"'பெஸ்ட் புதுச்சேரி', பிரெஞ்சு தமிழ் கிராமம் உருவாக்குவோம்" - அமித் ஷா கொடுத்த வாக்குறுதி

புதுச்சேரியை "சிறந்த புதுச்சேரி" ஆக மாற்றுவோம் என்று பிரதமர் நரேந்திர மோதி சட்டப்பேரவை தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை அடுத்த தேர்தலுக்குள்ளாக நிறைவேற்றுவோம் என்று இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைக்கவும், அரவிந்தரின் 150வது ஆண்டு விழாவை சிறக்கவும் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, புதுச்சேரிக்கு வருகை தந்தார்.
இதைத்தொடர்ந்து மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, "புதுச்சேரி மக்களின் தீர்ப்பின் மூலம் முதல்வர் ரங்கசாமி தலைமையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு சிறப்பாக நடைபெறுகிறது. புதுச்சேரி மாநிலம் சிறந்த மாநிலமாக வளர்ச்சி பெற அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும். பிரதமர் மோதி வாக்குறுதியளித்தைப் போல், அனைத்து துறைகளிலும் "சிறந்த புதுச்சேரியை" (பெஸ்ட் புதுச்சேரி) உருவாக்கிய பின்னரே, அடுத்த முறை புதுச்சேரி வருவோம். "புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஊழல் தான் நடைபெற்றது. தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. காங்கிரஸ் ஆட்சியின்போது, புதுச்சேரியில் ஏழைகளே இல்லை என்ற பொய்ப் பிரசாரம் செய்தனர்," என்று அமித் ஷா சாடினார்.
புதுச்சேரியில் பாரம்பரிய சுற்றுலாவை ஈர்க்கும் வகையில் பிராங்கோ-தமிழ் கிராமம் அமைக்கப்படும், மேலும் ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் கண்காட்சி வசதிகளை ஏற்படுத்துவதற்காக மூன்று பழைய கிடங்குகளில் பணிகள் இன்று தொடங்கியுள்ளன. பேருந்து நிலையத்தை புனரமைக்கும் பணி ரூ. 31 கோடி மற்றும் புதிய மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து முனையம் ரூ. 16 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது, மேலும் ரூ.50 கோடிக்கு மேல் செலவில் பெரிய கால்வாயை அழகுபடுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது என்று அமித் ஷா கூறினார்.

ரூ.50 கோடி செலவில் கட்டப்படும் தாவரவியல் பூங்கா. 16 கோடி மதிப்பீட்டில், புதுச்சேரியின் மையமாக மாறும் என்றும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இயற்பியல், வேதியியல், தகவல் தொழில்நுட்பம், உணவு பதப்படுத்துதல் ஆகியவற்றுக்கு தனி கட்டிடங்கள் ரூ.50 கோடியில் கட்டப்படும் என்றும் அமித் ஷா கூறினார்.
புதுச்சேரியை சிறந்த யூனியன் பிரதேசமாக மாற்றுவதற்கு இந்திய அரசு ஏற்கெனவே பாடுபட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
முதல்வர் விடுத்த கோரிக்கை
முன்னதாக பேசிய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, "மத்திய அரசிடமிருந்து நிதியை பெற்று புதுச்சேரியை சிறந்த மாநிலமாக கொண்டு வருவோம். புதுச்சேரிக்கு 'மாநில அந்தஸ்து' வழங்க வேண்டும் என்ற எங்களின் கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. அதையும் பெற நடவடிக்கை எடுத்து வருகிறோம். நிச்சயமாக மத்திய அரசு நமக்கு மாநில அந்தஸ்து வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது," என்று கூறினார்.பிரதமர் அறிவித்தபடி பெஸ்ட் புதுச்சேரியை இந்த அரசு நிறைவேற்றும். மத்திய அரசு நமக்கு கூடுதலாக நிதியை வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளோம். பிரதமரும், உள்துறை அமைச்சரும் நமக்கு கூடுதல் நிதி வழங்க ஆவண செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது," என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

"புதுவைக்கு ஒன்றும் செய்யவில்லை"
கைது செய்யப்பட்ட புதுச்சேரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநிலத் தலைவர் ஸ்ரீதர் பேசுகையில், "புதுச்சேரியை ஆளும் பாஜக கூட்டணி ஆட்சி தொடர்ந்து வஞ்சிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு இதுவரை எந்தவொரு திட்டத்தையும் புதுச்சேரி மக்களுக்குக் கொடுக்கவில்லை. இதனை எதிர்க்கும் விதமாக காவல் துறை அனுமதி பெற்று போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தோம்.
ஆனால் இன்று அதிகாலை சுமார் 6 மணிக்கு காவல் துறையினர் என்னை வீட்டிலிருந்து கைது செய்தனர். மேலும் காலை நடைப்பயிற்சி சென்ற இந்திய தேசிய இளைஞர் முன்னணி இயக்கத்தின் தலைவர் கலைபிரியன், புதுச்சேரி சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் ஜெபின் ஆகியோரை மைதானத்தில் கைது செய்து புதுச்சேரி தி.நகர் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். இந்த செயலை கடுமையாக கண்டிக்கிறோம். மேலும் எங்களது போராட்டம் தொடரும்," என ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் வருகைக்கு எதிர்ப்பு
புதுச்சேரிக்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தரும் நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளை சேர்ந்தவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இதனிடையே அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், தந்தை பெரியார் திராவிட கழகம், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்டவை புதுச்சேரியின் பல்வேறு முக்கிய சந்திப்புகளில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தின.
இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று காலையில் தந்தை பெரியார் திராவிட கழக நிர்வாகி காளிதாஸ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநிலத் தலைவர் ஸ்ரீதர், இந்தியத் தேசிய இளைஞர் முன்னணி இயக்கத்தின் தலைவர் கலைபிரியன், புதுச்சேரி சட்ட பஞ்சாயத்து இயக்கத் தலைவர் ஜெபின் உள்ளிட்டோர் காவல் துறையால் கைது செய்யப்பட்டனர்.

"பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நலன் கருதி இவர்களைக் கைது செய்துள்ளதாக காவல் துறையினர் தரப்பில் தெரிவித்துள்ளனர். மேலும் போராட்டத்திற்காக புதுச்சேரி சாரம் பகுதியில் உள்ள கருப்பு பலூன் விற்பனையாளரையும் கைது செய்து, அவரிடமிருந்து ஒரு பொட்டலம் பலூன் மற்றும் இரண்டு சிலிண்டர்களை பறிமுதல் செய்துள்ளோம்," என டி.நகர் காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.
அமித்ஷா உருவ பொம்மையை அவமதிக்க முயன்றோர் கைது
புதுச்சேரி தந்தை பெரியார் சிலை அருகே இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உருவ பொம்மையை செருப்பால் அடித்து எரிக்க முயன்ற சமூக அமைப்பினரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் இவர்களுடன் தமிழக வாழ்வுரிமை கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், மாணவர் கூட்டமைப்பு உள்ளிட்ட சமூக அமைப்புகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













