ஆன்லைன் ரம்மியால் கொலை, கொள்ளை: தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திரபாபு எச்சரித்தது ஏன்?

பட மூலாதாரம், Sylendra babu
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
ஆன்லைன் ரம்மி தொடர்பாக தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ''ஆன்லைன் ரம்மி விளையாட்டில் முன்பெல்லாம் ஜாய்னிங் போனஸ் என்ற பெயரில் 5,000 ரூபாய் கொடுத்தனர். தற்போது இந்தத் தொகையை நான்கு மடங்காக உயர்த்திவிட்டனர். இதனால், ஆன்லைன் ரம்மிக்கு பலரும் அடிமையாகி வருகின்றனர்'' என்கின்றனர், சைபர் தொழில்நுட்ப வல்லுநர்கள்.
தொடரும் கொலை, கொள்ளை
சென்னை போரூரை சேர்ந்த 39 வயதான பிரபு என்பவருக்கு நேர்ந்த சோகச் சம்பவம் இது. தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்த பிரபுவுக்கு கொரோனா காலத்தில் வேலை பறிபோய்விட்டது. இதனால் கடந்த ஓராண்டாக வீட்டிலேயே இருந்ததால் குடிப்பழக்கத்துக்கு அடிமையான பிரபு, ஆன்லை ரம்மி ஆட்டத்திலும் கவனம் செலுத்தி வந்துள்ளார். இதற்காக கிரடிட் கார்டு மூலமாக எடுத்த பணம், பெற்றோர் கொடுத்த பணம் ஆகியவற்றை ஆன்லைன் ரம்மியில் இழந்துவிட்டார். இதன்பின்னர், கடனை செலுத்துமாறு வங்கியில் இருந்து தொடர் நெருக்குதல்கள் வரவே, கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி இரவு தற்கொலை செய்து கொண்டார்.
கணவரின் இறப்பு தொடர்பாக போரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த பிரபுவின் மனைவி, ''ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கு அரசு சட்டம் கொண்டு வர வேண்டும்' என உருக்கமான வேண்டுகோள் ஒன்றையும் வைத்துள்ளார். 'ஆன்லைன் ரம்மியில் பிரபு இழந்த தொகை மட்டும் 30 லட்சத்தைத் தாண்டும்' என்கின்றனர் காவல் நிலைய வட்டாரத்தில்.
முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் சென்னை பெருங்குடியில் தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்த மணிகண்டன் என்பவர், ஆன்லைன் ரம்மி ஆட்டத்தில் கவனம் செலுத்தியதால் ஒரு கோடி ரூபாய் வரையில் இழந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக மனைவி, குழந்தைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர், தனது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் எனப் பலரிடம் கடன் பெற்று ஆன்லைன் ரம்மி விளையாடி வந்ததை போலீசார் கண்டறிந்தனர்.
இதே ஜனவரி மாதத்தில் சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியர் டீக்காராம் நடத்திய கொள்ளைச் சம்பவம் ஒன்று காவல்துறையை அதிரவைத்தது. கடந்த ஜனவரி மாதம் 2 ஆம் தேதி அதிகாலையில் பணிக்கு வந்த ஊழியர் டீக்காராம், கட்டிப் போட்ட நிலையில் அமர்ந்திருப்பதைப் பார்த்து பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக, ரயில்வே பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. திருவான்மியூர் ரயில் நிலையத்தில் சி.சி.டி.வி கேமரா இல்லாததால் ஐந்து தனிப்படைகளும் அமைக்கப்பட்டன.
'தன்னை சிலர் துப்பாக்கி முனையில் கட்டிப் போட்டு 1.25 லட்ச ரூபாயை கொள்ளையடித்துவிட்டுச் சென்றுவிட்டதாக' டீக்காராம் கூறியிருந்தார். ஆனால், விசாரணை முடிவில் தனது மனைவியோடு சேர்ந்து டீக்காராமே, கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதன் பின்னணியில் ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட கடனும் ஒரு காரணமாக இருந்ததாக டீக்காராம் தெரிவித்திருந்தார்.
டி.ஜி.பி வெளியிட்ட வீடியோ

பட மூலாதாரம், TN Police
ஆன்லைன் ரம்மியால் தற்கொலை, கொலை, கொள்ளை என குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதையே அண்மைக்கால சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இந்நிலையில், இதுதொடர்பாக தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி சைலேந்திரபாபு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், 'அண்மைக்காலமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டு எனும் மோசடி அதிகளவில் நடந்து வருகிறது. ஆன்லைன் ரம்மி விளையாட்டில் முதலில் ஜெயிப்பது போல ஆசையைத் தூண்டிவிட்டு பின்னர் அனைத்து பணத்தையும் இழக்கும் வகையில் அது உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்காக தங்களுக்குப் பிடித்த நடிகர்கள், ரம்மி விளையாட்டு விளம்பரங்களில் வருவதைப் பார்த்து ஏமாந்து யாரும் இந்த மோசடியில் சிக்கிக் கொள்ள வேண்டாம். இது ஆன்லைன் ரம்மி அல்ல, மோசடியான ரம்மி. ஆன்லைன் ரம்மி விளையாடும் நபர்களுக்கு அவமானம் மற்றும் குடும்பப் பிரச்னையால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படும். எனவே, ஆன்லை ரம்மி விளையாட்டில் யாரும் ஈடுபட வேண்டாம்' என எச்சரித்துள்ளார்.
'' சமூக வலைதளங்களில் பிரபலமாக உள்ள யூட்யூப் சேனல்களில் ஆன்லைன் ரம்மி தொடர்பான விளம்பங்கள் அதிகளவில் வருகின்றன. சினிமா பிரபலங்களும், தாங்கள் வெற்றி பெற்ற கதையை அதில் சொல்கிறார்கள். இதுவரையில் இருந்ததைவிடவும், ஆன்லைன் ரம்மிக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை வரும் நாள்களில் அதிகரிக்கலாம் என்பதையே டி.ஜி.பியின் வீடியோ சுட்டிக் காட்டுகிறது. இதனை முன்னெச்சரிக்கையாகவும் பார்க்கலாம்'' என்கிறார், சைபர் தொழில்நுட்ப வல்லுநரும் வழக்குரைஞருமான கார்த்திகேயன்.
அதிகரித்த ஜாய்னிங் போனஸ்
தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசியவர், '' ஆன்லைன் ரம்மி தொடர்பான தற்கொலைகள் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் இனிவரும் நாள்களில் அதிகரிக்கலாம். முன்பெல்லாம் வாய்மொழியாக பரவிக் கொண்டிருந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டு என்பது தற்போது விளம்பரங்கள் மூலமாக அதிகளவில் பரவுகிறது. தவிர, முன்பு ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு ஒரே ஒரு நிறுவனம்தான் இருந்தது. தற்போது 30 நிறுவனங்கள் முளைத்துவிட்டன. இதைவிடக் கொடுமை, புதிதாக இணைபவர்களுக்கு முன்பெல்லாம் ஜாய்னிங் போனஸ் என்ற பெயரில் 5,000 ரூபாய் கொடுத்தனர். தற்போது பத்தாயிரம், இருபதாயிரம் எனத் தொகையை உயர்த்திவிட்டனர். இதனால், 'யாரோ கொடுக்கும் பணம்தானே, விளையாடலாம்' என்ற ஆர்வத்தில் பலரும் இறங்குகின்றனர். அந்தப் பணம் இரட்டிப்பாகும், மீண்டும் சொந்தப் பணத்தைப் போடலாம் என நினைக்கும்போது அந்த நபர் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகிவிட்டதை உணரலாம்'' என்கிறார்.

பட மூலாதாரம், KARTHIKEYAN
''கொரோனா பரவல் காலத்தில் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையானோரின் எண்ணிக்கை அதிகரித்தது. தற்போது இயல்புநிலை திரும்பிவிட்டதே?'' என்றோம். '' கொரோனா தொற்று காலத்தில் வெளியில் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கியதால் பலரும் ரம்மி ஆட்டத்தில் ஆர்வம் காட்டினர். தற்போது ஆன்லைன் ரம்மி என்பது பலரின் ஆசையாக மாறிவிட்டது. 'நான் ரம்மியால் ஒரு கோடி ரூபாய் சம்பாதித்தேன்' என்றெல்லாம் விளம்பரங்கள் வருகின்றன. இதைப் பார்த்து பலரும், 'வாழ்நாள் முழுக்க சம்பாதிக்க வேண்டிய பணம் எளிதாக வருகிறதே?' என்ற எண்ணத்தில் ஆடுகின்றனர்.
டிரில்லியன் டாலர் வர்த்தம்
''இந்தியாவில்தான் இளைஞர்களின் எண்ணிக்கை மிக அதிகம். சைனாவில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகம். இங்கு ஆன்லைன் ரம்மி என்பது பில்லியன் டாலர் வர்த்தகமாக இருந்தது. தற்போது அது டிரில்லியன் டாலர் வர்த்தமாக மாறி வருகிறது. இந்தியாவை மையமாக வைத்துத்தான் பலரும் வியாபாரம் செய்ய வருகின்றனர். அதனால்தான் எச்சரிக்கையாக இருக்குமாறு டி.ஜி.பி கூறுகிறார். கடந்த சில மாதங்களாக ஆன்லைன் ரம்மியால் பெரியளவில் இறப்புகள் ஏதும் நேரவில்லை. இனிவரும் நாள்களில் அதிகரிக்கலாம்'' என்கிறார்.
மேலும், ''ஆன்லைன் ரம்மி ஆட்டத்துக்கான விதிமுறைகளை படிக்கும்போதே, அல்காரிதம் மூலமாக வடிவமைக்கப்பட்டுள்ளதை தெளிவாகக் கூறியுள்ளனர். அதனை படித்தாலே போதும். இதனால் ஏற்படும் இழப்புகளை திரும்பப் பெறுவதற்கு வழக்குகளைத் தொடுப்பதும் சிரமம்தான். அவர்களின் விதிமுறைகளின்படி வெளிநாட்டில் உள்ள நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டும். ஆன்லைன் ரம்மி நிறுவனங்களின் பிரதிநிதிகளைத் தொடர்பு கொள்வதும் அவ்வளவு எளிதாக இருப்பதில்லை. அவர்களிடம் இருந்து முறையான தகவல்களும் வருவதில்லை'' என்கிறார் கார்த்திகேயன்.

பட மூலாதாரம், Getty Images
'' போதைப் பழக்கங்களுக்கு அடிமையாவதால் என்னென்ன விளைவுகள் ஏற்படுமோ, அதே பாதிப்புகள்தான் ஆன்லைன் செயலிகளுக்கு அடிமையாகிறவர்களுக்கும் நேர்கிறது. குறிப்பாக, போதைப் பழக்கத்துக்கு இணையாக இந்த ஆன்லைன் விளையாட்டுகள் பார்க்கப்படுகின்றன. தனிமையான சூழல்களுக்கு முக்கியவத்துவம் கொடுப்பவர்கள் பெரும்பாலும் கேமிங் செயலிகளுக்கு அடிமையானவர்களாக மாறுகின்றனர்.
தொடக்கத்தில் கிடைக்கும் தற்காலிக வெற்றியால் கிடைக்கும் போதையில் பலரும் உந்தித் தள்ளப்படுகின்றனர். அதன்பிறகு தொடர் தோல்விகள் ஏற்படும்போது தவறான முடிவுகளை எடுக்கின்றனர். இவர்களுக்குத் தொடர்ந்து மனநல ஆலோசனைகள் மூலம் எளிதில் குணப்படுத்த முடியும்'' என்கிறார், மனநல மருத்துவர் மோகன வெங்கடாசலபதி.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் (2020 நவம்பர் 21) ஆன்லைன் ரம்மிக்குத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், 'தடைக்கான நுட்பமான காரணங்கள் போதிய அளவில் சொல்லப்படவில்லை' எனக் கூறி உயர் நீதிமன்றம் தடையை நீக்கியது.
அதேநேரம், 'ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய முடியாது, ஆனால் முறைப்படுத்த முடியும்' எனவும் நீதிமன்றம் தெரிவித்தது. ஆனால், அதற்கான பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. 'தொடரும் குற்றச் சம்பவங்களால் ஆன்லைன் ரம்மியை அரசு தடை செய்ய வேண்டும்' என்பதே பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கருத்தாக உள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













