மகாராஷ்டிரா: தாவூத் இப்ராஹிம் உடன் தொடர்பு இருப்பதாக மாநில அமைச்சர் கைது

மாகாராஷ்டிரா மாநில சிறுபான்மை விவகார அமைச்சர் நவாப் மாலிக், நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பண மோசடி விசாரணையில் அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.

இன்றைய நாளிதழில் வெளியான முக்கியச் செய்திகளைப் பார்ப்போம்.

மகாராஷ்டிரா சிறுமான்மை விவகார அமைச்சர் நவாப் மாலிக், அமலாக்கத் துறையால் புதன் கிழமையன்று கைது செய்யப்பட்டுள்ளார். தெற்கு மும்பையில் உள்ள மத்திய ஏஜென்சி அலுவலகத்திற்கு அவர் அழைத்து வரப்பட்டதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதுகுறித்த செய்தியில், "நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவருடைய கூட்டாளிகளின் பணமோசடி நடவடிக்கைகள் தொடர்பான விசாரணையில் மாநில சிறுபான்மையின விவகார அமைச்சர் நவாப் மாலிக்கை மார்ச் 3-ஆம் தேதி வரை அமலாக்க இயக்குநரகத்தின் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தெற்கு மும்பையின்பலார்ட் எஸ்டேட் பகுதியிலுள்ள அலமாக்க இயக்குநரகத்தின் அலுவலகத்தில் காலை 8 மணி முதல் சுமார் ஐந்து மணி நேரம் விசாரணைக்குப் பின் மாலிக் கைது செய்யப்பட்டார்," என்று தெரிவித்துள்ளது.

சிறப்புப் பேருந்து இல்லாததால், தட்டு வண்டியில் செல்லும் மாணவர்கள்

புதுவையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படாததால், மாணவர்கள் தட்டுவண்டியில் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

அதுகுறித்த செய்தியில், "கடந்த காலங்களில் மாணவர்களுக்காக மாணவர் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்தப் பேருந்துகளில் ஒரு ரூபாய் கட்டணத்தில் புதுவையில் எங்கு வேண்டுமானாலும் மாணவர்கள் ஏறி, இறங்கிக் கொள்ளலாம்.

முழுவதும் மாணவர்களுக்காகவே இந்தப் பேருந்து இயக்கப்பட்டது. கிராமப்புறத்தில் இருந்து நகரப் பகுதியிலுள்ள படிக்க வரும் மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்பட்டுப் பல நாட்கள் ஆகியும் மாணவர் சிறப்புப் பேருந்துகள் இன்னும் இயக்கப்படாமல் உள்ளது. இதனால் கிராமப் புறங்களில் இருந்து வரும் மாணவர்கள் நாளொன்றுக்கு 30 ரூபாய் வரை செலவு செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது.

சில மாணவர்கள் நடந்தும் பைக்கில் செல்பவர்களிடம் லிஃப்ட் கேட்டும் பள்ளிக்குச் சென்று வருகின்றனர். கருணை உள்ளம் கொண்டவர்கள் தட்டு வண்டிகளிலும் மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் சென்று விடுகின்றனர்," என்று தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை விசாரிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிக்கும் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்திற்கு மேலும் 3 மாதம் கால அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கிராம மக்கள் நடத்திய தொடர் போராட்டத்தின் 100-வது நாளில் நடைபெற்ற கலவரத்தின் போது, காவல்துறையினர் நடத்திய துப்பாகிச் சூடு மற்றும் தடியடியில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

இதைத் தொடர்ந்து வன்முறை குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அப்போதைய முதலமைச்சர் பழனிசாமி அரசு அமைத்தது.

கடந்த ஆண்டு மே 14-ஆம் தேதியன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விசாரணையின் இடைக்கால அறிக்கையை ஆணையத் தலைவர் அருணா ஜெகதீசன் தாக்கல் செய்தார்.

ஆணையத்தின் கால அவகாசம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீட்டிக்கப்பட்டது. இந்த அவகாசம் கடந்த 22-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில் அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கு மேலும் 3 மாதங்கள் கால அவகாசம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மே 22-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: