You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னை, தாம்பரத்துக்கு புதிய மேயர்கள் இவர்களா? கள நிலவரம்
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
`சென்னை மாநகராட்சியை அலங்கரிக்கப் போகும் முதல் பட்டியலின பெண் மேயர் யார்?' என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. `மேயராக வரப் போகிறவர்களின் முழு பின்னணியையும் தலைமை விசாரித்து வருகிறது. படித்தவர்களாக மட்டுமல்லாமல், சர்ச்சைப் பின்னணி இல்லாதவர்களை நியமிப்பதையே முக்கியமானதாக முதல்வர் நினைக்கிறார்' என்கின்றனர் தி.மு.க நிர்வாகிகள்.
தமிழ்நாட்டில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 21 மாநகராட்சிகளையும் தி.மு.க கூட்டணி கைப்பற்றியது. இதில் பெரும்பாலான மாநகராட்சிகளில் முழுப் பெரும்பான்மையுடன் தி.மு.க உள்ளது. இதையடுத்து, `ஒவ்வோர் மாநகராட்சிக்கும் மேயர் வேட்பாளர் யார்?' என்ற விவாதம் களைகட்டியுள்ளது.
சென்னை மாநகராட்சியில உள்ள 200 வார்டுகளில் 167 இடங்களில் தி.மு.க போட்டியிட்டது. இதில் 153 இடங்களை தி.மு.க பெற்றுள்ளது.
மாநகராட்சி வரலாற்றில் முதல்முறையாக பட்டியலின பெண், மேயராக பதவி வகிக்க இருக்கிறார்.
அந்த வரிசையில் மாநகராட்சி வார்டுகளில் வெற்றி பெற்ற பெண்களில் 13 பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இவர்களில் படித்தவர்கள் மற்றும் எந்தவித சர்ச்சைப் பின்னணியும் இல்லாதவர்களாகப் பார்த்து தி.மு.க தலைமை நியமிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதன்படி பார்த்தால், கொளத்தூரில் மாநகராட்சியின் 70 ஆவது வார்டில் போட்டியிட்ட ஸ்ரீதரணி, 159 ஆவது வார்டில் போட்டியிட்ட அமுதபிரியா செல்வராஜ், 74 ஆவது வார்டில் போட்டியிட்ட செங்கை சிவத்தின் குடும்பத்தைச் சேர்ந்த பிரியா ஆகியோர் போட்டியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில், ஸ்ரீபிரியா முதுகலை பட்டதாரியாகவும் இருக்கிறார். இவர்களைத் தவிர, 100 ஆவது வார்டில் வெற்றி பெற்றுள்ள வசந்தி பரமசிவமும் களத்தில் இருக்கிறார். இவர் ஏற்கெனவே மாமன்ற உறுப்பினராக இருந்த அனுபவம் உள்ளவர். இவர்களில் யாராவது ஒருவரின் பெயரை தி.மு.க தலைமை தேர்வு செய்யலாம் எனவும் அக்கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இவர்களில் சிலர் தங்களுக்கு வேண்டிய அதிகார மையங்கள் மூலமாக காய்களை நகர்த்துவதாகக் கூறப்படுகிறது.
துணை மேயர் பதவிக்கு போட்டி போடும் கட்சிகள்
அடுத்ததாக, துணை மேயர் பதவியைப் பொறுத்தவரையில் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் நே.சிற்றரசுவின் பெயர் முன்வரிசையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவரது கட்டுப்பாட்டில் இருந்த சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, அண்ணாநகர், ஆயிரம் விளக்கு ஆகிய பகுதிகளில் இருந்த 21 வார்டுகளையும் தி.மு.க கைப்பற்றியிருப்பதை கூடுதல் சிறப்பாகவும் தி.மு.கவினர் முனவைக்கின்றனர்.
இந்தப் பந்தயத்தில் வடக்கு மாவட்ட பொறுப்பாளராக இருக்கும் இளைய அருணாவின் பெயரும் பேசப்படுகிறது. `இவர்களில் யார் துணை மேயர்?' என்ற பட்டிமன்றமும் நடந்து வருகிறது.
இதையடுத்து, புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சியின் நிலவரம் குறித்து தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தோம்.
தாம்பரத்தில் யாருக்கு வாய்ப்பு?
சென்னையைப் போலவே, தாம்பரம் மாநகராட்சியும் பட்டியலின பெண் மேயருக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள 70 வார்டுகளில் தி.மு.க 48 இடங்களில் வென்றுள்ளது. உதயசூரியன் சின்னத்தில் நின்ற மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளர் யாகூப்பையும் கணக்கிட்டால் 49 இடங்கள் வருகின்றன.
இதுதவிர, காங்கிரஸ் 2 இடங்களிலும் வி.சி.க, ம.தி.மு.க, சி.பி.எம் ஆகிய கட்சிகள் தலா ஓர் இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. அ.தி.மு.க ஒன்பது இடங்களைப் பிடித்துள்ளது.
அங்கு மேயர் பதவியைப் பெறுவதற்கு எட்டு பெண்களிடையே போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது. தாம்பரம் மாநகராட்சியின் 32 ஆவது வார்டில் வென்ற வசந்தகுமாரி, 4 ஆவது வார்டில் வென்ற சித்ரா, 12 ஆவது வார்டில் வென்ற சத்யா, 27 ஆவது வார்டில் வென்ற மகேஸ்வரி, 31 ஆவது வார்டில் வென்ற சித்ரா தேவி ஆகியோரது பெயர்கள், மேயர் பதவிக்கான ரேஸில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதில், வசந்தகுமாரி பி.டெக் பட்டதாரியாக இருக்கிறார். ரேணுகா, மகேஸ்வரி ஆகியோர் பட்டதாரிகளாக உள்ளனர். `இவர்களில் யாருக்காவது வாய்ப்பு கிடைக்குமா அல்லது சீனியாரிட்டி அடிப்படையில் மேயர் பதவி கிடைக்குமா?' என்பது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இங்கு, துணை மேயர் பதவியைப் பொறுத்தவரையில் ஜெகத்ரட்சகனின் உறவினரான குரோம்பேட்டை காமராஜ், ஜோசப் அண்ணாதுரை ஆகியோர் முயற்சி செய்து வருகின்றனர்.
கூட்டணிக் கட்சி என்ற முறையில் காங்கிரஸ் கட்சியின் செந்தில்குமாரும் மனிதநேய மக்கள் கட்சியின் தாம்பரம் யாகூப்பும் தங்கள் தலைமையின் மூலம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
``சென்னை, தாம்பரம் ஆகிய மாநகராட்சிகளில் மேயர் தேர்வு எப்படிப்பட்டதாக இருக்கும்?'' என தி.மு.கவின் சட்டத்துறை இணைச் செயலாளர் வீ.கண்ணதாசனிடம் பிபிசி தமிழ் சார்பில் கேட்டோம்.
`` மாநகராட்சிகளின் நிர்வாகத்தில் நேர்மையாகவும் துணிவாகவும் முடிவெடுத்து முதலமைச்சரின் வேகத்துக்கு ஈடுகொடுப்பது போல இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். அதேநேரம், மாநகராட்சி நிர்வாகத்தில் மிகவும் பக்குவமாகச் செயல்பட வேண்டும் எனவும் கருதுகின்றனர். காரணம், சென்னை மாநகராட்சி மேயர் பதவி என்பது ஒரு மாநிலத்துக்கு இணையானது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைவிடவும் பெரிது. அதற்கேற்ற நிர்வாகத் திறமையும் செயல் வேகமும் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் தலைமையின் நோக்கம். அப்படிப்பட்ட ஒருவரை தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன'' என்கிறார்.
பிற செய்திகள்:
- களர்ப்பாலை நெல் ரகத்தை காப்பாற்றும் நாகப்பாடி விவசாயிகள்: களர் நிலங்களுக்கு தீர்வா?
- அஜித்தின் 'வலிமை' - சினிமா விமர்சனம்
- யுக்ரேன் பதற்றம்: புதினின் முடிவால் இந்தியாவுக்கு என்ன சிக்கல்?
- தாவூத் இப்ராஹிம் உடன் தொடர்பு இருப்பதாக மகாராஷ்டிர அமைச்சர் கைது
- 'மரணம் ஏற்படும் கடைசி நொடியில் வாழ்க்கையின் பிளாஷ்பேக் தெரியும்'
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்