திருவண்ணாமலையில் போலீஸ் விசாரணைக்கு சென்றவர் சந்தேக மரணம் - தொடரும் சம்பவங்கள்

தங்கமணியின் உறவினர்கள்

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக போலீஸ் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் நபர்களில் சிலர் சந்தேக மரணம் அடைவது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

திருவண்ணாமலையில் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நபர் உயிரிழந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தட்டரணை கிராமத்தைச் சேர்ந்த தங்கமணியை, அப்பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபடுவதாக கூறி ஏப்ரல் 26ஆம் தேதி காலை 9 மணி அளவில் திருவண்ணாமலை கலால் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணைக்கு பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி ஏப்ரல் 27ஆம் தேதி காலையில் திருவண்ணாமலை கிளைச் சிறையில் தங்கமணி அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் தங்கமணிக்கு வலிப்பு ஏற்பட்டதாக அவரது உறவினருக்கு காவல்துறையினர் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இரவு 9 மணி அளவில் தங்கமணி உயிரிழந்ததாக உறவினர்களுக்கு காவல்துறையினரிடம் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தங்கமணியை காவல்துறையினர் கடுமையாக தாக்கியதாகவும், அதன் காரணமாகவே அவர் உயிரிழந்ததாகவும் கூறி அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் இந்த மரணம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க அவரது உறவினர்கள் ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்றுள்ளனர். அப்போது அலுவலக கதவுகளை காவல்துறையினர் மூடியதாகவும் தங்களை தடுத்து நிறுத்தி உள்ளே செல்ல அனுமதி மறுத்ததாகவும் தங்கமணியின் உறவினர்கள் கூறுகின்றனர்.

போலீஸ் விசாரணைக்கு பிறகு தங்கமணி மரணம் அடைந்ததால் குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதி பாக்கியராஜ் அரசு மருத்துவமனைக்கு வந்து நேரில் விசாரணை நடத்தினார். பிறகு அவரது முன்னிலையில் தங்கமணியின் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவுகள் வெளிவரும்வரை பிரேதத்தை வாங்க மாட்டோம் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், "பணத்தை வாங்கிக்கொண்டு வழக்கை வாபஸ் பெறுங்கள்" என்று போலீசார் வற்புறுத்துகிறார்கள் என்கிறார் தங்கமணியின் மகன் தினகரன்.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "பிரேத பரிசோதனை அறிக்கை வரட்டும். அதில் ஏதேனும் தவறு நிகழ்ந்து இருந்தால், சம்பந்தப்பட்ட நபர்கள் உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என்று மாவட்ட ஆட்சியரும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் கூறியுள்ளனர். இருவருமே எங்கள் ஊருக்கு வந்து நேரடியாக கள விசாரணை நடத்துகிறோம் என தெரிவித்துள்ளனர்," என்றார்.

ஸ்டாலின்

பட மூலாதாரம், Getty Images

இதற்கிடையே, தங்கமணி மரணம் தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்தார். அப்போது அவர், "மாஜிஸ்திரேட் முன்னிலையில் பிரேத பரிசோதனை முறையாக நடைபெற்றுள்ளது அதன் அறிக்கை கிடைக்கப்பெற்றவுடன் உரிய விசாரணை நிச்சயம் நடத்தப்படும்," என தெரிவித்துள்ளார்.

தொடரும் விசாரணை கைதிகளின் சந்தேக மரணங்கள்

போலீஸ் விசாரணை காவல்

பட மூலாதாரம், Getty Images

2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமிழ்நாட்டின் தூத்குக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகனான பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோர் போலீஸ் விசாரணையின்போது தாக்கப்பட்டு பின்னர் நீதிமன்ற காவலில் இருந்தபோது மரணம் அடைந்தனர். மத்திய புலனாய்வுத்துறை விசாரித்து வரும் அந்த வழக்கின் விசாரணை மதுரை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 45 வயது மதிக்கத்தக்க மாற்றுத் திறனாளி ஒருவரின் மரணம் மற்றும் 21 வயது சட்டக் கல்லூரி மாணவர் மீது காவல்துறையினரால் இரவோடு இரவாகத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

அந்த சம்பவங்கள் 2020ஆம் ஆண்டில் சாத்தான்குளத்தில் நடந்த தந்தை-மகன் இரட்டையர் மரணத்தின் பயங்கரமான நினைவுகளை மீண்டும் நினைவுபடுத்தின.

இத்தகைய சூழலில் தமிழகத்தின் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் காவல்துறையினர் 45 வயதான பிரபாகரன் என்ற மாற்றுத்திறனாளியையும் அவரது மனைவி ஹம்சலாவையும் திருட்டு வழக்கு ஒன்றில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில், மறுநாள் பிரபாகரன் இறந்தார். போலீஸ் காவலில் இருந்தபோது பிரபாகரன் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட காயங்களால் அவர் உயிரிழந்ததாக ஹம்சலாவும் அவரது உறவினர்களும் குற்றம்சாட்டுகின்றனர். இந்த வழக்கு மாநில சிபிசிஐடியின் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் இரண்டு காவலர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 12க்கும் அதிகமானோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 18ஆம் தேதி சென்னை கீழ்ப்பாக்கத்தில் கஞ்சா மற்றும் பட்டாக்கத்தியுடன் வந்ததாக சுரேஷ், விக்னேஷ் ஆகியோரை உதவி ஆய்வாளர் தலைமையிலான தலைமைச் செயலக காலனி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்திய நிலையில், விக்னேஷிற்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு சந்தேகமான முறையில் உயிரிழந்தார்.

இந்த விவகாரத்தில் உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், காவலர் பவுன்ராஜ், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தீபக் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த தொடர் சம்பவங்களுக்கு மத்தியில் போலீஸ் விசாரணைக்கு அழைத்தச் செல்லப்பட்ட மேலும் ஒருவர் திருவண்ணாமலையில் இறந்துள்ள சம்பவம், போலீஸ் விசாரணை நடவடிக்கைகள் செல்லும் போக்கு குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :