தனுஷ்- ஐஸ்வர்யா பிரிவு: திருமண உறவில் சேர்ந்து வாழ்வதை போலவே பிரிவையும் இயல்பாக்க வேண்டியது ஏன்?

    • எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
    • பதவி, பிபிசி தமிழுக்காக

நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் கணவன் மனைவி என்ற உறவில் இருந்து பிரிவதாக நேற்று இரவு தங்களது அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கங்களில் அறிவித்திருந்தனர்.

பிரிவை அறிவித்த தனுஷ்- ஐஸ்வர்யா

நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவுக்கும் கடந்த 2004ம் ஆண்டு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட காதல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரு மகன்கள் இருக்கிறார்கள்.

18 ஆண்டுகள் திருமண பந்தத்திற்கு பிறகு இருவரும் பிரிகிறோம், எங்கள் முடிவிற்கு மதிப்பளிக்க வேண்டுகிறோம் என இருவரும் தனித்தனியாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் நேற்று இரவு பதிவிட்டார்கள்.

இந்த தம்பதியினரின் எதிர்பாராத இந்த முடிவு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, இருவர் திருமண பந்தத்தில் இணைவது எப்படி இயல்பான ஒன்றோ அது போன்றே பிரிவதும் இயல்பான ஒன்றாக்க வேண்டும் எனவும் குழந்தைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவை அவர்கள் தவிர்த்திருக்கலாம் என்றும் கலவையான பதிவுகளை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது.

மேலும் ரஜினிகாந்திற்கு ஆறுதல் கூறியும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இன்னொரு பக்கம் 'WE ARE WITH YOU DHANUSH', 'WE LOVE DHANUSH' என்ற ஹேஷ்டேக்குகளை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

விவாகரத்து இயல்பானதாக்க வேண்டும்

தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதியின் பிரிவை போலவே சமந்தா - நாக சைதன்யா தம்பதி கடந்த வருடத்தில் பிரிவை அறிவித்த போதும் 'Normalising Divorce' என்ற கருத்தை அதிகம் சமூக வலைதளங்களில் பார்க்க முடிந்தது. உண்மையில் நம் சமூகத்தில் விவாகரத்து எப்படி பார்க்க படுகிறது, அதன் பின்னுள்ள அழுத்தம் என்ன இதை எப்படி கையாள வேண்டும் என்பது தொடர்பாக எழுத்தாளர் கொற்றவையிடம் பிபிசி தமிழுக்காக பேசினேன்,

"இன்று நான் பார்த்த பல பதிவுகளிலுமே இவர்களது பிரிவு குறித்து எதிர்மறையான கருத்துகளைத்தான் பார்த்தேன். 'இருவரும் சேர்ந்து வாழ முடியவில்லை என்றால் எதற்கு திருமணம் செய்து கொள்கிறார்கள், குழந்தைகள் பற்றி யோசிக்க மாட்டார்களா? குழந்தைகள் தவித்து போவார்கள்' என்ற ரீதியிலான பதிவுகள்தான் அதிகம். இவை அனைத்துமே முட்டாள்தனமான பதிவுகள் என்பேன்.

இருவர் சேர்ந்து வாழ்வதும், பிரிவதும் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை. ஆனால் இங்கு குடும்பம் என்பது சமூகத்திற்காக என்று மாறிவிட்ட நிலையில் எல்லாரும் அதில் கருத்து சொல்லி கொண்டிருக்கிறார்கள்.

இவர்களுக்கு என்ன புரியவில்லை என்றால் நம் வாழ்வின் நோக்கமே திருமணம் மற்றும் அதன் பிறகு குழந்தைகளுக்காக வாழ வேண்டும் என்பதுதான் என்று கட்டமைத்து வைத்திருக்கிறார்கள். அப்படி எல்லாம் ஒன்றுமே கிடையாது. திருமணம் என்பது நம் வாழ்வின் ஒரு பகுதி மட்டுமே," என்கிறார் கொற்றவை.

குழந்தைகளை காரணம் காட்டுவது சரியல்ல

"அதில் நமக்கு பொருந்தக்கூடிய துணைகளோடு மட்டும்தான் வாழ முடியும். எப்பொழது அது பொருத்தமாக இல்லை என்று நினைக்கிறோமோ அப்போது பிரிவது என்பது மிக இயல்பாக நடக்க வேண்டிய ஒன்று. இங்கு எல்லோரும் குழந்தைகளை காரணமாக காட்டுகிறார்கள். அம்மா அப்பா சண்டை போட்டு கொண்டு மகிழ்ச்சி இல்லாத குடும்பமாக இருந்தால் அந்த சூழ்நிலைதான் குழந்தைகளுக்கு இன்னும் கடினமான ஒன்று."

"அம்மா அப்பா மகிழ்ச்சியாக இல்லை, அவர்களுக்குள் ஏதோ பிரச்னை என்பதை எல்லாம் குழந்தைகள் மிக எளிதாக புரிந்து கொள்வார்கள். அப்படியான சூழ்நிலை அவர்களுக்கு ஆரோக்கியமானது கிடையாது. அதற்கு பதிலாக குழந்தைகளுக்கு சூழ்நிலையை புரிய வைத்து, கணவன் மனைவியாகதான் நாங்கள் பிரிகிறோம் அம்மா அப்பாவாக எப்பொழுதும் குழந்தைகளை வளர்க்க முடியும் என்ற புரிதலை அவர்களுக்கு கொடுக்க முடியும். என்னுடைய வாழ்க்கையே அதற்கு உதாரணம். "

"இதுபோன்ற ஒரு முடிவு எடுத்ததற்காக எப்பொழுதும் என் மகள் என் மீது வருத்தம் கொள்ளவில்லை. இந்த முடிவு பற்றி அவளிடம் கேட்டபோது கூட, 'உனக்கு எது மகிழ்ச்சியோ அதை செய்' என்றுதான் சொன்னாள். அந்த அளவுக்கு குழந்தைகள் தயாராகி விடுகிறார்கள். இதுபோன்ற பிரிந்த பெற்றோர்களிடம் வளரும் குழந்தைகள் இன்னும் சுந்தந்திரமாக, பக்குவப்பட்டவர்களாகவே வளர்கிறார்கள். ஆனால் சமூகம் இன்னும் பழங்கால கதைகளையும் ஆணாதிக்க சிந்தனைகளையும் திணித்து கொண்டிருக்கிறது."

பெண்களுக்கே பாதிப்பு அதிகம்

இதுபோன்ற கட்டாய சூழ்நிலைகளில் வாழ்வதால் குறிப்பாக பெண்களுக்கு அதிகம் மனநிலை தவறிய சம்பவங்களும் உண்டு. இது மட்டுமில்லாமல் பயம், மன அழுத்தம், உடல் ரீதியிலான கொடுமைகள் என அனைத்தும் நடக்கிறது. இதற்கெல்லாம் சமூகம் என்ன பொறுப்பெடுத்து கொள்ளும்? ஒத்து வரவில்லை என்றால் பிரிவதுதான் ஆரோக்கியமான விஷயம் என்பதை இந்த சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். அதிலும் இது போன்ற பிரபலங்களுக்கு ஏற்படக்கூடிய அழுத்தம் இன்னும் அதிகமாக இருக்கும்.

அதன் காரணமாகவே அவர்கள் உடனடியாக இந்த முடிவு எடுக்கும் சூழலுக்கு தள்ளப்பட மாட்டார்கள். தங்களுக்குள்ளேயே சரி செய்துவிடதான் முனைவார்கள். பின்பு முடியாது என்ற சூழலில் பிரிந்து விடுகிறார்கள்.

இங்கு யாருமே சம்பந்தப்பட்டவர்களின் மனநிலை குறித்து யோசிக்காமல், குடும்பம் என்ற கட்டமைப்பை புனிதப்படுத்துவதைதான் நோக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

பிரிவை ஏற்று கொள்ள முடியாமல் அந்த உறவில் சேர்ந்திருந்து குழந்தைகளுக்கு வருங்காலத்தில் உன்னுடைய துணையை இப்படியும் நடத்தலாம் என்ற தவறான முன்னுதாரணத்தை தான் காட்டுவோம். அதற்கு புரிதலோடு பிரியும் போது இபப்டியும் உன் துணையை சந்தோஷமாக நடத்தலாம் என அந்த குழந்தை கற்கும். இவ்வளவு விஷயங்கள் இதில் இருக்கிறது.

பிரபலங்கள் பிரிவிலே கூட பெரும்பாலும் பெண்ணையே குற்றம் சொல்லும் சமூகத்தில் சாதாரண தம்பதிகள் பிரிவிலும் இங்கு அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே. 'படித்து வேலைக்கு செல்லும் திமிரு' என காரணம் வேறு சம்பந்தமே இல்லாமல் சொல்வார்கள்.

முன்பெல்லாம் குடும்பங்கள் பிற்போக்குத்தனமாக இருந்து பெண்கள் ஆண்களை சார்ந்தே இருந்ததால் விவாகரத்துக்கு பயப்பட்டார்கள். ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டதால் பெண்கள் துணிச்சலாக அந்த முடிவை எடுக்கிறார்கள்.

அதனால் ஓர் உறவை பிரிந்த பின்பு எப்படி நண்பர்களாகவும், குழந்தைகளுக்கு நல்ல அம்மா அப்பாவாக பயணிக்க முடியும் என்பதைதான் பார்க்க வேண்டும். எல்லா வீடுகளிலும் அம்மா அப்பா 24 மணி நேரமும் சேர்ந்தேவா இருக்கிறார்கள். கல்யாணம் முடித்து அப்பா வேறு ஓர் ஊரில் கூட வேலை செய்யலாம்.

அதனால், இந்த பழமைவாத சிந்தனைகளை தவிர்த்து விட்டு குடும்பத்திற்குள் தலையிடுவதை சமூகம் நிறுத்த வேண்டும். பிரிவையும் இயல்பாக்க வேண்டும் " என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: