பெண்கள் திருமண வயது அதிகரிப்பு அச்சம்: ஹைதராபாத்தில் அவசரத் திருமணங்கள்

    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசி இந்திக்காக

பெண்களின் திருமண வயதை அதிகரிக்கச் சட்டம் கொண்டு வரப்பட்டால், திட்டமிடப்பட்ட திருமணங்கள் அடுத்த சில ஆண்டுகளுக்குத் தடை செய்யப்படும் என்ற அச்சம், ஹைதராபாத்தில் 18 முதல் 20 வயதுக்குட்பட்ட இளம்பெண்களுக்கு அவசரமாக திருமணம் செய்து வைக்க வேண்டிய நிலைக்குக் குடும்பங்களை தள்ளியுள்ளது.

பெண் குழந்தைகளை பராமரிப்பதிலிருந்து பொருளாதார சுமைகளைக் குறைக்க விரும்பும் ஏழைகளிடையே, இத்தகைய இளம்பெண்களின் திருமணங்கள் முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையில் நடைபெறுவதை, திருமணங்களை நடத்தும் காஜி அல்லது மத குருக்கள் மற்றும் திருமணத்திற்கு பின் தம்பதிகளை ஆசீர்வதிக்கும் மதத் தலைவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

"பெண்களின் திருமண வயதை உயர்த்துவது தொடர்பாக முன்மொழியப்பட்டுள்ள சட்டம் குறித்து, ஹைதராபாத் மற்றும் நாடு முழுவதும் உள்ள முஸ்லிம் சமூகத்தினரிடையே, ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. இன்னும் மூன்று ஆண்டுகள் காத்திருக்க முடியாத நிலையில் உள்ள ஏழைகள், அவசர அவசரமாக தங்கள் பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைக்கின்றனர்," என, பிபிசி இந்தியிடம் மௌளானா சயீத் அல் காத்ரி தெரிவித்தார்.

பெண்களின் திருமண வயதை 18-லிருந்து 21 ஆக உயர்த்துவது தொடர்பாக முன்மொழியப்பட்டுள்ள சட்டத்தின் பல்வேறு ஷரத்துகளுக்கு எதிர்க்கட்சிகள் பல ஆட்சேபனைகளை எழுப்பியதைத் தொடர்ந்து, இச்சட்டம், நாடாளுமன்ற தேர்வுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது.

பல சந்தர்ப்பங்களில், திருமணம் நிச்சயிக்கப்பட்டு, இந்தாண்டில் திருமணங்களை நடத்த தேதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், திருமண வயதை 18-லிருந்து 21 ஆக உயர்த்தும் மத்திய அரசின் முடிவால், இந்த திருமணங்களை முன்கூட்டியே நடத்தும் நிலைக்கு அம்மக்களைத் தள்ளியுள்ளது.

தௌபீக்கின் மகளுக்கு ஒரே நாள் ஏற்பாட்டில் திருமணம் நடைபெற்றது. "பல விவாதங்களுக்குப் பின்னர், 4 அல்லது 5 மாதங்களுக்குப் பின் நிச்சயமும், ஒன்றரை ஆண்டுக்குப் பின் திருமணமும் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது," என தௌபீக் தெரிவிக்கிறார்.

ஆனால், புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தால், அவருடைய மகள் இன்னும் மூன்று ஆண்டுகளுக்குத் தன் கணவர் வீட்டுக்குச் செல்ல முடியாது என அவருடைய குடும்பத்திடம் சொல்லப்பட்டது. "என்னுடைய மகளுக்கு இப்போது 18 வயதாகிறது. அவள் 10-ம் வகுப்பு முடித்துவிட்டாள். அதனால், ஒரே நாளில் திருமணம் செய்து வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது," என்றார், தௌபீக்.

தங்களது இரண்டாவது மகளுக்குத் திருமணம் செய்துவைக்க தௌபீக்கின் குடும்பம் கடன் வாங்க வேண்டியிருந்தது. ஏனெனில், "கொரோனா காரணமாக, எங்களிடம் எந்த வருமானமும் இல்லை. கொரோனா சூழல் காரணமாக, செலுத்தாமல் இருந்த வாகனக் கடனை நாங்கள் செலுத்தியாக வேண்டியிருந்தது. இன்னும் கொஞ்சம் பணத்தை சேமித்து, ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் திருமணத்தை நடத்தலாம் என எண்ணியிருந்தோம்," என தௌபீக் தெரிவித்தார்.

"மணமகன் யுனானி மருந்துக் கடையில் பணியாற்றுகிறார். இப்போது நாங்கள் அவளுக்குத் திருமணம் செய்யாவிட்டால், புதிய சட்டம் காரணமாக, நாங்கள் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு மகளை பராமரிக்க வேண்டிய நிலை ஏற்படும். மேலும், அந்த சமயத்தில் இந்த மாதிரியான சிறந்த வரனை நாங்கள் எதிர்பார்க்க முடியாது," என்றார் தௌபீக்.

"மணமகள் தன் பெற்றோர் வீட்டிலிருந்து விடைபெற்றுச் செல்லும் பிடாய் நிகழ்வு இப்போது நடத்தவில்லை. இந்த ஆண்டில் அதனை செய்வோம்," என்றார் தௌபீக்.

"மேற்கத்திய நாடுகள் அல்லது அரபு நாடுகளைப் போல் அல்லாமல், ஆணும் பெண்ணும் சந்தித்துத் திருமணத்தை முடிவு செய்வதில்லை. இந்தியாவைப் பொறுத்தவரையில் இது ஓர் ஆண் மற்றும் பெண்ணின் திருமணம் மட்டுமல்ல. பழக்கவழக்கங்கள், கலாச்சாரம் மற்றும் மொழி ஆகியவற்றின் அடிப்படையில், பல சுற்று விவாதங்களுக்குப் பிறகு, இரு குடும்பங்களுக்கு இடையிலான உறவே திருமணம்," என மௌளானா சயீத் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களாக இத்தகைய பல திருமணங்களை நடத்திய காஜி அஸ்மத்துல்லா கட்ரி, பிபிசி இந்தியிடம் கூறுகையில், "புதிய சட்டம் குறித்த கவலையின் காரணமாக, ஏழைகள் மட்டுமல்ல, நடுத்தர மற்றும் பணக்கார குடும்பங்களிலும், தங்கள் மகள்களுக்கு அவசரமாக திருமணம் செய்துவைக்கின்றனர். ஐதராபாத்தில் 18 வயதில் பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்துவைக்கும் நடைமுறை உள்ளது. நடுத்தர வர்க்கத்தினரும், பணக்காரர்களும் மூன்றாண்டு காத்திருப்புக் காலத்தில் வரன்கள் கடந்துபோவதை விரும்பவில்லை. மேலும், ஏழைகள் பலரும் தங்களின் பெண் குழந்தைகளை கூடுதலாக இன்னும் மூன்று ஆண்டுகளுக்குப் பராமரிக்கும் சுமையை தாங்கள் சுமக்க வேண்டிவரும் என கருதுகின்றனர்." என்றார்.

"எங்களுக்குத் தெரிந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வட்டாரத்திலேயே குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இத்தகைய திருமணங்கள் நடைபெற்றுள்ளன. இவர்களுக்குத் திருமணம் செய்து வைக்க இன்னும் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும் என்ற பயம் தான் இதற்கு முக்கியக் காரணம்." என தௌபீக் தெரிவித்தார்.

திருமணங்கள் தள்ளிப்போனால், நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் முறிந்துபோகலாம் என்ற அச்சம் உள்ளது என மௌளானா சயீத் தெரிவித்தார். "இம்மாதிரியான சூழல்களில், தங்களுடைய பொறுப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சுவது நிச்சயமாக ஏழைகள்தான். இவர்களில் பலர், திருமணமான தம்பதிகளுக்கு ஆசீர்வாதம் பெறுவதற்காக என்னிடம் வருகிறார்கள், மேலும் அனைத்து காஜிக்களும் பல்வேறு இடங்களில் திருமணங்களை நடத்துவதில் பரபரப்பாக இருக்கிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம்" என தெரிவித்தார்.

ஹைதராபாத்தில் நிலவும் இந்த போக்கு மற்ற நகரங்கள் அல்லது மாநிலங்களில் காணப்படவில்லை. உதாரணமாக, பெங்களூருவில், "இத்தகைய திருமணங்கள் நடைபெறுகின்றன. ஆனால், வேறு சில இடங்களில் காணப்படும் அளவுக்கு நடைபெறவில்லை. கர்நாடகாவின் சூழல் வேறு," என, பெங்களூரு ஜாமியா மசூதியின் மவுலானா மக்சூட் பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.

தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத கர்நாடகாவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், "குறிப்பாக உழைக்கும் வர்க்கத்தினரிடையே நீண்ட நேரம் வேலை செய்வது, பெற்றோரின் ஆற்றலைக் குறைக்கிறது என்பது உண்மை. இதனால், தங்கள் குழந்தைகளை முடிந்தவரை விரைவாக தொழிலாளர் நீரோட்டத்தில் சேர்க்க மக்களைக் கட்டாயப்படுத்துகிறது."

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: