'அண்டரண்ட' பறவை : 5,000 கி.மீ பறந்து தங்கச்சி மடத்துக்கு வந்த பின்னணி

இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு வித்தியாசமான தோற்றத்துடன் காணப்பட்ட பறவை, கண்டம் விட்டு கண்டம் பறக்கும் அன்டார்டிகாவின் அல்பட்ரோசு எனப்படும் அரிய வகை 'அண்டரண்ட' பறவை என தெரிய வந்துள்ளது.

மதுரை இறகுகள் இயற்கை அறக்கட்டளை ஆய்வாளர் ரவீந்திரன் அண்ணாமலை பல்கலைக்கழக ஆய்வாளர் பைஜு நடத்திய ஆய்வின் போது இந்த பறவை தங்கச்சிமடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய பறவைகள் ஆய்வாளர் பைஜு, கடற்கரையில் பகுதிகளில் மாதந்தோறும் பறவைகள் கணக்கெடுக்க செல்வது வழக்கம். அதே போல் 2020ஆம் ஆண் தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் மீன்பிடி இறங்குதளம் அருகே வனத்துறையைச் சேர்ந்தவர் மீனவருடன் இணைந்து சற்று மயங்கிய நிலையில் இருந்த பறவையை கண்டார்.

அந்த பறவைக்கு தண்ணீர், முதலுதவி அளிக்கப்பட்டது உடனடியாக பறவை இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் கடற்கரை பகுதியில் இருந்து பறந்து சென்றது. கடற்கரை பகுதிகளில் இந்த பறவையை பார்க்காததால் அதை புகைப்படம் எடுத்து இணையதளத்தில் தேடிப் பார்த்த போது அது கடல் பறவையான அண்டரண்ட பறவை என தெரிய வந்தது.

இதையடுத்து உலக அளவில் சூழலியல் ஆய்வு கட்டுரைகளை வெளியிடும் 'ஜர்னல் ஆஃப் திரிட்டண்ட் டாக்ஸோ' என்ற ஆய்வு நிறுவனத்திற்கு அண்டரண்ட பறவை குறித்த தகவல்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்பி ஆய்வு செய்யக்கோரினோம்.

அதன் அடிப்படையில் உண்மைத் தன்மையை ஆராய்ந்த பின்னர் அது ஆசியாவிலேயே முதல் முறையாக தங்கச்சிமடத்தில் காணப்பட்டிருக்கிறது என்பது உண்மையே என்று தெரிய வந்தது. ஆய்வின் காரணமாக, தாமதமாக சில நாட்களுக்கு முன்பே இக்குழுவினர் அறிக்கையை அனுப்பியுள்ளனர்.

நாங்கள் பார்த்த அண்டரண்ட பறவை சிறியது, ஆனால் இந்த பறவை இறகை விரித்தால் அது 4.5 அடி வரை நீளும்.. அன்டார்டிகாவின் துருவப் பகுதிகளிலும் அதை ஒட்டிய பகுதிகளிலும் இந்த வகை பறவை அதிகமாக வசிக்கும். காற்றின் வேகம் மற்றும் காலநிலை மாற்றத்தால் 5,000 கிலோ மீட்டர் வரை பயணம் செய்து இந்த பறவை தங்கச்சி மடத்துக்கு வந்துள்ளது என்று ஆய்வாளர்கள் கூறினர்.கிழக்கு கடற்கரை பகுதிகளில் 10 ஆண்டுகளாக பறவைகள் பற்றி செய்த ஆய்வில் நாங்கள் கண்ட முதல் அண்டரண்ட பறவை இது. இது போன்ற அரிய பறவைகளின் தமிழக வருகை காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை உணர்த்துகிறது என்கிறார் பைஜு.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: