தந்தையின் இறப்பும் குற்ற உணர்வும் - மனம் திறக்கும் பர்க்கா தத்

பட மூலாதாரம், BARKHA DUTT
கடந்த ஆண்டு கோடைக்காலத்தில் இந்தியா எதிர்கொள்ளத் தயார் நிலையில் இல்லாதபோது தாக்கிய கொரோனா தொற்று இரண்டாவது அலையின் பேரழிவால், பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். மேலும், இந்தியாவின் சுகாதார கட்டமைப்பும் சிதைந்துபோனது. இந்த பெருந்தொற்று குறித்து காலவாரியாக பதிவு செய்துவந்த ஊடகவியலாளர் பர்கா தத், 2021, ஏப்ரலில் இந்த தொற்றுக்கு தன் தந்தையை இழந்தார். தன்னுடைய இழப்பு குறித்தும் தன்னைப் போன்று தந்தையை இழந்த மகள்களின் துயரங்கள் குறித்தும் பர்கா தத் இங்கே எழுதியுள்ளார்.
நான் இசையை கேட்க முடியாமல் போய் ஓராண்டாகிவிட்டது; இந்தியாவில் கட்டுப்படுத்த முடியாத கொரோனா இரண்டாம் அலையின் உச்சத்தில் என் தந்தையை இழந்த ஓராண்டு இது.
சில தினங்களுக்கு முன்பு பழக்கப்பட்ட இசையின் மங்கலான விகாரங்கள், ஒரு நடுக்கத்தை வரவழைத்தன.
குவாண்டனமேரா குவாஜிரா குவாண்டனமேரா...
காதல், தேசபற்று, போராட்ட குணம் மற்றும் ஒரு மாற்றத்தை எதிர்நோக்குதல் என, பலதரப்பட்ட உனர்வுகளை வரவழைக்கும் வகையில் பாடப்பட்ட இந்த கியூபாவின் நாட்டுப்புற பாடலை கேட்டபோது என் கைகள் நடுங்கின.
உள்ளே நான் நடுங்கிக்கொண்டிருந்தேன்.
நினைவுகள் ஒரு மிருகமாக இருக்கலாம்.
எனக்கும் என்னுடைய தங்கைக்கும் இது அப்பாவின் பாடல், எங்கள் வாழ்க்கையின் ஒரு கட்டம் இந்த பாடல். எங்களின் குழந்தை பருவத்தில், கீறல்கள் கொண்ட கேசட்டுகளில் இருந்தும் பதின்பருவங்களில் 8-டிராக் டேப்புகளில் இருந்தும், நாங்கள் கல்லூரிக்கு சென்றபோது சிடிக்களிலிருந்தும் எங்கள் வீட்டில் இந்தப் பாடல் ஒலிக்கும்.
கடைசியாக அப்பாவின் கணினியில் அந்த பாடலை கேட்டோம். இங்கு, அவர் பேரக்குழந்தைகள், நாய்கள், மெக்கனோ விளையாட்டு பொருட்கள், வித்தியாசமான ஒயர்கள், கெட்டில், காஃபி மேக்கர்கள், தன் நண்பர்களுக்காக ரிப்பேர் செய்துகொண்டிருக்கும் மெஷின்கள் உள்ளிட்டவை சூழ இருப்பார். சில சமயங்களில் அந்த மெஷின்களை சரி செய்வதில் மட்டுமே அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்.
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு எஸ்.பி.தத் (பர்கா தத் தந்தை) 'வேகமானவர்'. நம்முடைய சுகாதார கட்டமைப்பை கடுமையாக தாக்கி அதனை அடிபணிய வைத்த கொரோனா தொற்று எடுத்துக்கொண்ட பல்லாயிரக்கணக்கிலான இந்தியர்களின் உயிர்களில் ஒன்று அவருடையது. இந்த தேசத்தின் துயர்மிகு நிலத்தில், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மருத்துவமனைகள் தங்கள் வாயில்களை மூடிய நிலையில், சாலையில் உயிரிழந்த நோயாளிகள், தடுப்பூசிக்கான தாமதம் மற்றும் கேலிக்குரிய வகையில் திட்டமிடப்பட்ட தேர்தல்கள் என, ஏப்ரல் மாதம் கொடூரமான மாதமாக இருந்தது.
சுகாதார கட்டமைப்புகள் சிதைந்தபோது, தந்தைகளை காப்பாற்றுவதில் நம்பிக்கையில்லாத மகள்களையே, நாங்கள் ஒவ்வொரு இடத்தில் திரும்பும்போதும் சந்திக்க நேர்ந்தது.

பட மூலாதாரம், BARKHA DUTT
தந்தைகளை காப்பாற்ற முடியாமல் தவித்த மகள்கள்
மும்பையை சேர்ந்த சம்ரிதி சக்சேனா, நான் அவருடைய தந்தைக்கு ஆக்சிஜன் சிலிண்டர் பெறுவதில் உதவ முடியும் என்ற நம்பிக்கையில் என்னிடம் வந்தார். அவருடைய தந்தை அரிதான நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டவர்.
பாட்னாவை சேர்ந்த மனிஷா, தன் தந்தை அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் ஆக்சிஜன் தீர்ந்துபோனதால், 53 வயதான அவருடைய தந்தை இறந்துபோகலாம் என என்னிடம் தெரிவித்தார்.
பெங்களூருவை சேர்ந்த 21 வயதான பாரினி என்னிடம், "நான் எவ்வளவு உறுதியாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?" என என்னிடம் கேட்டார். அவர் தன்னுடைய பெற்றோரை ஒரு விபத்தில் இழந்தவர், தற்போது அவரை வளர்த்த தாயும் கொரோனா தொற்றால் இறந்துவிட்டார்.
நானும் ஊடகவியலாளர் ஸ்டூட்டி கோஷும் எங்கள் தந்தைகளை ஏதோ ஒரு வகையில் கைவிட்டுவிட்டதாக ஏற்பட்ட வலிமிகுந்த குற்ற உணர்வுடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம்; ஆனால், எங்கள் மோசமான சூழ்நிலையிலும், எங்கள் தந்தைகள் சாலையில் தவித்து நிற்காமல், மருத்துவமனையில் இருந்ததை நினைத்து,பல்லாயிரக்கணக்கான இந்தியர்களை விட நாங்கள் சிறந்த நிலையில் இருக்கிறோம் என்று நினைத்தபோதும் எங்களுக்கு குற்ற உணர்வு ஏற்பட்டது.
ஸ்டூட்டியின் தந்தையும் என்னுடைய தந்தையை போலவே, இந்த தொற்றிலிருந்து மீளவில்லை. "இந்த தொற்றில் உயிரிழந்த பெரும்பாலானோர் அரசாங்கத்தால் கணக்கில் கொள்ளப்படாமல் அவர்களுடைய இறப்பு அவமதிக்கப்பட்டதை" நினைத்து அவளுடைய துயரம் ஆத்திரமாக பெருக்கெடுத்தது.
மகள்களாக, குடிமக்களாக நாங்கள் சிதைந்துபோனோம்.
என் இருத்தலின் மையப்புள்ளி
என் இருத்தலின் மையமாக என் தந்தைதான் இருந்தார் என்பதை உணர்வதற்கு, கொரோனா தொற்றுக்கு அவரை இழக்க வேண்டியிருந்தது.

பட மூலாதாரம், EPA
ஏப்ரல் 2021 இல் என்னுடைய தந்தைக்கு கொரோனா தொற்று என்பதை முதலில் அறிந்தபோது, நான் மும்பையில் உள்ள சுடுகாடு ஒன்றில் இருந்தேன், சக்கர நாற்காலியில் உள்ள முதியவர் ஒருவர், தன் மனைவிக்கு பிரியாவிடை அளித்துக்கொண்டிருக்கையில், நான் என் அழுகையை அடக்கிக்கொண்டேன்.
கொரோனா தொற்று ஏற்கெனவே என் முழு வாழ்க்கையாகியிருந்தது. கொரோனாவின் முதல் அலையில் இந்தியா முழுவதும் 30,000 கி.மீட்டருக்கும் மேல் (18,641 மைல்கள்) நான் சாலை மார்க்கமாக பயணம் செய்தேன். அதன்பின், இரண்டாம் அலையில் இன்னும் ஆயிரக்கணக்கிலான கிலோமீட்டர் தூரத்திற்கு விமானம் வாயிலாகவும், சாலை மார்க்கமாகவும் பயணித்தேன்.
இறப்பையும் விரக்தியையும் பதிவு செய்யும் வரலாற்று நபராக நான் இருந்தேன்; ஆனால் அந்த செய்தி என் வீடு வரை வந்துவிட்டது.
தனியார் ஆம்புலன்ஸில் என் தந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல நான் எடுத்த முடிவால் எப்போதும் மனவேதனை அடைவேன்.
பழைய, வலுவில்லாத ஸ்ட்ரெச்சர், துணை மருத்துவப் பணியாளர்கள் இல்லாத அந்த ஆம்புலன்சில், ஒரேயொரு ஓட்டுநர் மட்டுமே இருந்தார். எந்த உதவியும் இல்லாத ஒரு குழந்தை போன்று என் தந்தை படுத்திருந்த மேசைக்கு அடியில் இருந்த ஒரே ஒரு ஆக்சிஜன் சிலிண்டரும் வேலை செய்யவில்லை.
மருத்துவமனையை நாங்கள் அடைந்தபோது, காவல்துறை சோதனை மையங்களை கடந்து மெதுவாக ஆம்புலன்ஸ் சென்றபோது, அவருடைய நிலைமை மோசமடைந்தது, அந்த சிலிண்டரால் அதிவேக ஓட்டத்தில் ஆக்சிஜனை வழங்க முடியவில்லை.
உறைந்த காய்கறி போல இருந்தார்
அவருடைய உடலை மருத்துவமனையிலிருந்து சுடுகாட்டுக்கு கொண்டு வந்தபோது, ஏற்பட்ட முரண் என்னை திகைக்க வைத்தது. அவர் இறந்த பின்னர் எங்களால் அவருக்கு நேர்த்தியான, வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸுக்கு ஏற்பாடு செய்ய முடிந்தது. சவப்பெட்டியில் உள்ள ஸ்ட்ரெச்சர் பளபளப்பான பழுப்பு நிறத்தில் இருந்தது, அது புதிய தோலில் செய்யப்பட்டிருந்தது. இருக்கையின் உயரம் சரி செய்யக்கூடியதாக இருந்தது. பழுப்பு நிறத்தினாலான மூடப்பட்ட பையினுள், உறைந்த காய்கறியை போல, என் அப்பா இருந்தார்.
இப்போது நாங்கள் இந்த ஆற்றொணா துயரத்தை மறக்க நினைக்கிறோம்.
ஆனால், ஒரு திறந்த காயத்தை மூடுவது அதனை ஆற்றாது.
காயப்பட்ட தேசத்தின் கூட்டு நினைவுகள் நீண்ட நிழல்களை கொண்டுள்ளன. அவரது படுக்கைக்கு மேல் அவர் சுயமாக தயாரித்த சிறிய ரயில்களுக்காக மூன்று தண்டவாளங்கள் உள்ள அவருடைய அறைக்கு என்னால் இன்னும் செல்ல முடியவில்லை.

பட மூலாதாரம், Reuters
என் தந்தை மனதளவில் ஒரு விஞ்ஞானியாக இருந்தார். பள்ளியில் முதல் முறையாக ராக்கெட் பொம்மையை தயாரித்த புத்திசாலி மாணவர் அவர். இளம் வயதில் கேட்பரி சாக்லேட்டுகளை வழங்கும் வெண்டிங் இயந்திரத்தை வடிவமைத்தார். பின்னர், அவர் 'ஸ்பீட்ஷைன்' என்று பெயரிடப்பட்ட ஷூ பாலிஷ் இயந்திரங்களை உருவாக்கினார்.
"குணப்படுத்த முடியாததைத் தாங்கிக் கொள்ள வேண்டும்" என்று விஞ்ஞானம் நமக்குக் கற்றுக் கொடுத்தது என அவர் சொல்வார்.
அவருக்கு கொரோனா தொற்று உறுதியானபோது, தனக்கு பிடித்தமான இந்த வரிகளை அவர் மீண்டும் கூறினார்.
ஆனால், அவர் தவறாக கூறிவிட்டார்.
இந்தியா தனது தடுப்பூசிகளை விரைவில் வெளியிட்டிருந்தால், நிலைமை வேறுவிதமாக இருந்திருக்கும். தடுப்பூசிகளுக்கான அரசாங்கத்தின் முதல் ஆர்டர் 10 ஜனவரி 2021 அன்று ஒரு கோடிக்கும் அதிகமான டோஸ்களுக்கு செய்யப்பட்டது, ஆனால், அந்த எண்ணிக்கை டெல்லியின் வயது வந்தோருக்கு முதல் டோஸ் கொடுக்கக்கூட போதுமானதாக இல்லை.
பல்லாயிரக்கணக்கான இந்தியர்களை போல என் தந்தையும் அந்த வலியை தாங்கிக்கொண்டிருக்க வேண்டியதில்லை.
என் தந்தை இறந்திருக்க வேண்டிய அவசியமில்லை.
(பர்கா தத் - விருது பெற்ற தொலைக்காட்சி ஊடகவியலாளர் மற்றும் சமீபத்தில் வெளியான Humans of Covid: To Hell and Back உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்)
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












