தமிழ்நாட்டில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் குறிவைக்கப்படுகிறார்களா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் வெளிமாநிலத் தொழிலாளர்களை வைத்து பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள், தங்களால் பணியமர்த்தப்படும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் ஒவ்வொருவரது விவரங்களையும் பதிவுசெய்ய வேண்டுமென உள்ளாட்சி அமைப்புகள் கோரிவருகின்றன. இது குறித்து பல்வேறு வதந்திகள் வலம் வருகின்றன. என்ன நடக்கிறது?
கடந்த மே 28ஆம் தேதியன்று ராமேஸ்வரம் நகராட்சியின் நகர் மன்றத் தலைவர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த அறிவிப்பின்படி, "ராமேஸ்வரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடியிருக்கும் வெளி மாநில நபர்கள் மற்றும் வெளி மாநில நபர்களை வைத்து வீடு கட்டு உரிமையாளர்கள், பொறியாளர்கள், கட்டட ஒப்பந்ததாரர்கள், ஓட்டல் உரிமையாளர்கள், விடுதி உரிமையாளர்கள், இறால் பண்ணை உரிமையாளர்கள், பானி பூரி, குல்ஃபி ஐஸ் வைத்து தொழில் செய்து வருபவர்கள், உள்ளூர் வாசிகள் மூலமாக வேலை பார்க்கும் நபர்கள் கீழ்க்கண்ட ஆவணங்களை ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகத்தில் ஜூன் 15ஆம் தேதிக்குள் சமர்ப்பித்து பதிவுசெய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் நிறுவனத்தின் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.
பெயர், முகவரி, ஆதார் அட்டை, புகைப்படம் போன்ற ஆவணங்களை அளிக்க வேண்டுமென அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. இதற்கு அடுத்த நாள் தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் சைலேந்திர பாபுவிடம் செய்தியாளர்கள் சிலர் இது தொடர்பாக கேள்வியெழுப்பியபோது, அவரும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் பதிவுசெய்வது அவசியம் என்று கூறினார்.
ராமேஸ்வரம் அருகே மீனவப் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் இரண்டு வட மாநில தொழிலாளர்கள் கைதுசெய்யப்பட்டது, சென்னையில் கடந்த மாதம் ஆடிட்டர் ஒருவர் குடும்பத்துடன் கொலை செய்யப்பட்ட விவகாரத்திலும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டது ஆகிய சம்பவங்களின் பின்னணியில் இந்த அறிவிப்புகள் பெரும் கவனத்தைப் பெற்றன.

பட மூலாதாரம், Sylendra babu facebook
ஆனால், "வட மாநிலங்களைச் சேர்ந்த குல்ஃபி விற்பவர்கள், பானி பூரி விற்பவர்கள் எங்கெங்கு இருக்கிறார்கள் என்ற தகவலைச் சேகரிக்க காவல்துறை உத்தரவிட்டிருப்பதாகவும் இதன் காரணமாக, பானி பூரி விற்பவர்கள், குல்ஃபி ஐஸ் விற்பவர்கள், வங்கதேசத்திலிருந்து வந்தவர்கள், ரோஹிங்கியா முஸ்லிம்கள் உள்ளிட்டோர் இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருவதாகவும்" சமூக வலைதளங்களிலும் வாட்சாப்பிலும் வதந்திகள் பரப்பப்பட்டன.
உண்மையில் என்ன நடக்கிறது?
ராமேஸ்வரம் நகர் மன்றத் தலைவர் நாசர் கான் இம்மாதிரி ஓர் அறிக்கையை கொடுத்தது ஏன் என அவரிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, "சமீபத்தில் சில சட்டம் - ஒழுங்கு சம்பவங்கள் நடந்திருக்கின்றன. ஆகவே இங்கு வேலைக்கு வருபவர்களின் அடையாளங்களை சேகரிக்கச் சொல்லியிருக்கிறோம்" என்று மட்டும் தெரிவித்தார்.
பொதுவாகவே ராமேஸ்வரம் பகுதியைப் பொறுத்தவரை சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் இடம் என்பதால், இங்குள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் ஆகியவை ஒவ்வொரு நாளும் தங்கள் இடத்தில் எத்தனை பேர் தங்குகிறார்கள், அவர்களில் எவ்வளவு பேர் வெளிமாநிலத்தவர்கள் என்ற தகவலை காவல்துறைக்கு அளித்து வருகிறார்கள்.
அதைப் போலவே, வெளிமாநிலத்தவரை வைத்து வேலை பார்த்துவரும் ஒப்பந்தக்காரர்களும் இதுபோன்ற தகவல்களை காவல்துறை, வருவாய்த் துறையிடம் அளிக்க வேண்டும். ஆனால், பல தருணங்களில் இது தொடர்ச்சியாக நடப்பதில்லை. இந்த நிலையில்தான் ராமேஸ்வரம் நகர மன்றம் இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
ஆனால், காவல்துறை வட்டாரங்கள், தொழிலாளர் நலத் துறை, வருவாய்த் துறை ஆகியவை, வெளி மாநிலத் தொழிலாளர்களைப் பதிவுசெய்வது என்பது புதிய நடைமுறையல்ல என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன.

வெளிமாநிலத் தொழிலாளர்களை வைத்து பணிபுரியும் ஒப்பந்ததாரர்கள், வேலை வாய்ப்பு அளிப்பவர்கள் ஆகியோர், ஐந்து தொழிலாளர்களுக்கு மேல் வைத்துப் பணிபுரிந்தால், அந்தத் தொழிலாளர்கள் பற்றிய விவரங்களை தொழிலாளர் நலத் துறையில் பதிவுசெய்ய வேண்டும். ஆனால், வருவாய்த் துறையும் இதுபோன்ற விவரங்களை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சேகரிக்கிறது.
எடுத்துக்காட்டாக, சென்னை முகலிவாக்கத்தில் 2014ஆம் ஆண்டில், கட்டப்பட்டுக்கொண்டிருந்த ஒரு கட்டடம் இடிந்து விழுந்தபோது, அதில் பலியான 61 பேரில் குறிப்படத்தக்க எண்ணிக்கையில் வெளிமாநிலத்தவரும் இருந்தனர். அவர்கள் யார் என்ற விவரங்கள் வருவாய்த் துறை வசமே இருந்தன.
இந்தியாவைப் பொருத்தவரை, 1979ஆம் ஆண்டிலேயே ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்குச் சென்று பணிபுரியும் தொழிலாளர்களுக்கான சட்டங்கள் உருவாக்கப்பட்டுவிட்டன. இந்தச் சட்டத்தை இந்தியாவின் மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. இந்தச் சட்டத்தின் இரண்டாவது பிரிவின் ஆறாவது விதி, பதிவுசெய்யாமல் வெளி மாநிலத்தவரை பணிக்கு அமர்த்துவதைத் தடைசெய்கிறது. எந்த அலுவலகத்தில் இந்த விவரங்களைப் பதிவுசெய்ய வேண்டுமென்பதை, அந்தந்த மாநில அரசுகள் முடிவுசெய்யலாம். ஐந்து பேருக்கு மேல் வெளி மாநில பணியாளர்களைப் பணியமர்த்தும் ஒவ்வொருவரும் இந்தப் பதிவை மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் 1983ல் இதற்கான விதிகள் Inter-State Migrant Workmen (Regulation of Employment & Conditions of Services) Act, 1979 & Tamil Nadu Rules, 1983 என்ற பெயரில் வகுக்கப்பட்டன. இந்த விதிப்படியே தற்போது வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பதிவுசெய்யப்பட்டு வருகின்றனர்.
ஆனால், வதந்திகளில் குறிப்பிடப்படுவதைப் போல வெளிமாநிலத் தொழிலாளரை அடையாளம் கண்டு ஒதுக்குவது, பாகுபாடு காட்டுவதற்காக இந்த பதிவு மேற்கொள்ளப்படுவதில்லை. பெரும்பாலும் விபத்து, குற்றச்செயல்கள் நடக்கும்போது இந்த பதிவுகள் அரசின் பல்வேறு துறைகளுக்கு உதவுகின்றன.
சென்னையைப் பொறுத்தவரை, வெளி மாநிலத்தவர் மட்டுமல்ல, வாடகை வீடுகளில் குடியிருப்போரின் விவரங்கள்கூட, அந்த வீட்டின் உரிமையாளர்கள் மூலம் காவல்துறையினரால் சேகரிக்கப்படுகின்றன. பாதுகாப்புக் காரணங்களுக்காகவே இவை சேகரிக்கப்படுவதாக காவல்துறை தெரிவிக்கிறது.
மூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்









