போரில் மனைவி, கடத்தப்பட்ட கணவர் - சவாலை வென்று இந்தியா வந்த கேரள தம்பதி

    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசி இந்தி

கடந்த நான்கு மாதங்களில் இரண்டு வெவ்வேறு சர்வதேச மோதல்களை சந்தித்து உயிர் பிழைத்த இந்த இந்திய தம்பதி, தென் மாநிலமான கேரளாவில் உள்ள தங்கள் வீட்டில் இப்போது ஒன்று சேர்ந்துள்ளனர்.

ஜனவரி மாதம் செங்கடலில் ஒரு சிவிலியன் சரக்குக் கப்பலை ஹூதி கிளர்ச்சியாளர்கள் கடத்தியபோது சிறைபிடிக்கப்பட்ட ஏழு இந்திய மாலுமிகளில் 26 வயதான அகில் ரகுவும் ஒருவர்.

அப்போது யுக்ரேனில் மருத்துவம் படித்துக்கொண்டிருந்த, 23 வயதான அவரது மனைவி ஜிதினா ஜெயகுமார், தனது கணவர் பாதுகாப்பாக நாடு திரும்புவதை உறுதிசெய்யும் பொருட்டு அரசு அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்ப ஆரம்பித்தார். தொலைபேசி அழைப்புகளையும் செய்தார்.

ஆனால், பிப்ரவரி மாதம் ரஷ்யா யுக்ரேனை தாக்கியபோது, போரால் பாதிக்கப்பட்ட அந்த நாட்டைவிட்டு பாதுகாப்பாக வெளியேறும் மற்றொரு சோதனையை அவர் எதிர்கொண்டார். அதேநேரம் தனது கணவருக்காக செய்துவந்த முயற்சிகளையும் அவர் கைவிடவில்லை.

ஏமனில் 112 நாட்கள் காவலில் இருந்தபிறகு ரகுவும் அவரது சகாக்களும் கடந்த வாரம் விடுவிக்கப்பட்டனர்.

இப்போது, ரகுவும், அவரது மனைவியும் கேரளாவின் கொச்சி மாவட்டத்திற்குத் திரும்பியுள்ளனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஜிதினாவின் தந்தை அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

"எனக்கு எப்படி விளக்குவது என்றே தெரியவில்லை. இந்த நான்கு மாதங்களும், வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் இருப்பது போல் உணர்ந்தேன்" என்று ஜிதினா பிபிசி ஹிந்தியிடம் கூறினார்.

கப்பலில் பிடிபட்டார்

ரகுவும், ஜிதினாவும் கடந்த ஆகஸ்ட் மாதம் கேரளாவில் திருமணம் செய்து கொண்டனர். ஒரு மாதத்திற்குப் பிறகு ரகு, ஐக்கிய அரபு அமீரகத்தின் சரக்குக் கப்பலான ர்வாபியில் டெக் கேடட்டாக சேர்ந்தார்.

இதற்கிடையில் ஜிதினா, கீயவ் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு திரும்பினார். அங்கு அவர் ஆறாம் ஆண்டு மாணவியாக இருந்தார்.

2022 ஜனவரி 2 ஆம் தேதி காலை, ர்வாபி கப்பலின் பின்புறத்தில் இருந்து துப்பாக்கிச் சூடு சத்தத்தை பணியாளர்கள் கேட்டனர்.

"சிறிய படகுகளில் சுமார் 40 பேர் கப்பலை சுற்றி வளைத்தனர். அவர்கள் அனைவரும் கப்பலுக்குள் வந்தனர். அப்போதுதான் கப்பல் கடத்தப்பட்டதை நாங்கள் உணர்ந்தோம்" என்று கப்பலில் இருந்த ரகுவின் சக பணியாளரும் சிறைபிடிக்கப்பட்டவர்களில் ஒருவருமான ஸ்ரீஜித் சஜீவன் பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார். அந்த அனுபவம் பற்றி பேச முடியாத அளவுக்கு ரகு அதிர்ச்சியில் உள்ளார்.

இந்தக்கப்பல் செளதி அரேபியாவுக்கு ராணுவ தளவாடங்களை கொண்டு செல்வதாக கருதிய ஹூதி கிளர்ச்சியாளர்கள் அதைக் கைப்பற்றினர். ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக செளதி ஆதரவு பெற்ற அதிகாரபூர்வ அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதலால் ஏமன் சிதைந்து வருகிறது.

ஏமன் தலைநகர் சனாவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கும் கப்பலுக்கும் இடையே 15 நாட்களுக்கு ஒருமுறை 11 பேர் கொண்ட சிறைபிடிக்கப்பட்ட குழுவை, முன்னும் பின்னுமாக அவர்கள் அழைத்துச்சென்றனர் என்று சஜீவன் கூறினார்.

"நாங்கள் ஒரு குளியலறையுடன் கூடிய பெரிய Suite அறையில் தங்க வைக்கப்பட்டோம். வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஆனால் மெனு கார்டில் இருந்து நாங்கள் சாப்பிட விரும்பும் எதையும் ஆர்டர் செய்யலாம் என்று அவர்கள் எங்களிடம் சொன்னார்கள்," என்று அவர் மேலும் கூறினார்.

சிறைபிடிக்கப்பட்ட பெரும்பகுதி நேரத்தையும் தாங்கள் உள்ளேயே கழித்ததாகவும், கப்பலில் இருக்கும்போது மட்டுமே சூரிய ஒளியை பார்க்க முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ஹூதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சனா நகரில் குண்டுவெடிப்பால் பிணைக்கைதிகள் அச்சமடைந்தனர்.

"எங்கள் ஹோட்டலில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதை நாங்கள் டிவியில் பார்த்தோம்," என்றார் சஜீவன்.

சிறை பிடிக்கப்பட்ட முதல் இரண்டு மாதங்களில், 25 நாட்களுக்கு ஒருமுறை தங்கள் குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேச அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை பேசும் வசதி அளிக்கப்பட்டது.

சிறைபிடித்தவர்கள் ஆரம்பத்தில் ஆக்ரோஷமாக இருந்ததாகவும், ஆனால், பிணைக்கைதிகள் "அப்பாவிகள்" என்பதை உணர்ந்தவுடன் அவர்கள் சாந்தமாகி விட்டதாகவும் சஜீவன் கூறினார். கிளர்ச்சியாளர்களில் ஒருவர் ஆங்கிலம் பேசத்தெரிந்தவர். அவர் குழுக்களிடையே மொழிபெயர்ப்பார்.

"நாங்கள் எப்போது விடுவிக்கப்படுவோம் என்று அவர்களிடம் கேட்கும்போதெல்லாம், அவர்கள் இன்ஷாஅல்லாஹ் என்று மட்டுமே கூறுவார்கள்," என்று சஜீவன் தெரிவித்தார்.

பதுங்கு குழியில் தஞ்சம்

பல நாட்களாக தனது கணவர் தொலைபேசி அழைப்புக்கு பதிலளிக்காததால் ஏதோ பிரச்னை இருப்பதாக ஜிதினா உணர்ந்தார்.

அதே கப்பல் நிறுவனத்தில் பணிபுரிந்த தனது மூத்த சகோதரனிடமிருந்து கப்பல் கடத்தப்பட்டதை அவர் அறிந்துகொண்டார்.

ஜிதினா உடனடியாக செயலில் இறங்கினார். உதவி பெற இந்தியாவில் உள்ள அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டார். அந்த காலகட்டத்தில் அவரது நண்பர்கள் ஜிதினாவுக்கு உதவிகரமாக இருந்தனர்.

போர் தொடங்கியபோது,ஜிதினாவும்,அவரது நண்பர்களும் நிலத்தடி பதுங்கு குழியில் தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆரம்பத்தில் கீயவ்வை விட்டு வெளியேற இந்தியர்கள் போராடிய நிலையில், தனது நம்பிக்கை குறைவதாக ஜிதினா உணர்ந்தார்.

"அங்கிருந்து எங்களை யாரும் வெளியேற்ற முடியாது என்று நான் நினைத்தேன்," என்று அவர் கூறினார்.

ஏமனில் அவரது கணவர் தொலைக்காட்சியில் போர் செய்திகளைப் பார்த்து மிகவும் கவலைப்பட்டார்.

"நாங்கள் எங்கள் குடும்பத்தினரிடம் பேசியபோது, இது மிகவும் கடினமான சூழ்நிலை என்பதை உணர்ந்தோம். என்ன நடக்கிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை," என்று சஜீவன் கூறினார்.

இறுதியாக ஜிதினா மார்ச் இரண்டாவது வாரத்தில் யுக்ரேனை விட்டு வெளியேறினார். முதலில் ஹங்கேரிக்கு ரயிலில் பயணம் செய்து பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் இந்தியா வந்தார்.

நாடு திரும்பியதும், தனது கணவரை விடுவிக்க அதிகாரிகளை தொடர்பு கொள்ளும் தனது முயற்சிகளை அவர் தொடர்ந்தார்.

சனாவில் உள்ள இந்தியத் தூதரகம் தற்காலிகமாக ஜிபூட்டியில் இயங்கி வருகிறது. ஜிபூட்டியின் இந்தியத் தூதரான ராமச்சந்திரன் சந்திரமௌலி, தனக்கு பெரிய ஆதரவாக இருந்ததாக ஜிதினா கூறுகிறார்.

"அவர் எல்லா குடும்பங்களுடனும் தொடர்பில் இருந்தார். நாங்கள் அவரை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். அவர்கள் நிச்சயம் விடுவிக்கப்படுவார்கள் ஆனால், அதற்கு சிறிது நேரம் ஆகும் என்று அவர் எங்களிடம் சொன்னார்," என்று ஜிதினா குறிப்பிட்டார்.

இறுதியில் வீடுவந்து சேர்ந்தனர்

ஏப்ரல் மாதம், முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் தொடங்கியபோது செளதி தலைமையிலான கூட்டணியும், ஹூதி கிளர்ச்சியாளர்களும், இரண்டு மாத போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டனர்.

பின்னர் இந்திய அரசு ஓமன் மற்றும் பிற நாடுகளின் உதவியுடன் மாலுமிகளை விடுவிப்பதில் வெற்றி கண்டது.

"என் கணவர் அவரது தொலைபேசியில் இருந்து என்னை அழைத்தபோது தான், அந்த செய்தியை நான் நம்ப ஆரம்பித்தேன்," என்கிறார் ஜிதினா.

கடைசியாக ரகு, கடந்த வாரம் கேரளா வந்தடைந்தார். மனைவிக்கு ஒரு நெக்லஸ்ஸையும், சிறைபிடித்தவர்கள் அவருக்கு அளித்த ஜம்பியா எனப்படும் ஏமனின் பாரம்பரிய கத்தியையும் அவர் கொண்டுவந்தார்.

தாங்கள் தாயகம் திரும்பியதை , "மறுபிறப்பு" போல் உணர்ந்ததாக சஜீவன் கூறுகிறார்.

இந்த அனுபவத்தால் ரகு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக, அவரது மனைவி ஜிதினா கூறுகிறார்.

"அவர் மிகவும் இளைத்துவிட்டார். அவரது கண்களைச் சுற்றி கருவளையங்கள் உள்ளன," என்று ஜிதினா குறிப்பிட்டார்.

அவரால் எப்படி சோதனையை கடந்து செல்ல முடிந்தது?

"எனக்கு வருத்தமாக இருக்கும் போதெல்லாம், நான் பிரார்த்தனை செய்வேன். அழாமல் என்னை கட்டுப்படுத்திக்கொள்வேன். ஏனென்றால், அதைப்பார்த்து எங்கள் பெற்றோர் இன்னும் அதிகமாக வருத்தப்பட்டிருப்பார்கள். மாறாக, நான் குளியலறையில் ரகசியமாக அழுவேன்," என்கிறார் ஜிதினா ஜெயகுமார்.

"நான் எப்படி சமாளித்தேன் என்று எனக்கே தெரியவில்லை. ஆனால், அவர் திரும்பி வருவார் என்ற உள் நம்பிக்கை எனக்கு இருந்தது," என்று அவர் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :