உத்தர பிரதேசம்: உறவுகளை பறிகொடுத்த குடும்பங்கள், நீதி கேட்கும் கிராமம் – கள நிலவரம்

பட மூலாதாரம், SHUBHAM KOUL/BBC
கடந்த ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி காலை, 55 வயதான நக்ஷத்ர சிங், தனது கிராமமான நாம்தார் பூர்வாவிலிருந்து 70 கிமீ தொலைவில் உள்ள திகுனியாவில் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்பதற்காக வீட்டை விட்டுச் சென்றார்.
விவசாயிகள் இயக்கத்தில் சேரச் சென்ற அவரால் டெல்லிக்கு போக முடியவில்லை, அதனால் திகுனியா செல்வதாகவும், இன்னும் சில மணி நேரத்தில் திரும்பி வருவேன் என்றும் குடும்பத்தினரிடம் கூறினார்.
கடைசியில் நக்ஷத்ர சிங் வீடு திரும்பினார், ஆனால் உயிருடன் அல்ல.
அன்று லக்கிம்பூர் கேரியின் திகுனியாவில் ஜீப்பின் அடியில் சிக்கி உயிரிழந்த 4 விவசாயிகள் மற்றும் ஒரு பத்திரிகையாளரில் நக்ஷத்ர சிங்கும் ஒருவர்.
இரண்டு குடும்பங்கள், ஒரே போன்ற வலி
நக்ஷத்ர சிங்கின் குடும்பம் இந்த வேதனையை இன்றும் அனுபவித்து வருகிறது.
இது குறித்துப்பேசிய அவரது மனைவி ஜஸ்வந்த் கெளர்,"அவர் முதன்முறையாக விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொள்ளச்சென்றார். அவர் பார்க்க மட்டுமே சென்றிருந்தார். சண்டை, தகராறுக்கு போகவில்லை. போனால் திரும்பி வரமாட்டார் என்று நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை. நாங்கள் சிரித்தபடி விடை கொடுத்தோம். இப்போது போனால் ஓரிரு மணி நேரத்தில் வந்துவிடுவார் என்று நினைத்தோம்," என்று கூறினார்.

பட மூலாதாரம், SHUBHAM KOUL/BBC
அதே நாளில் ஜெய்ப்ரா கிராமத்தில் வசிக்கும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஷியாம் சுந்தர் நிஷாத் என்பவரும் பன்பீர்பூரில் ஆண்டுதோறும் நடக்கும் மல்யுத்தப்போட்டியை பார்க்கப் போவதாகக் கூறி வீட்டை விட்டுச்சென்றார்.
திகுனியாவில் அவருக்கு காயம் ஏற்பட்டதை சில மணிநேரங்களுக்குப்பிறகு அவரது குடும்பத்தினர் அறிந்தனர். அன்று வீட்டை விட்டு வெளியேறும் போது ஷ்யாம் சுந்தர் நிஷாத் தனது குடும்ப உறுப்பினர்களிடம் விடைபெற்றுச்சென்றது அவரது கடைசி வழியனுப்பலாக இருந்தது.
ஷ்யாம் சுந்தர் நிஷாத்தின் தாயார் ஃபூல்மதிக்கு அந்த நாள் இன்னும் நினைவிருக்கிறது. அவரால் தனது கண்ணீரை அடக்க முடியவில்லை.
இந்த இரு குடும்பங்களின் வீடுகளுக்கு இடையிலான தூரம் அதிகமாக இருந்தாலும் அவர்களின் துயரம் ஒன்றுதான். இரு குடும்பத்தினரும் நீதிக்காக காத்திருக்கின்றனர்.
'பயம் இருக்கிறது'
இந்த வழக்கில், இந்திய உள்துறை இணை அமைச்சரும், லக்கிம்பூர் கேரி எம்.பி.யுமான அஜய் மிஸ்ராவின் மகனான ஆஷிஷ் மிஸ்ரா மீது முக்கியமாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. நான்கு மாதங்கள் சிறையில் இருந்த ஆஷிஷ் மிஸ்ரா சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்த விஷயம் நக்ஷத்ர சிங்கின் குடும்பத்தினரின் கவலையை அதிகரித்துள்ளது. தங்களுக்கு பயமாக இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.

பட மூலாதாரம், SHUBHAM KOUL/BBC
கொலை வழக்கில் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருப்பது அவரது அமைச்சர் தந்தையின் அரசியல் செல்வாக்கின் விளைவு என்றும் அவர் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த குடும்பத்தின் வீட்டிற்கு வெளியே உத்தரபிரதேச போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற அவர்களின் நம்பிக்கை குறைந்து வருகிறது.
"அரசிடம் எந்த எதிர்பார்ப்பையும் வைக்க முடியாது. அரசு குருடாகவும், ஊமையாகவும், காது கேளாதவராகவும் மாறிவிட்டது. அது எதையும் பார்க்க விரும்பவில்லை, கேட்க விரும்பவில்லை," என்கிறார் நக்ஷத்ர சிங்கின் மகன் ஜக்தீப் சிங்.
"ஐந்து மாதங்களாகியும், இன்னும் நீதி கிடைக்கவில்லை. நீதி வழங்கப்பட்டிருந்தால், குற்றம்சாட்டப்பட்டவருக்கு எப்படி ஜாமீன் கிடைத்திருக்கும்?" என்று நக்ஷத்ர சிங்கின் மனைவி ஜஸ்வந்த் கெளர் வினவுகிறார்.

பட மூலாதாரம், SHUBHAM KOUL/BBC
சுதந்திர இந்தியாவின் ஜாலியன் வாலாபாக்
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை தேர்தலின் நான்காம் கட்ட வாக்குப்பதிவு லக்கிம்பூர் கேரியில், பிப்ரவரி 23-ம் தேதி நடைபெற உள்ளதால், இந்த விவகாரம் தேர்தல் பிரச்சாரத்தில் சூடுபிடித்துள்ளது.
பிப்ரவரி 19 அன்று லக்கிம்பூர் கேரியில் உள்ள ஜிஐசி மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உரையாற்றினார். "விவசாயிகள் ஜீப்பால் மோதி நசுக்கப்பட்டனர். விவசாயிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் சுதந்திர இந்தியாவில் ஜாலியன்வாலாபாக்கை நினைவுபடுத்துகிறது" என்று அந்த உரையில் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி இதே இடத்தில்தான் அந்த வேதனையான சம்பவம் நடைபெற்றது.
இதே மைதானத்தில் பிப்ரவரி 20ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதியின் பொதுக்கூட்டத்துக்கு பாரதிய ஜனதா கட்சி ஏற்பாடு செய்ய இருந்தது. ஆனால் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
பிரதமரின் பொதுக்கூட்டத்தில் விவசாயிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கலாம் மற்றும் கருப்புக் கொடி காட்டலாம் என்று நிர்வாகம் கவலை தெரிவித்ததை உள்ளூர் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். இந்த பொதுக்கூட்டம் தற்போது மெய்நிகர் பொதுக்கூட்டமாக மாற்றப்பட்டுள்ளதாக பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
"விவசாயிகள் கோபத்தில் உள்ளனர், நியாயம் கிடைக்காததால் கோபப்படுகிறார்கள். அஜய் மிஸ்ராவின் மகனுக்கு நான்கு மாதங்களில் ஜாமீன் கிடைத்துள்ளது...பாகுபாடு காட்டப்படுகிறது என்பதை விவசாயிகள் புரிந்துகொண்டுள்ளனர்,"என்று லக்கிம்பூர் கேரியில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் ராம்பால் சிங் யாதவ் தெரிவித்தார்.

பட மூலாதாரம், SHUBHAM KOUL/BBC
வெளியிலிருந்து வந்தவர்கள் இந்த சம்பவத்தை நிகழ்த்தியுள்ளனர்
கடந்த ஆண்டு அக்டோபர் 3ம் தேதி நடந்த சம்பவத்தை எதிர்க்கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் திரும்ப திரும்ப கூறி வரும் நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் உள்ளூர் தலைவர்கள் தங்கள் தரப்பு நியாயத்தை சொல்கின்றனர்.
அக்டோபர் 3-ம் தேதி நடந்த சம்பவம் குறித்து கருத்துத்தெரிவித்த பாஜக தலைவர் அஷு மிஸ்ரா, "அவர்கள் வெளியாட்கள். அவர்கள் வந்து அந்த சம்பவத்தை நன்கு திட்டமிட்டு நடத்தினார்கள். நிர்வாகத்தின் கவனக்குறைவு இருந்திருப்பது உண்மைதான். இல்லையென்றால் இது போன்ற ஒரு சம்பவம் மாவட்டத்தில் நடந்திருக்காது," என்றார்.
இதனால் நக்ஷத்ர சிங்கின் குடும்பத்தினர் வேதனை அடைந்துள்ளனர். "கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களின் குடும்பத்தினரிடம் அவர்கள் விவசாயிகளா இல்லையா என்று கேளுங்கள்,"என்று ஜஸ்வந்த் கெளர் கூறினார்.
மத்திய அரசு அல்லது மாநில அரசின் பிரதிநிதிகள் தன் துயரத்தைப் பார்க்க வரவில்லை என்று என்று அவர் மேலும் கூறினார்.
அவர்களுக்கு எங்கள் மீது அக்கறை இல்லை
இந்த துயரத்தில் மத்திய, மாநில அரசுகள் பங்குகொள்ளாதது, தங்கள் துயரத்திற்கும் அரசுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதையே காட்டுகிறது என்றும் இந்த குடும்பத்தினர் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், SHUBHAM KOUL/BBC
"வலியைப் புரிந்துகொண்டவர்கள் அனைவரும் எங்களிடம் வந்தனர். ஆனால் இந்த இரண்டு அரசுகளும் அதாவது மத்திய அரசு மற்றும் உ.பி. அரசு - அவர்கள் இன்னும்கூட எங்களிடம் வரவில்லை, அவர்களுக்கு உண்மையில் வருத்தம் இருந்திருந்தால் நிச்சயமாக வந்திருப்பார்கள். எங்களைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. அவர்கள் வந்திருந்தால் எங்களுக்கு நியாயம் கிடைத்துவிடும் என்று நாங்கள் திருப்தி அடைந்திருப்போம்," என்கிறார் ஜஸ்வந்த் கெளர்.
மறுபுறம், ஷியாம் சுந்தர் நிஷாத்தின் குடும்பத்திற்கு இழப்பீடு கிடைத்தது. ஆனால் குடும்ப தகராறு காரணமாக, அவர்களால் அதை பயன்படுத்த முடியவில்லை.
அடுத்து என்ன நடக்கும் என்று இந்த குடும்பத்திற்கு தெரியவில்லை. இப்போது எங்களுக்கு நீதி கிடைக்குமா, கிடைக்காதா என்று தெரியவில்லை என்கிறார் ஷ்யாம் சுந்தர் நிஷாத்தின் சகோதரர் சஞ்சய் நிஷாத்.
மறுபுறம், நக்ஷத்ர சிங்கின் குடும்பம் தங்களுக்கு இழப்பீடு கிடைத்தது, ஆனால் நீதி கிடைக்கவில்லை என்று கூறுகிறார்கள். "எங்கள் பணத்தை அரசு திரும்ப எடுத்துக்கொள்ளட்டும். எங்களுக்கு நீதிதான் வேண்டும். எங்களுக்கு நீதியைத் தவிர வேறு எதுவும் தேவையில்லை" என்று ஜஸ்வந்த் கெளர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
லக்கிம்பூர் கேரியின் இந்தப் பகுதிகள் கரும்பு சாகுபடிக்கும் வெல்லத்தின் இனிப்புக்கும் பெயர் பெற்றவை. ஆனால், கடந்த ஆண்டு நடந்த சம்பவத்தின் கசப்பு இங்குள்ள மக்களின் மனதில் இன்னும் மறையாமல் உள்ளது.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













