கூடங்குளம்: ஸ்டாலின், சூழல் செயல்பாட்டாளர்கள் வெளிப்படுத்தும் கவலைகள்

- எழுதியவர், ஆ. விஜய் ஆனந்த்
- பதவி, பிபிசி தமிழ்
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் கழிவுகளை சேகரிக்கும் மையம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சூழல் ஆர்வலர்கள் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். "அணு உலைக்கு வெளியே பயன்படுத்தப்படும் எரிபொருள் சேமிப்பு கிடங்கு என்பது அணு உலை இயக்கத்துக்குத் தேவையானது, பல மடங்கு பாதுகாப்பானது. அது அணுக்கழிவு மையம் இல்லை" என அந்த கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் 1,000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் இயங்கி வருகின்றன. இங்கு மேலும் நான்கு அணு உலைகளை அமைப்பதற்கான பணிகளை இந்திய அணுசக்தி கழகம் மேற்கொண்டு வருகிறது. அதேநேரம், இந்த உலைகளில் இருந்து வெளியேறும் பயன்படுத்தப்பட்ட கழிவுகளை சேமித்து வைப்பதற்கான அனுமதியை இந்திய அணுசக்தி ஒழுங்கு கட்டுப்பாட்டு வாரியம் அளித்துள்ளது.
பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
கூடங்குளம் அணு உலை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தது.
அந்த வழக்கில் பல்வேறு நிபந்தனைகளை விதித்த நீதிமன்றம், அணுக்கழிவுகளை உலைக்கு வெளியே பாதுகாப்பாக வைப்பதற்கான வசதியை ஐந்து ஆண்டுகளில் உருவாக்க வேண்டும் எனவும் ஆழ்நிலைக் கருவூலம் (Deep Geological Repository) ஒன்றை உருவாக்க வேண்டும் என கூறியது.
இதில் உலைக்கு வெளியே அணுக்கழிவுகளை அமைப்பதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்குவது தொடர்பான ஆழ்நிலைக் கருவூலம் அமைப்பதற்கான காலக்கெடு என்பது 2023ஆம் ஆண்டு வரை உள்ளது.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி அணுஉலையில் இருந்து வரும் பயன்படுத்தப்பட்ட எரிபொருளை அணுமின் நிலைய வளாகத்துக்குள் சேமித்து வைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்யும் அனுமதியை இந்திய அணுசக்தி ஒழுங்கு கட்டுப்பாட்டு வாரியம் அளித்துள்ளது.
"இதனால் அணுக்கழிவுகள் நிரந்தரமாக சேமித்து வைக்கப்படுமா?" என்ற அச்சத்தையும் சூழல் ஆர்வலர்கள் எழுப்பியிருந்தனர்.
இது தொடர்பாக, பிரதமர் மோதிக்கு கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தின்கீழ் அணு உலைகளில் இருந்து வெளியேறும் பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கம்பிகளை அகற்றுவது தொடர்பாக பொதுமக்களிடையே உள்ள கவலையை பிரதமரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளோம்.
இந்த திட்டத்தில் 1,000 மெகாவாட் திறன் கொண்ட ஆறு அணுமின் உலைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த 6 அலகுகளில் 1 மற்றும் 2 ஆகியவை ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ளன. 3 மற்றும் 4 ஆகியவை கட்டுமானத்தில் உள்ளன. மற்ற இரண்டு அலகுகள் நிறுவப்படவில்லை.
இந்த உலைகளில் இருந்து உருவாகும் பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கம்பிகளை அணுமின் நிலைய வளாகத்துக்குள்ளேயே, உலைக்கு அப்பால் (away from reactor) சேமித்து வைப்பதற்கான வசதிகளை அமைக்க இந்திய அணுமின் கழகம் திட்டமிட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், FACEBOOK/M.K.STALIN
8 கோடி மக்களின் சார்பாக வேண்டுகோள்
தொடர்ந்து அந்த கடிதத்தில், "கூடங்குளத்தில் அலகுகள் 1 மற்றும் 2 ஆகியவற்றுக்கு சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் அனுமதி அளித்தபோதே பயன்பாடு முடிந்த அணு எரிபொருளை தற்காலிகமாக அணுமின் நிலைய வளாகத்துக்குள் சேகரித்து பின்னர் அதன் சொந்த நாடான ரஷ்யாவுக்கே திருப்பி அனுப்புவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டுகிறோம்.
ஆனால், அணு எரிபொருள் கழிவுகளை நிலைய வளாகத்துக்குள்ளேயே அணு உலைக்கு அப்பால் சேமித்து வைப்பதற்கான வசதிகளை நிரந்தரமாக ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, மாநில அரசுடன் கலந்து ஆலோசிக்காமல் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏற்படக்கூடிய அபாயங்கள் மற்றும் ஆபத்துகள் தொடர்பான சாத்தியக் கூறுகளையும் தமிழ்நாடு மக்களின் ஆழ்ந்த கவலைகளையும் பகிர்ந்து கொள்கிறோம்" என தெரிவித்துள்ளார்.
மேலும், "மக்கள் வசிக்காத மற்றும் சூழலியல் அல்லாத பகுதியில் நிலத்தடி ஆழ்நிலைக் கிடங்கு (Deep Geological Repository) அமைத்த பிறகு அணு எரிபொருள் கழிவுகளை சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் நிரந்தரமாக சேமிக்கலாம் என எட்டு கோடி மக்களின் சார்பாக வேண்டுகோள் வைக்கிறேன்" எனவும் ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சரைத் தொடர்ந்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் தங்களின் ஆட்சேபத்தை பதிவு செய்துள்ளனர்.

முதலமைச்சர் சொல்லும் தகவல் சரியானதா?
இது தொடர்பாக, 'பிரதமருக்கு தாங்கள் எழுதிய கடிதமும் அறிவியல் உண்மையும்' என்ற பெயரில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சூழலியலுக்கான மருத்துவர் சங்கம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
அந்த கடிதத்தில், "தொடக்கத்தில் கூடங்குள அணு உலைகள் 1,2 ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்ட எரிபொருளை ரஷ்ய நாட்டுக்கு எடுத்துச் செல்வதாக ஒப்பந்தங்கள் இருந்தாலும், 1998 ஆம் ஆண்டில் செய்த அடுத்தகட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இங்கேயே அது இருக்கும் எனத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.
ஆனாலும் பயன்படுத்தப்பட்ட எரிபொருளை மறுசுழற்சி செய்யும் உரிமை குறித்து (Reprocessing rights) இன்னமும் தெளிவான முடிவுகள் எட்டப்படவில்லை என்றே அறிகிறோம். இந்திய அரசு இதுகுறித்து தன்னிச்சையாக முடிவெடுக்க வாய்ப்பில்லை.
1989ஆம் ஆண்டே இந்திய அணுசக்தி ஒழுங்கு கட்டுப்பாட்டு வாரியம் (AERB) நிலம் தேர்ந்தெடுக்கும்போதும் (Site clearance) அதற்கு அனுமதி வழங்கும்போதும் AFR (அணுஉலைக்கு வெளியே பயன்படுத்தப்பட்ட எரிபொருள் சேமிப்பு கிடங்கு) இருக்க வேண்டும் என்பதை தெளிவாக வலியுறுத்தியுள்ளது.
இது பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் ஆவணங்களில் உள்ளது.
AFR தொடர்பாக தமிழ்நாடு மக்கள் சோதனை எலிகளா எனும் கருத்தையும் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். AFR என்பது தாராப்பூரில் ஏற்கனவே உள்ளதென்பது சுந்தர்ராஜனின் வழக்கு ஆவணங்களில் தெளிவாக உள்ளது.
எனவே, தமிழ்நாட்டு மக்கள் சோதனை எலிகளா என்பது சரிதானா என்ற கேள்வியை எழுப்புகிறது" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
சேமிப்புக் கிடங்கா... அணுசக்தி மையமா?

தொடர்ந்து அந்த கடிதத்தில், "சுந்தர்ராஜன் தொடுத்த வழக்கில் அணுக்கழிவுகளை நிரந்தரமாக புதைக்க Deep Geological Repository (DGR)அமைக்க உச்சநீதிமன்றம் 2023 வரையில் காலக்கெடு வழங்கியுள்ளது.
இருப்பினும், DGR அமைக்க வேண்டிய தேவை தற்போதைய சூழலில் இந்தியாவுக்கு இல்லை என்றே மூத்த அணுசக்தி அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் மறுசுழற்சி செய்யப்பட்டு, திரும்பவும் பயன்பாட்டுக்கு வருகிறது.
இந்தியாவில் அணுக்கழிவுகள் மிகக் குறைவாக உள்ளதால் DGR இன் தேவை உடனடியாக இந்தியாவுக்கு இல்லை என்றும் அதுவரை அணுக்கழிவுகளை பாதுகாக்க Waste Immobilization Plant (WIP) எனும் வசதி கல்பாக்கம் மற்றும் தாராபூரில் உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்" என தெரிவித்துள்ளனர்.
மேலும், "அணுசக்தியை கையாளும் உலக நாடுகள் ஒன்றில்கூட DGR இல்லை (தொழில்நுட்பத்தில் வளர்ந்த நாடான அமெரிக்காவும் அடங்கும்). பிரான்ஸ் நாட்டில் அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு 2035 ஆம் ஆண்டில் அது நிறைவடையும் என்றாலும் இந்தியாவையும் பிரான்ஸையும் ஒப்பிட முடியாது" என குறிப்பிட்டுள்ளனர்.
"கூடங்குளம் அணுஉலைக்கான இடம் தேர்ந்தெடுப்பு என்பது தமிழ்நாடு அரசின் ஒப்புதலோடு நடைபெற்றுள்ளது. கூடங்குளம் ஒப்பந்தத்தை முதலில் கையெழுத்திட்டபோது எந்த அரசு மத்தியில் இருந்தது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அணுஉலைக்கு வெளியே பயன்படுத்தப்படும் எரிபொருள் சேமிப்பு கிடங்கு என்பது அணு உலை இயக்கத்துக்குத் தேவையானது. அணு உலை பாதுகாப்போடு ஒப்பிடுகையில் பல மடங்கு அதிகம் பாதுகாப்பானது. அது அணுக்கழிவு மையம் இல்லை. எனவே, இத்தகைய விசயங்களில் அறிவியல் நம்மை வழி நடத்தட்டும்" எனவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
பிரான்ஸ் நாட்டோடு ஒப்பிடலாமா?
இது தொடர்பாக, பிபிசி தமிழிடம் பேசிய சூழலியலுக்கான மருத்துவர் சங்கத்தைச் சேர்ந்த வீ.புகழேந்தி, "ஆழ்நிலை கருவூலம் (Deep Geological Repository) என்பது உலகத்தில் எங்குமே இல்லை. அமெரிக்காவில் 100 அணு உலைகள் உள்ளன. அங்கு ஆழ்நிலைக் கருவூலம் அமைப்பதற்கு 20 ஆண்டுகளாக முயற்சி மேற்கொண்டு வந்தனர். அங்குள்ள yucca mountain என்ற இடத்தில் நடந்த முயற்சியில் மண்ணின் தன்மை, கசிவுத் தன்மை ஆகியவை ஒத்துவரவில்லை. தொழில்நுட்பரீதியாக வளர்ச்சியடைந்த அமெரிக்காவில் DGR-ஐ (Deep Geological Repository) வைக்கவில்லை. அங்கு அணுக்கழிவுகளும் அதிகம்'' என்கிறார்.

பட மூலாதாரம், Pugazenthi FB profile
தொடர்ந்து பேசுகையில், "இந்தியாவில் 22 அணுஉலைகள் மட்டுமே உள்ளன. இங்கு பயன்படுத்தப்பட்ட எரிபொருளில் இருந்து மறுசுழற்சி செய்வார்கள். இதன்பிறகு வரக் கூடிய அணுக்கழிவு என்பது மிகவும் குறைவாக உள்ளது. 'பிரான்ஸில் ஆழ்நிலைக் கருவூலம் அமைப்பதற்கான பணியை தற்போது தொடங்கியுள்ளனர்' என பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் தெரிவிக்கிறார். ஆனால், அது 2035ஆம் ஆண்டில்தான் முடிவடைகிறது. எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, பிரான்ஸ் நாட்டையும் இந்தியாவையும் ஒப்பிட முடியாது. இந்தியாவில் அணுசக்தி உற்பத்தி என்பது பிரான்ஸை விட 10 மடங்கு குறைவு.
மேலும், பிரான்ஸில் 56 அணுஉலைகள் உள்ளன. அங்குள்ள உலைகளில் இருந்து தயாரிக்கக் கூடிய மின்சாரம் என்பது அந்நாட்டுக்குத் தேவையான மின்சாரத்தில் 70 சதவீதம் ஆகும்.
இந்தியாவில் அணுஉலைகளில் இருந்து 3 சதவீத மின்சாரம்தான் கிடைக்கிறது. கூடங்குளத்தை PWR (Pressurized Water Reactor) என்பார்கள். "இதில் இருந்து வரக் கூடிய பயன்படுத்தப்பட்ட எரிபொருளை மறுசுழற்சி செய்வதற்கு இந்தியாவில் எந்த வசதியும் இல்லை, அப்படியானால் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாமா?" என சுந்தர்ராஜன் கேள்வி எழுப்புகிறார்.
இதற்கு மூத்த விஞ்ஞானிகள் அளிக்கும் பதில் என்னவென்றால், "PWR உலையில் இருந்து வரும் எரிபொருளை மறுசுழற்சி செய்வதற்கான தொழில்நுட்பம் உள்ளது. அதைச் செய்ய முடியும். தேவைப்பட்டால் கொண்டு வருவோம்" என்கின்றனர்.
எரிபொருள் சேமிப்புக் கிடங்கு பாதுகாப்பானதா?
குறிப்பாக, "மறுசுழற்சி செய்யும் தலைப்பகுதியில் மாற்றம் கொண்டு வந்து செய்ய முடியும்" என்கின்றனர். கூடங்குளம் அணுஉலையைக் காட்டிலும் பல மடங்கு சிரமமான அணுஉலையாக கல்பாக்கம் உள்ளது. அங்கு (FBTR) புளுட்டோனியம் பிளஸ் யுரேனியம் கலந்த கார்ஃபைடை பயன்படுத்துகின்றனர். "இதனை மறுசுழற்சி செய்வது என்பது கூடங்குளத்தைவிடவும் பல மடங்கு சிரமமானது. ஆனால், அதையே நாங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளோம்" என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அப்படியிருக்கும்போது கூடங்குளத்தில் சாத்தியப்படுத்த முடியும் என்பதுதான் அவர்களின் பதிலாக உள்ளது'' என குறிப்பிடுகிறார் வீ.புகழேந்தி,
"AFR என்பது அணுஉலையைக் காட்டிலும் பன்மடங்கு பாதுகாப்பானது. அது அணுஉலைக்கு தேவையான பயன்படுத்தப்பட்ட எரிபொருள் சேமிப்பு கிடங்கு மட்டுமே. அணுக்கழிவு மையம் இல்லை. அணுஉலைக்கான இடத்துக்கு அனுமதி வழங்கும்போதே AFR இருக்க வேண்டும் எனத் தெளிவாக கூறியுள்ளது. இதனைப் புரிந்து கொள்ளாமல் சிலர் பேசி வருகின்றனர். பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், 'தாராப்பூரில் உள்ள AFR பாதுகாப்புடன் இயங்குவதாக செய்திகள் உள்ளது. எனவே, தமிழ்நாட்டு மக்கள் என்ன சோதனை எலிகளா?' எனக் கூறுவது எப்படி சரியாகும்? மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் அணுஉலையை மத்திய அரசால் நிறுவ முடியாது. அரசுக்கு மின்சாரம் வேண்டும், அணுஉலை வேண்டும், ஆனால் AFR மட்டும் வேண்டாம் என்பது எந்தவகையில் சரியானது?" என்கிறார் புகழேந்தி.
அறிவியல்பூர்வமான உண்மையில்லை
கூடங்குளம் விவகாரத்தில் எழுப்பப்படும் கேள்விகள் தொடர்பாக, பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தர்ராஜனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.
"அவர்கள் கூறுவது தவறான தகவல். அணுசக்தித்துறையில் பணியாற்றும் விஞ்ஞானிகள் கூறுவதை அப்படியே தெரிவிக்கின்றனர். அதைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. கூடங்குளத்தில் உள்ள PWR உலைகளுக்கு எரிபொருள் சேமிப்புக் கிடங்கு என்பது இல்லை. அதனை மறுசுழற்சி செய்ய முடியாது. AFR வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. அணுக்கழிவு மையத்தை எங்கே வைக்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்து முடிவு செய்யலாம். `முதலில் அதனை முடிவு செய்துவிட்டு AFR கட்டுங்கள்' என்றுதான் சொல்கிறோம். இதற்கு எதிராகப் பேசுகிறவர்கள் சொல்வதில் அறிவியல்பூர்வமான உண்மையில்லை'' என்று மட்டும் பதில் அளித்தார்.

பிற செய்திகள்:
- மோதிக்கு எதிராக கட்சிகளை ஒருங்கிணைப்பதில் ஸ்டாலினை முந்துகிறாரா கேசிஆர்?
- உலகத் தாய்மொழிகள் தினம்: 'கருவிலேயே 10 ஆயிரம் சொற்களைக் கற்கும் குழந்தை'
- முஸ்லிம்கள் தூக்கிலிடப்படுவது போன்று குஜராத் பாஜக வெளியிட்ட கார்ட்டூனை நீக்கிய ட்விட்டர்
- 'கொல்லப்படுவோம் என்பது மால்கம் எக்ஸுக்கு முன்பே தெரியும்'
- அமெரிக்காவில் ஒரு தமிழ்ப் பள்ளி: "பெற்றோர்களே ஆசிரியர்கள் ஆனார்கள்"
- நியூட்ரினோ திட்டத்தால் என்ன ஆபத்து? தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியது என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













