆணையர் தரப்பு கூறுவது என்ன?

இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் நியமித்த வழக்கறிஞர் அலுவலரிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "பெருந்தொகையை கடனாக வாங்கி விட்டு அதை மாணிக்கவாசகம் திருப்பிச் செலுத்தவில்லை. கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதியன்று கடன் தொகை மீட்பு நடவடிக்கையாக அவரது வீட்டிற்குச் சென்றோம். அப்போது 10 நாட்கள் அவகாசம் கேட்டனர். மேலும் கடன் வாங்கிய நபர் தலைமறைவாகி விடுகிறார். அப்போது வீட்டில் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இருந்த காரணத்தால் அவர்களைக் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக மனிதாபிமான அடிப்படையில் தவிர்த்துவிட்டோம். இதற்காக ஒன்றரை மாதம் அவகாசம் கொடுத்திருந்தோம்," என்றார்.
"இதையடுத்து மீண்டும் நீதிமன்ற உத்தரவின்படி 5 காவல் துறையினர் அவர்களில் ஒரு பெண் காவலர், வழக்கறிஞர் ஆணையர் (நீதிமன்றத்தால் இந்த விவகாரத்தில் உதவ நியமிக்கப்பட்டவர்), கிராம நிர்வாக அதிகாரி, வங்கி மேலாளர், மற்றும் வங்கி ஊழியர்கள் உட்பட 15 பேர் சென்றோம். நாங்கள் வீடு முழுவதும் வெளிப்பகுதியில் ஆய்வு செய்து, நீண்ட நேரம் குரல் கொடுத்தோம். கதவருகே இருந்த அழைப்பு மணியை அடித்தும் யாரும் வரவில்லை. மேலும் வீட்டுக் கதவு முழுமையாக வெளியே மூடப்பட்டுப் பூட்டியிருந்தது. அதனாலேயே வீட்டுக்கு சீல் வைத்தோம்," என்று அந்த வழக்கறிஞர் தெரிவித்தார்.
சட்டம் என்ன சொல்கிறது?
இந்த விவகாரத்தில் வழக்கறிஞர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தவறான அணுகுமுறையைக் கையாண்டுள்ளதால், இது சட்டப்படி குற்றம் என்கிறார் சட்ட வல்லுநர் சுப்பிரமணியம்.
"வீட்டில் வயோதிக தம்பதி இருப்பதாக கூறுகின்றனர். அதுமட்டுமின்றி வீட்டில் ஆட்கள் இருக்கிறார்களா என்று உறுதி செய்ய வீட்டில் காலிங் பெல் அடித்தாக சொல்கின்றனர். சிலர் வீட்டில் காலிங் பெல் கேட்கும், சிலர் வீட்டில் கேட்காது. அது உறுதியாக அவர்களுக்குக் கேட்டதா என்பது தெரியவில்லை. அப்படி இருக்கும்போது, காலிங் பெல் அடித்து வரவில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது. அப்படியே அதிகாரிகள் தரப்பில் வீட்டின் கதவை தட்டியதாகச் சொல்கின்றனர். அப்படி இருக்கும்போது வீட்டில் உள்ளவர்கள் வயதானவர்கள் என்பதால் அது அவர்களது காதில் விழாமலும் இருந்திருக்க வாய்ப்புள்ளது அல்லது வீட்டின் கடைசி பகுதியில் இருந்திருந்தால் அவர்கள் காதில் விழாமல் கூட இருந்திருக்கலாம்.
வீட்டை ஜப்தி செய்வதற்குச் சீல் வைக்கிறார்கள் என்று உறுதியான பிறகு, வீட்டில் ஆட்கள் இருக்கிறார்களா இல்லையா? என்பது 100 சதவீதம் உறுதிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். எப்படி இருந்தாலும் இந்த விவகாரத்தை வழக்கறிஞர் ஆணையர் மற்றும் காவல் துறை தரப்பினர் தவறாக கையாண்டுள்ளனர் என கருதுகிறேன்," என்கிறார் அவர்.
"இந்திய தண்டனைச் சட்டம் ஒரு நபரை சுயமாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு போக முடியாமல் அடைத்து வைப்பது சட்டப்படி குற்றம். இதில் முதியவர்களை வீட்டில் பூட்டி அடைத்து சட்டத்துக்குப் புறம்பாக கைது செய்துள்ளனர். இது காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கான முகாந்திரம் உள்ள வழக்காகும்.
இவ்வாறு உள்ளே வைத்து சீல் செய்திருப்பதால், வீட்டிற்கு உள்ளே இருக்கும் முதியவர்களுக்கு மன உளைச்சலுக்கு ஆளாகி உடல்நலக் குறைவு கூட ஏற்பட்டிருக்கலாம். மேலும் உடல்நிலை முடியாத நபரை வீட்டை வெளியேற்றி சீல் வைப்பது மனிதாபிமானமற்ற செயல்," என்றும் கூறுகிறார் மூத்த வழக்கறிஞர் சுப்பிரமணியம்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












