You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்வது எப்படி?
- எழுதியவர், ஜோ மகேஸ்வரன்
- பதவி, ㅤ
புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகள், பூச்சி, நோய் தாக்குதல்களால் வேளாண் பயிர் சாகுபடியில் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. இந்த இழப்பில் இருந்து விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம் (பி.எம். பசல் பீம யோஜனா) செயல்படுத்தப்படுகிறது.
நெல், கம்பு, சோளம், மக்காச்சோளம், ராகி, உளுந்து, பச்சை பயிறு, துவரை, நிலக்கடலை, எள், கரும்பு, பருத்தி, உருளைக்கிழங்கு, மிளகாய், வெங்காயம், இஞ்சி, மஞ்சள், மரவள்ளிக்கிழங்கு, வாழை உள்ளிட்ட வருடாந்திர தோட்டக்கலை மற்றும் பணப்பயிர்கள் மற்றும் உணவு தானிய பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம்.
குறைந்தபட்ச உத்திரவாத மகசூலின் மதிப்புக்கு சமமான தொகைக்கு பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். விவசாயிகள் தங்கள் விருப்பத்தின் பேரில் கூடுதலாக காப்பீட்டுத் தொகை (Actuarial Premium) செலுத்தி சராசரி மகசூலின் 150% மதிப்பு வரை காப்பீடு செய்து கொள்ளலாம்.
உத்திரவாத மகசூல் அளவை விட கூடுதலாக காப்பீடு செய்யப்படும் தொகையை அதிகரிக்க விரும்புவோர் அதற்கான கூடுதல் காப்பீட்டுக் கட்டணத்தை (Extra Premium at Actuarial rates) நிர்ணயிக்கப்படும் கடைசி தேதிக்குள் செலுத்த வேண்டும்.
காப்பீட்டுக் கட்டண விவரம்
உணவு தானியம் மற்றும் எண்ணெய் வித்து உள்ளிட்ட வேளாண் பயிர்களுக்கு மொத்த பயிர் காப்பீட்டுத் தொகையில், விவசாயிகள் செலுத்த வேண்டிய காப்பீட்டுக் கட்டணமான பிரிமியத் தொகை காரீப், ராபி பருவ காலத்திற்கு ஏற்ப கட்டண விகிதம் மாறுபடும். இதன்படி ஏப்ரல் - செப்டம்பர் மாதம் வரையிலான காரீப் பருவத்திற்கு காப்பீட்டுத் தொகையில் 2 சதவீதமும், அக்டோபர் - மார்ச் வரையிலான ராபி பருவத்திற்கு 1.5 சதவீதம் பிரிமியம் செலுத்த வேண்டும். பணப்பயிர்களான கரும்பு, பருத்தி மற்றும் வருடாந்திர, பல்லாண்டு கால பயிர்களுக்கு காரீப், ராபி ஆகிய இரண்டு பருவ காலத்திலும் 5 சதவீதம் பிரீமியாக செலுத்த வேண்டும்.
பயிர் காப்பீட்டுக்கான தகுதி
சொந்த நிலத்தில் விவசாயம் செய்வோர், குத்தகை நிலத்தில் சாகுபடி செய்வோர், இணை சாகுபடியாளர்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர்க்கடன் பெறும் விவசாயிகள், கடன் பெறாத விவசாயிகள் என அனைத்து தரப்பு விவசாயிகளும் விருப்பத்தின் பேரில் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.
விருப்பம் உள்ள விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், பொது சேவை மையம் ஆகியற்றிற்கு சென்று, பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்யலாம்.
அப்போது, முன்மொழிவு பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் சிட்டா, அடங்கல் அல்லது விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து பிரிமியத் தொகையை செலுத்தி, அதற்கான ரசீதைப் பெற்றுக்கொள்ள வேண்டும். பயிர்க் காப்பீட்டுக்கான https://pmfby.gov.in/ என்கிற இணைய தளத்தில் விவசாயிகளே ஆன் லைனில் பயிர்க் காப்பீட்டுக்கு பதிவு செய்து கொள்ளலாம். இணையத்திற்கு சென்று, விவசாயி முனை பகுதியை கிளிக் செய்து, அதைத் தொடர்ந்து கேட்கப்படும் ஆதார் எண், நிலத்தின் சர்வே எண், முகவரி, வங்கிக் கணக்கு உள்ளிட்ட விபரங்களை பதிவிட வேண்டும். அனைத்து விவரங்களையும் சரிபார்த்து, சமர்ப்பிக்க வேண்டும். பயிர்க் காப்பீடு செய்த விண்ணப்பத்தின் நிலை உள்ளிட்ட விபரங்களையும் இந்த இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம்.
பாதிப்பு கணக்கீட்டு முறை
விவசாயிகளுக்கு காப்பீட்டு கட்டணத் தொகையில் வழங்கப்படும் அரசு மானியம் அவ்வப்பொழுது அறிவிக்கப்படும். பரவலான பாதிப்புகளுக்கு இத்திட்டம் பகுதிவாரி (Area Approach) அடிப்படையில் செயல்படுகிறது. ஒவ்வொரு பயிருக்கும் வரையறுக்கப்பட்ட பகுதியில் இத்திட்டம் உள்ளது. வருவாய் கிராம அளவில் தற்போது பயிர் காப்பீடு கணக்கீடு செய்யப்படுகிறது. இதன்படி, வருவாய் கிராமத்தில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் 5 இடங்களில் மகசூல் கணக்கீடு செய்யப்பட்டு, சராசரி மகசூல் மதிப்பிடப்படும். ஒரு குறிப்பிட்ட பயிரின் உத்திரவாத மகசூல் என்பது கடந்த மூன்று அல்லது ஐந்து வருடத்தின் சராசரி மகசூலை, உறுதியளிக்கப்பட்ட நஷ்டஈட்டு விகிதத்தோடு (60%, 80%, 90%) பெருக்கும் போது கிடைக்கும் மகசூலின் அளவாகும். உத்திரவாத மகசூலை கணக்கிட நெற்பயிருக்கு மூன்று வருட சராசரி மகசூலும் இதர பயிர்களும் ஐந்து வருட சராசரி மகசூலும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
காப்பீடு செய்யும் விவசாயிகள் அதிகரிப்பு
பயிர் காப்பீடு செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு அரசின் வேளாண்மைத்துறையின் புள்ளி விபரப்படி, நடப்பு நிதியாண்டு 2021-22ல் பிப்ரவரி 5ம் தேதி வரை 26.06 லட்சம் விவசாயிகள், மொத்தம் 38.48 லட்சம் ஏக்கருக்கு பயிர் காப்பீடு செய்துள்ளனர். பயிர் காப்பீட்டுத்திட்டத்தின் மூலம், 2016-17ம் ஆண்டில் 18.73 லட்சம் விவசாயிகள் காப்பீடு செய்தனர். அதில் 12.93 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 3, 630 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது. கடந்த 2017-18ல் மொத்தம் 15.18 லட்சம் விவசாயிகள் காப்பீடு செய்தனர், அதில் 10.99 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 2, 073 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது. தொடர்ந்து, 2018-19ல் 24 லட்சம் விவசாயிகள் பதிவு செய்தனர். அதில் 18.80 லட்சம் பேருக்கு மொத்தம் ரூ. 2,649 கோடி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2019 -20ல் 21.64 லட்சம் பேர் பதிவு செய்ததில், 11.68 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 981 கோடி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2020-21ல் பதிவு செய்த 25.77 லட்சம் விவசாயிகளில் கடந்த பிப்ரவரி 5ம் தேதி வரை, 7.92 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 1, 766 கோடி இழப்பீட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, ரூ. 981 கோடி வழங்கப்பட்டுள்ளது.
தனி நபர் பயிர் காப்பீடு
இந்தியாவில் காலநிலைக்கு ஏற்ற பயிர்காப்பீடு, மகசூல் அடிப்படையிலான பயிர் காப்பீடு என 2 வகைகள் உள்ளன. இதில், விளைச்சல் அடிப்படையிலான பயிர் காப்பீட்டு முறை தமிழ்நாட்டில் உள்ளது. பயிர்க் காப்பீடு திட்டத்தில் நடைமுறைச் சிக்கல்களும் உள்ளன என்கிறார்கள் விவசாயிகள்.
விவசாயிகள் உரிமை செயற்பாட்டாளர் மன்னார்குடி சேதுராமன் கூறுகையில், ''பிரதமரின் பயிர்க் காப்பீட்டு திட்டம் என்று இருந்தாலும் மாநில அரசு பங்களிப்பு 49 சதவீதம், மத்திய அரசு பங்களிப்பு 49 சதவீத, விவசாயிகளின் பங்களிப்பு 2 சதவீதம் என்று இது உள்ளது. பயிர்க் காப்பீடு செய்யும் விவசாயிகள் அனைவருக்கும் இழப்பீடு கிடைப்பதில்லை. சேத மதிப்பை முன்பு பிர்கா (உள்வட்ட) அளவில் கணக்கிட்டனர். தற்போது, இது வருவாய் கிராம அளவில் கணக்கிடப்படுகிறது. இதற்குப் பதிலாக, தனி நபர் பயிர்க் காப்பீடு திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் விவசாயிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். அனைத்து விவசாயிகளுக்கும் ஒரே மாதிரியான மகசூல் மற்றும் இழப்பு இருப்பதில்லை.
மேலும், இந்தியா முழுவதும் காரீப், ராபி பருவ காலங்களின் அடிப்படையில் மகசூல் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த பருவ காலம் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தாது. குறிப்பாக, தமிழ்நாட்டின் பயிர் சாகுபடி காலம் மாறுபடுகிறது. எனவே, மாநிலத்தில் நிலவும் காலநிலைக்கு ஏற்ப காப்பீட்டு பருவ நிலையை வகுத்துக் கொள்ள வேண்டும். நடப்பு பருவத்தில் பிப்ரவரி 15ம் தேதியுடன் பயிர் காப்பீடு செய்யும் தேதி முடிகிறது. ஆனால், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் அறுவடை முடிந்த மற்றும் அறுவடைக்கு தயாராக உள்ள நெற் பயிர்கள், டெல்டா மாவட்டங்களில் சேதமடைந்துள்ளன. இது போன்ற நேரங்களில் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்'' என்கிறார் சேதுராமன்.
பிற செய்திகள்:
- கேரளாவில் 40 மணி நேரத்திற்கும் மேல் மலை இடுக்கில் சிக்கியிருந்த இளைஞர் மீட்பு
- சசிகலா மீதான ஊழல் வழக்கு: ஐஜி ரூபா குற்றச்சாட்டால் என்ன நடக்கும்?
- பாலியல் துன்புறுத்தல் வழக்குகளைக் கையாண்டதில் தவறுகள்: ஒப்புக்கொண்ட முன்னாள் போப்
- ஹிஜாப் Vs காவி துண்டு: கர்நாடகாவில் தீவிரமாகும் ஆடை விவகாரம் - அடுத்தது என்ன
- பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது: பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் அறிவிப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்
- கோடநாடு எஸ்டேட்: ஸ்டாலின் அரசுக்கு ஆதாரத்தை திரட்டுவதில் பின்னடைவா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்