கோவையில் அதிர்ச்சி சம்பவம்: `மொட்டை அடித்தனர், பைப்பால் தாக்கினர், விடிய, விடிய சித்ரவதை`

கோவை ஆதரவற்றோர் பிரச்னை
    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

`நாங்க எந்த இடையூறும் இல்லாமல் கிடைத்த வேலையைப் பார்த்துட்டு பிழைச்சிட்டிருந்தோம். எங்களை திருடங்க மாதிரி பிடிச்சுட்டு போயி அடைச்சு வச்சு மொட்டை அடிச்சது மட்டுமில்லாம பைப்பால அடிச்சு சித்ரவதை பண்ணிட்டாங்க` என்று குமுறுகிறார் கோவையில் தெருவோரம் வசித்து வரும் முகமது ஹூசைன்.

கோவையில் தனியார் ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டவர்களுள் முகமது ஹூசைனும் ஒருவர். இவரைப் போல தெருவோரம் வசித்து வந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அடைத்து வைக்கப்பட்டு துன்புறுத்தலுக்கு உள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களை அவமானப்படுத்தியது மட்டுமில்லாமல் மனித உரிமை மீறலுக்கு உட்படுத்தியுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் முறையிடுகின்றனர்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் என்கிற இடத்தில் தனியார் தொண்டு நிறுவனம் முன்பு இயங்கி வந்தது. அந்த கட்டடத்தை தமிழ்நாடு முழுவதும் வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்த சிலர் வாடகைக்கு எடுத்து ஆதரவற்றோருக்கான முகாம் நடத்தி வந்தனர். அந்த இடம், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அன்பு அனாதை ஆசிரமம் என்கிற தனியார் தொண்டு நிறுவனம் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

ஜூலை 24ஆம் தேதி நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த முகவரியில் அடைத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. இதைத்தொடர்ந்து தொண்டாமுத்தூர் பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் அங்கு கூடியதால் அந்த பகுதி பரபரப்புடன் காட்சியளித்தது. அங்கு நடந்த சலசலப்பில் ஆசிரமத்தின் வாகனம் கவிழ்க்கப்பட்டது. இதனால் அங்கு காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

யார் இவர்கள், இந்தப் பகுதிக்கு எப்படி வந்தார்கள், இவர்களுக்கு என்ன ஆனது என்பதைப் பார்ப்போம்.

கடந்த ஜூலை 22ஆம் தேதி கோவை மாநகர காவல்துறையின் ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு கோவை மாநகர் முழுவதும் சோதனை நடத்தியது. அதில் மாநகர் முழுவதிலும் இருந்து தெருவோரம் வசித்து வந்த ஆதரவற்ற நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டனர்.

இவர்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் அடங்குவர். இவர்கள் அனைவரையும் தொண்டாமுத்தூர், கெம்பனூர் பகுதியில் உள்ள அன்பு அனாதை ஆசிரமத்தில் தங்க வைத்து பராமரிக்க முடிவு செய்து அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

சமூக ஊடக தகவலுக்குப் பிறகு நடவடிக்கை

கோவை அனாதை இல்லம்

ஆனால் தங்களுடைய விருப்பத்தை மீறியும் தாங்கள் அழைத்து செல்லப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

அன்பு அனாதை ஆசிரமத்தில் தங்கியிருந்தவர்களை நிர்வாகிகள் மொட்டை அடித்துள்ளனர். வயதானவர்களை பிவிசி பைப் கொண்டு அடித்தும் துன்புறுத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் பிபிசி தமிழிடம் கூறினர்.

ஜூலை 24ஆம் தேதி அன்பு அனாதை ஆசிரமம் தொடர்பான செய்தி பரவிய பிறகு பேரூர் தாசில்தார் மற்றும் காவல்துறையினர் அங்கு வந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டனர். உரிய அனுமதியின்றி முகாம் இயங்கி வந்தது முதல் கட்ட விசாரணையில் காவல்துறையினர் அறிந்தனர். அதன் பின்னர் முகாம் நடத்தி வந்த ஜூபின், செந்தில்குமார், செல்வின், பாலசந்திரன், அருண், ஜார்ஜ் ஆகிய ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய பேரூர் தாசில்தார் இந்துமதி, `அந்த கட்டிடத்தில் இயங்கி வந்த பிளஸ் இந்தியா என்கிற நிறுவனம் பல வருடங்களாக செயல்பாட்டில் இல்லை. வெளியூரிலிருந்து வந்த சிலர் ஆதரவற்றோருக்கு முகாம் நடத்தப்போவதாக அந்த கட்டடத்தை வாடகைக்கு எடுத்துள்ளனர்.

ஆனால் இத்தகைய முகாம் தொடர்பாக எந்த முன் அனுமதியும் பெறவில்லை. இதனால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து மீண்டும் அவர்கள் இடத்தில் கொண்டு விட்டுவிட்டோம்` என்றார்.

அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களிடம் பிபிசி தமிழ் சார்பில் நேரடியாக பேசினோம். அதில் சிலரது முறையீட்டை இங்கே வழங்குகிறோம்.

`என் பெயர் இருதய சாமி. எனக்கு கோவை தான் சொந்த ஊர். ஆனால் கடந்த 15 வருடங்களாக கோவை அரசு மருத்துவமனையை சுற்றிய பகுதிகளில் வசித்து கிடைத்த வேலைகளை செய்து வந்தேன். அரசு மருத்துவமனை முன்பு உணவு வழங்குவார்கள் என்பதால் அதைப் பெற அங்கு செல்வேன். என்னிடம் வந்த தன்னார்வலர்கள் சிலர் மொட்டை அடித்து உணவு மற்றும் உடை வழங்குவதாக கூறியதால் அவர்களுடன் சென்றேன். அங்கு சுமார் 150 பேர் அழைத்துவரப்பட்டிருந்தனர். தொண்டாமுத்தூர் ஊர் மக்கள் தலையிட்டதனால் தான் இந்த விஷயம் வெளியில் தெரியவந்தது.` என்றார்.

`என் பெயர் முகமது ஹுசைன். கோவை தான் சொந்த ஊர் என்றாலும் 20 வருடங்களாக தெருவோரங்களில் தான் வசித்து வருகிறேன். காகிதம், பாட்டில் போன்ற பொருட்களை சேகரித்து அதன் மூலம் கிடைக்கும் வருவாய் வைத்து செலவுகளை பார்த்து கொள்வேன். சில நேரங்களில் தன்னார்வலர்கள் உதவி செய்வார்கள்.

கடந்த வெள்ளிக்கிழமை மதியம் வந்தவர்கள் வலுக்கட்டாயமாக என்னை அழைத்துச் சென்றார்கள். அவர்கள் யாருமே கோவையைச் சேர்ந்தவர்கள் கிடையாது. முடி வெட்ட வேண்டும் என வற்புறுத்தினார்கள். முதலில் நான் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் என்னை காலில் அடித்தார்கள். வயது முதிர்ந்த பலரையும் பிவிசி பைப் மற்றும் மரக் கட்டை கொண்டு மூர்க்கமாக தாக்கினார்கள்.

கோவை அனாதை இல்லம்

இத்தனை வருடங்களில் இது போல நடந்தது இல்லை. எங்களை ஒரு சில தினங்களில் விட்டுவிடுவதாகக் கூறி தான் அழைத்துச் சென்றார்கள். ஆனால் அங்கு சூழ்நிலை அவ்வாறாக இல்லை. தொண்டாமுத்தூர் மக்கள் தலையிட்டதால் தான் எங்களை சித்ரவதையிலிருந்து காப்பாற்ற முடிந்தது,` என்றார்.

`என் பெயர் ராஜேந்திரன். எனக்கு சொந்த ஊர் பழனிக்கு அருகே உள்ள ஆயக்குடி. கடந்த 25 வருடங்களாக கோவையில் தான் வசித்து வருகிறேன். என்னையும் வலுக்கட்டாயமாக தான் அழைத்துச் சென்றாற்கள். அங்கே இருந்தவர்கள் எங்கள் கைவசம் இருந்த பணத்தையும் பிடுங்கிவிட்டார்கள். ஆதரவற்றவர்களுக்காக டிரஸ்ட் நடத்துபவர்கள் ஏன் இவ்வளவு கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் எனப் புரியவில்லை. அங்கே வலுக்கட்டாயமாக அனைவருக்கும் மொட்டை அடித்தார்கள். அதற்கு சம்மதிக்காதவர்களை வயது வித்தியாசம் பார்க்காமல் அடித்து துன்புறுத்தினர்,` என்றார்.

தொண்டாமுத்தூர் ஆசிரமம் விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று மொட்டை அடித்து அவமானப்படுத்தியதோடு மட்டுமில்லாமல் கடுமையாக தாக்கி மனித உரிமை மீற்ல்களும் நடந்துள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையத்தை தொடர்பு கொண்டு பேசும்போது, `கோயம்புத்தூரில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விவரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. விரிவான தகவல்களை சேகரித்து வருகிறோம்,' என்று அதன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

காணொளிக் குறிப்பு, மேலவளவு படுகொலை 25 ஆண்டுகளுக்கு பிறகு அப்படி வசதியில்லாத கிராம மக்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :