ஹைட்ரோகார்பன் திட்ட கூட்டம் ஏன்? தமிழ்நாடு அரசு நிலைப்பாட்டை தெளிவுபடுத்த விவசாயிகள் கோரிக்கை

- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
மன்னார்குடி தாலுகாவில் பெரியகுடி கிராமத்தில் ஓஎன்ஜிசி எண்ணெய் குழாய் இணைப்பு பணிகள் தொடர்பாக முத்தரப்புக் கூட்டத்திற்காக திருவாரூர் ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன் விடுத்திருந்த அழைப்பு இரண்டே நாட்களில் ரத்தாகியது. அந்த கூட்டத்தை நடத்துவதற்கான ஆவணங்களை ஆய்வு செய்த பின்னர் கூட்டம் பற்றிய முடிவு அறிவிக்கப்படும் என்ற ஆட்சியரின் மறு அறிவிப்பு பரபரப்பை அதிகரித்துள்ளது.
அறிவிக்கப்பட்ட கூட்டம் ரத்தாகிவிட்டாலும் கூட, ஆட்சி பொறுப்பில் இருக்கும் திமுக, ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளதா என தெளிவுபடுத்தவேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் வைக்கின்றனர். அதோடு, மராமத்து பணிகள் மேற்கொள்வதற்காகத்தான் ஒஎன்ஜிசி முன்வந்ததாக சொல்லப்பட்ட கருத்தை ஏற்றுக்கொள்ள தாங்கள் தயாராக இல்லை என்று 2020ல் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் தெரிவிக்கின்றனர்.
மன்னார்குடி தாலுகாவில் உள்ள பெரியகுடி மற்றும் சேந்தமங்கலத்தில் உள்ள விவசாய நில உரிமையாளர்கள் குழுவிற்கு, மன்னார்குடி தாலுகா அலுவலகத்தில் இருந்து ஜூலை 27ம் தேதியிட்ட கடிதம் ஒன்றில் ஜூலை 29ம் தேதி தாலுகா அலுவலகத்தில் நடக்கும் முத்தரப்பு கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 2020ல் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் புதிதாக எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எண்ணெய் குழாய் இணைப்பு பணிகள் தொடர்பாக கூட்டம் நடக்கவிருப்பதாக வந்த அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியது.
காவிரி டெல்டா பகுதி முழுவதும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு வலுவான எதிர்ப்பு உள்ளது. ஆனால் எண்ணெய் குழாய் இணைப்பு பணிகள் பற்றிய கூட்டம் நடைபெறவுள்ளது என்ற தகவல் வந்தததும், விவசாயிகள் சங்கத்தினர் பலரும் போராட்டங்களை அறிவித்தனர். சர்ச்சை அதிகரித்துள்ளதால், சுற்றுசூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக புதிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் மக்களின் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தாமல் எந்த முடிவும் எடுக்கப்படாது என்று தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் பெரியகுடியில் கிராமத்தில், 2013ல் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக கிணறு தோண்டும் பணி நடைபெற்றபோது தீ விபத்து ஏற்பட்டது. விபத்தை அடுத்து, மக்கள் போராட்டம் நடத்தியதால் கிணறு அமைக்கும் பணிக்கு தடை கொண்டுவரப்பட்டது. 2013 முதல் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு விவசாயிகள் மத்தியில் தொடர்ந்து எதிர்ப்பு இருந்து வந்தது. 2014ல் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அந்த திட்டம் தொடர்பாக நடந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில், கிணறு தோண்ட அனுமதி பெறப்படவில்லை என்பதால் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால், 2021ல் மீண்டும் கிணற்றை திறப்பதற்காக ஓஎன்ஜிசி பணிகளை மேற்கொண்டபோது, அனுமதி பெறாமல் பணிகளை மேற்கொள்வதை சுட்டிக்காட்டி விவசாயிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். விவசாயிகளின் எதிர்ப்பை தொடர்ந்து, அந்த கிணற்றை நிரந்தரமாக மூட ஓஎன்ஜிசி நிர்வாகம் ஒப்புக் கொண்டது.

பட மூலாதாரம், Getty Images
பிபிசி தமிழிடம் பேசிய மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் ஜெயராமன், மராமத்து பணிகள் என்ற பெயரில் புதிய எண்ணெய் கிணறுகளை அமைக்க ஒன்ஜிசி முயற்சி செய்வதாக தகவல் கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது என்கிறார். ''2020ம் ஆண்டு முதல் காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. அதனால் புதிய கிணறுகள் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது காவிரி டெல்டாவில் பல இடங்களில் மூடப்பட்டுள்ள கிணறுகளை திறப்பதற்கும், எரிவாயு எடுப்பதற்கும் மறைமுக முயற்சிகளை ஓஎன்ஜிசி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. மராமத்துப்பணி என்ற பெயரில் புதிய கிணறுகளை அமைக்க முயற்சி நடப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது பற்றியும், அதன் தேவை என்ன என்பது பற்றி விளக்கம் தேவை,''என்கிறார் அவர்.
மேலும், முத்தரப்பு கூட்டம் நடத்துவது பற்றி மாவட்ட ஆட்சியர் முன் ஆலோசனை செய்திருக்கவேண்டும் என்றும் அவர் கூறுகிறார். ''மாவட்ட நிர்வாக பொறுப்பில் பலர் புதிதாக வருவார்கள். அவர்களுக்கு இதுபோன்ற சர்ச்சையான திட்டங்களில் முன்னர் என்ன நடந்தது என்பது பற்றிய சரியான தகவல்களை தந்தார்களா என தெரியவில்லை. அதோடு, ஒன்ஜிசி சார்பில் என்ன விவரங்கள் சொல்லப்பட்டன என்றும் தெரியவில்லை. அதனால், என்ன காரணங்களின் அடிப்படையில் இந்த கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது என மாவட்ட நிர்வாகம் வெளிப்படையாக சொல்வதுதான் மேலும் குழப்பங்கள் ஏற்படுவதை தவிர்க்கும்,''என்கிறார் ஜெயராமன்.

பட மூலாதாரம், Getty Images
தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், முத்தரப்பு கூட்டம் நடைபெறுவதாக இருந்த மன்னார்குடி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி விவசாயிகளின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய பாண்டியன், ''பெரியகுடி கிணற்றில் இருந்து எரிவாயு எடுப்பதற்கு கலந்தாலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வந்தது. இந்த அறிவிப்பு அதிர்ச்சி ஏற்படுத்தியது. இந்த அறிவிப்பு தற்போது தமிழக அரசின் கொள்கைக்கு முரணாக உள்ளது. 2020ல் காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது.
2016ம் ஆண்டுக்கு முன் அனுமதி பெற்ற கிணறுகளை தவிர்த்து காவிரி டெல்டாவில் புதிய கிணறுகள் அமைக்கவோ, மூடப்பட்ட கிணறுகளை திறக்கவோ அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. புதிய எண்ணெய் குழாய்கள் அமைப்பது பற்றிய கூட்டத்தை எவ்வாறு நடத்தமுடியும்? ஹைட்ரோகார்பன் திட்டம் பற்றி தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிப்படையாக தனது கொள்கையை அறிவிக்க வேண்டும். புதிய எண்ணெய் குழாய்கள் அமைத்தால், விவசாயிகள், பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்,'' என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













