ஏ. ஆர். ரஹ்மான்: தமிழ், தென் இந்தியர்கள் குறித்து பேசியது என்ன?

ரஹ்மான்

பட மூலாதாரம், Getty Images

நேற்று சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற தென்னிந்திய தொழில் கூட்டமைப்பு மாநாட்டில் பேசிய ஏ. ஆர். ரஹ்மான், இது நாம் இணைவதற்கான நேரம் என்று தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன் டிவிட்டரில், 'தமிழுக்கும் அமுதென்றுபேர்!' என்ற பாரதிதாசனின் கவிதையில் வரும் 'தமிழ் எங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர்!' என்ற வரிகளை குறிப்பிட்டு இசையமைப்பாளர் ரஹ்மான் பதிவிட்டிருந்தார்.

ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை இணைப்பு மொழியாக மாற்ற வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதற்கான எதிர்வினை இது என சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வந்தனர். ஆனால் அதுகுறித்து ரஹ்மான் ஏதும் கருத்து தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற தென்னிந்திய தொழில் கூட்டமைப்பு மாநாட்டில் பேசிய அவர், இது நாம் ஒன்றிணைய வேண்டிய காலம் என்று தெரிவித்தார்.

அவர் மேலும் பேசியதாவது, "ஏழு வருடங்களுக்கு முன்பு நான் மலேசியா சென்றிருந்தேன். அங்கே ஒரு சீனர் என்னிடம் வந்து எனக்கு இந்தியா என்றால் மிகவும் பிடிக்கும். குறிப்பாக வட இந்தியர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்கள் படம் ரசிக்கும்படியாக இருக்கும் என்றார். இவர் தென் இந்திய படங்களை பார்த்திருப்பாரா என்று நான் அப்போது யோசித்தேன்.

எதனால் அப்படி சொன்னார் என்று நான் யோசித்து கொண்டே இருந்தேன். அது என்னை மிகவும் பாதித்தது. கருப்பாக இருப்பவர்களுக்கு திரைப்படங்களில் கண்ணியமான கதாபாத்திரங்களை வழங்க வேண்டும்.

தென்னிந்தியர்கள் செய்ய வேண்டிய முக்கிய விஷயம் இது. ஏனென்றால் நமக்கு நமது நிறம் மிகவும் பிடிக்கும்.

என்னை பொறுத்தவரை தென் இந்தியா வட இந்தியா என்பது இல்லை. எல்லைகள் உடைந்துவிட்டன. எல்லை கடந்து மக்கள் திரைப்படங்களை பார்க்கின்றனர். கலையின் வழியாக நம்மை நாம் மேம்படுத்தி கொள்ள வேண்டும். அது எளிதானதும்கூட.

அமித்ஷா

பட மூலாதாரம், Getty Images

இந்த உலகிற்கு நமது கலாசாரம் என்ன, நமது சிந்தனை என்ன என்பதை சர்வதேச பாணியில் வெளிப்படுத்த வேண்டும்.

எந்த நாட்டில் பார்த்தாலும் நமது திரைப்படங்களை தலைநிமிர்ந்து பார்க்க வேண்டும். கலையின் வழியாக மக்களை பிரிப்பது எளிது. ஆனால் இது ஒன்றிணைவதற்கான நேரம். வேறுபாடுகளை கொண்டாட வேண்டிய நேரமிது. நமது ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டிய நேரமிது." என்று பேசினார்.

நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்த ரஹ்மானிடம் இந்தியை இணைப்பு மொழியாக மாற்ற வேண்டும் என அமித் ஷா பேசியது குறித்து கேட்டதற்கு தமிழ்தான் இணைப்பு மொழி என்று தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: