கோடநாடு எஸ்டேட் வழக்கு: ஸ்டாலின் அரசுக்கு ஆதாரம் திரட்டுவதில் தொய்வா? என்ன பின்னணி?

    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கின் விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ` இந்த வழக்கில் தகுந்த ஆதாரத்தை நீதிமன்றம் கேட்டும் அரசு தரப்பில் சமர்ப்பிக்க முடியவில்லை. அதுதான் பின்னடைவுக்குக் காரணம்' என்கின்றனர் அ.தி.மு.க வழக்கறிஞர்கள். என்ன நடக்கிறது?

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ள கோடநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் ஒன்று உள்ளது. இந்த எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதியன்று நள்ளிரவில் புகுந்த மர்ம கும்பல் ஒன்று, அங்கு காவலாளி ஓம்பகதூரை கொன்று விட்டு பல்வேறு பொருட்களை கொள்ளை அடித்து விட்டுச் சென்றது. இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், சேலத்தில் நடந்த விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்தார்.

இந்த வழக்கில் மற்றொரு முக்கிய நபராகச் சொல்லப்படும் சயானும் பாலக்காடு அருகே காரில் செல்லும்போது சாலை விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் சயானின் மனைவியும் குழந்தையும் உயிரிழந்தனர். அதேபோல், எஸ்டேட்டில் கணினி ஆபரேட்டராக இருந்த தினேஷ் என்பவரும் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வெளியானது. கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவங்களுக்குப் பிறகு நடந்த இந்த மரணங்களும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தின. இந்த வழக்கில் சயான், வாளையார் மனோஜ் உள்பட பத்து பேர் கைது செய்யப்பட்டனர்.

150 சாட்சிகளிடம் விசாரணை

இது தொடர்பான வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் தி.மு.க அரசு கூடுதல் ஆர்வம் செலுத்தியது.

இது தொடர்பாக, கடந்த ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி முதல் நீலகிரி எஸ்.பி. ஆஷிஷ் ராவத், கூடுதல் எஸ்.பி கிருஷ்ணமூர்த்தி, குன்னூர் டி.எஸ்.பி சுரேஷ் ஆகியோர் தலைமையில் மறுவிசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக, சயான், மனோஜ், கனகராஜின் அண்ணன் தனபால், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் உள்பட 150 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. இதில், எஸ்டேட் மேலாளரின் வாக்குமூலம் முரணாக இருந்ததாகவும் தகவல் வெளியானது.

இந்த வழக்கில் திடீர் திருப்பமாக கனகராஜின் அண்ணன் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் முக்கிய தடயங்களை அழித்ததாகக் கூறப்பட்டது. இதுதொடர்பாக, இருவரிடமும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.

கோடநாட்டில் ஆய்வு

இந்த வழக்கில் மேலும் புலனாய்வை மேற்கொள்ளும் வகையில் நான்கு தனிப்படைகளை அமைத்து மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் உத்தரவிட்டார். இவர்கள், கோடநாடு பங்களாவின் 8, 9 மற்றும் 10 ஆகிய நுழைவு வாயில்களில் ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள சி.சி.டி.வி கேமராக்கள், தற்கொலை செய்து கொண்ட தினேஷின் அறை ஆகியவற்றையும் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து இந்த வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. கடந்த டிசம்பர் மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கூடுதல் சாட்சிகளிடம் விசாரணை நடத்தவிருப்பதால் அரசுத் தரப்பு அவகாசத்தைக் கோரியது. இதற்கு அனுமதியளித்த மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபா, கடந்த ஜனவரி 28 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

சாப்பாட்டுக்கு வழியில்லை

இது தொடர்பாக, கோடநாடு வழக்கின் அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் கூறுகையில், `இந்த வழக்கு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இது தொடர்பாக தேவைப்பட்டால் கைது நடவடிக்கை இருக்கும்' எனத் தெரிவித்தார். இந்த வழக்கில் ஜாமீன் நிபந்தனையில் தளர்வு கோரிய வாளையாறு மனோஜின் மனுவுக்கு அரசுத் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, `ஊட்டியில் தங்குவதற்கும் சாப்பாட்டுக்கு செலவு செய்யவும் பணமில்லை. என்னை மீண்டும் சிறையில் அடைத்துவிடுங்கள்' என வாளையார் மனோஜ் மனுத்தாக்கல் செய்ததும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

`கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே நடந்து வரும் விசாரணையில் முக்கிய ஆதாரம் எதுவும் காவல்துறையின் கைகளுக்குக் கிடைக்காததால் இந்த வழக்கு வேகம் எடுக்கவில்லை. தொடக்கத்தில் காட்டிய ஆர்வத்தைத் தற்போது பார்க்க முடியவில்லை' என்றொரு கருத்தும் பேசப்பட்டு வருகிறது.

தொடர் விசாரணையை கேட்டது ஏன்?

கோடநாடு எஸ்டேட் விவகாரத்தில் தி.மு.க அரசின் செயல்பாடு குறித்துப் பேசும் முன்னாள் அரசு வழக்கறிஞரும் முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏவுமான இன்பதுரை, ``தி.மு.க ஆட்சி அமைந்ததில் இருந்தே பழிவாங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதற்கு ராஜேந்திர பாலாஜி வழக்கு ஓர் உதாரணம். அந்த வழக்கில், `நீங்கள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுங்கள், பிறகு நாங்கள் முடிவு செய்கிறோம்' என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. எதிர்க்கட்சியை அடக்குவதற்கும் பழிவாங்குவதற்கும் காவல்துறையைப் பயன்படுத்துகின்றனர். காவல்துறையின் அதிகாரத்தை முதல்வர் தவறாகப் பயன்படுத்துகிறார்.

கோடநாடு வழக்கில் சி.ஆர்.பி.சி 173 (8) பிரிவின்படி தொடர் விசாரணை நடத்துவதற்கு தி.மு.க அரசு அனுமதி கேட்டது. அதேநேரம், அ.தி.மு.க ஆட்சிக்காலத்திலேயே இந்த வழக்கின் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுவிட்டனர். அவர்களிடம் இருந்து பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக, நீதிமன்ற விசாரணை தொடங்கும் நேரத்தில் ஆட்சி மாறியது'' என்கிறார்.

`` கோடநாடு வழக்கின் குற்றவாளிகள் சிலர், தாங்கள் தப்பித்துக் கொள்ளும்வகையில், இன்னும் நிறைய பேர் இந்த வழக்கில் உள்ளதாகக் கூறினார். இதனை தி.மு.க அரசு எடுத்துக் கொண்டது எந்தவகையிலும் சரியல்ல. தான் தப்பித்துக் கொள்வதற்காக குற்றவாளி என்ன வேண்டுமானாலும் சொல்வார். `இந்த வழக்கில் எடப்பாடிக்கு தொடர்பு' எனக் கூறியதை ஊடகங்களும் எடுத்துக் கொண்டன. ஊடகங்கள் தீர்ப்பு கூற முடியாது. அவர்கள் கேலரியில் அமர்ந்து பார்க்கத்தான் முடியும். கிரிக்கெட் ஆட முடியாது'' என்கிறார் இன்பதுரை.

ஆதாரத்தை திரட்ட முடியவில்லையா?

தொடர்ந்து பேசுகையில், `` சி.ஆர்.பி.சி 173 (8) பிரிவு என்ன சொல்கிறது என்றால், தகுந்த ஆதாரம் கிடைத்தால் மேலதிக விசாரணையை தொடரலாம் என கூறுகிறது. இதை பயன்படுத்தி விசாரணையை தொடரலாம் என நீதிமன்றம் கூறியது. ஆனால், அந்த ஆதாரம் என்ன என நீதிமன்றம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. இவர்களால் சமர்ப்பிக்க முடியவில்லை. இந்த வழக்கில் சாட்சிகளாக இருந்த இரண்டு பேரை கைது செய்து, ஆதாரத்தைக் கைப்பற்றிவிடலாம் எனவும் திட்டமிட்டனர். அதுவும் முடியவில்லை. அவர்களும் ஜாமீனில் வெளியில் வந்துவிட்டனர். இந்த வழக்கில், என்னை மீண்டும் சிறையில் போட்டுவிடுங்கள். விடுதியில் தங்குவதற்கும் உணவுக்கும் வழியில்லை என வாளையார் மனோஜ் சொல்லும் அளவுக்குத்தான் இந்த அரசின் செயல்பாடு உள்ளது. இந்த வழக்கின் மூலம் அ.தி.மு.கவுக்கு சிக்கலை ஏற்படுத்தி விடலாம் என கணக்கு போட்டனர்'' என்கிறார்.

மேலும், `` சட்டமன்றத்தில் விதி எண் 55ன்கீழ் கோடநாடு விவகாரத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப் பெருந்தகை கூறினார். இதன்மூலம் அ.தி.மு.கவை அவமானப்படுத்தலாம் என நினைத்தனர். அவர்களின் கணக்கு பலிக்கவில்லை'' என்கிறார்.

விசாரணையில் தொய்வா?

``கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் தொய்வு ஏன்?'' என அரசு வழக்கறிஞர் வீ.கண்ணதாசனிடம் பிபிசி தமிழ் சார்பில் கேட்டோம். ``இந்த வழக்கில் மேலதிக விசாரணை தேவைப்படுகிறது. குற்றவாளிகளைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு முழுமையான ஆதாரம் தேவை. இந்த வழக்கில் ஒரு தகவல் கிடைத்தால் அதனை இன்னொரு தகவலோடு பொருத்திப் பார்த்து முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். இந்த வழக்கை அவசரம் அவசரமாக வழக்கை நடத்தி தோல்வியடைவதைவிட உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்த வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம்'' என்கிறார்.

``இந்த வழக்கில் அ.தி.மு.கவின் முக்கிய தலைவர்களை குற்றம்சாட்டுவதற்கு ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்கிறார்களே?'' என்றோம். `` சொத்துக்குவிப்பு வழக்கிலும் இதையேதான் தெரிவித்தனர். இந்த வழக்கிலும் அதுதான் நடக்கிறது. பொய்யாக ஒருவர் மீது குற்றம் சுமத்த வேண்டிய அவசியம் இல்லை. இந்த வழக்கு சரியான கோணத்தில் சென்று கொண்டிரூக்கிறது. குறிப்பாக, ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு முறையான விசாரணை நடக்கிறது. சாட்சிகளை மறைத்தும் நீர்த்துப் போக வைக்கும் வேலைகளைச் செய்தனர். அவையெல்லாம் ஒவ்வொன்றாக சரிசெய்யப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் தொய்வு ஏற்பட்டூள்ளதாகக் கூறுவது பொய்யான தகவல்,'' என்கிறார்.

``கோடநாடு எஸ்டேட்டின் வழக்கு விசாரணை வரும் 25 ஆம் தேதி நடைபெற உள்ளது. அப்போது ஏதேனும் முன்னேற்றம் தென்பட்டுள்ளதா? என்பதைப் பொறுத்தே வழக்கின் வேகம் இருக்கும்'' என்கின்றனர் சட்ட நிபுணர்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: