கொரோனா தொற்று: 'லேசான பாதிப்பும் ஆண்களுக்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும்' - ஆய்வில் தகவல்

விந்தனு

பட மூலாதாரம், Getty Images

இன்றைய நாளிதழ்கள், இணையதள பக்கங்களில் உள்ள முக்கிய செய்திகள் சிலவற்றை தொகுத்து இங்கே வழங்குகிறோம்.

லேசான கொரோனா பாதிப்பு கூட ஆண்களின் குழந்தை பேறு திறனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று மும்பை ஐ.ஐ.டி. ஆய்வில் தெரியவந்துள்ளதாக தினத் தந்தி நாளிதழ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்த அந்த செய்தியில், ''மும்பை ஐ.ஐ.டி., மும்பை ஜஸ்லோக் மருத்துவமனை ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து ஒரு ஆய்வில் ஈடுபட்டனர். கொரோனா வைரஸ், ஆண்களின் குழந்தை பேறு திறனில் பாதிப்பை ஏற்படுத்துமா? என்பதை அறிய இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இதற்காக குழந்தை பேறு பிரச்னை இல்லாத 20 முதல் 45 வயது வரையிலான 27 ஆண்களை ஆய்வுக்கு பயன்படுத்தினர். இவர்களில் 10 பேர் நன்கு ஆரோக்கியமானவர்கள். மீதி 17 பேர், லேசான, மிதமான கொரோனாவால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் குணமடைந்தவர்கள்.

27 ஆண்களின் விந்தணுவில், இனப்பெருக்க நிகழ்வுடன் தொடர்புடைய புரோட்டீன்களை ஆய்வு செய்து ஒப்பிட்டு பார்த்தனர். அப்போது, கொரோனா தாக்காத ஆண்களின் புரோட்டீன்களை விட கொரோனா தாக்கி குணமடைந்த ஆண்களின் புரோட்டீன்கள் பாதிக்கும் குறைவாக இருந்தன.

மேலும், கொரோனா தாக்கி குணமடைந்த ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கையும் கணிசமாக குறைந்திருந்தது. அதன் நகரும் தன்மை, சரியான வடிவிலான விந்தணு எண்ணிக்கை ஆகியவையும் குறைவாக காணப்பட்டன.

குழந்தைபேறு திறன் பாதிப்பு

எனவே, லேசான, மிதமான கொரோனா பாதிப்பு கூட ஆண்களின் குழந்தை பேறு திறன் மீது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிப்பு ஏற்படுத்தி, மலட்டுத்தன்மைக்கு காரணமாக இருப்பது கண்டறியப்பட்டது. கொரோனாவில் இருந்து குணமடைந்த பிறகும் அந்த பாதிப்பு நீடிப்பது தெரியவந்தது.

கொரோனாவை உண்டாக்கும் சார்ஸ் வைரஸ், பொதுவாக சுவாச உறுப்புகளைத்தான் தாக்கும். இருப்பினும், அந்த வைரசும், அதற்கு உடல் காட்டும் எதிர்வினையும் இதர திசுக்களையும் சேதப்படுத்துவது கண்டறியப்பட்டது.

இந்த ஆய்வு முடிவுகள், ஒரு அறிவியல் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளன. இருப்பினும், இதை உறுதிப்படுத்த பெரிய அளவிலான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும், இதர காய்ச்சலில் இருந்து குணமடைந்த ஆண்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.'' என்று தினத் தந்தி செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அமித் ஷாவை சந்திக்கும் திமுக எம்எல்ஏக்கள் - ஏன் ?

இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமித் ஷா

புதுச்சேரி வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் மாநில வளர்ச்சிக்கான கோரிக்கை மனுவை திமுக எம்எல்ஏக்கள் சந்தித்து தர முடிவு எடுத்துள்ளதாக எதிர்க்கட்சித்தலைவர் சிவா தெரிவித்துள்ளார் என்று தி இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவை எதிர்க் கட்சித் தலைவர் சிவா கூறியதாக உள்ள அந்த செய்தியில், "கடந்த 2021ம் ஆண்டு புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் புதுச்சேரிக்கு வந்து பிரசாரம் செய்தனர்.

மாநில அந்தஸ்து கிடைக்குமா?

புதுச்சேரி மாநில மக்களின் நீண்ட கால கோரிக்கையான மாநில அந்தஸ்து, கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தனர். ஆனால் தேர்தல் முடிந்தும், புதுச்சேரியில் ஆட்சியில் அமர்ந்து ஓராண்டாக உள்ள நிலையிலும் இதுவரை எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.

அதேசமயம் மத்திய அமைச்சர்கள், பாஜக தேசிய தலைவர்கள் வாரந்தோறும் புதுச்சேரிக்கு வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த ஒரு நன்மையும் கிடைக்கவில்லை என்பதே உண்மை.

இந்நிலையில் வரும் 24ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரவுள்ளதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார். புதுச்சேரி மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில்தான் இருந்து வருகின்றது.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்

அதனால் இவர் அறிவிப்புகள் உடனடியாக அமலுக்கு வர வாய்ப்புகளும் உள்ளது. எனவே சட்டப்பேரவைத் தேர்தலின்போதும், அதன்பிறகும் பாஜக அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றச் செய்யும் வகையில் அனுமதி பெற்று, திமுக புதுச்சேரி எம்எல்ஏக்கள் சார்பில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து மாநில வளர்ச்சிக்கான கோரிக்கைகள் குறித்து மனு அளிக்க உள்ளோம்" என்று சிவா கூறியதாக இந்து தமிழ் திசை செய்தியில் உள்ளது.

பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ள வேண்டும் - மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

பட மூலாதாரம், Getty Images

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்ந்து வருவதால், அவற்றின் பயன்பாட்டை மக்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்த அந்த செய்தியில், ''யுக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்ததின் காரணமாக சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, விமான எரி பொருள் உள்ளிட்டவற்றின் விலை அதிகரித்துள்ளது. இந்தியாவில் 2 வாரங்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.

பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் கலால் வரி, மதிப்பு கூட்டு வரிகளை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரி வருகின்றனர்.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இந்தியன் ஆயில் நிறுவனம் உள்ளிட்ட எரி பொருள் விநியோக நிறுவனங்களின் சார்பில் பெட் ரோலிய பொருகளை முறையாகப் பயன்படுத்துவது குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது.

மாற்று வழிக்கு யோசனை

இதில், பங்கேற்ற ஆளுநர் ஜக்தீப் தன்கர் பேசுகையில், 'பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து வருவதால், அவற்றின் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்வதே சிறந்த மாற்று வழியாகும். பெட்ரோலியப் பொருட்களை இந்தியா அதிகளவில் இறக்குமதி செய்து வருகிறது. அதன் காரணமாக பொருளாதாரம் பெருமளவு பாதிக்கப்படுகிறது.

பெட்ரோலியப் பொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பது நாட்டின் பொருளாதாரத்திற்கு மட்டுமல்ல, சுற்றுச் சூழலுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

பெட்ரோலிய பொருட்கள் புதுப்பிக்க இயலாத ஆற்றல் மூலங்களாக உள்ளன. அவை உற்பத்தியாக கோடிக்கணக்கான ஆண்டுகள் ஆகும். எனவே அவற்றின் பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும்.' என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய இந்திய ஆயில் நிறுவன நிர்வாக இயக்குநர் பிர்திஷ் பரத் பேசுகையில், 'பெட்ரோலியப் பொருட்கள் எவ்வளவு காலம் வரை கிடைக்கும் என தெரியாது. எனவே, மாற்று எரிபொருள்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். சுற்றுச் சூழலை குறைவாக மாசுபடுத்தும் வகையில் எரிபொருள்களின் தரத்தை ஐ.ஓ.சி மேம்படுத்தி வருகிறது.'என்றார்.'' இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

காணொளிக் குறிப்பு, ''இனியும் இங்கு நடப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது", - போராட்ட களத்தில் இலங்கை முஸ்லிம் பெண்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: