You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முதல் மனைவி சம்மதத்துடன் திருமணம் செய்திருந்தாலும் 2-வது மனைவிக்கு பணப்பலன் பெற உரிமை இல்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு
இன்றைய (பிப். 25) நாளிதழ்களில் வெளியான முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
முதல் மனைவி சம்மதத்துடன் திருமணம் செய்திருந்தாலும், இரண்டாவது மனைவிக்கு அரசு ஊழியரின் பணப்பலன்களை பெற உரிமை இல்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என, 'இந்து தமிழ் திசை' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
உத்தமபாளையத்தில் கல்வித்துறையில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து 2013-ல் ஓய்வு பெற்றவர் எம்.முத்து மாடசாமி. இவரது முதல் மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களுக்கு 1985-ல் திருமணம் நடைபெற்றது.
தமிழ்ச்செல்வி ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டதால் அவரது சகோதரி கவிதாவை முத்துமாடசாமி 1994-ல் திருமணம் செய்து கொண்டார். 1996-ல் தமிழ்ச் செல்வி இறந்தார்.
இந்நிலையில் 2-வது மனைவி கவிதாவுக்கு குடும்ப ஓய்வூதியம் கிடைக்கும் வகையில் பணிப்பதிவேட்டில் தனது சட்டப்பூர்வ வாரிசாக குறிப்பிடக்கோரி முத்துமாடசாமி மனு அளித்தார். அவரது மனுவை தமிழக கணக்காயர் ஜெனரல் நிராகரித்து 22.12.2021-ல் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்து, 2-வது மனைவியை சட்டப்பூர்வ வாரிசாக குறிப்பிட உத்தரவிடக்கோரி முத்துமாடசாமி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில், "அரசு ஊழியர்கள் நடத்தை விதிப்படி அரசு ஊழியர் ஒருவர் முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது இரண்டாவது திருமணம் செய்துகொள்ள முடியாது. இது நடத்தை விதிமீறல் மட்டும் அல்ல, தண்டனைக்குரிய குற்றமும்கூட. மனுதாரரின் 2-வது திருமணம் தொடர்பாக யாரும் புகார் அளிக்கவில்லை. மனுதாரர் முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே 2-வது திருமணம் செய்துள்ளார். இதற்காக மனுதாரர் மீது அவர் பணியில் இருக்கும்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அரசு ஊழியரின் ஒழுக்கக்கேடான நடவடிக்கையே அவரை தண்டிக்க போதுமானது.
ஓய்வூதியம் பெறும் அரசு ஊழியர்கள் மீது நடத்தை மீறல் தொடர்பாக ஓய்வூதிய விதிகளின்படியும் நடவடிக்கை எடுக்கலாம். முதல் மனைவி சம்மதத்துடன் 2-வது திருமணம் செய்து கொண்டதாக மனுதாரர் தெரிவித்துள்ளார். அப்படியிருந்தாலும் 2-வது திருமணம் சட்டவிரோதம்தான். அதனால் அரசு ஊழியர்களின் பணப்பலன்களை பெற 2-வது மனைவிக்கு உரிமை கிடையாது. 2-வது மனைவியை பணிப்பதிவேட்டில் சட்டப்பூர்வ வாரிசாக நியமிக்கும் கோரிக்கையை ஏற்கக்கூடாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது," என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரியார் வேடம்: விழிப்புணர்வு நாடகங்களில் நடித்த சிறுவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
தனியார் தொலைக்காட்சியில் சமுதாய விழிப்புணர்வுக்காக நடத்தப்பட்ட நாடகங்களில் நடித்த சிறுவர், சிறுமிகள், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றதாக, 'தினத்தந்தி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சியாக பெரியார் நாடகம் நடத்தப்பட்டது. அதில், துவாஷிகா (பெரியார் வேடம்), உதய் பிரியன் (பத்திரிகையாளர் வேடம்), ஆலம் (உதவி கேட்பவர் வேடம்) ஆகிய சிறார்கள் நடித்திருந்தனர்.
குறவன், குறத்தி நாடகத்தில் குழந்தைகள் சாத்விக் (குறவன் வேடம்), தாரிகா லட்சுமி (குறத்தி வேடம்), ஸ்ரீராம், (அரசியல் தொண்டர்), சமிக்ஷா (அரசியல் தலைவர்) ஆகியோர் நடித்திருந்தனர்.
குறவன், குறத்தி குடும்பத்தினர் தங்கள் வாழ்க்கையில் வீடு போன்ற வசதிகள் இல்லாமல் கஷ்டப்படுவது போலவும், அவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உதவுவது போலவும் அந்த நாடகம் அமைந்திருந்தது.
அதில் முதல்-அமைச்சர், 'நம் நாட்டில் வசிக்கும் அவர்களை மட்டும் ஏன் ஒதுக்கி வைக்கிறீர்கள்? படிக்காத அவர்கள் ஒழுக்கமாகத்தான் இருக்கிறார்கள். படித்த நீங்கள்தான் இப்படி செய்கிறீர்கள்" என்று தீண்டாமை பற்றி பேசும் காட்சி அமைந்திருக்கிறது.
இறுதியில், அந்த குறவன், குறத்தி குடும்பத்தினருக்கு பட்டாவோடு வீடு, குழந்தைகளின் படிப்புக்கு உதவி ஆகியவற்றை வழங்குவதாக முதல்வர் உறுதி அளிக்கிறார்.
பின்னர் அவர்களுக்கு வாழை இலை போட்டு உணவு வழங்கிவிட்டு, குறத்திக்கு போடப்பட்ட இலையில் இருந்து உணவை எடுத்து முதல்வரும் சாப்பிடுவது போல அந்த நாடகம் அமைக்கப்பட்டு இருந்தது.
மேலும், பெரியாரிடம் பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி கேட்பது போலவும், அதற்கு பெரியார் பதிலளிப்பது போலவும் மற்றொரு நாடகம் உருவாக்கப்பட்டு இருந்தது. அதில், சாதி, மதம் அடிப்படையிலான பிரிவினைகளை பெரியார் எதிர்ப்பது போன்ற வசனங்கள் இடம் பெற்றிருந்தன.
இந்த நாடகங்கள், மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பலரது பாராட்டையும் பெற்றுள்ளன.
இந்த நிலையில், இந்த நாடகங்களில் நடித்த சிறுவர், சிறுமிகள் அனைவரும் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டு, அவர்களுக்கு சாக்லேட்களையும் வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
பின்னர் குழந்தைகளுக்கு புத்தகங்களை அவர்களுக்கு பரிசாக வழங்கினார்.
இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவில் மேற்குவங்க பேரவைக் கூட்டம்: ஆளுநர் அனுமதி
மேற்குவங்க சட்டப்பேரவையை வரும் மார்ச் 7ம் தேதி நள்ளிரவு 2 மணிக்கு கூட்ட ஆளுநர் ஜகதீப் தன்கர் அழைப்பு விடுத்தார் என, 'தினமணி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
"மாநில அமைச்சரவையின் பரிந்துரையின் அடிப்படையிலேயே அதிகாலையில் சட்டப்பேரவையைக் கூட்ட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது" என அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக, அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "அரசியலமைப்பு சட்டப் பிரிவு 174 (1)-ன் கீழ், மாநில அமைச்சரவையின் முடிவை ஏற்று, மாநில சட்டப்பேரவையை வரும் மார்ச் 7-ம் தேதி அதிகாலை 2 மணிக்கு கூட்ட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நள்ளிரவுக்குப் பிறகு, அதிகாலை 2 மணிக்கு சட்டப்பேரவையை கூட்டுவது வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு வழக்கத்துக்கு மாறானது. ஆனால், இது மாநில அமைச்சரவையின் முடிவு" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "கூட்டத்தொடரின் நேரம் வித்தியாசமாக குறிப்பிடப்பட்டிருப்பது குறித்து வியாழக்கிழமை மதியமே மாநில தலைமைச் செயலாளரை தொலைபேசியில் தொடர்புகொண்டு அவசர ஆலோசனை நடத்தினேன். ஆனால், வழக்கம்போல் பதில் கிடைக்கவில்லை. அதறு பிறகு, அவர்கள் குறிப்பிட்ட நள்ளிரவு நேரத்திலேயே சட்டப்பேரவையை கூட்ட அழைப்பு விடுத்தேன்" என்றும், ஆளுநர் தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், "இது சாதாரண அச்சுப்பிழை, பிற்பகல் (பிஎம்) என்பதற்கு பதிலாக, காலை (ஏஎம்) என்று அச்சடிக்கப்பட்டுவிட்டது" என்று மாநில அரசு அதிகாரிகளும் மாநில சட்டப்பேரவை சபாநாயகர் பிமன் பானர்ஜியும் விளக்கமளித்தனர்.
முன்னதாக, பட்ஜெட் கூட்டத்தொடருக்காக சட்டப்பேரவையைக் கூட்ட அழைப்பு விடுக்குமாறு, மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சார்பில் ஆளுநரிடம் பரிந்துரை சமர்ப்பிக்கப்பட்டது. அதனை திருப்பி அனுப்பிய ஆளுநர் தன்கர், "அரசியலமைப்புச் சட்ட விதிகளின் படி, இந்த பரிந்துரை மாநில அமைச்சரவையிடமிருந்து வர வேண்டும்" என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- ஹிஜாப்: முஸ்லிம் பெண்கள் எழுப்பும் பழமைவாதம், நாகரிகம் தொடர்பான கேள்விகள்
- ரஷ்யா யுக்ரேனுக்குள் துருப்புக்களை அனுப்புவது ஏன், புதின் விரும்புவது என்ன?
- சென்னை, தாம்பரத்துக்கு புதிய மேயர்கள் இவர்களா? கள நிலவரம்
- யுக்ரேன் மீதான ரஷ்ய ராணுவ நடவடிக்கை - கள படங்கள்
- அஜித்தின் 'வலிமை' - சினிமா விமர்சனம்
- ஏதும் விளையாத களர் நிலத்தில் விளையும் பாரம்பரிய நெல் களர்ப்பாலை: அழிவிலிருந்து காக்கும் கிராமம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்