நரேந்திர மோதி காஷ்மீருக்கு போகாமல் ஜம்முவுக்கு மட்டும் செல்வது ஏன்?

நரேந்திர மோதி

பட மூலாதாரம், ANI

    • எழுதியவர், ரியாஸ் மஸ்ரூர்
    • பதவி, பிபிசி உருது, ஸ்ரீநகர்

இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் வருகைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, ஜம்முவில் உள்ள சுஞ்ச்வான் ராணுவ கன்டோன்மென்ட் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இத்தகைய பதற்றமான சூழலில் ஞாயிற்றுக்கிழமை சம்பாவின் பாலி கிராமத்தில் 'தேசிய பஞ்சாயத்து தினத்தை' முன்னிட்டு பிரதமர் மோதி நாட்டு மக்களிடம் உரையாற்றவிருக்கிறார்.

பாலியில் இருந்து 17 கிமீ தூரத்தில் சுஞ்ச்வான் முகாம் அமைந்துள்ளது. அங்கு நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் ஜம்மு காஷ்மீரின் இறையாண்மை மிக்க சுயாதீன அந்தஸ்து 2019இல் முடிவடைந்த பிறகு, பிரதமர் தனது முதல் பயணத்தை 'ஜம்மு' என மட்டும் சுருக்கிக் கொண்டிருப்பதால், காஷ்மீரில் உள்ள அரசியல் மற்றும் சமூக வட்டாரங்கள் அதிர்ச்சியடைந்துள்ளன. காஷ்மீர் தொடர்பான அரசியல் சலுகைகள் குறித்து ஞாயிற்றுக்கிழமை ஆற்றும் உரையில் பிரதமர் மோதி எந்த முக்கிய அறிவிப்பையும் வெளியிடமாட்டார் என்பது இதன் மூலம் தெளிவாவதாக அவர்கள் கருதுகின்றனர்.

ஜம்முவில் ஏன் தாக்குதல்?

ஜம்முவின் கூடுதல் காவல்துறை இயக்குநர் முகேஷ் சிங்கின் கூற்றுப்படி, ஜம்முவின் எல்லை மாவட்டமான சம்பாவின் சுஞ்ச்வான் பகுதியில் உள்ள ராணுவ கன்டோன்மென்ட் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை செஹ்ரிக்கு சற்று முன்பு ஆயுதமேந்திய தீவிரவாதிகள், படையினரின் பேருந்து மீது தாக்குதல் நடத்தினர்.

காலை பணிக்காக மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) வீரர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில், தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதோடு, கையெறி குண்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தினர்.

நரேந்திர மோதி

பட மூலாதாரம், MOHIT KANDHARI/BBC

இந்த தாக்குதலில், சிஐஎஸ்எஃப் உதவி துணை ஆய்வாளர் எஸ்பி பாட்டீல் கொல்லப்பட்டார். துணை ராணுவ படையைச் சேர்ந்த ஒன்பது வீரர்கள் காயமடைந்தனர்.

களத்தில் இருந்த போலீஸ் அதிகாரியின் கூற்றுப்படி, நீண்ட நடவடிக்கைக்குப் பிறகு தாக்குதல் நடத்திய இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஜம்முவின் தலைமை போலீஸ் அதிகாரி முகேஷ் சிங், ஜம்முவில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பிரதமர் வருகைக்கு முன்னதாக பயங்கரவாதிகள் பெரிய அளவிலான தாக்குதல்களுக்கு திட்டமிட்டுள்ளதாக எங்களுக்கு ஏற்கெனவே தகவல் கிடைத்தது. எனவே உஷாரான படைகள் உடனடியாக பதிலடி கொடுத்தன," என்றார்.

ஜம்மு-காஷ்மீர் காவல்துறைத் தலைவர் தில்பாக் சிங், இந்தச் சம்பவத்தை 'தற்கொலை தாக்குதல் முயற்சி' என்று அழைக்கிறார். இதை உறுதி செய்த காவல்துறை துணைத்தலைவர் முகேஷ் சிங், "கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களின் அடிப்படையில், பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த வந்தது தெளிவாகத் தெரிகிறது" என்றார்.

பேருந்து மீதான தாக்குதலுக்குப் பிறகு, கன்டோன்மென்ட் அருகே உள்ள நகரவாசி முகமது அன்வர் என்பவரின் வீட்டில் பயங்கரவாதிகள் தஞ்சம் அடைந்ததாக அவர் கூறினார். அங்கு அந்த நபர் முற்றுகையிடப்பட்டு கொல்லப்பட்டார் என்கிறது காவல்துறை.

பாஜகவின் ஜம்மு-காஷ்மீர் கிளைத் தலைவர் ரவீந்தர் ரெய்னா, இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம் என்றும், "பாகிஸ்தானின் நோக்கத்தை நமது வீரர்கள் முறியடித்துவிட்டனர்" என்றும் தெரிவித்தார்.

நரேந்திர மோதி

பட மூலாதாரம், MOHIT KANDHARI/BBC

ஜம்முவில் தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, வியாழக்கிழமை மாலை வடக்கு காஷ்மீரின் பாரமுல்லாவில் நடந்த மோதலில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் அந்த சம்பவத்தில் ஐந்து ராணுவ வீரர்களும் காயமடைந்தனர்.

கடந்த 22 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த லஷ்கர்-இ-தொய்பாவின் கமாண்டர் யூசுப் கான்ட்ரோவும் மோதலில் கொல்லப்பட்டதாகவும், இது காவல்துறையின் தேடப்படும் பட்டியலில் இருந்ததாகவும் காவல்துறை கூறுகிறது.

ஜம்முவைச் சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளரும் ஆய்வாளருமான தருண் உபாத்யாய் கூறுகையில், "2019க்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் எல்லாம் நன்றாக இருக்கிறது, இப்போது செழிப்பாக இருக்கிறது என்று மோதி அரசு அழைத்துக் கொள்வதற்கு எதிராக சுஞ்சவானில் தாக்குதல் நடத்தி தங்களுடைய எதிர்வினையை பயங்கரவாதிகள் பதிவு செய்துள்ளனர்," என்கிறார்.

தீவிரவாதிகள் உயிருடன் இருக்கும் வரை தங்களுடைய இருப்பை வெளிப்படுத்திக்கொண்டே இருப்பார்கள்.இதே செய்தியை பிரதமர் வருகைக்கு முன் அவர்கள் கூறியுள்ளனர். கடந்த காலங்களில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது அவர் காஷ்மீர் வந்தபோதும் இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டது. 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீருக்குப் பிறகு இங்கு எல்லாம் முடிந்து, இப்போது பாலாறு ஓடுகிறது போன்ற கூற்றுகளை பொய்யாக்கும் வகையில், இங்கு இன்னும் நிலைமை சரியாகவில்லை என்பதை உணர்த்தவே தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்கிறார் தருண் உபாத்யாய்.

நரேந்திர மோதி

பட மூலாதாரம், ANI

ஜம்முவில் பிரதமர் என்ன செய்வார்?

ஜம்மு காஷ்மீரில் தேசிய பஞ்சாயத்து தினத்தை கொண்டாட பிரதமர் மோதி விரும்புகிறார். இந்த நாள் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஜம்முவின் எல்லை மாவட்டமான சம்பாவில் உள்ள பாலி கிராமத்தில் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோதி ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் உள்ள பஞ்சாயத்து அதிகாரிகளுடன் உரையாற்றுகிறார்.

இந்த நிகழ்ச்சியில் சூரிய சக்தியில் இயங்கும் மின் திட்டத்தையும் அவர் தொடங்கி வைக்கிறார். இந்நிலையில், சுமார் ரூ.2.5 கோடி செலவில் கட்டப்பட்ட சூரிய ஒளி மின் நிலையத்தின் பணி நிறைவடைந்துள்ளதால், குறைந்தது மூன்றரை நூறு வீடுகளுக்கு மின்சாரம் கிடைக்கும் என்று மத்திய அரசு கூறுகிறது.

சமீபத்திய வெள்ளிக்கிழமை தாக்குதல் நடந்த சுஞ்ச்வான் முகாம் அருகே பாலி கிராமம் இருப்பதால், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஹெலிகாப்டர்கள் மற்றும் சிறப்பு ஆளில்லா விமானங்கள் மைதானத்தைச் சுற்றி பல கிலோமீட்டர் தொலைவில் சந்தேகத்திற்கிடமான செயல்களை கண்காணிக்கும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஜம்மு மாநிலத்தில் இந்துக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதையும், 2014 முதல் இந்த பகுதியில் பாஜகவின் புகழ் அதிகரித்து வருவதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

நரேந்திர மோதி

பட மூலாதாரம், BJP

மோதி ஏன் காஷ்மீருக்கு செல்லவில்லை?

பிரதமர் மோதியின் வருகை திட்டமிடப்பட்ட உடனேயே, அவர் காஷ்மீருக்கும் சென்று இங்கு சில முக்கிய அரசியல் சலுகைகளை அறிவிப்பார் என்று ஊகங்கள் பரவின. ஆனால் கடந்த வாரம் பிரதமர் அலுவலகம் மோதியின் பயணம் ஜம்முவில் மட்டுமே இருக்கும் என்று தெளிவுபடுத்தியது.

ஜம்முவில் வசிக்கும் பாஜக தலைவர்கள் பலர், ஜம்மு-காஷ்மீரை முழு நாட்டிற்கும் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கான முன்மாதிரி ஆக மாற்ற மோதி விரும்புகிறார் என்று கூறுகிறார்கள்.

ஜம்முவிலேயே, பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு பாஜக தலைவர், "காஷ்மீர் அரசியல்வாதிகள் 70 ஆண்டுகளாக காஷ்மீர் பிரச்சினை என்ற பெயரில் புது டெல்லியை மிரட்டி வந்தனர். மோதி காஷ்மீரில் உள்ள நிலைமையை தனது சொந்த நிபந்தனைகளின்படி சரிசெய்ய விரும்புகிறார்" என்று கூறினார்.

வளர்ச்சி மற்றும் பிராந்திய வளத்தில் சாமானியர்களை ஈடுபடுத்துவதன் மூலம் பாகிஸ்தானுக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் பாடம் கற்பிக்க அவர் விரும்புகிறார்.இருப்பினும், காஷ்மீர் அரசியல் வட்டாரங்கள் கடந்த பல ஆண்டுகளாக பிரதமர் மோதியிடம், காஷ்மீர் விவகாரத்தில் சமரச அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவரது முன்னோடியும், நாட்டின் முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் போன்றே வேண்டுகோள் விடுத்து வருகின்றன.

கடந்த காலத்தில் பாஜகவுடன் கூட்டணி ஆட்சி அமைத்த மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான நயீம் அக்தர், "இந்திய - பாகிஸ்தான் பேச்சுவார்த்தையை ஸ்ரீநகரில் இருந்து வாஜ்பாய் தொடங்கி வைத்தார்," என்று குறிப்பிடுகிறார்.

பிரதமரின் வருகைக்கு முன்னதாக பாஜகவினர் விழிப்புணர்வு பரப்பினர்

பட மூலாதாரம், BJP

படக்குறிப்பு, பிரதமரின் வருகைக்கு முன்னதாக பாஜகவினர் விழிப்புணர்வு பரப்பினர்

ஆனால், ஜம்முவை போலவே, காஷ்மீரிலும் மோதியின் காஷ்மீர் கொள்கை, முந்தைய அரசாங்கங்களை ஒப்பிடும்போது நெகிழ்வுத்தன்மையற்றது என்ற கருத்து வளர்ந்து வருகிறது.

காஷ்மீர் விவகாரத்தில் மோதி அரசு வழக்கத்திற்கு மாறான கொள்கையை கடைப்பிடித்து வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பத்திரிக்கையாளரும் ஆய்வாளருமான ஹாரூண் ரெஷி, "2015 நவம்பரில் நரேந்திர மோதி ஸ்ரீநகரில் உரையாற்றியபோது, ​​காஷ்மீரில் அமைதியான தேர்தல் பாகிஸ்தானின் சைகை என்று அப்போதைய முதல்வர் முஃப்தி முகமது சயீத் தன்னிடம் கூறியிருந்தார். அதைப் புரிந்துகொண்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அண்டை நாட்டுடன் நடத்தப்படும். ஆனால், முஃப்திக்குப் பிறகு நரேந்திர மோதி தனது உரையில், காஷ்மீர் பற்றி உலகில் யாருடைய ஆலோசனையோ பகுப்பாய்வுகளோ தனக்குத் தேவையில்லை என்று கூறினார். காஷ்மீர் பிரச்சினையில் காஷ்மீர் தலைவர்களுக்கு எந்தப் பங்கையும் வழங்க மோதி அரசாங்கம் விரும்பவில்லை," என்றார்.

2019 மற்றும் 2021ஆம் ஆண்டில், ஜம்முவின் ரஜோரி மற்றும் நவ்ஷேரா செக்டார்களில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் தீபாவளி கொண்டாடினார்.

இது குறித்து ஹாரூண் ரெஷி கூறுகையில், 'காஷ்மீர் விவகாரத்தில் எந்தவொரு பிரதமரின் பார்வையும் பாகிஸ்தானுடனான இந்தியாவின் உறவு எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தது," என்றார்.

இந்தியா-பாகிஸ்தான் ராணுவம் இடையே 15 மாதங்களாக நீடிக்கும் சண்டை நிறுத்தத்தை மேற்கோள் காட்டி, சில பார்வையாளர்கள், "பாகிஸ்தானில் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு பிறகு, பாகிஸ்தானுடனான உறவை ஏதேனும் ஒரு மட்டத்தில் மீட்டெடுக்க இந்தியா விரும்புகிறது" என்று கூறுகிறார்கள்.

ஆனால், அதற்கான முயற்சி முன்னெடுக்கப்படலாம். ஆனால், அத்தகைய முன்னெடுப்புகள் காஷ்மீர் நிலைமையை மாற்றுமா என்று இப்போதே கூறுவது பொருத்தமாக இருக்காது என்கிறார்கள் நிபுணர்கள்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :