காஷ்மீர் பண்டிட்கள் வரலாறு: தங்கள் சொந்த மண்ணை விட்டு வெளியேற நேர்ந்த அந்த இரவின் கதை

காஷ்மீர் ஃபைல்ஸ்: காஷ்மீரி பண்டிட்கள் தங்கள் சொந்த மண்ணை விட்டு வெளியேற வேண்டிவந்த அந்த இரவின் கதை

பட மூலாதாரம், Getty Images

விவேக் அக்னிஹோத்ரி எழுதி இயக்கிய 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் பற்றி இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

காஷ்மீர் பண்டிட்டுகள், காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து தப்பிச் செல்லும் கதையும் அவர்களின் வலியும் இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் கதை குறித்து பல சர்ச்சைகள் எழுந்துள்ளது.

அரசியல்வாதிகள் முதல் பொதுமக்கள் வரை, அதன் கதையின் உண்மையைப் பற்றி மாறுபட்ட கருத்துக்களை கொண்டுள்ளது தெரிய வருகிறது.

இப்படம் இதுவரை 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளது.

பல மாநில அரசுகள் இந்தப் படத்திற்கு வரிவிலக்கு அறிவித்துள்ளன. ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் #KashmirFiles பல நாட்களாக ட்ரெண்டிங்கில் உள்ளது.

காஷ்மீரி பண்டிட்டுகள் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறி நாட்டின் பிற நகரங்கள் அல்லது மாநிலங்களில் தஞ்சம் அடைய வேண்டிய அந்த இரவு பற்றிய கதை இந்தக்கட்டுரையில் உள்ளது.

'நாரா-இ-தக்பீர், அல்லாஹ் ஹூஅக்பர்!'

ஆழ்ந்த உறக்கத்தில் கூட எல்லால் விசித்திரமான ஒலிகளைக் கேட்க முடிந்தது. நான் பயந்துவிட்டேன். ஏதோ உடைந்து கொண்டிருந்தது. எல்லாமே மாறிக்கொண்டிருந்தது. எங்கள் சுவர்களில் நகர்ந்த நிழல்கள் ஒவ்வொன்றாக எங்கள் வீட்டிற்குள் குதித்துக்கொண்டிருந்தன.

நான் சட்டென்று கண் விழித்தேன், என் அப்பா என்னை எழுப்பி, 'ஏதோ தவறு நடக்கிறது' என்று கூறினார்.

மக்கள் தெருக்களில் திரண்டு கோஷமிட்டனர்.

நான் கண்டது கனவல்ல நிஜம். அவர்கள் உண்மையில் எங்கள் வீட்டிற்குள் குதிக்கப் போகிறார்களா? எங்கள் தெருவுக்கு தீ வைக்கப் போகிறார்களா?

அப்போது பலத்த விசில் சத்தம் கேட்டது. அருகில் இருந்த மசூதியின் ஒலிபெருக்கியில் இருந்து சத்தம் வந்து கொண்டிருந்தது. தொழுகைக்கு முன் மசூதியில் இருந்து வரும் இந்த ஒலி, சிறிது நேரம் கழித்து நின்றுவிடும். ஆனால் அன்று இரவு விசில் சத்தம் நிற்கவில்லை. அது மிகவும் துரதிர்ஷ்டவசமான இரவாக அமைந்தது.

சிறிது நேரத்தில் எங்கள் வீட்டிற்கு வெளியே சத்தம் நின்றுவிட்டது. மசூதியில் பேசும் ஒலி கேட்டது. விவாதம் நடந்து கொண்டிருந்தது.

என் சித்தப்பா, 'என்ன நடக்கிறது?''அவர்கள் ஏதாவது செய்வார்களா.'என்று கேட்டார்.

மசூதிக்குள் சிறிது நேரம் பேச்சு வார்த்தை நடந்தது. பின்னர் பலத்த கோஷங்கள் எழுந்தன.

'நாரா-இ-தக்பீர், அல்லாஹ் ஹூஅக்பர்!'

நான் என் தந்தையின் வெளிறிப்போன முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த முழக்கத்தின் அர்த்தம் அவருக்கு நன்றாகவே தெரியும்.

சில வருடங்களுக்கு முன்பு தூர்தர்ஷனில் 'தமஸ்' என்ற தொலைக்காட்சி தொடரைப் பார்த்துக்கொண்டிருந்தபோது நானும் அந்த முழக்கத்தை கேட்டிருந்தேன். அந்தத் தொடர் 1947 இல் நிகழ்ந்த இந்திய- பாகிஸ்தான் பிரிவினை பற்றிய இலக்கியவாதி பீஷ்ம சாஹ்னியின் நாவலை அடிப்படையாகக் கொண்டது.

சிறிது நேரம் கழித்து எங்களைச்சுற்றிலும் இருந்து விஷ ஈட்டிகள் போன்ற முழக்கங்கள் எங்களை நோக்கி வர ஆரம்பித்தன.

நமக்கு என்ன வேண்டும்: சுதந்திரம்!

இஸ்லாமை ஏற்றுக்கொள்ளாதவர்களே! காஷ்மீரை விட்டு வெளியேறுங்கள்.

சிறிது நேரத்தில் கோஷம் நிறுத்தப்பட்டது. பின்னர் ஆப்கானிஸ்தானில் சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிரான முஜாஹிதீன்களின் சண்டையைப் புகழ்ந்து பாடல்கள் சத்தமாக ஒலிக்கத் தொடங்கின.

என் சித்தப்பா, 'பிஎஸ்எஃப் ஏதாவது செய்யும்' என்றார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. காலை வரை கோஷம் எழுப்பப்பட்டது. அந்த பயத்தில் இரவு முழுவதும் எங்களால் தூங்க முடியவில்லை.

காஷ்மீர் ஃபைல்ஸ்: காஷ்மீரி பண்டிட்கள் தங்கள் சொந்த மண்ணை விட்டு வெளியேற வேண்டிவந்த அந்த இரவின் கதை

பட மூலாதாரம், Getty Images

இது எங்களைச்சுற்றி மட்டும் நடக்கவில்லை. இந்த நிலை கிட்டத்தட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தது. எங்களை மிரட்டி காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து விரட்டியடிக்க, முன்னரே திட்டமிடப்பட்ட செயலின்படி இது நடந்தது.

மறுநாள் காலை பள்ளத்தாக்கில் இருந்து இந்துக்களின் வெளியேற்றம் தொடங்கியது. பல குடும்பங்கள் தங்களுடன் எடுத்துச் செல்லக்கூடிய பொருட்களுடன், ஜம்முவிற்கு ஓடிவிட்டனர்.

பிரபல பத்திரிக்கையாளர் ராகுல் பண்டிதா தனது 'அவர் மூன் ஹேஸ் பிளட் கிளாட்ஸ்' என்ற புத்தகத்தில் 1990 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதியின் குளிர் இரவை விவரித்துள்ளார். அதன் பிறகு காஷ்மீரில் இருந்து பண்டிட்டுகள் புலம் பெயரத்தொடங்கினர்.

ஜனவரி 19க்கு முன் என்ன நடந்தது?

ஜனவரி 19 சம்பவத்தை நினைவு கூர்ந்த காஷ்மீரி பண்டிட் சங்கர்ஷ் சமிதியின் தலைவர் சஞ்சய் டிக்கு, "1989-ல் துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. பின்னர் ரூபியா சயீத் கடத்தப்பட்டார். அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஒரு முஸ்லிம் அரசியல் ஆர்வலர் கொலை செய்யப்பட்டார். அதன் பிறகு பாஜக தலைவராக இருந்த முதல் காஷ்மீரி பண்டிட் கொல்லப்பட்டார்,"என்று பிபிசி குஜராத்தியிடம் கூறினார்.

"ஜனவரி 19 அன்று இரவு டிடி மெட்ரோவில் 'ஹம்ராஸ்' திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது. பெரும்பாலான மக்கள் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்பது எனக்குத் தெளிவாக நினைவிருக்கிறது. இரவு 9 மணியளவில் மக்கள் தெருக்களில் வந்து சுதந்திர கோஷங்களை எழுப்பத் தொடங்கினர். அன்று இரவு முழுவதும் இது நடந்தது.எங்களால் தூங்க முடியவில்லை."

"அடுத்த நாள் காலை நாங்கள் எங்கள் அண்டை வீட்டாரைச் சந்தித்தபோது, அவர்களின் நடத்தை மாறியிருந்தது. அவர்கள் ஏன் தெருவுக்கு வந்தார்கள், அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றி யாரும் பேசவில்லை. பெரும்பாலான அண்டை வீட்டாரின் நடத்தை மாறிக்கொண்டே இருந்தது, அதனால் முழு விஷயமுமே மாறிவிட்டது. "

ஜனவரி 19 அன்று நடந்த அந்த சம்பவத்திற்குப் பிறகு, காஷ்மீரில் இருந்து பண்டிட்டுகள் புலம் பெயர்வது தொடங்கியது. அப்போது சஞ்சய் டிக்குவுக்கு 22 வயது.

கர்னல் (டாக்டர்) தேஜ்குமார் டிக்கு தனது 'காஷ்மீர்: இட்ஸ் அபோரிஜினிஸ் அண்ட் தேர் எக்ஸோடஸ்' என்ற புத்தகத்தில், ஜனவரி 19க்கு முந்தைய நிகழ்வுகளை விவரிக்கிறார்.

"1990 ஜனவரி 4 அன்று, உள்ளூர் உருது செய்தித்தாள் 'அஃப்தாப்' இல் ஒரு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. அதில் ஹிஸ்புல்-முஜாஹிதீன், எல்லா பண்டிட்டுகளையும் உடனடியாக பள்ளத்தாக்கை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டிருந்தது."

"அதே எச்சரிக்கையை மற்றொரு உள்ளூர் செய்தித்தாள் 'அல்-சஃபா' வெளியிட்டது. இந்த அச்சுறுத்தல்களுக்குப் பிறகு, 'ஜிஹாதி' மக்கள் கலாஷ்னிகோவ் துப்பாக்கிகளுடன் பகிரங்கமாக அணிவகுத்துச் சென்றனர். இதோடு கூடவே காஷ்மீர் பண்டிட்டுகள் கொல்லப்பட்டதாக அதிகளவில் செய்திகள் வெளியாகின. குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் சாதாரணமாக நிகழத்தொடங்கின."

"வெறுப்பைத்தூண்டும் மற்றும் அச்சுறுத்தும் வகையில் உரைகள் நிகழ்த்தப்பட்டன. பண்டிட்களை மிரட்டுவதற்காக இதுபோன்ற பிரச்சாரங்கள் நிரப்பப்பட்ட ஆயிரக்கணக்கான ஆடியோ கேசட்டுகள் விநியோகிக்கப்பட்டன. மேலும், சிறுபான்மையினரை காஷ்மீரை விட்டு வெளியேறுமாறு அச்சுறுத்தும் போஸ்டர்களும் பல இடங்களில் ஒட்டப்பட்டன."

காஷ்மீர் ஃபைல்ஸ்: காஷ்மீரி பண்டிட்கள் தங்கள் சொந்த மண்ணை விட்டு வெளியேற வேண்டிவந்த அந்த இரவின் கதை

பட மூலாதாரம், Getty Images

"அது வெறும் மிரட்டலாக மட்டும் இருக்கவில்லை. 1990 ஜனவரி 15 ஆம் தேதி,எம்.எல்.பான் என்ற அரசு ஊழியர் கொல்லப்பட்டார். மற்றொரு அரசு ஊழியர் பல்தேவ் ராஜ் தத் அதே நாளில் கடத்தப்பட்டார் நான்கு நாட்களுக்குப் பிறகு ஜனவரி 19 ஆம் தேதி அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது."

இதற்கிடையில், ஃபரூக் அப்துல்லாவின் அரசு ராஜிநாமா செய்தது. ஜக்மோகன் இரண்டாவது முறையாக அங்கு ஆளுநராக வந்தார். அவர் ஜனவரி 19 அன்று பதவியேற்றார். அப்போதுதான் பண்டிட்டுகளின் புலப்பெயர்வும் தொடங்கியது.

காஷ்மீரின் வரலாறு, அரசியல் மற்றும் சமூக வாழ்க்கை குறித்த 'காஷ்மீர்நாமா' என்ற தனது புத்தகத்தில் அசோக் குமார் பாண்டே, ஜனவரி 19 ஆம் தேதியின் பின்னணியை எடுத்துரைத்துள்ளார்:

"காஷ்மீரிகளின் பகைமை போக்கு பல பரிமாணங்களை எடுத்துள்ளது. காஷ்மீர் அரசியலில் டெல்லியின் கட்டுப்பாடு, அமைப்பு முறையில் நிலவும் பரவலான ஊழல் மற்றும் பொருளாதார பின்தங்கிய நிலை ஆகியவை காஷ்மீரி இளைஞர்களின் அமைதியின்மையை தூண்டின."

"காஷ்மீர் மக்களின் ஜனநாயக ரீதியிலான கருத்து சுதந்திரம் பறிபோனதால், கோபமானது கோஷங்களாகவும் பின்னர் ஆயுதப் போராட்டமாகவும் மாறியது."

"மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்காக கொடுக்கப்பட்ட பெரும்பாலான நிதி ஜம்மு பகுதிக்காக பயன்படுத்தப்பட்டது. 1977ல் இந்திரா காந்தி போன்ற வலிமையான தலைவரை தோற்கடித்தபோது இந்தியர்கள் மக்கள் சக்தியை உணர்ந்தனர். மறுபுறம் காஷ்மீர் மக்கள் அளித்த தேர்தல் முடிவுகள் தொடர்ந்து நசுக்கப்பட்டன."

"இதன் விளைவாக அரசியல் சக்திகளுக்கு எதிரான கோபம், இந்திய எதிர்ப்பாக மாறியது. மேலும் சுதந்திர ஆதரவாளர்கள் மற்றும் இந்திய எதிர்ப்பு சக்திகளுக்கு , அந்த இயக்கத்தைப் பயன்படுத்துவது எளிதாகிவிட்டது என்று நாம் கூறலாம்."

இதற்கிடையில், 1987 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் முறைகேடுகள் , இந்த செயல்முறையைத் தூண்டும் வேலையை செய்தன..

தூண்டு கோலாகச் செயல்பட்ட 1987 தேர்தல்

1987 இல், காங்கிரஸும் தேசிய மாநாடும் இணைந்து தேர்தலில் போட்டியிட முடிவு செய்தன. ஆனால் முஸ்லிம் ஐக்கிய முன்னணி என்ற புதிய அரசியல் சக்தி அவர்களுக்கு சவால் விடுத்தது.

முஸ்லிம் ஐக்கிய முன்னணியில் சையத் அலி ஷா கிலானியின் ஜமாத்-இ-இஸ்லாமி, அப்துல் கனி லோனின் மக்கள் லீக் மற்றும் மிர்வைஸ் முகமது உமர் ஃபாரூக்கின் அவாமி செயல் குழு ஆகியவை இடம்பெற்றிருந்தன.

காஷ்மீர் ஃபைல்ஸ்: காஷ்மீரி பண்டிட்கள் தங்கள் சொந்த மண்ணை விட்டு வெளியேற வேண்டிவந்த அந்த இரவின் கதை

பட மூலாதாரம், Getty Images

இது தவிர, உம்மத்-இ-இஸ்லாமி, ஜமியத்-இ-அல்லா-இ-ஹதீஸ், அஞ்சுமான்-தஹ்புஸ்-உல்-இஸ்லாம், இத்திஹாத்-உல்-முஸ்லிமின், முஸ்லிம் ஊழியர் சங்கம் போன்ற சிறு கட்சிகளும்,அமைப்புகளும் இதில் கலந்துகொண்டன.

அசோக் குமார் பாண்டே தனது 'காஷ்மீர் மற்றும் காஷ்மீரி பண்டிட்ஸ்: 1,500 ஆண்டுகள் குடியேற்றம் மற்றும் சிதைவு' என்ற புத்தகத்தில்,"இஸ்லாமிய சார்பு மற்றும் பொது கருத்துக் கட்சிகள் மற்றும் குழுக்களின் இந்த குடை அமைப்பு, அந்த நேரத்தில் காஷ்மீரி சமூகம் மற்றும் அரசியலில் நிலவிய அதிருப்திக்கு ஒரு எடுத்துக்காட்டு."என்று எழுதினார்.

"பெருந்திரளான மக்கள் பேரணிகளில் கூடினர். இந்த முன்னணி, ஊழல், லாபம் ஈட்டல் மற்றும் பதுக்கல் இல்லாத நிர்வாகத்தை அளிப்பதாகவும், மக்களின் அவலத்திற்கு காரணமானவர்களை தண்டிப்பதாகவும் உறுதியளித்தது."

காஷ்மீரில் வேலையில்லா திண்டாட்டம் ஒரு பெரிய பிரச்சனையாக இருந்தது. இந்த முன்னணி அனைவருக்கும் வேலை கொடுப்பது , தொழில் மற்றும் வேலைவாய்ப்பைக் கொண்டுவருவது பற்றி பேசியது.

இந்த முன்னணியை ஆட்சியில் இருந்து விலக்கி வைக்க ஃபரூக் அப்துல்லா காங்கிரஸுடன் கைகோர்த்தார். தேர்தல் நடவடிக்கைகளில் அதிக அளவில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.

"1987 தேர்தல் மிகப்பெரிய முறைகேடுகள் நிறைந்ததாக இருந்தது என்று எனக்கு நினைவிருக்கிறது. தோல்வியடைந்த வேட்பாளர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இதனால் பொது மக்கள், தேர்தல் மற்றும் ஜனநாயக செயல்முறைகளில் நம்பிக்கை இழக்க நேரிட்டது,"என்று அந்த நேரத்தில் காங்கிரஸ் தலைவரான கேம்லதா வுக்லு பிபிசியிடம் கூறினார்:

ஏமாற்றம் அடைந்த பல படித்த மற்றும் வேலையில்லாத இளைஞர்கள் JKLF (ஜம்மு கஷ்மீர் விடுதலை முன்னணி) ஆல் ஆசைகாட்டப்பட்டனர்.அவர்களில் பலர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் மறுபுறம் அனுப்பப்பட்டனர்.

ஜேகேஎல்எஃப் மற்றும் 'க்விட் காஷ்மீர்' கோஷம்

கிறிஸ்டோபர் ஸ்னைடன், தனது புத்தகமான 'அண்டர்ஸ்டாண்டிங் காஷ்மீர் அண்ட் காஷ்மீரி' என்ற புத்தகத்தில், JKLF ஐ அறிமுகப்படுத்தி இவ்வாறு எழுதுகிறார்:

"இது 80களின் இரண்டாம் பாதியில் நடந்தது. இந்தியாவிடமிருந்து காஷ்மீர் சுதந்திரம் பெறுவதற்கான அரசியல் கிளர்ச்சிகளும் போராட்டங்களும் தீவிரமடைந்திருந்த நேரம் அது"

"இதுவரை நடைபெற்று வந்த போராட்டங்கள் இப்போது வன்முறையாக மாறின. காஷ்மீரிகளின் சுதந்திர கோரிக்கையில் வன்முறையின் கூறு சேர்க்கப்பட்டது."

1987ல் மாநிலத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. காஷ்மீர் பிராந்தியக் கட்சிகளின் கூட்டணியான முஸ்லிம் ஐக்கிய முன்னணி வெற்றி பெறும் என நம்பியது.

"இருப்பினும், தேர்தல் முடிவுகள் அந்தக்கூட்டணி மற்றும் இதே எண்ணத்தில் இருந்த ஆயிரக்கணக்கான காஷ்மீரி இளைஞர்களின் நம்பிக்கையை சிதைத்தபோது, அவர்கள் ஏமாற்றமடைந்தனர். படித்த இளைஞர்கள் கூட தேர்தல் செயல்பாட்டில் நம்பிக்கை இழந்தனர்."

"இந்த இளைஞர்களில் சிலர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி பாகிஸ்தானுக்குச் சென்று இந்தியாவுக்கு எதிராக ஆயுதப் போரைத் தொடங்கினர்."

"பாகிஸ்தானின் முப்படை உளவு அமைப்பு (ஐஎஸ்ஐ) க்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்தது. எரியும் தீயில் நெய் வார்க்கும் வேலையை அது செய்தது."

"பாகிஸ்தான் ஆளுகைக்குட்பட்ட காஷ்மீரில் இந்த இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து இந்திய ராணுவத்திற்கு எதிராக போரிட ஆயுதங்களை வழங்கியது ஐஎஸ்ஐ."

"இந்த பயிற்சி பெற்ற இளைஞர்கள் இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீருக்குள் நுழைந்தனர். இது அமைதியைக் குலைக்கும் செயல்முறையைத் தூண்டியது."

"1988 இல் இந்தியாவிற்கு எதிராக பெரிய அளவிலான போராட்டங்கள் நடந்தன மற்றும் காஷ்மீரின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது."

"ஒரு வருடம் கழித்து 1989 ஜூலையில் ஸ்ரீநகரில் உள்ள டெலிகிராப் அலுவலகம் தீவிரவாதிகளால் குண்டுவீசித் தாக்கப்பட்டது."

"ஒரு வருடம் கழித்து, காஷ்மீரின் புகழ்பெற்ற மதத் தலைவரான மிர்வைஸ் மௌல்வி முகமது உமர் ஃபாரூக் படுகொலை செய்யப்பட்டார். அவரது இறுதிச் சடங்கில் சுமார் 20 ஆயிரம் காஷ்மீரிகள் கூடினர்."

"நிலைமை கட்டுமீறுவதைக் கண்டு, இந்திய பாதுகாப்புப் படையினர் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 20 காஷ்மீரிகள் கொல்லப்பட்டனர். இது காஷ்மீரில் ரத்தக்களரி அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்தது."

"ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி (ஜேகேஎல்எஃப்) இந்த வன்முறை இயக்கத்தை வழிநடத்தியது. கூடவே இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளிடமிருந்தும் சுதந்திரம் கோரியது."

1965ஆம் ஆண்டு அமானுல்லா கான், மக்பூல் பட் மற்றும் சில இளைஞர்கள் இணைந்து காஷ்மீர் சுதந்திரம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் 'பிளபிசைட் ஃப்ரண்ட்' என்ற கட்சியை உருவாக்கினர்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளாலும் காஷ்மீர் ஆக்கிரமிக்கப்படுவதை எதிர்த்து இந்த முன்னணி, ஜம்மு காஷ்மீர் தேசிய விடுதலை முன்னணி (JKNLF) என்ற தனது சொந்த ஆயுதப் பிரிவை உருவாக்கியது. அல்ஜீரியாவில்,நிகழ்ந்தது போல,ஆயுத மோதல்களால் மட்டுமே காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரிக்க முடியும் என்று அவர்கள் நம்பினார்.

"JKLF 1989 கோடையில் 'காஷ்மீரை விட்டு வெளியேறு' என்ற முழக்கத்தை எழுப்பத் தொடங்கியது,"என்று அசோக் பாண்டே 'காஷ்மீர்நாமா'வில் எழுதுகிறார்.

"நிலைமையை மேம்படுத்துவதற்காக, பாகிஸ்தானில் இருந்து திரும்பி வரும் வழியில் கைது செய்யப்பட்ட 72 பேரை அரசு விடுவித்தது. அவர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருந்தனர்."

"அது உதவவில்லை. அடுத்த நாள் CRPF முகாம் தாக்கப்பட்டு மூன்று வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்."

"1989 ஆகஸ்ட் 21 அன்று ஸ்ரீநகரில் முதல் அரசியல் படுகொலை நடந்தது. இதில் தேசிய மாநாட்டின் வட்டாரத்தலைவர் முகமது யூசுப் ஹல்வாய் சுட்டுக் கொல்லப்பட்டார்."

"ஹப்பா கதல் பள்ளத்தாக்கில் ஒரு முக்கிய இந்துத் தலைவரும் வழக்கறிஞருமான, டிக்காராம் டிப்லுனி செப்டம்பர் 14 அன்று படுகொலை செய்யப்பட்டார். மக்பூல் பட்டை தூக்கிலிட்ட நீதிபதி நீல்காந்த் கஞ்சு நவம்பர் 4 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார்."

இந்த புத்தகத்தின்படி, இந்த கொலைகளுக்கு JKLF பொறுப்பேற்றுள்ளது.

இதற்கிடையில், டிசம்பர் 8 ஆம் தேதி, அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் முகமது சயீத்தின் மகள் டாக்டர் ரூபியா சயீத் கடத்தப்பட்டார். அவரை விடுவிக்க ஐந்து தீவிரவாதிகள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். தீவிரவாதிகளுக்கு அடிபணிவதை ஃபரூக் அப்துல்லா கடுமையாக எதிர்த்தார். ஆனால் அது பலனளிக்கவில்லை.

இந்த சம்பவத்துக்குப் பிறகு தீவிரவாதிகளின் மனோபலம் அதிகரித்தது. பலரை சிறையிலிருந்து விடுவிக்கச்செய்ய கடத்தல் சம்பவங்கள் நிகழ்ந்தன.

நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, அதை கட்டுப்படுத்தும் பொறுப்பு ஆளுனர் ஜக்மோகனிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஜக்மோகன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜக்மோகன்

ஜக்மோகன் காஷ்மீரைக் காப்பாற்றினாரா?

ஜக்மோகன் முதன்முதலில் காஷ்மீர் ஆளுநராக 1984 ஏப்ரலில் காஷ்மீருக்கு அனுப்பப்பட்டார். பின்னர் அவர் காஷ்மீரிகளிடையே பிரபலமானார்.

"அவர் பள்ளத்தாக்கில் இந்து ஆதரவாளர் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்ற பிம்பத்தைக் கொண்டிருந்தார்."என்று அசோக் குமார் பாண்டே 'காஷ்மீர்நாமா'வில் எழுதுகிறார்.

ஜக்மோகன் ஆளுனர் ஆன உடனேயே, காஷ்மீரைச் சேர்ந்த ஒரு முஸ்லிமை (முப்தி முகமது சயீத்) உள்துறை அமைச்சராக்குவதன் மூலம் காஷ்மீரிகளின் நம்பிக்கையைப் பெறுவதற்கான முயற்சி தோல்வியடைந்தது.

"ஜனவரி 18 அன்று, துணை ராணுவப் படைகள் காஷ்மீரில் வீடு வீடாகச் சென்று தேடுதல் பணியைத் தொடங்கின. ஜனவரி 19 அன்று, ஜம்முவில் ஜக்மோகன் பொறுப்பேற்ற நாளில், சுமார் 300 இளைஞர்களை CRPF காவலில் எடுத்தது."

ஜனவரி 20ஆம் தேதி ஜக்மோகன் ஸ்ரீநகரை அடைந்தபோது அவருக்கு எதிராக ஏராளமானோர் திரண்டனர். பெண்கள், முதியவர்கள், குழந்தைகளும் இதில் அடங்குவர்.

"அடுத்த நாள் மீண்டும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. சுடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 'காவ் கதல்' என்ற இடத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஆனால் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை 35 தான். இது இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து ஒரே சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் அதிகபட்ச எண்ணிக்கையாகும்."

ஜக்மோகன் தனது 'மை ஃப்ரோசன் டர்புலன்ஸ் இன் காஷ்மீர்' புத்தகத்தில், காவ் கதல் துப்பாக்கிச் சூடு தனது (ஜக்மோகனின்) உத்தரவின் பேரில் நடந்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

அசோக் குமார் பாண்டே அத்தகைய மற்றொரு சம்பவம் பற்றி பேசுகிறார்.

"1990, மே 21 அன்று மிர்வாய்ஸ் படுகொலை செய்யப்பட்டார். அவரது இறுதிச் சடங்கில் ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போதைய தலைமைச் செயலர் ஆர் ட்க்கர், தனிப்பட்ட முறையில் அங்கு செல்லுமாறும் அல்லது மூத்த அதிகாரியை அனுப்பி அவரது கல்லறைக்கு மலர் தூவிடுமாறும் ஜக்மோகனுக்கு ஆலோசனை கூறினார். ஆனால் ஜக்மோகன் ஒப்புக்கொள்ளவில்லை.

"அவர் ஊர்வலம் செல்லும் பாதை மற்றும் ஊர்வலத்திற்கான கட்டுப்பாடுகள் குறித்து சில குழப்பமான உத்தரவுகளை வழங்கினார். இந்த குழப்பத்தைத் தொடர்ந்து, ஊர்வலம் அதன் கடைசி நிறுத்தத்தை அடையவிருந்தபோது துணை ராணுவப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்."

" இந்த துப்பாக்கிச் சூட்டில் 27 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டது. இறந்தவர்களின் எண்ணிக்கை 47 என்று இந்தியாவின் ஊடகங்கள் கூறுகின்றன. ஆனால் அதே நேரத்தில் பிபிசியின்படி இந்த எண்ணிக்கை 100 ஆக இருந்தது. சில தோட்டாக்கள் மிர்வைஸின் உடலையும் தாக்கும் சூழ்நிலை ஏற்பட்டது."

அசோக் குமார் பாண்டே 'காஷ்மீர்நாமா'வில் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்:

"ஜக்மோகன் ஆளுநராக இருந்த காலத்தில், பள்ளத்தாக்கில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பகை அதிகரித்தது. முஸ்லிம்களைக் கொல்ல ஜக்மோகன் அனுப்பப்பட்டதாக அவர்களிடையே பிரச்சாரம் செய்யப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக தனது நடவடிக்கைகளால் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் மேலும் பரவ அவர் வழிவகுத்தார்."

"மிர்வைஸின் இறுதிச் சடங்கில் துப்பாக்கிச் சூடு நடத்தியது மற்றும் அதைத் தொடர்ந்து நடத்தப்ப்ட்ட தேடுதல் நடவடிக்கை பலரைத் தூண்டியது.10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் சுதந்திர இயக்கத்தைத் தீவிரப்படுத்த பயிற்சி எடுக்க எல்லையைத் தாண்டினர்."

"ஜக்மோகனின் காலத்தில், மனித உரிமை ஆர்வலர்கள் அவமானப்படுத்தப்பட்டதோடு மட்டுமல்லாமல், உயர் நீதிமன்றத்தின் செயல்பாட்டில் தலையிட முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்தச் சூழலை தீவிரவாதிகள் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, சந்தேகம் மற்றும் அச்சம் நிறைந்த சூழலை உருவாக்கினர்."

எம்.ஜே.அக்பரின் 'காஷ்மீர் பிஹைண்ட் தி வால்' புத்தகத்தை குறிப்பிட்டு, "காஷ்மீரில் சுதந்திரத்திற்கான பொதுமக்களின் மறைமுக ஆதரவு, ஜனவரி 19 க்குப் பிறகு வெளிவந்தது." என்று அசோக் பாண்டே எழுதுகிறார்,

இருப்பினும், தான் எடுத்த கடுமையான நடவடிக்கைகளால் தான், காஷ்மீர் உடைந்து போகாமல் காப்பாற்றப்பட்டது என்று ஜக்மோகன் கூறினார்.

மூத்த பத்திரிக்கையாளர் கல்யாணி சங்கருக்கு அளித்த பேட்டியில், காஷ்மீர் வந்தபோது அங்கு அரசு என்று எதுவும் இல்லை. தீவிரவாதிகளின் ஆட்சிதான் இருந்தது என்று கூறி அவர் தன்னை நியாயப்படுத்திக்கொண்டார்.

1989 ஆம் ஆண்டு ஆப்கன் போர் முடிந்தது. ஐஎஸ்ஐ எல்லா முஜாகிதீன்களையும் காஷ்மீருக்கு அனுப்பியது .

"அவர்களிடம் எல்லா வகையான நவீன ஆயுதங்களும் இருந்தன. ஆப்கானிஸ்தானில் கொரில்லா போரில் அனுபவம் பெற்றவர்கள் அவர்கள். ஐஎஸ்ஐ-யின் நிதி உதவியும் அவர்களுக்கு இருந்தது."

"பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அவர்களுக்கு பணம் கொடுத்தது. அவர்களுக்கு பயிற்சி அளித்தது, ஆயுதங்கள் கொடுத்தது. இந்தியாவுக்கு எதிராக நீங்கள் போராடுங்கள், ஜிகாத் செய்யுங்கள் என்று அவர்களுக்குள் இஸ்லாமிய வெறியை உருவாக்கியது. இவை அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது."

"ஆஃப்கான் போரின் போது அவர்கள் எதைக் கற்றுக்கொண்டார்களோ, அதை காஷ்மீரில் முயற்சித்தனர்," என்று ஜக்மோகன் கூறினார்.

"ஆளுநராக எனது முதல் பதவிக்காலம் முடிவடைந்தபோது, ஐஎஸ்ஐ விளையாடுகிறது, காஷ்மீர் விடுதலை முன்னணி, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகியவை தீவிரமாக செயல்பட ஆரம்பித்துள்ளன என்று நான் எச்சரித்திருந்தேன். "

" இப்போது செயல்படாவிட்டால் நிலைமை கைமீறிப்போய்விடும் என்று நான் ஒரு கடிதமும் எழுதினேன். ஆனால் எனது பதவிக்காலம் முடிந்ததால் நான் அங்கிருந்து செல்லவேண்டியதாயிற்று."

"காஷ்மீரில் தீவிரவாதம் உச்சத்தில் இருந்தது. சுமார் 600 வன்முறை சம்பவங்கள் நடந்தன, ரூபியா சயீத் கடத்தப்பட்டார். பல முக்கிய காஷ்மீரி பண்டிட்டுகள் கொல்லப்பட்டனர். இந்திய அரசுடன் பணிபுரிபவர்கள் அனைவரும் குறிவைக்கப்பட்டனர். அத்தகைய சூழ்நிலையில், நான் மீண்டும் அங்கு அனுப்பப்பட்டேன். என்னால் நிலைமையை சீராக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.

" 1990 ஜனவரி 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு சுதந்திரத்தை அறிவிக்க மக்கள் இத்காவில் கூட திட்டமிட்டனர். அதை செய்யாமல் தடுப்பதே எனது கடமையாக இருந்தது. அந்த நாடகம் நடக்காமல் இருக்க நான் வகை செய்தேன். இப்படியாக காஷ்மீர் காப்பாற்றப்பட்டது."

காஷ்மீர் ஃபைல்ஸ்: காஷ்மீரி பண்டிட்கள் தங்கள் சொந்த மண்ணை விட்டு வெளியேற வேண்டிவந்த அந்த இரவின் கதை

பட மூலாதாரம், Getty Images

யாரால் அநீதி இழைக்கப்பட்டது?

தனது முயற்சியால் காஷ்மீர் பிரிக்கப்படாமல் காப்பாற்றப்பட்டிருப்பதாக ஜக்மோகன் கூறுகிறார். ஆனால் பண்டிட்களின் வெளியேற்றத்தை அவரால் தடுக்க முடியவில்லை என்று பண்டிட்டுகள் கூறுகின்றனர்.

தீவிரவாதம் தொடங்கிய பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழ்ந்த 3.5 லட்சம் காஷ்மீரி பண்டிட்டுகளில் பெரும்பாலானோர் தங்கள் சொந்த மண்ணை விட்டு வெளியேறி ஜம்மு அல்லது நாட்டின் பிற பகுதிகளில் குடியேறினர்.

காஷ்மீர் பள்ளத்தாக்கை விட்டு ஒரு லட்சத்திற்கும் அதிகமான பண்டிட்கள் வெளியேறியதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் தொடங்கியதில் இருந்து 1990 வரை குறைந்தது 399 காஷ்மீரி பண்டிட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் 1990 முதல் 20 ஆண்டுகளில் மொத்தம் 650 காஷ்மீரிகள் உயிரிழந்துள்ளனர் என்றும் காஷ்மீரி பண்டிட் சங்கர்ஷ் சமிதியின் தலைவர் சஞ்சய் டிக்கு கூறுகிறார்.

1990 ஆண்டு மட்டுமே 302 காஷ்மீரி பண்டிட்டுகள் கொல்லப்பட்டதாக டிக்கு தெரிவிக்கிறார்.

1989 முதல் 2004 வரை காஷ்மீரில் 219 பண்டிட்டுகள் கொல்லப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் அரசு 2010ல் சட்டப்பேரவையில் தெரிவித்தது. அந்த நேரத்தில் காஷ்மீரில் 38,119 பண்டிட் குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன, அதில் 24,202 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன என்றும் மாநில அரசு கூறியது.

டிக்கு இன்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வசிக்கிறார். 808 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 3,456 காஷ்மீரி பண்டிட்டுகள் தற்போது காஷ்மீரில் வாழ்கின்றனர், அவர்களுக்காக அரசு இதுவரை எதுவும் செய்யவில்லை என்று அவர் கூறுகிறார்.

"கடந்த ஏழு ஆண்டுகளாக பாஜக மத்தியில் ஆட்சியில் உள்ளது. காஷ்மீரி பண்டிட்களுக்கு மறுவாழ்வு வழங்குவதை யார் தடுக்கிறார்கள்? கடந்த பட்ஜெட்டில் பண்டிட்களின் மறுவாழ்வுக்காக எவ்வளவு நிதி வழங்கப்பட்டது?"என்று பிபிசி குஜராத்திக்கு அளித்த பேட்டியில் அவர் கேள்விகளை எழுப்பினார்.

இதேபோன்ற குற்றச்சாட்டை அகமதாபாத்தில் வசிக்கும் காஷ்மீரி பண்டிட் ஏ.கே.கெளலும் முன்வைக்கிறார்.

"பாஜக மற்றும் காங்கிரஸ் இரண்டுமே காஷ்மீரி பண்டிட்களின் விஷயத்தை, தங்கள் அரசியலுக்காக பயன்படுத்தின.

நான் குஜராத் அரசிடம் பல விளக்கங்களை அளித்துள்ளேன். மேலும் மாநிலத்தில் எங்களுக்கு நிலம் அல்லது வேறு ஏதேனும் உதவிகளை வழங்குமாறு அவர்களிடம் கேட்டுக் கொண்டேன். ஆனால் குஜராத் அரசு எங்களுக்காக எதையும் செய்யவில்லை."என்று பிபிசி குஜராத்திக்கு பேட்டியளித்த ஏ.கே.கெளல் குறிப்பிட்டார்.

"காங்கிரஸும் எங்களைப் பயன்படுத்தியது, பாஜகவும் எங்களைப் பயன்படுத்தியது, அவர்கள் இன்னமும் எங்களைப் பயன்படுத்துகிறார்கள். மோதி அரசும் காஷ்மீரி பண்டிட்களின் பெயரை பயன்படுத்தியது."

"குஜராத் அரசு எந்த உதவியும் செய்யவில்லை. நான் மோதி அரசுக்கு மூன்று முறை கடிதம் எழுதியும் இதுவரை எந்த பதிலும் வரவில்லை."

குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், காஷ்மீரி பண்டிட்டுகளுக்கு மட்டுமின்றி, காஷ்மீர் மக்கள் அனைவருக்குமே அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று அசோக் குமார் பாண்டே கருதுகிறார்.

அசோக் குமார் பாண்டே தனது 'காஷ்மீர் மற்றும் காஷ்மீரி பண்டிட்ஸ்: 1,500 ஆண்டுகள் குடியேற்றம் மற்றும் சிதைவு' என்ற புத்தகத்தில் இவ்வாறு எழுதுகிறார்.

"நீதி என்பது தங்களுக்கு கிடைக்கவில்லை என்று காஷ்மீரில் உள்ள ஒவ்வொரு தரப்பினரும் நினைகிறார்கள்."

எல்லையை ஒட்டியுள்ள காஷ்மீரில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை தனக்கு அளிக்காமல், மவுண்ட்பேட்டனில் இருந்து ஹரிசிங் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை வரை அனைவருமே தனக்கு அநீதி இழைத்ததாக பாகிஸ்தான் உணர்கிறது.

"இந்தப்பகுதிக்காக பெருமளவு பணம் செலவழித்தாலும் கூட, இங்குள்ள மக்கள் தன்னுடன் நிற்கவில்லை, இது அநீதி என்று இந்தியா கருதுகிறது."

"காஷ்மீர் முஸ்லிம்கள் அநீதி இழைக்கப்பட்டதாக உணர்கிறார்கள், ஏனென்றால் வாக்குறுதி அளித்தபடி கருத்து வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்றும் ஜனநாயகம் கட்டுப்படுத்தப்பட்டது என்றும் அவர்கள் கருதுகிறார்கள். தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக தனது வாழ்நாள் முழுவதும் ஷேக் அப்துல்லா நினைத்தார். மூவர்ணக் கொடியை தான் ஏற்றிவைத்தபோதும் தன்னை யாரும் நம்பவில்லை என்று ஃபரூக் அப்துல்லா கருதுகிறார்."

" தாங்கள் இந்தியாவுடன் நின்றபோதிலும் கூட 1990 இல் தங்களுக்கு எந்தப் பாதுகாப்பும் வழங்கப்படவில்லை என்று காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளான பண்டிட்டுகள் நினைக்கின்றனர். அதே நேரம் அரசு தங்களை புறக்கணிப்பதாக, காஷ்மீரில் வசிக்கும் பண்டிட்கள் உணர்கிறார்கள்."

காணொளிக் குறிப்பு, காஷ்மீர் முஸ்லிம்களுக்கு குரல் கொடுக்க எங்களுக்கு உரிமை உண்டு: தாலிபன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: