பிரியங்கா காந்தி பிபிசிக்கு பேட்டி: லக்கிம்பூர் சம்பவத்தில் காங்கிரஸ் அரசியல் செய்கிறதா?

பிரியங்கா காந்தி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, பிரியங்கா காந்தி

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் நடந்த வன்முறை சம்பவத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்படும்வரை போராட்டத்தை தொடருவோம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

சீதாபூர் அரசு விருந்தினர் இல்லத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரியங்கா காந்தி புதன்கிழமை மாலையில் பிபிசியின் வினீத் கரேவிடம் தொலைபேசியில் பேசினார்.

அப்போது, லக்கிம்பூரில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க விடாமல் தடுப்பதற்காக தம்மை 60 மணி நேரத்துக்கும் மேலாக காவல்துறையினர் சட்டவிரோதமாக அடைத்து வைத்ததாக பிரியங்கா குற்றம்சாட்டினார்.

இந்த விஷயத்தில் காங்கிரஸ் அரசியல் செய்கிறது என்று பிஜேபி தலைவர்கள் குற்றம் சாட்டுகிறார்களே என்று பிரியங்கா காந்தியிடம் கேட்டபோது, ​​"பாரதிய ஜனதா கட்சிதான் பெரும்பாலான சமயங்களில் அரசியல் செய்கிறது. தங்களுடைய செயல்பாடுக்கு 'நாங்கள் தேசியவாதிகள்' என்ற அடையாளத்தை அவர்கள் கொடுத்துக் கொள்கிறார்கள்," என்றார்.

"எந்தவொரு தேசியவாதி இப்படி விவசாயிகளை நசுக்க அனுமதிப்பார்? தவறு செய்பவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எந்த தேசியவாதி ஒரு பெண்ணை தன் மாநிலத்தின் முழு காவல்துறையையும் பயன்படுத்தி தடுக்க முயற்சிப்பார்?" என்று பிரியங்கா கேள்வி எழுப்பினார்

"நான் பிரதமரிடம் ஒன்றை கேட்க விரும்புகிறேன், உங்களுடைய அமைச்சரவையில் உள்துறை இணை அமைச்சர் உள்ளார். காவல்துறை அவருக்குக் கீழ்தான் வருகிறது. அதே அமைச்சருடைய மகனுக்கு எதிரான புகாரை காவல்துறை விசாரித்து எப்படி நியாயமான நடவடிக்கையை எடுக்கும்?"

விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

"இதில் எவ்வித அரசியல் உள்நோக்கமும் இல்லை, தார்மீக பொறுப்பேற்பு என்பது இருக்க வேண்டும். அந்த தார்மீக அடிப்படையில் சம்பந்தப்பட்ட அமைச்சரை நீக்க வேண்டும். வெளிப்படையான விசாரணையில் அமைச்சரின் மகன் குற்றமற்றவர் என்பது நிரூபணமானால் மீண்டும் பதவி பறிக்கப்படும் அமைச்சரை அமைச்சராக்கிக் கொள்ளுங்கள். ஆனால், எதையும் செய்யாமல் அஜய் மிஸ்ராவை பதவியில் தொடர அனுமதிக்கிறார்கள். அவரை பதவியில் இருந்து நீக்குவதில் என்ன பிரச்னை உள்ளது? என்பதை மோதி அரசு தெளிவுபடுத்த வேண்டும்," என்றார் பிரியங்கா காந்தி.

எதிர்கட்சிகளின் வேலை ஆளும் அரசுக்கு அழுத்தம் தருவதுதான் என்று ராகுல் காந்தி சொல்கிறார். ஆனால், விவசாய சட்டங்கள் கொண்டு வரப்பட்டபோது, அதே அழுத்தத்தை போதுமான வகையில் காங்கிரஸால் தர முடியவில்லையே என்று பிரியங்காவிடம் பிபிசி செய்தியாளர் கேட்டார்.

அதற்கு அவர், "நாங்கள் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்தோம். கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளில் மாயாவதி, அகிலேஷ் போன்றோர் எத்தகைய அழுத்தத்தை அரசுக்கு கொடுத்தனர்? காங்கிரஸை அதுபோல எதுவும் சொல்ல முடியாது," என்றார் பிரியங்கா.

ஹத்ராஸ், உன்னாவ், ஷாஜகான்பூர் என எங்கெல்லாம் பிரச்னை நடந்ததோ அங்கெல்லாம் காங்கிரஸ் சென்று தர்னாவில் ஈடுபட்டு அரசுக்கு அழுத்தம் கொடுத்தது. அந்த சம்பவங்கள் நடந்தபோதெல்லாம் பகுஜன் சமாஜ் கட்சியும் சமாஜ்வாதி கட்சியும் எங்கே போயின என்று பிரியங்கா கேள்வி எழுப்பினார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

இந்தியாவில் ஊடகங்கள் ஒருபக்க சார்பாக உள்ளன. எல்லா விஷயங்களையும் அவை முழுமையாக மக்களுக்கு காட்டுவதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். இங்குள்ள ஊடகங்கள் பெரும்பாலும் அரசின் பிரசார குழலாகவே உள்ளன எனறும் பிரியங்கா சாடினார்.

இந்தியாவில் எதிர்கட்சி பலவீனமாக உள்ளதாக வாதிடப்படுகிறது. இந்த பலவீனம் மோதிக்கு பலமா என்று கேட்டபோது, "எதிர்கட்சிகள் தங்களுடைய இருப்பை நிலைநாட்ட முயல்கின்றன. காங்கிரஸை பொருத்தவரை கடுமையாக முயன்று வருகிறோம். பெரிய விஷயங்களை அரசின் கவனத்துக்கு கொண்டு வர போராடுகிறோம். இப்போது இந்த விஷயத்தை கையில் எடுத்துள்ளோம். சம்பந்தப்பட்ட மத்திய இணை அமைச்சர் பதவி பறிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்று வற்புறுத்துகிறோம். அதுவரை ஓயமாட்டோம்," என்றார் பிரியங்கா காந்தி.

இதுபோன்ற விவகாரத்தை மாநில சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்து காங்கிரஸ் செயல்படவில்லை. நடக்கும் காட்சிகளை நாடே பார்க்கிறது. வழியில் சென்ற அப்பாவிகள் மீது ஜீப் வேகமாக மோதி கொல்வதை காணொளியில் தெளிவாக பார்க்க முடிகிறது. இது தேர்தல் பிரச்னை அல்ல. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம். அதை பார்க்கும் எவரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று குரல் கொடுக்கின்றனர். இத்தகைய நிலை நாட்டில் எவருக்கும் வரக்கூடாது என்றார் பிரியங்கா.

சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் விவசாயிகள், பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி அவர்கள் பாஜகவினராக இருந்தாலும், மறைந்த அவர்களின் குடும்பங்களுக்கு எங்களுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார் பிரியங்கா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :