You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தாய்க்கு மறுமணம் செய்துவைத்த மகள்: இணையத்தில் வைரலாகும் படங்கள், காணொளி
(இன்று 22.12.2021 புதன்கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்)
தாய்க்கு மறுமணம் செய்துவைத்த மகளின் சமூக வலைத்தள பதிவு இணையத்தில் வைரலாகி வருவதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கு மறுமணம் என்பது இன்றும் சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க இன்றைய இளைஞர்கள் சமூக சிந்தனையுடன் எடுக்கும் முயற்சி பலராலும் பாராட்டப்படுகின்றன. பெறும் வரவேற்பையும் பெறுகிறது. அப்படி பல சம்பவங்கள் சமீப காலங்களில் நடைபெற்று வருகின்றன.
அண்மையில் தமிழ்நாட்டில் தனது தாயின் திருமணத்திற்கு மகன் தாலி எடுத்துக் கொடுத்த நிகழ்வு இணையத்தில் வைரலாகி பலராலும் பாராட்டப்பட்டது. அதேபோல் தனது தாய்க்கு, மகள் ஒருவர் வரன் தேடியதும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், இளம் பெண் ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில், தனது தாயின் திருமண நிகழ்வுகள் குறித்துப் பதிவிட்டது இணையத்தில் வைரலாகி பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.
மேலும், அப்பெண் திருமணம் தொடர்பான சில காணொளிகளையும் அவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, தனது தாயின் புதிய வாழ்க்கை தொடங்குவது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து நெட்டிசன்கள் பலரும் தாய்க்கு திருமண வாழ்த்து தெரிவித்தும், மகிழ்ச்சியாகப் பதிவிட்ட பெண்ணுக்கு (மகளுக்கு) பாராட்டுக்களைத் தெரிவித்தும் வருவதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் படத்தை நீக்கக் கோரிய மனு: ரூ.1 லட்சம் அபராதம் விதித்த கேரள உயா்நீதிமன்றம்
கொரோனா தடுப்பூசி சான்றிதழில் இருந்து பிரதமரின் படத்தை நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை கேரள உயா்நீதிமன்றம் அபராதத்துடன் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்ததாக தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.
'பிரதமா் என்பவா், அரசியல் கட்சியின் தலைவா் அல்ல; அவா் தேசத்தின் தலைவா். அவருடைய படம் இருக்கும் சான்றிதழை வைத்திருப்பதை இழிவாகக் கருதக் கூடாது' என நீதிமன்றம் மனுதாரரை அறிவுறுத்தியுள்ளது. மேலும், மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி சான்றிதழில் இருந்து பிரதமரின் உருவப்படத்தை நீக்கக் கோரி பீட்டா் மையலிபரம்பில் என்பவா் கேரள உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், 'தனது தனிப்பட்ட விவரங்கள் இருக்கும் சான்றிதழில் பிரதமரின் படம் இருப்பது, தனிநபரின் அந்தரங்கத்தில் தலையிடும் செயல்' என்று அவா் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு, நீதிபதி பி.வி.குஞ்ஞிகிருஷ்ணன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி கூறியதாவது:
தடுப்பூசி சான்றிதழில் 'தடுப்பூசியால் மட்டுமே கொரோனவை ஒழிக்க முடியும்' என்ற விழிப்புணா்வு வாசகத்துடன் பிரதமரின் உருவப்படம் இடம்பெற்றுள்ளது. அதில் என்ன தவறு இருக்கிறது?
ஒருவா் எந்தக்கட்சியைச் சோ்ந்தவராக இருந்தாலும் அரசமைப்புச் சட்டப்படி பிரதமா் பதவிக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுவிட்டால், அவா் தேசத்தின் தலைவராகிவிடுகிறாா். அவரை பாஜக பிரதமா் என்றோ, காங்கிரஸ் பிரதமா் என்றோ அழைப்பதில்லை. பிரதமரின் அரசியல் நிலைப்பாடு, கொள்கை முடிவுகள் மாறுபட்டிருக்கலாம். ஆனால், அதற்காக கொரோனா தடுப்பூசி சான்றிதழில் விழிப்புணா்வு வாசகத்துடன் பிரதமரின் உருவப்படம் இடம்பெற்றுள்ளதை இழிவாகக் கருதக்கூடாது.
எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும், மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. அந்தத் தொகையை மாநில சட்டப் பணிகள் ஆணையத்திடம் 6 வாரங்களில் மனுதாரா் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால், மனுதாரரின் சொத்தில் இருந்து அந்தத் தொகையை வசூலிக்க மாநில சட்டப் பணிகள் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்.
மனுதாரா் அரசியல் உள்நோக்கத்துடன், வீண் விளம்பரத்துக்காக மனு தாக்கல் செய்துள்ளதாகத் தெரிகிறது. மனுதாரருக்கு இந்த அபராதத் தொகை அதிகம் என்பதை அறிவோம். ஆனால், அற்ப காரணங்களுக்காக மனு தாக்கல் செய்யும்போது ஏற்படும் விளைவுகளை சமூகம் அறிய வேண்டும் என்பதற்காக, இந்த அபராதம் விதிக்கப்படுகிறது என்று நீதிபதி கூறியதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேச விரோதி சொல் சட்டத்தில் விளக்கப்படவில்லை - மக்களவையில் உள் துறை இணையமைச்சர்
தேச விரோதி என்ற வார்த்தை சட்டத்தில் தெளிவாக விளக்கப்படவில்லை, வரையறுக்கப்படவில்லை என மக்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் தெரிவித்ததாக இந்து தமிழ்த்திசையில் செய்தி வெளியாகியுள்ளது.
ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி, " தேசவிரோதி" என்ற வார்த்தைக்கு பொருள் என்ன, அதுகுறித்து சட்டத்தில் ஏதேனும் குறிப்பிடப்பட்டுள்ளதா, நடைமுறையில் இருக்கும் எந்தச்சட்டத்திலும் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளதா?
கடந்த 3 ஆண்டுகளாக தேசவிரோத நடவடிக்கை என்ற பெயரில் பல்வேறு மாநிலங்களில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரங்களையும் வெளியிட வேண்டும் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு மக்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் எழுத்துபூர்வமாக பதில் அளித்தார். அவர் கூறுகையில் " தேசவிரோதி என்ற வார்த்தை சட்டத்தில் தெளிவாக வரையறுக்கப்படவில்லை, விளக்கப்படவும் இல்லை.
அதேசமமயம், நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் தீங்கு விளைவிக்கும் சட்டவிரோத மற்றும் பதற்றத்தைத் தூண்டும் நடவடிக்கைகளைக் கடுமையாகக் கையாள்வதற்கு குற்றவியல் சட்டம் மற்றும் பல்வேறு நீதித்துறை தீர்ப்புகள் உள்ளன.
இதன்படி, அரசியலமைப்புச் சட்டம் 1976ல் 42-வது திருத்தத்தில் 31டி பிரிவில் அதாவது அவசரநிலை அமல்படுத்தப்பட்ட காலத்தில் தேசவிரோத நடவடிக்கை குறித்து வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால், 1977ம் ஆண்டு 43-வது திருத்தத்தில் அது நீக்கப்பட்டது.
சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டிய பொறுப்பு, குறிப்பாக விசாரணை, வழக்குப்பதிவு மற்றும் குற்றவிசாரணை, ஒருவரின் உயிர் மற்றும் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவை மாநில அரசின் பொறுப்புக்குள் வரும். காவல்துறை, பொதுஅமைதி ஆகியவை மாநில அரசின் கட்டுப்பாட்டில் வரும். தேசவிரோத நடவடிக்கையில் மாநில அரசுகளால் கைது செய்யப்பட்ட விவரங்கள் குறித்து மத்திய அரசிடம் எந்த விவரங்களும் இல்லை" எனத் தெரிவிக்கப்பட்டதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- ஜக்கியை நான் ஆதரித்திருந்தால் என்ன சொல்லியிருப்பார்கள்? சீறும் சீமான்
- 6.6 கோடி ஆண்டுகள் சிந்தாமல் சிதறாமல் புதைந்திருந்த டைனோசர் முட்டை கரு - அறிவியல் அதிசயம்
- தடுப்பூசி போட்டால் மதுவுக்கு 10% தள்ளுபடி, இலவச எண்ணெய்: மக்களை கவருமா ஊக்கப்பரிசுகள்?
- "அண்ணாமலை என்ன அதிமுக அட்வைசரா?" சீறும் ஜெயக்குமார் - ஓபிஎஸ் பேச்சுக்கு புது விளக்கம்
- ஒமிக்ரான் திரிபுகளுக்கும் எச்ஐவிக்கும் தொடர்பு உண்டா? ஆராயும் தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்